தல! sixers story
லாஸ்ட் பால் த்ரில்!
இருபது ஓவர் கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டே அல்ல என்பது அப்போது மரபான கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. இந்திய கிரிக்கெட் போர்டு செயலராக இருந்த நிரஞ்சன் ஷா கூட கேலியாக சொன்னார். “20 ஓவர் போட்டியா? ஏன், பத்து ஓவர், அஞ்சு ஓவர், ஒரு ஓவர் கிரிக்கெட்டெல்லாம் கூட ஆடலாமே?”எனவேதான் சும்மா கணக்குக்கு அட்டெண்டன்ஸ் போடுவதற்காக, தென்னாப்பிரிக்காவில் நடந்த முதலாம் டி20 உலகக் கோப்பைக்கு டைம்பாஸ் அணியை தேர்ந்தெடுத்தார்கள்.
இந்தியாவின் ‘பி டீம்’ கணக்காக அனுபவமற்ற மகேந்திரசிங் தோனியை கேப்டனாக்கி, ‘சும்மா ஜாலியா போயிட்டு வாங்க’ என்று சோத்துமூட்டை கட்டிக் கொடுத்து வழியனுப்பினார்கள்.
இந்தியாவுக்கு அங்கே முதல் போட்டியே கத்துக்குட்டி அணி ஸ்காட்லாந்துடன்.இந்தியா ஈஸியாக சுருட்டி வாயில் போட்டுக் கொள்ளும் என்று எதிர்பார்த்தால், மழை பெய்து ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டன.
அடுத்த போட்டியில் இந்தியா வென்றே ஆகவேண்டும். அப்போது தான் சுலபமாக சூப்பர் எய்ட் பிரிவுக்குச் செல்ல முடியும்.இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு சவால் விட்டு எதிரில் நின்றது நம் பரம எதிரி பாகிஸ்தான்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பதால் 50 ஓவர் உலகக்கோப்பை படுதோல்வியால் விரக்தியடைந்து போயிருந்த ரசிகர்கள் கொஞ்சம் நிமிர்ந்தார்கள்.அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப டர்பன் நகரில் நடந்த அப்போட்டியில் அனல் பறந்தது.போட்டி தொடங்கியதுமே காம்பிர் டக் அவுட். சேவக் ஒரு பவுண்டரி விளாசி நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
ஆனால் -அடுத்த பந்திலேயே அவரும் டக் அவுட்.யுவராஜ் சிங், ஒரே ஒரு ரன்னோடு அவுட்.தினேஷ் கார்த்திக் தாக்குப்பிடித்து 11 ரன் மட்டுமே எடுத்தார்.36 ரன்களுக்கு 4 விக்கெட்.‘அடப்போங்கய்யா... இவங்க எங்கிருந்து ஜெயிச்சு, கிழிச்சு… அடுத்த ரவுண்டுக்கெல்லாம் போவமாட்டாங்க.
பாகிஸ்தான் வகுந்தெடுக்கறான்’ என்று முடிவெடுத்து, டிவியை ஆஃப் செய்துவிட்டார்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள். ராபின் உத்தப்பா மட்டும் போராடிக் கொண்டிருக்க, இந்திய அணியின் புதிய ‘தல’ தோனி, அவரோடு கைகோர்த்தார்.அணியின் மானங்காக்க மரமாக நின்றார்.
அரை செஞ்சுரியோடு உத்தப்பா, திருப்திப்பட்டுக் கொண்டார்.தொடர்ந்து வால் வீரர்களை வைத்து ஒப்பேற்றினார் தோனி.
நூறு ரன்களுக்குள் ஈஸியாக சுருட்டிவிடலாம் என்று நினைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் எண்ணத்தில் மண்.
தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் (33 ரன்கள்) 20 ஓவர்களில் 141 ரன்களை எட்டியது இந்திய அணி.அப்போதிருந்த பாகிஸ்தான் அணி சுலபமாக எட்டிவிடக்கூடிய எண்ணிக்கைதான். சல்மான் பட், இம்ரான் நாஸிர், கம்ரான் அக்மல், யூனிஸ்கான், ஷோயிப் மாலிக், மிஸ்பா உல் அக், சாஹித் அப்ரிடி என்று அதிரடியான பேட்டிங் வரிசை.
