ரத்த மகுடம் -102



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘சுதந்திரத்துக்காக கச்சையின் மீது கை வைக்க வேண்டுமா..?’’ கரிகாலனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிவகாமி முணுமுணுத்தாள்.‘‘ஆம்... பூரண சுதந்திரம்தானே பல்லவர்களின் லட்சியம்!?’’ கரிகாலனின் உதடுகள் அவள் செவியை வருடின.தன் உடலே யாழ் ஆக மாற... தேகத்தின் நரம்புகளில் இருந்து பிறந்த சப்தஸ்வரங்களால் சிவகாமி அதிர்ந்தாள். ‘‘ம்... ம்... உங்கள் போதைக்கு ஏன் பல்லவர்களை பயன்படுத்துகிறீர்கள்..?’’
‘‘நீ பல்லவ இளவரசியாக இருப்பதால்...’’ தன் நாக்கின் நுனியால் கச்சையை மீறிப் பிதுங்கிய அவளது கொங்கைகளின் பிளவில் கோடு கிழித்தான்.
துள்ளினாள்.

‘‘எறும்பு கடித்துவிட்டதா..?’’
புன்னகைத்தாள். ‘‘ஆமாம்... சோழ எறும்பு...’’
‘‘அது எப்படி பாண்டியர்களின் பாதாளச் சிறைக்கு வந்தது..?’’
‘‘பல்லவ இளவரசியைத் தேடி!’’ கலகலவெனச் சிரித்தாள்.

‘‘பின்னே... தேனைத் தேடித்தானே எறும்பு வரும்?!’’
‘‘அது சரி...’’ நாசிகள் அதிர புன்னகைத்தவள், ‘‘மிக்க மிக்க... நன்றி...’’ என்றாள்.‘‘எதற்கு..? தேனைச் சுவைக்க எறும்பு முற்படுவதற்கா..?’’ உதடுகளால் வினவியவன் தன் கரங்களை அவளது இடுப்புக்குக் கீழ் கொண்டு சென்றான்.
‘‘அங்கே என்ன தேடுகிறீர்கள்..?’’
‘‘தேனைத் தேடிச் சென்ற எறும்பு கடித்த இடத்தை! ஒத்தடம் தர வேண்டாமா..?’’
‘‘அவசியமில்லை...’’

‘‘வலிக்கவில்லையா..?’’
‘‘இன்பமாக இருக்கிறது!’’
‘‘பிறகு ஏன் துள்ளினாய்..?’’
‘‘உங்கள் நாக்கின் நுனியால் கோடு கிழித்ததால்...’’ என்று அவளால் எப்படிச் சொல்ல முடியும்?
மவுனமாக தரையில் நீண்டிருந்த தன் கால் கட்டை விரலால் அரைவட்டமிட்டாள்.
‘‘ஏன் பேசாமல் இருக்கிறாய்..?’’
‘‘சொற்களைத் தொலைத்துவிட்டேன்...’’

கரிகாலன் போலியாக அதிர்ந்தான். ‘‘நல்லவேளை இதை என்னிடம் சொன்னாய்...’’
‘‘வேறு யாரிடம் சொல்லவில்லை என்கிறீர்கள்..?’’
‘‘ராமபுண்ய வல்லபரிடம்!’’
‘‘அந்த வயதானவரை எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள்..?’’

‘‘நீ சொன்னதுடன் முழுமையாக சம்பந்தப்பட்டவர் சாளுக்கிய போர் அமைச்சரான அவர் என்பதால்!’’
‘‘புரியவில்லை...’’‘‘உனக்கா..?’’
‘‘என்ன மறுபடி மறுபடி புதிர் போடுகிறீர்கள்..?’’ குழப்பமும் கோபமுமாக சட்டென எழுந்தாள்.
‘‘புதிராகவே நீ இருப்பதால்!’’ சொன்ன கரிகாலன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

‘‘இதற்கெல்லாம் நான் மசிய மாட்டேன்... எதற்காக ராமபுண்ய வல்லபரை நம் உரையாடலில் இழுத்தீர்கள்..?’’
‘‘இழுக்கும்படி செய்தவளே நீதானே..?’’ தன் உள்ளங்கையை அவள் இடுப்பில் பரப்பியவன், ஆள்காட்டி விரலின் நுனியால் அவளது நாபிக் கமலத்தை துழாவினான்.சிவகாமியின் வயிற்றில் முளைத்திருந்த பூனை ரோமங்கள் சிலிர்த்தன. ‘‘அப்படியென்ன நான் செய்துவிட்டேன்..?’’ கேட்டவளின் குரலில் கோபம் குறைந்திருந்தது.

