பட்டையைக் கிளப்புது BOWKNOT



பேண்ட், ஸ்கர்ட்... ஆகியவற்றில் பட்டன்கள் அல்லது ஜிப் அல்லது ஊக்குகளுக்கு பதில், அந்த உடையின் நுனியிலேயே முடிச்சுப் போட்டுக் கொள்ளும் விதமான உடைகளையே பவ்நாட் (BowKnot) என்கிறார்கள். இப்போது எதற்கு இது என்கிறீர்களா..? வேறென்ன... இன்றைய இளசுகளின் ஃபேஷன் டிரெண்ட் இதுதான்!

‘‘ஐரோப்பிய மக்களின் ஃபேஷனோடு ஒன்றிப் போனது இதுனு சொல்லலாம்...’’ என்று புன்னகைக்கிறார் ஃபேஷன் டிசைனரான ஷரத் சுந்தர்.

‘‘கவுன், டாப்ஸ், லாங் கவுனின் முன்புறம், பின்புறம், தோள்பட்டைகள்னு கேப் கிடைக்கற இடங்கள்ல எல்லாம் அவங்க இந்த ரிப்பன் முடிச்சு டிசைன்ஸை பயன்படுத்துவாங்க.

இந்த ஹை வெயிஸ்ட் பாட்டம்ஸ் - அதாவது இடுப்புக்கு மேல் வரை கவர் செய்யும் பாட்டம்ஸ் ஐரோப்பிய நாடுகள்லதான் அதிகம். முக்கியமா இடுப்பை சுருக்கிக் காட்ட இந்த ஹை வெய்ஸ்ட் ஸ்கர்ட்ஸை உபயோகிக்கறாங்க.

ஆனா, லோ ஹிப் ஜீன், ஸ்கர்ட், ஷர்ட்ஸ் எல்லாம் ஒல்லி பெல்லி டிரெண்டுக்கு அப்புறம் வந்தது.எந்த உடைலயும் ஒரு சின்ன துணில ரிப்பன் மாதிரி இணைச்சு, சின்ன முடிச்சு போட்டு உடல் வளைவுகளுக்கு ஏத்தா மாதிரி சைஸை மாத்திக்கலாம். இதுக்காகவேதான் பவ்ஸ் இருக்கு...’’ என்ற ஷரத், எப்படி தற்சமயம் இந்த முடிச்சு பாட்டம்களில் வந்தது என விளக்குகிறார்.

‘‘இது ஜிப்ஸி ஸ்டைலை சேர்ந்தது. அதாவது ஜிப், பட்டன் இல்லாம அப்படியே கட்டிக்கலாம். நாடோடிகளா அலையற ஜிப்ஸிகள், வழில பட்டன் அல்லது ஜிப் அல்லது ஊக்கு பிய்ந்து போனா என்ன செய்யறதுனு முடிச்சுப் போட ஆரம்பிச்சாங்க. அதுவே இப்ப டிரெண்டாகிடுச்சு.

குளோபலைசேஷனுக்குப் பிறகு ஆணும் பெண்ணும் பயணம் மேற்கொள்ள ஆரம்பிச்சிருக்காங்க... டிராவலுக்கு முடிச்சு போடும் உடைதான் பெஸ்ட் சாய்ஸ். அப்புறம் இப்ப பிளாஸ்டிக், சிந்தடிக் இல்லாம வரும் உடைகளைத்தான் மக்கள் வாங்கறாங்க. ஆர்கானிக் உடைகளுக்கு மவுசு அதிகம். இதெல்லாம் சேர்ந்துதான் இந்த பவ்நாட் இப்ப ஃபேஷனாகி இருக்கு...’’ என்ற ஷரத், இதிலும் ரூல்ஸ் உண்டு என்கிறார்.

பென்சில் டிப் பாட்டம்களுக்கு டாப் லூசாவும்; பலாஸ்ஸோ அல்லது பலூன் ஸ்டைல் பாட்டம்களுக்கான டாப்ஸ் இறுக்கமாகவும் இருக்கணும்.
இந்த பவ்நாட்டுக்கு அழகே முடிச்சுகள் வெளிய தெரியாம முழு பாட்டம்வேரும் தெரிவது மாதிரி அணிவதுதான். அதனாலதான் பெரும்பாலும் ஒல்லியான அல்லது வயிற்றுப் பகுதி தட்டையான பெண்கள் இதை டிக் அடிக்கறாங்க.

பருத்த இடைப்பகுதி உள்ள பெண்கள் பலாஸ்ஸோ மாதிரியான பாட்டம்களை தேர்வு செய்யலாம். ஜார்ஜெட், காட்டன், ரேயான் மாதிரி லேசான மெட்டீரியல்கள்ல இந்த பாட்டம்கள் நல்ல லுக் கொடுக்கும்...’’ என்கிறார் ஷரத்.

ஷாலினி நியூட்டன்