சினிமாட்டோகிராபி மட்டும் நல்லாயிருக்குனு சொன்னா... அது அநியாயம்! எஸ்.ஆர்.கதிர் பளிச்
‘கற்றது தமிழ்’தான் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிருக்கு ஆச்சரிய அறிமுகம். அதற்கடுத்து ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் அவர் அடித்ததுஸ்டேடியமே தாண்டிய சிக்ஸர்.
சினிமாவில் எந்தக் குறையும் இல்லாமல் உழைக்கத் தெரிந்த இளைஞர்களில் அவருக்கு எப்பவும் முதலிடம். அதனால்தான் கௌதம் வாசுதேவ் மேனனில் ஆரம்பித்து சசிகுமார் வரையிலும் அவரை லைக்ஸ் போட்டுக் கொண்டாடுகிறார்கள். எஸ். இயக்குநர்களின் ஆல்டைம் ஃபேவரிட். ‘‘எல்லாத்துக்கும் அப்பா, அம்மாவே காரணம். நான் என்ன விரும்பினாலும் அதைச் செய்ய விடுவாங்க. முதலில் சென்னைக்கு வந்திட்டு தாக்குப்பிடிக்க முடியாமல் கோவைக்குத் திரும்பினேன். ‘நீதானே ஆசைப்பட்டு போனாய்... அப்படிப் போயிட்டு கஷ்டப்பட்றேன்னு சொன்னா எப்படி? இரும்பு வியாபாரத்தைப் பாத்துக்க’னு சொன்னார்.
‘கற்றது தமிழ்’ ஷூட்டிங் முடிச்சதும் ‘அதுதான் படம் முடிஞ்சிருச்சே... வந்து தொழிலைப் பாரு’ன்னு மறுபடியும் கூப்பிட்டார். ‘சரி, எவ்வளவு சம்பளம் வாங்கினாய்’னு கேட்டதற்கு பதில் சொன்னேன். ‘டேய், இரண்டு லோடு அடிச்சா, ஒரு வாரத்தில் இதை சம்பாதிக்கலாம்.
இதுக்கு ஆறுமாதம் செலவழிச்சு படம் எடுத்திருக்கீங்க’னு சொல்லிட்டு சிரிச்சார்.கொரோனா சமயம் போன் பண்ணி ‘சாப்பாட்டிற்கு கஷ்டப்படுறியா’ன்னு கேட்டுட்டு‘இல்லை’ன்னு சொன்னதும் போனை வைச்சிட்டார்.
அவர் அப்படித்தான். விழுந்தால், அடிபட்டால் காயத்திற்கு மருந்து போடுவார். ஏன் மறுபடியும் அந்தப்பக்கம் போறேன்னு சொல்லவே மாட்டார். அருமையான தகப்பன். என் பசங்ககிட்டே ‘அவர்தான்டா சரியான இன்ஸ்பிரேஷன்’னு சொல்லி வைச்சிருக்கேன்.
மூணு அக்காவோடு, அம்மாவோடு சின்ன வயதிலிருந்தே சினிமா பார்த்து வளர்ந்தவன். நாலு சுவத்துக்குள்ளே சினிமாவுக்கு கிடைக்கிற மதிப்பு, அங்கீகாரம், கைதட்டல் கூரையை பிளக்கிறது எல்லாமே பிடிச்சது. அப்புறம் வளர்ந்து, டிகிரி முடிச்சதும் உடனே சென்னைக்கு ரயில் ஏறிட்டேன்...’’ புன்னகைக்கிறார்.ஒளிப்பதிவாளராக உருவகம் பெற்றது எப்படி? ஊரிலிருக்கும்போது பி.சி.ராம், சந்தோஷ் சிவன்தான் ஆதர்சம். சென்னைக்கு வந்தபிறகு பி.சி.சார் ஆபீஸ் வாசலில் போய் நிப்பேன். நீ ராம்ஜிகிட்டே போய் சேர்ந்துக்கோன்னு அனுப்பினார். இப்ப இவ்வளவு சீக்கிரத்தில் 17 படம் முடிச்சிட்டு நிற்கிறேன். எனக்கு ஒளிப்பதிவு எப்பவும் ஆரம்பத்திலிருந்து பயம் காட்டினதில்லை. அவ்வளவும் ஆச்சர்யம்தான். ஒரு ஃப்ரேம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை சிறப்பா செய்ய வைக்கிற முயற்சினு அதில் நிறையப் பாடங்கள் இருக்கு.