‘‘என்னதான் செய்யவில்லை..?’’ தன் உள்ளங்கையை மேல் நோக்கி நகர்த்தினான்.அவன் கரங்களைப் பிடித்து தடுத்தாள். ‘‘கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்... மாறாக மற்றொரு வினா தொடுக்கக் கூடாது...’’

‘‘அப்படியென்ன தொடுத்துவிட்டேன்..?’’
‘‘அப்படியென்ன தொடுக்கவில்லை..?’’
‘‘இப்பொழுது பதில் கேள்வி கேட்பது யார்..?’’ கரிகாலன் நகைத்தான்.

‘‘பேச்சிலும் உங்களை வெல்ல முடியுமா..?’’
‘‘இதைத்தான் உன்னை நோக்கி மறைபொருளாகக் குறிப்பிட்டேன்...’’
‘‘எப்பொழுது..?’’ திரும்பி அவனை நோக்கி அமர்ந்தபடி கேட்டாள்.
‘‘சில கணங்களுக்கு முன்...’’
புருவங்கள் முடிச்சிட அவனை ஏறிட்டாள் சிவகாமி.

அவள் வதனத்தை தன்னிரு கரங்களிலும் ஏந்தினான் கரிகாலன். ‘‘சொற்களைத் தொலைத்துவிட்டேன் என்று நீ சொன்னதும்...’’
‘‘...நல்லவேளை இதை என்னிடம் சொன்னாய் என்றீர்கள்...’’ என்றபடி தன் முகத்தைத் திருப்பி அவன் உள்ளங்கையில் முத்தமிட்டாள்.
‘‘இதைத் தொடர்ந்த உரையாடலில் ராமபுண்ய வல்லபரின் பெயரை நான் இழுத்தேன்...’’ என்றபடி அவள் வதனத்தை தன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தான்.

‘‘ம்...’’ சிவகாமியின் நாசிகள் துடித்தன. பொங்கிய உணர்ச்சிகள் சுவாசத்தின் அளவை அதிகரிக்கவே... யாரும் அவிழ்க்காமலேயே அவளது கச்சையின் முடிச்சுகள் தளர ஆரம்பித்தன.‘‘ஏன் அவரது பெயரைக் குறிப்பிட்டேன் தெரியுமா..?’’ தன் உதட்டால் அவளது அதரங்களை உரசினான். ‘‘வாய்ச் சொல்லில் நீயே வல்லவள் என அவர் நினைக்கிறார்... உனது சொற்களின் மாயாஜாலத்தால் எதிரில் இருப்பவர்களை முழுமையாகக் குழப்பி விடுவாய்... உன் பக்கம் இழுத்துவிடுவாய்... என பரிபூரணமாக நம்புகிறார்... அப்படி அவரால் நம்பப்படும் நீ... என்னிடம் பேச முடியாமல் சொற்களைத் தொலைத்துவிட்டதாகச் சொன்னதை மட்டும் கேட்டால்..?’’‘‘கேட்டால்..?’’ அவனது நயனங்களை உற்றுப் பார்த்தபடி கேட்டாள்.

அவளது கருவிழிகளை விட்டு தன் பார்வையை அகற்றாமல் தொடர்ந்தான். ‘‘தன் நாட்டின் ஒப்பற்ற ஒற்றர் படைத் தலைவி இப்படி பேச்சிழந்து நிற்கிறாளே என்ற அதிர்ச்சியில் சிலையாகி இருப்பார்!’’  கரிகாலன் சொல்லி முடிப்பதற்குள் அவன் மார்பில் தன் இரு கரங்களையும் பதித்து அவனைத் தள்ளினாள்.இதை சற்றும் எதிர்பார்க்காத கரிகாலன், பாதாளச் சிறையின் கட்டாந்தரையில் மல்லாந்து விழுந்தான். எழுந்திருக்க முற்படவில்லை. மாறாக விட்டத்தைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினான்.

இதைக் கண்டு ஆவேசத்துடன் அவன் மீது சிவகாமி அமர்ந்தாள். அவன் கன்னங்களை மாறி மாறி அறைந்தாள்!
அரிகேசரி மாறவர்மர் நடப்பதை நிறுத்தினார். யோசனையில் ஆழ்ந்தவர், ஒரு முடிவுக்கு வந்ததுபோல் தன் பாதையை மாற்றி கரிகாலன் தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்றார்.அறைக்கதவு மூடியிருந்தது. தள்ளிப் பார்த்தார். உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.

ஓசை எழுப்பாமல் மெல்ல அடியெடுத்து வைத்து சாளரத்தின் அருகில் வந்தார். காற்றில் அசைந்துகொண்டிருந்த சாளரக் கதவை நன்றாகத் திறந்தார்.
அறையின் உள்ளே மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கொளியில் பஞ்சணையும் அதில் தன் மகன் கோச்சடையன் இரணதீரன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதும் தெரிந்தது. தன் நாசியை வருடிய காற்றில் மயக்கத்தின் அறிகுறியை அரிகேசரி மாறவர்மர் உணர்ந்தார்.

மயக்க சாம்பிராணியை அகலில் தூவி தன் மைந்தனை உறங்க வைத்துவிட்டு கரிகாலன் வெளியேறியிருக்கிறான்...கண்கள் சிவக்க திரும்பினார்.‘‘மன்னா... தங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்!’’குரல் கேட்டு மீண்டும் சாளரத்தை நோக்கித் திரும்பினார் அரிகேசரி மாறவர்மர்.
சாளரத்தின் அந்தப் பக்கம், அறைக்குள் நின்றபடி இரணதீரன் புன்னகைத்தான்!‘‘இரணதீரா... உனக்கொன்றும்...’’‘‘ஆபத்தில்லை மன்னா..! மயக்க சாம்பிராணிக்கு மயங்குபவன் உங்கள் மைந்தனாக எப்படி இருப்பான்..?’’இமைகளை மூடி நிம்மதியுடன் திறந்தார் பாண்டிய மன்னர்.

 ‘‘கரிகாலன் எங்கே..?’’‘‘நீங்கள் எதிர்பார்த்து கணித்த இடத்துக்குச் சென்றிருக்கிறான்!’’ ‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’
‘‘பாதாளச் சிறைக்குள் அவன் நுழைந்ததை என் இரு கண்களாலும் பார்த்தேன்!’’ கேள்வியுடன் அவனை நோக்கிவிட்டு சாளரக் கம்பிகளை அசைத்தார். கையோடு அது வந்தது! அரிகேசரி மாறவர்மரின் உதடுகளில் புன்னகை பூத்தது! ‘‘சிறைக் காவலர்கள்..?’’
‘‘கரிகாலனைத் தடுக்கவில்லை...’’‘‘ஏன்..?’’

‘‘தடுக்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்ததை அடியேன் உத்தரவாக பிறப்பித்தேன்!’’‘‘அப்படி நான் நினைத்தேன்...’’‘‘... என்று ஊகித்தேன் மன்னா! கரிகாலனைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தானே நீங்கள் திட்டமிட்டீர்கள்..?’’
பதிலேதும் சொல்லாமல் அரிகேசரி மாறவர்மர் சாளரத்துக்குள் தன் வலது கையை நுழைத்து இரணதீரனின் கேசத்தைத் தடவினார்.
தலையைக் குனிந்து அதை மவுனமாக ஏற்றான் இரணதீரன்.

அடுத்த கணம் பாண்டிய மன்னர் நெஞ்சை நிமிர்த்தியபடி பாதாளச் சிறையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர் பார்வை மீனாட்சியம்மனின் கோபுரத்தை நோக்கியது. பாண்டிய நாட்டையும் பாண்டிய தேசத்து மக்களையும் காப்பாற்ற அடுத்த மன்னன் தயாராகிவிட்டான்! எல்லாம் அன்னையே... உன் அருள்!சிரிப்பதையும் கரிகாலன் நிறுத்தவில்லை. சிவகாமி தன்னை அறைவதையும் தடுக்கவில்லை! ‘‘சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியே...’’ மெல்ல அழைத்தான்.

