அணையா அடுப்பு-3



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

கைக்குழந்தைக்கு கிட்டியது சிதம்பர ரகசியம்!

தான், பிறப்பதற்கு முன்பாக சிவனடியார் வந்து தீர்க்கதரிசனமாக தன் பிறப்பு குறித்தும், எதிர்காலச் சிறப்பு குறித்தும் தன் தாயிடம் சொன்னார் என்று வள்ளலார் எங்கேயும் பதிவு செய்யவில்லை.ஆனால் -பழைய மருதூர்க்காரர்கள் பின்னாளில் சொன்ன தகவல்கள் இவை.
இராமையாப் பிள்ளை, தன் குடும்பத்தில் எந்த சுபகாரியம் நடைபெற்றாலும் தில்லைக்குச் சென்று இறைவனை தரிசிப்பது வழக்கம்.புதியதாக பிறந்த தன்னுடைய மகனை தூக்கிக் கொண்டு, குடும்பத்தோடு தில்லைக்குச் சென்றார்.

இறைவனை வணங்கிவிட்டு சிதம்பர ரகசியம் காணச் சென்றார்கள்.பசிக்காக ஐந்துமாதக் குழந்தை அழுதுகொண்டிருந்தது.எனினும் -ரகசியத்தைக் கண்டுவிட்டு பால் கொடுக்கலாமே, என்று தோளில் தட்டி குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

தீட்சிதர், திரையைத் தூக்கினார்.ரகசியத்தை இராமையாப் பிள்ளையின் குடும்பம் கண்டது.அதுவரை அழுதுகொண்டிருந்த குழந்தை, சட்டென்று அமைதியானது.சிதம்பர ரகசியத்தை கண்கொட்டாது பார்த்தது.எல்லாம் புரிந்ததைப்போல அழகாய் புன்னகை பூத்தது.

தீட்சிதர் ஆச்சரியமடைந்தார்.“தாயே! உன்னுடைய மகன் தெய்வாம்சம் பொருந்தியவன்...” என்றார்.சின்னம்மாளுக்கு மகிழ்ச்சி.சிவனடியார் சொன்னதை அவர் மீண்டும் நினைத்துக் கொண்டார்.மகிழ்ச்சி.இறைவன் எல்லையின்றி தங்கள் குடும்பத்துக்கு வாரி வழங்கியிருக்கும் மகிழ்ச்சியை திகட்டத் திகட்ட அந்தக் குடும்பத்தினர் கொண்டாடினர்.

ஆனால் -அவ்வப்போது கசப்பையும் காலம் தருவதுண்டு.அடுத்த சில நாட்களிலேயே உடல்நலம் குன்றி இராமையாப் பிள்ளை காலமானார்.
நண்டும், சிண்டுமாக ஐந்து குழந்தைகள்.சின்னம்மாள் திகைத்துப் போனார்.ஆதரவு நாடி தன் தாய் வீடான பொன்னேரிக்கு, குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார்.சிறிது காலத்தில் சென்னையில் குடியேறினார்.

மூத்தமகன் சபாபதி, காஞ்சிபுரத்தைச் சார்ந்த மகாவித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி கற்றிருந்தார்.புராணப் பிரசங்கம் செய்வதில் புகழ் பெறத் தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த பொருள், குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
தன்னுடைய ஆசான் சபாபதி முதலியாரிடமே தன்னுடைய கடைக்குட்டி தம்பி இராமலிங்கத்தையும் கல்வி கற்க அனுப்ப வேண்டும் என்று அவருக்கு ஆசை.

தெய்வாம்சம் பொருந்திய குழந்தையான இராமலிங்கம், தன்னைவிடவும் புராணப் பிரசங்கங்களில் புகழ் பெற்று வளருவான் என்று அவரது அண்ணன் எதிர்பார்த்தது இயல்புதான்.தாயிடம் சொன்னார்.அவர் வாழ்த்தி அனுப்ப, ஐந்து வயது இராமலிங்கம் பள்ளிக்குச் சென்றார்.