ஹர்பஜன்சிங்கைத் தவிர்த்து இந்திய அணியிடம் பளிச்சென்று சொல்லிக் கொள்ளும்படியான பவுலர்கள் இல்லை.ஆர்.பி.சிங், ஸ்ரீ சாந்த், அகர்கர், இர்பான் பதான் என்று அவ்வளவாக சர்வதேச அனுபவமில்லாத வீரர்கள்.விதியை மதியால் வெல்ல முடியுமென தோனி நம்பினார்.
அவர் அமைத்த ஃபீல்டிங் வியூகம், விக்கெட்டுக்குப் பின்னால் நின்று ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் வாசித்து (தன்னுடைய வெற்றி ரகசியமாக ‘மேட்ச் ரீடிங்’ என்கிற நுணுக்கத்தை பின்னர் பகிர்ந்துகொள்கிறார்) பவுலருக்கு டிப்ஸ் கொடுப்பது என்று ஜரூராக வேலை பார்த்தார்.பலன் இருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிர்பாரா அதிர்ச்சி.47 ரன்களுக்கு 4 விக்கெட் காலி. முதல் வரிசை வீரர்கள் 4 பேரும் சொற்ப ரன்களிலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.ஆவேசத்தோடு களத்துக்கு வந்த மிஸ்பா உல் ஹக் தொடர்ந்து பவுண்டரிகளாக சாத்தத் தொடங்கினார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழத் தொடங்கினாலும், மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருந்தார் மிஸ்பா. அவருடன் இணைந்த யாசிர் அராஃபத் திடீரென பவுண்டரி கள் விளாச, கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்கள் 12 மட்டுமே.சாந்த் வீசிய முதல் பந்தில் ஒரு ரன் தட்டினார் அராஃபத்.
அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார் மிஸ்பா.நான்கு பந்துகளில் ஏழு ரன்கள் தேவை.அடுத்த பந்தில் இரண்டு, அதற்கடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டியதின் மூலம் பாகிஸ்தான் அணி, இந்திய அணி எடுத்திருந்த 141 ரன்களை எட்டிவிட்டது.
இரண்டு பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி.உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்கிற அவப்பெயரை முதல் டி20 உலகக்கோப்பைப் போட்டியிலேயே அழித்துவிடலாம் என்று மகிழ்ச்சி தாண்டவமாடினார்கள் பாகிஸ்தானியர்கள்.அவசரப்படாமல் ஐந்தாவது பந்தை ஆடினார் மிஸ்பா. நோ ரன். கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்தாக வேண்டும்.இதேபோன்ற சூழல் 1986ல் ஷார்ஜாவின் நடந்த இறுதிப்போட்டி ஒன்றில் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடந்தது. சேத்தன் சர்மா வீசிய ஃபுல்டாஸ் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, இந்தியாவின் வெற்றிக்கனவை முறியடித்தார் ஜாவேத் மியாண்டட்.மியாண்டட் செய்த அதே சாதனையை 21 ஆண்டுகள் கழித்து மிஸ்பா செய்வாரா என்று டர்பன் ஸ்டேடியம் மொத்தமும் நகத்தைக் கடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது.
இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளிலுமே கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயம் தடதடத்துக் கொண்டிருந்தது.பவுலர் ஸ்ரீ சாந்தை அழைத்து தோனி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார். ஹர்பஜன், சேவாக் போன்ற மூத்த வீரர்களும் தங்கள் அனுபவக் கருத்துகளைச் சொல்கிறார்கள்.ஸ்ரீ சாந்த் பந்து வீச ஓடி வருகிறார்.கடைசி பந்து. ஒரே ஒரு ரன் கிடைத்தால் பாகிஸ்தானுக்கு வெற்றி.மிஸ்பா, தன்னம்பிக்கையோடு மட்டையை வீசுகிறார்.
(தூக்கி அடிப்போம்)
யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்
|