தனி ஒருத்தி!



இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கார்கில் போர் இந்தியாவையே உலுக்கியது. அதில் பங்குபெற்ற முதல் பெண் விமானி குஞ்ஜன் சக்சேனா. தவிர, போருக்குச் சென்ற இந்திய விமானப்படையைச் சேர்ந்த முதல் பெண் அதிகாரியும் இவரே.போரில் அடிபட்டவர்களை மீட்பதும் எதிரிகளின் இடங்களை ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே கண்காணிப்பதும் இவரது பணி. கார்கில் போரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய பலரைக் காப்பாற்றியிருக்கும் இவரை ‘கார்கில் கேர்ள்’ என்று அழைக்கின்றனர்.

இந்த வீரப் பெண்மணியின் வாழ்க்கையைத் தழுவிய இந்திப் படம்தான் ‘குஞ்ஜன் சக்சேனா’.சிறுவயதிலிருந்தே பைலட் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருப்பவள் குஞ்ஜன் சக்சேனா. அவளது அப்பா இராணுவத்தில் பணியாற்றியவர். அம்மா அக்மார்க் குடும்பப் பெண். அண்ணன் இராணுவத்தில் இருக்கிறார். படிப்பில் படுசுட்டியான குஞ்ஜனின் கனவுக்கு அம்மா, அண்ணன் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் எல்லோருமே முட்டுக்கட்டை போடு
கிறார்கள். ‘‘பொம்பள புள்ளைக்கு இதெல்லாம் எதுக்கு..?’’ என்று குஞ்ஜனை அடக்கி ஒடுக்குகிறார்கள்.

ஆனால் அப்பாவோ, ‘‘விமானம் என்கிற இயந்திரத்துக்கு அதை இயக்குவது ஆணா, பெண்ணா என்று தெரியாது...’’ என்று சொல்லி குஞ்ஜனுக்கு ஆதரவாக இருக்கிறார். குஞ்ஜனும் முட்டி மோதி பல தடைகளைக் கடந்து இந்திய விமானப்படையில் பயிற்சிக்காக சேர்கிறார். அங்கேயும் ஆணாதிக்கம். குஞ்ஜனுடன் பயிற்சி பெறுபவர்களில் ஒரு பெண் கூட இல்லை. எப்படியாவது குஞ்ஜனை வீட்டு சமையல் கட்டுக்குத் துரத்தியடிக்க வேண்டும் என்ற நோக்கில் அங்கிருக்கும் அதிகாரிகளும் சக பயிற்சியாளர்களும் செயல்படுகின்றனர். இதனால் குஞ்ஜன் உடைந்துபோகும் போதெல்லாம் அப்பா உறுதுணையாக இருந்து மகளை வழிநடத்துகிறார்.

தனி ஒருத்தியாக பயிற்சியில் ஆண்களை மிஞ்சுகிறார். கார்கில் போர் ஆரம்பிக்கிறது. இந்திய விமானப் படையில் சிறந்த விமானிகளை போருக்கு அழைக்கிறது இராணுவம். அதில் தேர்வாகும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் குஞ்ஜன். கார்கில் போரில் அவரது முக்கிய பங்களிப்பை சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறது திரைக்கதை.

படிப்பு, திறமை என எல்லாமே இருந்தாலும் கூட, பெண் என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கி வைக்கப்படும் அவலத்தை அழுத்தமாக சித்தரிக்கிறது இந்தப் படம். இந்த அவலம் இன்றும் பல துறைகளில் நடப்பதால் இப்படம் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது. அதே நேரத்தில் மனதில் உறுதியுடன் இருந்தால் எவ்வளவு தடைகளையும் உடைத்து உயரே பறக்க முடியும் என்ற உந்துதலையும் இப்படம் நமக்குத் தருகிறது. குஞ்ஜனாக நடித்த ஜான்வி கபூர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். படத்தின் இயக்குநர் சரண் சர்மா. ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது.