சசிகலாவின் விடுதலை தி.மு.க-வை பாதிக்குமா..?



திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியுடன் நேருக்கு நேர்

உலகம் முழுவதும் கொரோனாவின் கோர பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற எல்லா  அரசுகளும் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்தான், நம் நாட்டில் மட்டும்  அதைப் பயன்படுத்தி பல ஊழல்கள் அரங்கேறி வருகிறது...” என்ற குற்றச்சாட்டினை முன் வைக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச்  செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி.

1947ம் ஆண்டு ஆக்ஸ்ட் 12 அன்று பாரதிராமன் - விஜயலட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், 1964ம் ஆண்டு வேப்பேரியில் உள்ள செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இறுதிப் படிப்பை முடித்து, 1974ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று, 1978ல் சென்னை சட்டக் கல்லூரியில் (சென்னை பல்கலைக்கழகம்) இளங்கலை சட்டம் (B.L) தேர்ச்சி பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.
ஜனவரி 22, 1980ம் ஆண்டு சம்பூர்ணம் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு சாய் லட்சுமிகாந்த், சாய் ஜெயகாந்த் என்ற இரண்டு மகன்கள்.

1986ம் ஆண்டு முதன் முறையாக ஆலந்தூர் நகரமன்ற தலைவராக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நான்கு முறை ஆலந்தூர் நகர மன்றத் தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார். கழகமே மூச்சாக செயல்படும் ஆர்.எஸ்.பாரதியுடனான இந்த நேர்காணல் திமுகவின் தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை என்கிற தீர்ப்பு வந்திருக்கிறது. இதுபோன்ற பல சட்டங்களுக்கு, திட்டங்களுக்கு நாட்டிற்கே முன்னோடியாக திமுக இருக்கும் வேளையில், அதனை பின்னுக்குத் தள்ளுவதற்கான பணிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதை எவ்வாறு முறியடிக்கப் போகிறீர்கள்?

மக்கள் நலன் கருதி திமுக எடுக்கிற எல்லா நடவடிக்கைகளிலும் இறுதி வெற்றி எங்கள் கட்சிக்கே கிடைத்திருக்கிறது. அண்ணா ஆட்சிக்கு வந்த உடனே சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றபோது, எதிர்ப்புகள் கடுமையாக இருந்தது. என்றாலும் இறுதி வெற்றி திமுகவுக்கே கிடைத்தது.அதேபோல் கலைஞர் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்பும்.

முதன் முதலில் அரசியல் சட்டம் உருவாக்கும் போது  Communal GO-வில் கை வைத்தார்கள். அதையும் பெரியார், அண்ணா இரட்டைக் குழல் துப்பாக்கியாக போராடி முதல் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர காரணமாக இருந்தார்கள். அப்போது பெருந்
தலைவர் காமராஜர் காங்கிரசின் தலைவராக இருந்ததால் அதை வாங்குவது எளிதாக இருந்தது.  

இந்த எழுபது ஆண்டுகளில் டாக்டர்களாக, எஞ்சினியர்களாக, வக்கீல்களாக, பட்டதாரிகளாக பலர் உருவாகியிருக்க முக்கிய காரணம் திராவிட இயக்கம் போராடி பெற்றுக் கொடுத்த உரிமைதான். சமூக சீர்திருத்தங்கள் சார்பில் திமுக எடுத்த எல்லா முடிவுகளும் நியாயமானதாக இருந்திருக்கிறது; இருக்கும். 1929ல் பெரியார் செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு சம உரிமை வேண்டுமென்றார். 60 ஆண்டு காலம் கழித்து தலைவர் 1989ம் ஆண்டு அதை சட்டமாக்கினார்.  

அதை ஆமோதித்து இன்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். மனிதனை மனிதனாக்கியது. முன்னேறிய சமுதாயத்தினர் மட்டுமே இருந்த இடங்களில், இன்று படித்த எல்லோரையும் அவர்களுக்கு சமமாக முன் நிறுத்தியிருக்கிறது… இன்றைய இளைய சமுதாயம் இதைப் புரிந்து பார்க்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்..?
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முன்னேறக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த ராஜாஜி 1952ம் ஆண்டு குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். Communal GO கொண்டுவர முயன்று சட்டம் போட்டார்கள். அப்போது திமுக, திகவின் போராட்டம் ராஜாஜியை கீழ் இறக்கி, காமராஜர் முதல்வராக வருவதற்கு காரணமாக இருந்தது. அந்த குலக்கல்விக்கு சமமானது இப்போது வந்திருக்கும் கல்விக் கொள்கை.

