ஜெ வீடும், ஜெ சொத்தும்!



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு என்ற கேள்விதான் அவர் மறைந்த போது அனைத்து தரப்பிலும் எழுந்தது. 

இந்நிலையில், அவரின் அண்ணன் மகள் தீபாவும் மகன் தீபக்குமே நேரடி வாரிசு என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்கத் தனி நிர்வாகியை நியமிக்க வேண்டுமென அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து தங்களைச் சட்டபூர்வ வாரிசாக அறிவிக்கக் கோரி தீபாவும், தீபக்கும் மனு தாக்கல் செய்தனர். இதில்தான் இந்த அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளது ஐகோர்ட்!

கடந்த 2016ல் ஜெயலலிதா இறந்ததும் அவரின் போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் என அரசு அறிவித்தது. அப்போதே தீபாவும், தீபக்கும் தாங்களே ஜெவின் வாரிசுகள் என உரிமை கோரினர். இந்நிலையில் கடந்த மே 22ம் தேதி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக மாற்றும் அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்தது.  இவையெல்லாம் நடைபெற்ற சூழலில்தான் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தனது தீர்ப்பில் ஐகோர்ட் சிலவற்றை பரிந்துரைத்துள்ளது. போயஸ் கார்டன் இல்லமான ‘வேதா நிலையத்தை’ அரசாங்கத்தின் விருப்பப்படி ஒரு நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கு பதிலாக முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமாகவும், அலுவலகமாகவும் மாற்றலாம் என குறிப்பிட்டுள்ளது.

தவிர, நினைவுச்சின்னத்தை கட்டும் நோக்கத்துக்காக மாநில அரசு பொதுமக்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், எந்தவொரு தலைவருக்கும் உண்மையான அஞ்சலி என்பது அவரின் கொள்கைகளைப் பின்பற்றி மக்களின் நலனுக்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடு வதே ஆகும் என்றும், மறைந்த முதலமைச்சரின் வசிப்பிடத்தை நினைவிடமாக மாற்ற அரசாங்கம் விரும்பினால், அத்தகைய திட்டங்களுக்கு முடிவே இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், வேண்டுமென்றால் வீட்டின் ஒரு பகுதியை நினைவில்லமாக மாற்றலாம் என்றும், தீபாவும், தீபக்கும் தன் அத்தை பெயரில் ஓர் அறக்கட்டளை தொடங்கி நல்ல விஷயங்களை முன்னெடுக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து, இந்த வழக்கை உற்று கவனித்து வரும் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘சொத்துரிமை சட்டத்துல பெண்களுக்கென தனிப் பிரிவு இருக்கு. அதுல அவங்க கணவர், குழந்தைகள் வருவாங்க. அப்படி அவங்க இல்லைன்னா யாருக்குப் போகணும்னு இருக்கு. ஒண்ணு, கணவன் வழியில போவாங்க. இல்லன்னா அவங்க அம்மா வழியில போவாங்க.

இவங்க திருமணமே செய்யாததால அவங்க அம்மா வழியிலதான் போகணும். அம்மா இல்லாததால உடன்பிறந்தவங்கள பார்ப்பாங்க. அப்ப அண்ணன் ஜெயராமன்தான் முதல்ல வருவார். அடுத்து அவருடைய வாரிசுகளுக்குப் போகும்.

ஆக, ஜெயலலிதா இறந்ததுமே அவங்களுடைய மொத்த சொத்தும் தீபாவுக்கும், தீபக்குக்கும் சட்டப்படி வந்திடும். இதுல அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் வராது. அவங்க இறந்த அடுத்த நொடியிலிருந்து அவங்க ஜெய லலிதாவின் வீட்டில் இருக்க தகுதியானவர்கள்.
அப்புறம், ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கல. சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன்னு யாருக்கும் எந்த உரிமையும் வராது. ஒருத்தரை தத்து எடுக்கணும் என்பது ஒரு பெரிய செயல்முறை. அவங்க யாரையும் தத்து எடுக்கல. வளர்ப்பு மகன் என்ற பதத்திற்கு சட்ட ரீதியாக எந்த  அங்கீகாரமும் கிடையாது.

ஒருவேளை நாளைக்கு ஜெயலலி தாவின் சொத்து வேறெங்கோ இருக்குனு தெரிய வந்தாலும் அதுவும் வாரிசுகளுக்குத்தான் போய்ச்
சேரும். அதனால, சொத்து நூறு கோடினு சொன்னாலும், ஆயிரம் கோடினு சொன்னாலும்... இல்ல சொல்லாம விட்டாலும் ஜெயலலிதா பேரில் இருக்கக்கூடிய அனைத்தும் தீபா, தீபக்குக்குத்தான் போகும்.