ராம்ஜி சார், ஓர் இடத்தில் லைட் செட் பண்ணுன்னு சொல்லிட்டு, நமக்குத் தெரியுமான்னு யோசிக்க மாட்டார். அதில் செய்வதைப் பார்த்திட்டு ஒரு சின்ன திட்டு திட்டிட்டு அடுத்த செயல்பாடுகளைச் சொல்வார். ஸ்கிரிப்ட் நல்லா இருக்குன்னா, அதை அடுத்த லெவலுக்கு கொண்டு போறதே சினிமாட்டோகிராபி. ஸ்கிரிப்ட் எப்படியிருந்தாலும் என்ன, சினிமாட்டோகிராபி மட்டும் நல்லாயிருக்குன்னு சொன்னால் அது நியாயம் இல்லாத வேலை.‘சுப்ரமணியபுரம்’ முக்கியமான படமாகும்னு அப்ப உணர்ந்தீர்களா?
நல்ல ஸ்கிரிப்ட். 80களில் நடந்ததை 2008ல் எடுக்கிறோம்னு என்பதில் மட்டுமே கவனமாக இருந்தோம். அநேகம்பேர் அதன் சம்பவங்களைக் கேள்விப்பட்டு இருப்பாங்க. தமிழ் சினிமாவையே புரட்டிப் போடுகிற படத்தை எடுக்கப்போறோம்னு யாராலும் சொல்ல முடியாது.
500 கோடி செலவழிச்சு எடுத்தால் கூட அப்படி சொல்லிக்க முடியாது. அது ஒரு தங்க விதி. நல்ல ஸ்கிரிப்டாக இருந்தா, அது நல்ல ஸ்கிரிப்ட் மட்டும்தான். சசி குமார் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். இந்த சினிமாவை உயிரைக்கொடுத்து எடுப்போம். ஜெயிச்சா சரி, இல்லேன்னா விவசாயத்திற்கு போயிடுவேன்னு சொன்னார்.
‘சுப்ரமணியபுர’த்திற்குப் பின் வந்ததெல்லாம் எனக்கு போனஸ்னுதான் சொல்வார் சசி. மொத்த ஸ்கிரிப்டையும் ஒன்லைன் ஆர்டரில் வைச்சிருந்தார். அவர் மனதில் ஊறியிருந்த ஸ்கிரிப்ட். சசியை எங்கே தட்டினாலும் அப்படியே கொட்டும்.நீங்க கௌதம் மேனன்கிட்டே நிறைய ஒர்க் பண்ணியிருக்கீங்க...கௌதம் மேனன்கிட்டே எந்த டெக்னீஷியனாக இருந்தாலும் ஒர்க் பண்றது ஒரு டிலைட். நம்முடைய சிறந்ததை நம்மகிட்ட இருந்து வாங்க எளிமையாக முயற்சிப்பார். நம்மை கண்ட்ரோல் பண்ண மாட்டார்.
ஒரு காட்சி எப்படி வரணும்னு அவரால் ஒன்றிரண்டு வரிகளில் சொல்லிட முடியும். இப்படிப் போங்கன்னு ஒரு வழியைக்காட்டி சுருங்க வைக்க மாட்டார். அப்படிச் சொன்னால், நாம் இறுக்கமாகிடுவோம். நம்மை அப்படியே விட்டால் வழியில் எது நல்லா இருக்கோ அதுவும் சேர்ந்து அழகா வந்திடும். ப்ரஷர் அறவே இருக்காது. நமக்குப்பிடிச்ச இந்த வேலையை ஜாலியா பண்ணலாம்.
