வீட்டிலேயே சானினிடைசர் செய்யலாம்!
சானிடைசர் என்ற சொல்லை மட்டுமல்ல... அதன் பயன்பாட்டையும் இன்று குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அறிவார்கள். காரணம், கொரோனா!நகக் கண் முதல் முழு கைகளையும் சுத்தம் செய்ய சானிடைசரை பயன்படுத்தும் பழக்கம் இப்போது அனைவர் மத்தியிலும் வந்திருக்கிறது. இந்நிலையில்தான் குறைந்த செலவில் தரமான அதுவும் இயற்கைப் பொருட்களாலான சானிடைசர்ஸை தயாரித்து வருகிறார் விசாலாட்சி சுப்ர மணியம்! இயற்கை முறையில் தேங்காய் எண்ணெய், சோப்... என சகலத்தையும் தயாரித்து விற்பனை செய்து வருபவர் இவர்!
‘‘ஆரம்பத்துல இயற்கை முறைல ஹேண்ட் மேட் சோப் வகைகளைத்தான் தயாரிச்சேன். அப்புறம் பெண்கள் பயன்படுத்தக் கூடிய ஸ்கின் பொருட்கள், ஹேர் ஆயில் எல்லாம் நாங்க தயாரிக்கத் தொடங்கினோம்...’’ புன்னகைக்கும் விசாலாட்சியின் பார்வை சானிடைசர் பக்கம் திரும்பியது கொரோனா காலத்தில்தான்.
‘‘எல்லாரும் மருந்துக் கடைகள்ல சானிடைசர் வாங்க க்யூல நிக்கறதைப் பார்த்தேன். அப்படி வரிசைல நின்னாலும் குறைஞ்ச அளவுலதான் சானிடைசர் கிடைச்சது. விலையும் அதிகமா இருந்தது. அப்பதான் இயற்கை முறைல தரமான சானிடைசரை நாமே குறைந்த விலைல தயாரிச்சா என்னனு தோணுச்சு. இதற்குத் தேவையான பொருட்களை கெமிக்கல் நிபுணர்கள்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன். மேலும் விவரங்களை ஆன்லைன்ல படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.
அப்புறம் மார்க் கெட்டுல கிடைக்கற சானிடைசர்ஸை வாங்கி ஆய்வு செய்தேன். பெரும்பாலான சானிடைசர்ல குறைவான அளவுக்கு ஆல்கஹால் சேர்க்கறாங்க. இதனால கிருமிகள் அழியாது. இதனாலயே அதிக அளவுல ஆல்கஹால் சேர்க்கறாங்க. இன்னும் சிலர் குறைஞ்ச விலைல கிடைக்கற எத்தனாலை மிக்ஸ் பண்றாங்க.இதனால அலர்ஜி உண்டாக வாய்ப்பிருக்கு. குழந்தைங்க இப்படிப்பட்ட சானிடைசர்ஸை பயன்படுத்தவே கூடாது. ஐசோபுரொபைல் என்கிற கெமிக்கலை 70% சேர்த்து கற்றாழையை தேவையான அளவு சேர்ப்பதே தரமான சானிடைசர்னு அனுபவத்துல கத்துக்கிட்டேன்... இந்த முறைல நாங்க தயாரிக்கற சானிடைசர்ஸை இப்ப மருத்துவமனைகள்லயும் வாங்கறாங்க...’’ என்கிறார் விசாலாட்சி.
கொரோனா அச்சத்தால் முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்களுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் அல்லது மாதங்களில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று தெரியாத நிலையில் சானிடைசர்ஸை வாங்கி சேமிப்பது என்பது ஏழை எளிய மக்களுக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெளியில் செல்லவே அச்சமாக இருக்கும் நிலையில் கடைகளுக்குச் சென்று சானிடைசர் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே தரமான சானிடைசர்களைத் தயாரிக்கலாம் என்கிறார் மதுரை காந்தி மியூசிய கைவினை கல்வி அலுவலர் நடராஜன்.
‘‘தினமும் மக்களுக்குத் தேவையானக் 32 வகை அடிப்படை பொருட்களை இயந்திரம் இல்லாம, மின்சாரம் இல்லாம நாங்க தயாரிச்சுட்டு வர்றோம். மதுரையைச் சுத்தி இருக்கும் பெண்களுக்கும், சுய உதவிக்குழு மகளிருக்கும் இந்த செய்முறையை தொடர்ந்து கத்துக் கொடுக்கறோம். இதனால அவங்க வாழ்நிலை மேம்பட்டிருக்கு. இப்ப சானிடைசர் தயாரிக்கவும் கத்துக் கொடுக்கறோம்.