அன்று எப்படி போராடி வென்று எல்லோருக்கும் கல்வி கிடைக்க திராவிட இயக்கம் வழிவகை செய்ததோ, அதுபோலவே இன்று திமுக தலைவர் ஸ்டாலினும் செயல்படுகிறார்.  சரத்து 343ல் திருத்தம் கொண்டு வரும் வரை இந்தித் திணிப்பு இருக்கும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறதே?
‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை இந்தி கட்டாய மொழியாக இருக்கக் கூடாது’ என்று பெருந்தன்மை கொண்ட தலைவரான பண்டிதர் நேரு சொன்னார். அந்த உறுதி மொழி நீடிக்க வேண்டும். திமுக என்றும் இந்திக்கு எதிர்ப்பு கிடையாது. இந்தியைத் திணிக்காதீர்கள்... கட்டாயப்படுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறோம். எதையும் கட்டாயப்படுத்தும்போதுதான் பிரச்னை ஆகிறது.

அதேபோல் பிராமணர்களுக்கும் திமுக எதிரி அல்ல. பிராமணியத்துக்குத்தான் நாங்கள் எதிரி.   திராவிடம் Vs ஆரியம் என்றிருந்த நிலையில் இப்போது தமிழ்தேசியம், மய்யம், ஆன்மீகம்… என்ற பட்டியல் திராவிடத்துக்கு - திமுகவுக்கு - எதிராக இணைந்திருக்கிறதே? ஆன்மீகம் என்பதை கையில் எடுக்கிறார்கள். அதை மூலதனமாக வைத்து பிரச்னை செய்யலாம் என்று நினைத்தால்... அது இந்த மண்ணில் நிச்சயம் எடுபடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆன்மீகமா இல்லையா என்பது என்றும் பேச்சல்ல. தந்தை பெரியாரை ஆதரித்தவர்களில் - ஆதரிப்பவர்களில் - சாமியை வணங்குபவர்களும் இருக்கிறார்கள். கூடவே தந்தை பெரியார் சொன்னது, பேசியது, எழுதியது எல்லாம் நமக்காகத்தான் என்பதை தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சின்னச் சின்ன கட்சிகள் வரும்... போகும். ஆதித்தனார், ‘நாம் தமிழர்’ கட்சியை வைத்திருந்தார். எம்ஜிஆரை மலையாளி என அக்கட்சி பேசியது. ஆனால், எடுபடவில்லையே!எந்த ஒன்றையும் யார்... எந்தத் தலைவர் சொல்கிறார்... எதற்காக... ஏன் அப்படி சொல்கிறார்... என்பதைப் பொறுத்தே அதன் தாக்கம் இருக்கும்.

எங்கள் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சொல்கிறார் என்றால்... அது திராவிட இயக்கத்தின் குரல்! ‘இது நமக்காக பாடுபட்ட கட்சி, நிச்சயமாக நமக்கு நல்லது செய்யும்’ என்று மக்களும் நம்புகிறார்கள். எனவேதான் திமுகவின் குரல் என்றும் உண்மையானதாக, தமிழர்களின் அங்கீகாரமான குரலாக அன்றும் இன்றும் ஒலிக்கிறது; என்றும் ஒலிக்கும்! மற்ற கருத்துகளை முன்வைக்கும் கட்சிகள் வரும்... போகும்... சுவடில்லாமல் மறையும்!
கொரோனாவுக்கு எதிரான மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது..?

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசுகளாக இரண்டுமே இருக்கின்றன. கொரோனா பரவுவதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசின் தவறான நடவடிக்கையே. ‘விளக்கு ஏற்றுங்கள், கைகளைத் தட்டுங்கள்…’ என்று கேலிக் கூத்தாக்கி கொண்டாட்டமாக மாற்றினார்களே தவிர விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டனர்.

அதேபோல் போதுமான அளவுக்கு மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியையும் தராமல் இருக்கின்றனர். சரியான திட்டமிடல் இல்லை.
மாநில சர்க்காரைப் பொறுத்தவரை இந்த கொரோனாவை பயன்படுத்தி பயங்கரமாக ஊழல் செய்து வருகின்றனர். உதாரணமாக 100 மில்லி வேப்பெண்ணெய் விலை ரூ.27தான். அதையே ரூ.180க்கு வாங்கியதாக பில் போட்டிருக்கிறார்கள்! பிளீச்சிங் பவுடருக்கு பல மடங்கு விலை. ஆனால், பாதி இடங்களில் பிளீச்சிங் பவுடரை போடவே இல்லை. சுண்ணாம்பைத்தான் போட்டிருக்கிறார்கள்!

