நான்...கல்யாணமாலை மோகன்



திருமணத்தை நாங்க இதுவரை தொழிலா பார்த்ததே இல்லை. அதனாலயே சில கட்டுப்பாடுகளை இப்போதும் கடைப்பிடிக்கிறோம்.
‘ஆணுக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் சேர்த்து வைக்கிறதா நினைக்காதீங்க. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு புது தலைமுறையை ஆரம்பிச்சு வைக்கிறீங்க...’ ஜனாதிபதியான அப்துல்கலாம் ஐயாவை சந்திச்சப்ப அவர் சொன்ன வார்த்தைகள் இவை.

திருமணம் ஏதோ ஒரு நாள் சடங்கு இல்ல. ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையையே உருவாக்குகிற வேலையை கடவுள் நம்மகிட்ட கொடுத்திருக்கார். அந்த பயத்தை எப்பவும் மனசுல வைச்சுகிட்டுதான் நாங்க வேலை செய்யறோம். இல்லைன்னா சன் டிவி மாதிரி ஒரு பெரிய சேனல்ல ஒரே தலைப்பு, ஒரே நேரம், ஒரே டீமா ஆயிரம் வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமா நடத்த முடியுமா?

மிகச் சாதாரண குடும்பம். தாத்தா கணக்காளர். வீட்டருகிலேயே அப்பா கிளை போஸ்ட் மாஸ்டர். அப்பா பெயர் வைத்தியநாதன். அம்மா காமாட்சி. மாயவரம் நன்னிலம் கிராமத்துலதான் பிறந்தேன். என்னையும் சேர்த்து நாங்க நாலு பேர். பெரியவர் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன். அடுத்து நான். எனக்குப் பிறகு நாகராஜன். நாலாவதா தங்கை லீலா. நன்னிலம் பக்கத்துல பனங்குடி கிராமத்துல அஞ்சாவது வரை படிச்சேன்.

அங்க இருந்து கர்நாடக இசை அறிஞர்களான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர்... இந்த மும்மூர்த்திகள் பிறந்த ஊரான திருவாரூர் வாழ்க்கை. அங்கதான் மேற்படிப்பு எல்லாம். வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. கூடவே மும்மூர்த்திகள் சபாவிலே முறைப்படி நாலு வருஷங்கள் சங்கீதம் கத்துக்கிட்டேன். அங்க இருந்த அத்தனை மாணவர்களிலும் நான் டாப். ஒருவேளை அப்படியே இருந்திருந்தா இந்நேரம் மிகப்பெரிய பாடகரா வந்திருப்பேன்.

மேல்படிப்புக்கு போகப் போக இசையை விட்டு விலக ஆரம்பிச்சுட்டேன். இப்பவும் அதுல வருத்தம் உண்டு. அம்மாவும் நான் மிகப்பெரிய பாடகனாகவோ சங்கீத கலா புருஷராகவோ வருவேன்னு நினைச்சாங்க. என் குரல் நான் சொல்றதைக் கேட்கும். வரிசையா பரிசுகள் வேற. என்னவோ சங்கீதம் என்னை விட்டு போயிட்டது. அந்த குரல் கட்டுப்பாடுதான் எனக்கு டிவி நிகழ்ச்சில கை கொடுக்குது. ஆனா, இன்னைக்கும் சிறந்த சங்கீத நிகழ்ச்சின்னா நான் முதல் வரிசைல இருப்பேன்.

அடுத்தடுத்து மேல்படிப்பு. கும்பகோணம் வாழ்க்கை. பி.காம் படிக்கும் போதே வேலையும் கிடைச்சது. வயல் வரப்புகள்ல இறங்கி வேலை செய்கிற பாக்கியமா மெட்ராஸ் ஃபெர்டிலைஸர் கார்ப்பரேஷன் டீலர் கிட்ட வேலை. அதாவது ஒரு புது உரம் விவசாயிகள் கைக்கு போறதுக்கு முன்னாடி அதை நாங்க தரம் பார்ப்போம்.

‘நீங்க சொல்லுங்க தம்பி நான் வாங்குறேன்…’ இப்படி கடை முதலாளியக் கூட நம்பாம நம்மள நம்பி கேட்டு வாங்கிட்டுப் போவாங்க.
சரி, இதுதான் நம்ம வாழ்க்கை போல; அப்படியே நல்ல வேலை, நிரந்தர வருமானம்னு உட்காரலாம்னு நினைச்சா நிரந்தர வேலைக்கான இண்டர்வியூவிலே பி.எஸ்சி அக்ரிகல்ச்சர் படிச்சிருந்தாதான் தொடர்ந்து வேலைன்னு சொல்லிட்டாங்க.

