தமிழில் ரீமேக் ஆகும் மலையாளப் படம்!



ஒரு திரில்லர் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ‘ஜோசப்’. திக்... திக்... நிமிடங்களுக்கு நடுவில் ரொமான்ஸிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறது இந்த மலையாளப்படம். தவிர, சமகால பிரச்னை ஒன்றை கையில் எடுத்து அதில் சிக்ஸர் அடித்திருக்கிறது.
கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் கைதேர்ந்த காவல்துறை அதிகாரி ஜோசப். அவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும் ஒரு மகளும் இருக்கிறார்கள். எந்தவித பிரச்னையும் இல்லாமல் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது.

ஒரு கொலைச் சம்பவத்தை விசாரிக்கச் செல்கிறார் ஜோசப். அங்கே கொலையுண்டு அழுகிய நிலையில் ஒரு பெண் பிணமாகக் கிடக்கிறாள். அது ஜோசப்பின் முன்னாள் காதலி. தனது அழகிய காதலியை அழுகிப்போன பிணமாகப் பார்த்ததில் ஜோசப் பேய் பிடித்தவர்போல ஆகிவிடுகிறார்.

அவரால் எந்த ஒன்றிலும் சரியாக ஈடுபடமுடியவில்லை. மனைவி காதலுடன் அணுகும்போது கூட முன்னாள் காதலியின் அழுகிய பிணம்தான் அவருக்கு ஞாபகம் வருகிறது. தன்னுடைய காதலியைப் பற்றி மனைவியிடம் சொல்ல ஜோசப்பிற்கு பயம்.

தினமும் குடிக்கிறார். பொறுத்திருந்து பார்த்த அவரது மனைவி விவாகரத்து பெற்று பீட்டர் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்கிறார். மகள் பெரும்பாலும் அம்மாவுடனே இருக்கிறாள். தனித்து விடப்படுகிறார் ஜோசப். காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, தன்னுடன் பணியாற்றிய சில நண்பர்களுடன் காலத்தை ஓட்டுகிறார். கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்குகள் ஜோசப்பிடம் வருகின்றன.

இப்படியாகச் சென்றுகொண்டிருந்த ஜோசப்பின் வாழ்வில் இடியாக வந்து விழுகிறது முன்னாள் மனைவியான ஸ்டெல்லாவுக்கு நிகழ்ந்த விபத்து. மூளைச்சாவு அடைந்த ஸ்டெல்லாவின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கேட்கிறார் மருத்துவர். சில வருடங்களுக்கு முன்பு ஜோசப்பின் மகளும்
விபத்தினால் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளும் தானமாகக் கொடுக்கப்பட்டன.

மகளுக்கும் மனைவிக்கும் ஒரே மாதிரியான நிலை ஏற்பட்டதால் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரணையில் இறங்குகிறார் ஜோசப். அந்த விசாரணை, மருத்துவ உலகில் நடந்துகொண்டிருக்கும் முக்கியமான ஊழலை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

ஸ்டெல்லாவின் முன்னாள் கணவரான ஜோசப்பைப் பற்றிய கதையை இந்நாள் கணவரான பீட்டர் சொல்வதாக திரைக்கதை அமைத்திருப்பது அருமை.

ஒரு பெண்ணின் இரண்டு கணவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல், அவர்கள் ஒருவரை ஒருவர் அணுகுகிற விதத்தை முதிர்ச்சியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் பத்மகுமார். ஜோசப்பாக நடித்த ஜோஜு ஜார்ஜின் நடிப்பு அசத்தல். இப்படம், அமேசான் பிரைமில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் ரீமேக் செய்கிறார்கள்.

தொகுப்பு: த.சக்திவேல்