எனக்குத் தெரிஞ்சு போயஸ் கார்டன் வீடு ஜெயலலிதா பேர்லதான் இருக்கு. ஒருவேளை இந்த வீட்டை அவங்க வாடகைக்கு விட்டிருந்தாங்கன்னா, அந்த வீட்டுல குடியிருக்கிறவர் கோர்ட்ல வழக்குப் போடலாம். இப்ப ‘ஏ’ என்பவர் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கார். அவர் இறந்ததும் அவர் மகனான ‘பி' அந்த வீட்டிற்குள் போகும் போது வாடகைக்கு இருப்பவர் தடுக்கலாம். சசிகலா வாடகைக்கு இருப்பவர் அல்ல. அதேபோல அரசும் தனியார் சொத்தின் உள்ளே வரவே முடியாது.

ஒரு சொத்து ‘ஏ’ என்பவரிடமிருந்து வேறொருத்தருக்குப் போகணும்னா, ஒண்ணு அவர் உயில் எழுதி வைக்கணும். இல்ல, கிஃப்ட்டா (Gift deed) கொடுக்கணும் அல்லது கிரயம் பண்ணிக் கொடுக்கணும். இந்த மூணு வகைதான் இருக்கு. இது எதுவும் ஜெயலலிதா செய்யல.
அரசு நினைச்சால் இந்த வீட்ைடக் கட்டாயமா பெறலாம். அதுக்கு நிலம் கையகப்படுத்தல் சட்டம் இருக்கு. அப்படி பெறணும்னா புது சட்டப்படி அந்த இடத்தின் இப்போதைய மதிப்புக்கு இருமடங்கு பணம் கொடுக்கணும். தவிர, கட்டாயமா எடுக்குறதால அந்தக் கிரய மதிப்பைவிட முப்பது சதவீதம் அதிகம் கொடுக்கணும். நூறு ரூபாய் மதிப்புன்னா 130 ரூபாய் கொடுக்கணும்.

இதுக்கும் ஒரு செயல்முறை இருக்கு. அதாவது, ஒரு நோட்டீஸ் அனுப்பணும். அந்த நோட்டீஸ் அனுப்பும்போது அந்த இடத்திற்கான மதிப்பு என்ன இருக்கோ அதுதான். அதனால, காலதாமதம் ஆக ஆக அதன் மதிப்பு கூடிட்டே போகும். சசிகலாவைப் பொறுத்தவரை அவர் கேர்டேக்கர்தான். வாரிசு கள்தான் உரிமையாளர்கள். அவங்களுக்கு கொடுத்துதான் ஆகணும். ஒருவேளை பையனூர் பங்களாவை ஜெயலலிதா, சசிகலா சேர்ந்து வாங்கியிருந்தாங்கன்னா அது ஜாயின்ட் ஓனர்ஷிப்ல வந்துடும். அங்கயும் தீபா - தீபக் வருவதை யாரும் தடுக்க முடியாது.

அடுத்து, கொடநாடு உள்ளிட்ட சில இடங்கள் பார்ட்னர்ஷிப்ல இருக்குனு நினைக்கிறேன். பார்ட்னர்ஷிப்ல ஒருத்தர் இறந்துட்டா அவங்க வாரிசு நேரடியா பார்ட்னர்ஷிப் உள்ள போக முடியாது. இப்ப ‘ஏ'யும், ‘பி'யும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்ல தொழில் செய்றாங்கனு வைச்சுப்போம். இதுல ‘ஏ’க்கு ‘பி’யைப் பிடிக்கும். ஆனா, ‘பி’யின் மகனைப் பிடிக்காது.

அதனால, ‘பி’ இறந்ததும் ‘பி’யின் பையன் வந்து என்னை பார்ட்னர்ஷிப்ல சேர்த்து தொழில் செய்ங்கனு சொல்ல முடியாது. அதனால, இன்னொரு பார்ட்னர்கிட்ட பேசி பிரிச்சுக்கணும். அல்லது வழக்குப் போட்டு தீர்த்துக்கணும். அதனால, எதிர்காலத்துல நிறைய வழக்குகள் வரும்னு நினைக்கிறேன்...’’ என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மூத்த வழக்கறிஞர்!