மிகப்பெரிய ஏமாற்றமா இருந்திச்சு. இப்பவும் அந்த வயல்வெளியில இறங்கி வேலை செய்த மோகன் உள்ள இருக்கான். ஒரு வயல் வாங்கி விவசாயம் செய்யணும் என்பது நீண்ட நாள் கனவு. அடுத்து சென்னை பெரம்பூர் பிஎன்சி மில்லுல அக்கவுண்டன்ட்டா பத்து வருஷங்கள் வேலை. காம்ப்டோ மீட்டர் ஆபரேட்டர்.

நான் மாசச் சம்பளத்திற்கு உட்கார்ந்து வேலை செய்கிற ஆள் கிடையாது. வேலையில ஒரு பிடித்தமே இல்லாமதான் செய்துட்டு இருந்தேன். அதையும் விட்டுட்டு சொந்தமா பிஸினஸ்பண்ண முடிவெடுத்து ஸ்பென்சர் பிளாஸால ஐஸ்கிரீம் ஷாப் துவங்கினேன். தமிழ் நாட்டிலே முதல்முறையாக குவாலிட்டிவால் ஐஸ் கிரீம் எடுத்தது நான்தான். தினமும் கல்கத்தாவுல இருந்து விமானத்துல ஐஸ்கிரீம் வரும். அதே வேளை கேட்டரிங் ஆரம்பிச்சு கல்யாணம் உள்ளிட்ட விழாக்களுக்கு ஆர்டர் எடுக்க ஆரம்பிச்சேன்.

எனக்கு சமைக்கத் தெரியாது. ஆனா, நல்லா சாப்பிடத் தெரியும்! சமைக்கத் தெரிஞ்சவங்க கேட்டரிங்ல குறிப்பிட்ட சாப்பாடுகள்தான் நல்லா இருக்கும். நான் சமைக்காததால யார் என்ன சமைச்சா நல்லா இருக்குமோ அதை வாங்கி ஒண்ணு சேர்த்து விழாக்களுக்குக் கொடுத்தேன். உதாரணத்திற்கு, சப்பாத்தி குருமா ஒருத்தர் கிட்ட நல்லா இருக்கும்னா அவர் கிட்டதான் சப்பாத்தி. இப்படி எந்தக் கடைல, எந்த சமையல் நிபுணர் கிட்ட எது சிறப்பா இருக்குமோ அதையெல்லாம் ஒண்ணு சேர்த்து கேட்டரிங் கொடுக்கறது.

கேட்டரிங் வந்தாலே கூடவே கல்யாணத்துக்குத் தேவையான மற்றவைகளும் உடன் சேருமே... திருமணத்திற்கான அனைத்து சேவைகளுமா A - Z ஈவன்ட் மேனேஜிங் ஆரம்பிச்சோம். 2000ல்தான் என் சகோதரர் மனைவி மீரா நாகராஜன், ஒரு ஐடியாவுடன் வந்தாங்க. பெரிய அண்ணன் பிரமிட் நடராஜன் தயாரிப்பாளர். ஆனா, நாங்க யாரும் சினிமாப் பக்கம் போகவே இல்ல. அண்ணனும் கே.பாலசந்தரும் நிறைய படங்கள் செய்திருக்காங்க. கே.பி.யும் நன்னிலம்தான். ஏ.ஆர். ரஹ்மான் ஆடிஷன்ல கூட என் அண்ணன் உடன் இருந்தார்.

நாங்க டிவி பக்கம் ஒதுங்கினோம். ஏற்கனவே டிடி பொதிகைல ‘டெம்பிள்ஸ் ஆஃப் இந்தியா’னு ஒரு நிகழ்ச்சி மூலமா இந்தியாவின் நூறு கோயில்களை ஷூட் செய்தோம். அப்பதான் ஏன் நாம டிவியில் வரன் அறிமுக நிகழ்ச்சி செய்யக் கூடாதுன்னு மீரா கேட்டாங்க. ‘கல்யாண மாலை’... இந்தப் பெயர் தேர்வே ஒரு வாரம் நடந்துச்சு. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோரெல்லாம் இந்த நிகழ்ச்சி திட்டமிடல்ல இருந்தாங்க.  

கான்செப்ட்டைக் கொடுத்து சன் டிவில ஓகே வாங்க மூன்று மாதங்கள் ஆச்சு. காரணம், ஜாதி, மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்கிறதால அவங்களும் நிறைய நேரம் எடுத்து யோசிச்சாங்க. பின்னாடிதான் கலாநிதி மாறன் சார் ஓகே செய்தார்.யார் பண்ணலாம்னு கேட்டப்ப, ‘ஏன் நீங்களே செய்யுங்
களேன்’னு சொன்னார். ஆனாலும் ஒரு மிகப்பெரிய பிரபலம் கொண்டு பிரம்மாண்டமா இதை ஆரம்பிப்போம்னு திட்டமிட்டோம். பெரிய அளவிலே தொகை எல்லாம் கூட பேசினோம்.