ஆலோவேரா வால நாங்க சானிடைசர் தயாரிக்கறோம்... வீட்டிலேயே தயாரிக்கவும் கத்துக் கொடுக்கறோம். இதுல எந்த வேதிப் பொருட்களும் கிடையாது. வைரஸ் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் பாதுகாக்குது. அதேசமயம் கைகளை மிருதுவா, மென்மையாவும் வைச்சிருக்கும்.
உண்மைல எல்லா காலங்களிலும் வெளில போய்ட்டு வந்ததும் சானிடைசரால கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. வீட்டிலேயே தயாரிக்கற சானிடைசரை அதிகபட்சம் இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம். அதுக்கு மேல கூடாது.கடைசியா ஒண்ணு... நீங்க தயாரிக்கிற சானிடைசர் கலவை குறித்தும், அவை கிருமிநாசினியா செயல்படும் விதம் குறித்தும் உங்க மருத்துவரை கலந்தாலோசிங்க...’’ என்கிறார் நடராஜன்.
தரமான சானிடைசர்களை எப்படித் தயாரிப்பது..? விளக்குகிறார் விசாலாட்சி
ஐசோபுரொபைல் ஆல்கஹால் (isopropyl alcohol) - 99.8% கிளிசரால் (glycerol) - 98% ஹைட்ரஜன் பெராக்சைடு (hydrogen peroxide) - 30% அலோவெரா சிறிதளவு சுத்தமான தண்ணீர் அல்லது கொதிக்கவைத்து ஆறவைத்த நீர் - தேவையான அளவு இவற்றைச் சேர்த்தால் தரமான சானிடைசர் தயாராகிவிடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தயாரிப்பது? கற்றாழை ஜெல் - 300 கிராம் வினிகர் - 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்
வாசனை எண்ணெய் (தேவைப்பட்டால் வாசனைக்காக) - 3 சொட்டுகள் இவற்றை ஒரு காலி பாட்டிலில் போட்டு சேமித்து அவ்வப்போது பயன்படுத்தலாம். மூலப்பொருட்களின் செலவு ரூ.700 வரை ஆகும். ஐந்து லிட்டர் வரை சானிடைசர் கிடைக்கும். ஒரு லிட்டரை குறைந்தது ரூ.600க்கு விற்கலாம். ரூ.3 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.
இயற்கை முறையில் கொரோனா தடுப்பு சானிடைசரை எப்படி தயாரிக்கலாம்? கற்றுத் தருகிறார் நடராஜன்.
சில்வர் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் சோடியம் சல்பேட் திரவத்தை 500 மில்லி அளவுக்கு ஊற்றவும். கைகளில் எந்தவித உலோக மோதிரமும் அணிந்திருக்கக் கூடாது. அவை உருகிவிடும்.
இதனுடன் 100 கிராம் சோடியம் கார்பனேட் எனப்படும் வாஷிங் சோடாவை சல்லடையால் சலித்து, கட்டியில்லாமல் தொடர்ந்து கலக்கவும். அடுத்ததாக டி.எஸ்.பி. எனப்படும் சோடியம் டிரை சல்பேட் பவுடரை சேர்க்கவும். தொடர்ந்து 50 கிராம் கல் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆறவைத்த ஒன்றரை லிட்டர் தண்ணீரை சிறிது சிறிதாக இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக வந்த பிறகு 600 மில்லி வினிகரை சேர்த்தால் நுரையாக வரும். நுரை அடங்கிய பின், காயவைத்த 50 கிராம் அளவு வேப்பிலை பொடி, 10 கிராம் விரலி மஞ்சள் பொடியை, நிறத்துக்காக சேர்க்கலாம் அல்லது மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற வாசனை வினிகரை சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக 20 மில்லி கிளிசரின் சேர்த்து கிளறவும். இந்த கிளிசரின் சேர்க்கும்போது, திரவம் பளபளப்பாக மாறும். கைகளுக்கு மென்மைத் தன்மையை தரும்.வாசனைக்காக, 10 மில்லி லெமன் கிராஸ் எண்ணெய் சேர்த்து கிளறினால் 2 முதல் 3 லிட்டர் அளவுக்கு கிருமிநாசினி தயாராகி விடும். இதை அரை லிட்டர் பாட்டில்களில் ஊற்றி வைக்கலாம். பாட்டிலில் துளையிட்டு வைக்கக் கூடாது. மூன்று மாதங்கள் வரை பயண்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் அனைத்தும் எல்லா கெமிக்கல் கடைகளிலும் கிடைக்கும். அதிகபட்சம் ரூ.300 வரை செலவாகும்.
திலீபன் புகழ்
|