‘‘இதே உதடுகள்தானே சில கணங்களுக்கு முன் என்னை பல்லவ இளவரசி என்று அழைத்தது... அதற்காகத்தானே உங்களுக்கு மிக்க மிக்க நன்றி சொன்னேன்...’’ அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டாள்!கரிகாலனின் உதட்டோரம் குருதி பூத்தது. தன் நாக்கினால் அதை சுவைத்தான். ‘‘உப்பு கரிக்கிறது! உப்பிட்ட பல்லவர்களை உள்ளளவும் நினை...’’ சொன்ன கரிகாலன் படுத்திருந்தபடியே தன் உடலை உதறினான். மறுகணம் அவன் மீது அமர்ந்திருந்த சிவகாமி, நிலைதடுமாறி தரையில் சரிந்தாள்.

அவளுக்கு குறுக்காக தன் கைகளை வலுவாக ஊன்றியவன், அவள் கன்னங்களைக் கடித்தான். ‘‘சாளுக்கிய மன்னருக்கு செய்தி அனுப்பிவிட்டாயா..?’’
சிவகாமியின் நயனங்கள் கனலைக் கக்கின. ‘‘என்ன செய்தி..?’’‘‘கொற்கையிலிருந்து மாமல்லபுரத்துக்கு வரும் மரக்கலங்களை ஆராயும்படி!’’வெறுப்புடன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

மாறாத புன்னகையுடன் அவள் வதனத்தை தன்னை நோக்கித் திருப்பி அவளது கீழ் உதட்டை தன் இரு விரல்களாலும் குவித்தான். ‘‘பதில் சொல்...’’
‘‘எதையும் நம்பாதவர் இப்போது நான் சொல்லப்போகும் விடையை மட்டும் நம்பப் போகிறீர்களா..?’’‘‘நான் நம்ப மாட்டேன்... ஆனால், இங்கு வருகை தரப்போகும் பாண்டிய மன்னர் நம்புவார் இல்லையா..?’’ சொன்ன கரிகாலன் அவளுக்கு அரைக்கால் அவகாசத்தையும் அளிக்காமல், அவளது கீழ் உதட்டை தன் அதரங்களால் கவ்வினான்!

‘‘உள்ளேதான் சோழ இளவரசர் இருக்கிறார் மன்னா...’’ பாதாளச் சிறையின் காவலாளி பவ்யத்துடன் தலைவணங்கியபடி சொன்னான்.
அரிகேசரி மாறவர்மர் அவனை ஆராய்ந்தார். அந்தக் காவலாளியின் இடுப்பைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட குறுவாள்கள் பளபளத்தன. இரணதீரனின் ஏற்பாடு!
‘‘வா...’’ என்றபடி பாதாளச் சிறைக்குள் நுழைந்தார்.

காவலாளி அவரைப் பின்தொடர்ந்தான்.சிவகாமி அடைக்கப்பட்டிருந்த சிறை வாயிலை அடைந்ததும் திரும்பி காவலாளியை நோக்கினார் பாண்டிய மன்னர்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இமைக்கும்பொழுதில் தன் இடுப்பில் இருந்த குறுவாள்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சிறைக்குள் வீசினான்.முதல் குறுவாள் தன்னருகில் பாய்ந்ததுமே சிவகாமியை விட்டு கரிகாலன் விலகினான். அடுத்த குறுவாள் தன் கேசத்தை உரசியபடி தரையில் ஊன்றியதும் சிவகாமி எழுந்து அமர்ந்தாள். மூன்றாவது குறுவாள் தன் காலடியில் நிலைகுத்தியதும் கரிகாலன், தன்னிரு கால்களுக்கும் இடையில் அவளை அடைத்தான்.

நான்காவது... ஐந்தாவது... என வரிசையாக குறுவாள்கள் அவ்விருவரைச் சுற்றிலும் தரையில் ஊன்றின. ஒரேயொரு குறுவாளின் நுனி கூட அவர்கள் இருவரது உடல்களையும் கீறவில்லை!குறுவாள் வீசப்படுவது நின்றதும் கரிகாலன் பார்த்தான். குறுவாள்களின் அரணுக்கு மத்தியில் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

சிவகாமி எழுந்து கொள்ள முயற்சித்தாள். இதற்காகவே காத்திருந்ததுபோல், நெகிழ்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை கரிகாலன் தன்னிரு கரங்களாலும் அவிழ்த்தான். அதிர்ந்த சிவகாமி, பின்னோக்கிச் சாய்ந்து அவன் கேசத்தை அழுத்தமாகப் பற்றினாள்.அதற்குள் அவளது கச்சைக்குள் சிறைப்பட்டிருந்த ஒரு பொருள் கீழே விழுந்து உருண்டது.

 (தொடரும்)  

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்