ஆனா, வரன், கல்யாணம் இதையெல்லாம் கேட்டுட்டு அவர் கொஞ்சம் தயங்கி மறுத்துட்டார். இன்னொரு மீடியா முக்கியஸ்தர் ‘இதெல்லாம் என்ன சார் புரோகிராம், டிவில யாரும்  தன் பிள்ளைகளைக் கூட்டிட்டு வந்து உட்கார மாட்டாங்க. பத்து வருஷங்கள் கழிச்சு வேணும்னா ஓரளவு சாத்தியம் ஆகும். இப்ப ஆரம்பிச்சா நிச்சயம் தோல்வியாகும்’னு தீர்க்கமா சொன்னார்.

ஆனா, நாங்க ஜெயிச்சு காண்பிச்சோம்! முதல் ரெண்டு வருஷங்கள் கஷ்டப்பட்டோம். காலை சாப்பாடு, மதிய சாப்பாடு, காபி, ஸ்நேக்ஸ் எல்லாம் கொடுத்து வெல்கம் பண்ணுவோம். எல்லாம் கேட்டு ஓகே சொல்லிதான் வருவாங்க. லைட்ஸ், கேமரா ஆன் பண்ண உடனே பாதிப் பேர் நைசா கிளம்பிடுவாங்க. இப்ப ஒருமுறை ஷூட் எடுத்தா குறைஞ்சது ஒரு மாச எபிசோட்கள் எடுக்கறோம். அன்னைக்கு ஒரு வார நிகழ்ச்சி போறதே கழுத்தைப் பிடிக்கும்.

ஆனா, நாங்க எல்லோரும் ஒரே குடும்பம் என்பதால் இந்தக் குழு உடையாம இருக்கு. ஒரு குடும்பம் சேர்ந்து ஒரு விஷயம் செய்தா அதற்கு வெற்றி நிச்சயம். அதுக்கு ‘கல்யாண மாலை’ நிகழ்ச்சியே பெரிய உதாரணம்.நான்கைந்து பேர்களோடு ஆரம்பிச்ச நிகழ்ச்சி இப்ப 100 குடும்பங்கள் சூழ ஒரே நாள் ஷூட் எல்லாம் நடக்குது. நானும் தொடர்ந்து சலிக்காம பேசுவேன். என் சங்கீதம் கொடுத்த குரல் கட்டுப்பாடு இங்க பயன்படுது. சோர்வாகாம, நிதானமா பேசக் கூடிய திறமை சங்கீதம் கொடுத்ததுதான்.

‘கல்யாண மாலை’ வரன்... அதுக்குள்ள பேச்சரங்கம். ஐயா சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர், சுகி சிவம்னு எல்லாரும் உள்ள வந்தாங்க. பல ஊர்கள், நாடுகள்... நேரடியா தமிழ் சங்கங்கள் மூலமா நிகழ்ச்சிகள் செய்யத் துவங்கினோம். வெற்றிகரமா கலெக்டர் அனுமதியோடு 50 பேர் மட்டுமே வெச்சு 1000வது வாரம் நிறைவாகியிருக்கு.

ஊருக்கே கல்யாணம் பண்ற என் கல்யாணம் 21 வயசுல நடந்தது. 1974ல், உறவுக்காரப் பொண்ணு. அவங்க பேர் உமா. படிச்சுட்டு இருந்தவங்க லீவுக்கு வந்தாங்க. அவங்க தாத்தா என் பெயரை சிபாரிசு செய்திருக்கார். வைத்தியநாதன் பையன் மோகன நம்ம பொண்ணுக்குப் பார்க்கலாம்னு.
என் தங்கை லீலா கல்யாணத்துக்கு வந்தவங்க என்னை பேசி முடிச்சுட்டுப் போயிட்டாங்க. என் மனைவி கூடப் பிறந்த மற்ற சகோதரிகளுக்கெல்லாம் பெரிய பேங்க் ஆபீசர்கள்தான் மாப்பிள்ளைகள். ஆனா, என்னை எப்படி என் மாமனார் ஓகே செய்தார்னு அப்ப புரியலை.
இப்ப புரியுது!

அப்பா, அம்மா ரெண்டு பேரும் கூடவே இருந்து திருப்தியா வாழ்ந்துட்டுதான் போனாங்க. 80வது திருமணம், கனக பூஜை முதற்கொண்டு
செய்தோம். எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. சரியான வயசுல அவங்களுக்கு கல்யாணம் நடத்திட்டேன். பொண்ணு வித்யா. பையன் விஜயபாஸ்கர். பேரன்கள் எடுத்தாச்சு.

பேத்திதான் இல்ல.நான் என்பது நான் மட்டுமில்ல... சுமார் அஞ்சு லட்சத்துக்கும் மேலான கல்யாணங்கள் இந்த ‘கல்யாண மாலை’ மூலமா நடந்திருக்கு.
இந்தத் திட்டத்துக்கு மூளையா மீரா நாகராஜன், பின்னணில சன் டிவி உட்பட பலரும் இருக்காங்க. அதெல்லாம் சேர்ந்துதான் இந்த மோகன்!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்