ஜெ. சொத்து!

2016ம் ஆண்டு தேர்தலின்போது பிரமாணப் பத்திரத்தில் ஜெயலலிதா குறிப்பிட்ட சொத்துகளின் மதிப்பு:

பங்குதாரராக முதலீடு செய்த வகையில் ரூ.27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 450.
(இதில், ஜெயா பப்ளிகேஷன்ஸ் - ரூ.21,50,54,080; சசி எண்டர்பிரைசஸ் - ரூ.20,12,570; கொடநாடு எஸ்டேட் - ரூ. 3,13,20,633; ராயல் வேலி ஃப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ் - ரூ. 40,41,096; க்ரீன் டி எஸ்டேட் - ரூ. 2,20,27,071)

பணமாகக் கையில் ரூ.41 ஆயிரம்

வங்கிக் கணக்கில் ரூ.10 கோடியே 63 லட்சத்து 83 ஆயிரத்து 945.

தங்கம்

(21.2 கிலோ.  இதன்மதிப்பு சுமார் 5 கோடியே 32 லட்சம் ரூபாய்.)

மோட்டார் வண்டிகள்

ரூ.42,25,000
(அம்பாசிடர் கார் - ரூ.10 ஆயிரம்; மகேந்திரா ஜீப் - ரூ.10 ஆயிரம்; மகிந்திரா பொலிரோ - ரூ.80 ஆயிரம்; டெம்போ டிராவலர் - ரூ.80 ஆயிரம்; சுவராஜ் மஸடா மேக்ஸி - ரூ.10 ஆயிரம்; காண்டசா - ரூ.5 ஆயிரம்; டெம்போ டிரக்ஸ் - ரூ.30 ஆயிரம்; டொயோட்டா - ரூ.20 லட்சம்; டொயோட்டா - ரூ.20 லட்சம்)

வெள்ளி

 1,250 கிலோ. இதன் மதிப்பு சுமார் 3 கோடியே 12 லட்சத்து 50
ஆயிரம் ரூபாய்

மொத்தம் அசையும் சொத்தின் மதிப்பாக ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 எனக் காட்டியிருந்தார்.

அசையா சொத்துகளின் மதிப்பு

விவசாய நிலங்கள்:

* ைஹதராபாத்திலுள்ள ஜீடிமெட்லா கிராமத்திலுள்ள 14.50 ஏக்கர் நிலம். இதன் மதிப்பு 2016ல் ரூ.14,44,37,300.

* செய்யூர் கிராம நிலத்தின் மதிப்பு ரூ.34 லட்சம்.

கமர்ஷியல் பில்டிங்:
79, போயஸ் கார்டன், சென்னை     - ரூ.7 கோடியே 83 லட்சம்.
நகர் காலனி, ைஹதராபாத்     - ரூ.5 கோடியே 3 லட்சம்.
பார்சன் மேனர் பிளாட், சென்னை     - ரூ.4 லட்சத்து 60 ஆயிரம்.
மந்தைவெளி வீடு, சென்னை     - ரூ.43 லட்சத்து 25 ஆயிரம்.
குடியிருப்பு பில்டிங்:

81, போயஸ் கார்டன், சென்னை, 10 கிரவுண்ட் - ரூ.43 கோடியே  96 லட்சம்.
2016ல் அசையா சொத்துகளின் மார்க்கெட் மதிப்பு 72 கோடியே 9 லட்சம்.
வங்கிக் கடன் இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாய்.

ஆக, மொத்தமாக அன்று சுமார் 113 கோடி ரூபாய் சொத்துகளாகக் கணக்குக் காட்டியிருந்தார். இதுதவிர, செருப்புகள், சேலைகள், வாட்ச்கள், வீட்டுப் பொருட்கள், நூல்கள், நிலம் என அசையா சொத்துகளின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அதையெல்லாம் சேர்த்து வைத்து 913 கோடி சொத்துகள் எனக் கணக்கிட்டுள்ளனர்.  

இத்துடன், மிடாஸ், சிறுதாவூர் பங்களா, 942 ஏக்கர் கொடநாடு எஸ்ேடட் பகுதிகள், ஜாஸ் சினிமாஸ் என மேலும் சில இடங்களும், நிறுவனங்களும் ஜெயலலிதாவுடன் தொடர்புள்ளவையாக சொல்லப்படுகின்றன. இதன் உண்மைத்தன்மை அரசுக்கே தெரியும்!

பேராச்சி கண்ணன்