‘குயின்’ல எட்டு நிமிஷங்கள் கொண்ட ஒரே ஷாட் இருக்கு. பண்ண முடியுமான்னு சொல்லிட்டு போயிட்டார். டைம் கொடுத்தார். அந்த ஷாட் மூணாவது டேக்கில் ஓகே ஆச்சு. இப்படி அவர் கொடுக்கிற இடம் அருமையா இருக்கும். பிடிக்கலைன்னு நேரடியாகச் சொல்ல மாட்டார். `Are you sure... Is this ok’னு கேட்பார். அதை நாம் புரிஞ்சுக்கணும். ஒளிப்பதிவில் உங்கள் சகாக்களில் யாரைப் பிடிக்கும்?
மனோஜ் பரமஹம்சா! ஒரு படத்தை எப்படி ஆச்சர்யமாகக் காட்ட முடியும்னு நிரூபிப்பார். விஜய் மில்டன்கிட்டே ஒரு Close Reality எப்பவும் இருக்கும். நாம் அதை உணர முடிகிற மாதிரி. அழகா செய்திடுவார் பி.எஸ்.வினோத் எல்லா ஜானரிலும் சிறப்பு காட்டுவார். தெலுங்கில் போய் பெரிய ஆக்ஷன் படம்னு ஜம்முன்னு ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு, இங்கே ‘விக்ரம் வேதா’னு தில்லா எடுப்பார். மறுபக்கம் ‘ஆரண்ய காண்டம்’னு ஒரு வெரைட்டி ஒர்க் பிடிப்பார்.
இவங்களை கொஞ்சம் கவனிச்சு பார்ப்பேன். இதுக்கு, மத்தவங்களை கவனிக்க மாட்டேன்னு அர்த்தம் இல்லை.உங்களுக்கு பி.சி.ஸ்ரீ ராம் ஆதர்ஸம் இல்லையா..? ரொம்பப் பிடிக்கும். அவரை ஒரு குருநாதராகவே நினைச்சுக்குவேன். எப்போதாவது மனசு சரியில்லாமல் இருந்தால், தனிமை கொஞ்சமாக வாட்டினால் அவர் எங்கேயிருந்தாவதுஅன்னிக்கு பார்த்துப் பேசுவார்.
என் நண்பன் அசோக்குமார் இறந்த பின்னாடி ரொம்ப மனநிலை குலைந்து போயிருந்தேன். வீட்டில் கூட பேசுறதில்லை. அன்னிக்கு பார்த்தால் நாலைந்து அழைப்பு அவர்கிட்டேயிருந்து வந்திருக்கு. ‘இது எல்லாம் இப்படித்தான் இருக்கும். Of course, இழப்புணர்ச்சி பதுங்கிக்கிட்டுத்தான் நிக்கும்’னு சொல்லிட்டு போனை வைக்கிறார். நான் அப்படியெல்லாம் அன்னிக்கு இருந்தேன்னு அவருக்குத் தெரியாது. அது எதோ என் மௌனத்தை நோக்கிய நகர்வு மாதிரி இருக்கும்.
எப்போது பலூன் வெடிக்கும் என்று ஊதிட்டு இருக்கும்போது, இரண்டு வார்த்தை ஊசியால் குத்திட்டு அதை ஒண்ணுமில்லாமல் செய்திடுவார். மனப்பழக்கத்தில் அவரோட இந்தப் பிரியம் வந்திருக்கணும்.
எல்லாத்தும் மேலே என்னை ஒரு கட்டுக்குள் வைத்து நிறுத்தி கவனிச்சுக்கிறது என் மனைவி வாணிதான். பத்து வருஷங்கள் காதலிச்ச பக்குவத்தில் வந்த அன்பு அது!
நா.கதிர்வேலன்
|