இந்தியா திவால்..? எச்சரிக்கிறது மூடிஸ் நிறுவனம்
அமெரிக்காவின் கடன் தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் நிறுவனம், 22 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இந்தியாவின் கடன் தரத்தை குறைத்துள்ளது.குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, அழுத்தம், நிதிச் சிக்கல் போன்றவை ஆட்சியாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரேட்டிங் நிறுவனம்உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட தர நிர்ணய நிறுவனங்கள் இருந்தாலும், மூடிஸ், எஸ்அண்ட் பி, பிட்ச் ஆகிய மூன்று சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு அளிக்கும் மதிப்பீடுதான் முதலீட்டாளர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. எந்த முதலீட்டாளரும் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன் தாங்கள் முதலீடு செய்யப்போகும் நாட்டுக்கு மூடிஸ், பிட்ச், எஸ் அண்ட் பி போன்ற நிறுவனங்கள் அளித்துள்ள ரேட்டிங் கிரேடு (தரம்) என்ன என்பதை கவனித்து ஆய்வு செய்த பின்புதான் முதலீடு செய்வார்.
இந்த கிரேடு வழங்குவதில் பல்வேறு ரகங்கள் உள்ளன. ஒரு நாட்டில் முதலீடு செய்தால் அது லாபமாக திரும்பி வருமா, முதலீட்டுக்குப் பாதுகாப்பு இருக்குமா, முதலீட்டில் இழப்பு இல்லாமல் இருக்குமா, எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை திரும்பப் பெறும் வகையில் இருக்குமா என்ற அடிப்படையில் பல்வேறு கிரேடுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிறுவனங்கள் வழங்கும் கிரேடின் அடிப்படையில் ஒரு நாடு வெளிநாடுகளில் கடன் பெறுவதும் எளிதாகும். கிரேடு, அதாவது தரம் மோசமாக இருந்தால் கடன் கிடைப்பதும் குறையும், கடனுக்கான வட்டியும் அதிகமாக இருக்கும். அதுவே தரம் உயர்வாக இருந்தால் எளிதாக ஓர் அரசால் கடன் பெற முடியும். குறைந்த வட்டியிலும் கடன் கிடைக்கும்.
அந்த வகையில் இந்தியாவுக்கு இதற்குமுன் பிஏஏ2 என்ற ரேட்டிங்கை மூடிஸ் நிறுவனம் வழங்கியிருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் போன்றவற்றால் பிஏஏ3 என்று தரத்தைக் குறைத்துள்ளது.இதற்கு முன் 1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தியபின் இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ3 என மூடிஸ் குறைத்தது. அதன்பின் குறைக்காமல், மாற்றமில்லாமல் இருந்து வந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால் நம்பிக்கையடைந்த மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ2 என 2018ம் ஆண்டு உயர்த்தியது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு, சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கம், மந்தநிலை, அதிகமான கடன், நிதிப்பற்றாக் குறையை சரி செய்யாதிருத்தல் போன்றவற்றால் பிஏஏ3 என இந்தியாவின் கடன் தரத்தை இப்போது குறைத்துள்ளது.
மூடிஸ் நிறுவனத்தின் முதலீடு தொடர்பான தர நிர்ணயக் குறியீடுகளில் மொத்தம் 10 விதமான கிரேடுகள் உள்ளன. இவற்றில் 9வது இடத்தில் இருப்பதுதான் பிஏஏ2. இதை இப்போது 10வது இடத்தில் பிஏஏ3 தரத்துக்கு குறைத்துள்ளது. அதாவது குறுகிய காலக் கடன்களை மட்டுமே திருப்பிச் செலுத்தக்கூடிய திறனைக் கொண்டது என்று அர்த்தம்.இது, இந்தியாவில் முதலீடு மற்றும் கடன் வாங்கும் சூழல் மிக மோசமாக இருப்பதைக் காட்டுகிறது.
இந்தியாவின் நிலைஇந்தியாவின் கடன் தரத்தை மூடிஸ் குறைக்க கொரோனா பாதிப்புதான் காரணமா? இல்லை. இந்தியாவின் பொருளாதார நிலை ஏற்கெனவே மோசமாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
உள்கட்டமைப்பு, மனிதவளம், திறன் மற்றும் தொழில்நுட்பம், நிதிசார் ஆதாரங்கள் என பல வகைகளிலும் இந்தியாவின் பலம் இன்று குறைவாகவே உள்ளது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் பிரச்னைகள் நீடிக்கின்றன. நிதிப் பற்றாக்குறையை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தோல்வி அடைந்துள்ளது.
தவிர மத்திய, மாநில அரசின் நிதி நிலை பெரும் சீரழிவில் உள்ளது. இவையெல்லாம் சேர்ந்துதான் இந்தியாவின் கடன் தரம் குறையக் காரணம். கடன் தரம் குறைவதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவார்கள். அதோடு பங்குச் சந்தையிலும் முதலீடுகள் குறையலாம். கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படியே கிடைத்தாலும் அதிக வட்டிச் செலவை சுமக்க நேரிடும்.
இதனால் வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் உட்பட மொத்த பொருளாதார வளர்ச்சி யிலும் கணிசமாக பாதிப்பு இருக்கும்.மூடிஸ் நிறுவனம்1909ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிஸினஸ்மேனும், முதலீட்டாளருமான ஜான் மூடி என்பவரால் ‘மூடி முதலீட்டு சேவை நிறுவனம்’ ஆரம்பிக்கப்பட்டது.
கடனாளிகளின் தரத்தை நிர்ணயிப்பது இதன் முக்கியப்பணி. அரசு, தனியார்… என எல்லா நிறுவனங்களும் கடன் பெற்ற பின் அதனை உரிய தேதிக்குள் திருப்பித் தருவார்களா, அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் சக்தி இருக்கிறதா… போன்ற நிதி ஆலோசனைகளை முதலீட்டாளர்கள் மற்றும் கடன் கொடுப்பவர்களுக்கு இந்நிறுவனம் வழங்குகிறது.
அன்னம் அரசு
|