ரூ.4,000 - 4,500 மதிப்புள்ள ஸ்ப்ரேயருக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் ரூ.19,000க்கு பில் போட்டிருக்கிறார்கள்! கொள்முதல் எல்லாமே ஹோல்சேலில் அமைச்சர்கள் மூலமாகவே வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சகத்தில் மிகப்பெரிய
அளவில் ஊழல் நடந்திருக்கிறது.  

கார்ப்பரேஷன், சாப்பாடு, ஹோட்டலில் தங்குவது, இ-பாஸ்… என எல்லாவற்றிலும் மக்கள் பணத்தை அடிக்கிறார்கள். டாஸ்மாக்கில் கூடாத கூட்டமா இ-பாஸ் வாங்க கூடிவிடப்போகிறது..? இ-பாஸ் வாங்க இதுவரை ஏகப்பட்ட கெடுபிடிகளைப் பின்பற்றினார்களே... எதற்கு என நினைக்கிறீர்கள்..? மற்ற அரசியல் கட்சிகளை முடக்கத்தான்! திமுக களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறது. இதனால் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் எங்கு திமுகவின் செல்வாக்கு அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

எந்த அதிமுக நபரும் வெளியே வருவதில்லை. சென்னையில் உள்ள ஒவ்வொரு வட்ட செயலாளரும் வெளி மாவட்டங்களிலிருந்து மது பாட்டில்களை வாங்கி, இங்கு அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.கிடைத்திருக்கும் தகவல்படி ஒயின்ஷாப் மூடியிருந்த போது ஒவ்வொரு அதிமுக எம்எல்ஏவும் மாதம் ரூ.2 கோடி சம்பாதித்துள்ளனர்.

என்றுமே திமுக ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியது கிடையாது. விரைவில் இதற்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நாங்கள் முன் வைத்த பல புகார்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்று சிலர் ஜெயில் தண்டனையும் அனுபவித்து வந்துவிட்டார்கள். ஜெயலலிதாவே உயிரோடு இருந்திருந்தால் இப்போது A1 குற்றவாளியாக சிறையில்தான் இருந்திருப்பார்.  

கலைஞர் எப்படி ஆதாரங்களை ஒன்றுக்கு பத்து முறை சரிபார்த்துவிட்டு செய்தியாளர்கள் முன் பேசுவாரோ அப்படி கொரோனா காலத்தில் எங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்களும் சரிபார்த்த பிறகே குற்றம்சாட்டியிருக்கிறார். கொரோனா மரணங்களின் தவறான எண்ணிக்கையை அவர் சுட்டிக்காட்டி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஓர் உதாரணம்தான். கோட்டையில் அமர்ந்து உத்தரவு போடவில்லையே தவிர எங்கள் தலைவர் கொடுக்கும் அறிக்கையை வைத்துதானே இன்று அரசு செயல்படுகிறது!

சசிகலாவின் விடுதலை திமுகவைப் பாதிக்குமா..?
ஒருபோதும் இல்லை! சசிகலா விடுதலை யாவது குறித்தெல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஜெயலலிதாவும் சசிகலாவும் வெளியில் இருந்தபோதே கடந்த முறை தேர்தலில் ஒரேயொரு சதவிகித வாக்கில்தான் திமுக தோல்வியைத் தழுவியது.

பகிரங்கமாக சொல்கிறேன்... கூட்டணி கட்சிக்காரர்கள் அடம்பிடித்து அதிகமான இடங்கள் வாங்கியதால்தான் அந்த இடங்களில் அதிமுக ஜெயித்தது. குறிப்பாக காங்கிரஸ் 42 இடங்களில் நின்றது. ஆனால், 8 பேர்தான் ஜெயித்தார்கள். காங்கிரஸ் தோற்ற 34 இடங்களிலும் திமுக நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆட்சியையும் கடந்த முறையே கைப்பற்றியிருப்போம்.

உச்சநீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா வெளியில் வந்தால்... இப்போதிருக்கும் அதிமுகவுக்குத்தான் பிரச்னையே தவிர திமுகவுக்கு அல்ல! முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை அதிமுகவில் ஓடுகிறதே..?
அது அக்கட்சியினரின் பிரச்னை. இதைக்குறித்து நாங்கள் எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை!

செய்தி: அன்னம் அரசு

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்