எழுத்தையும், எண்ணையும் கசடறக் கற்றார்.ஆனால் -பள்ளிப் பாடங்கள் அவருக்குக் கசந்தன. இத்தனைக்கும் புத்திசாலிக் குழந்தைதான்.பாடம் மட்டும் ஏன் வேப்பங்காய்?மகாவித்துவானான சபாபதி முதலியார் மனவருத்தம் கொண்டார்.இராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியை அழைத்தார்.

“உன்னைப் போல எத்தனையோ குழந்தைகளுக்கு கல்வி கற்பித்திருக்கிறேன். உன் தம்பியைப் போல புத்திசாலிக் குழந்தையை நான் கண்டதில்லை. எனினும், கற்றுத்தர எனக்கு விருப்பமிருந்தாலும் கற்பதற்கு அவனுக்கு மனசில்லை. நான் என்ன செய்வது?”தம்பிக்கு கல்வியில் நாட்டமில்லை என்பது சபாபதிக்கு அளவில்லா ஆத்திரத்தை ஏற்படுத்தியது.“நான் அவனிடம் பேசி அனுப்புகிறேன். தயைகூர்ந்து அவனை பள்ளியிலிருந்து நீக்கி விடாதீர்கள்...” என்று கெஞ்சினார்.

தந்தையில்லா குழந்தை. அவனை தந்தை ஸ்தானத்தில் வளர்க்க வேண்டியது அவருடைய கடமை.இராமலிங்கத்தை வீட்டுக்கு அழைத்து வந்தார். புத்திமதி சொன்னார்.“ஒழுங்காக பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டும். ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களைப் படிக்க வேண்டும்...”தமையனார் என்ன சொன்னாலும் தலையாட்டுவார் இராமலிங்கம்.ஆனால் -பள்ளிக் கூடத்துக்குச் செல்லாமல் கோயில் கோயிலாகத் திரிந்தார். பள்ளி நேரம் முடிந்ததும் நேராக வீட்டுக்கு வருவார்.சில நாட்கள் இப்படியே போனது.ஆசிரியர் மூலமாக விஷயம் மீண்டும் அண்ணன் சபாபதிக்குச் சென்றது.

இம்முறை கோபம் கண்ணை மறைத்தது. பிரம்பு எடுத்து தம்பியின் முதுகிலேயே விளாசினார்.சபாபதியின் மனைவியும், இராமலிங்கம் இன்னொரு தாயாக மதித்த அண்ணியுமான பாப்பாத்தி அம்மாள் இடையே புகுந்து அந்த அடிகளை, தான் வாங்கினார்.“நீ கொடுக்கும் செல்லம்தான் இவனைக் கெடுக்கிறது...” என்று பாப்பாத்தியைக் கடிந்துகொண்டார் சபாபதி.“இனிமேல் இவனுக்கு இந்த வீட்டில் இடமில்லை...” என்று அறிவித்தார்.பாப்பாத்தி அம்மாளும், தாய் சின்னம்மாளும் பதறிப் போனார்கள்.

“கண்டிப்பு காட்டாவிட்டால் அவன் கெட்டு குட்டிச்சுவர் ஆகிவிடுவான். தந்தை இருந்திருந்தால் இப்படியே விட்டிருப்பாரா? இத்தனைக்கும் நாம் கணக்கர் குடும்பம். நம் வீட்டில் கல்வியறிவு இல்லாமல் ஒருவன் இருக்கலாமா?” என்று சபாபதி கேட்டார்.அவர் சொல்வது நியாயம்தான்.

ஆனால் -அதற்காக குழந்தை இராமலிங்கத்தைக் கொடுமைப்படுத்தலாமா?அண்ணன் திட்டியவுடனேயே, ரோஷத்தோடு வீட்டை விட்டு வெளியேறினார் இராமலிங்கம்.கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்தவரை, அண்ணி வந்து பார்த்து வீட்டுக்கு அழைத்தார்.

“உங்க அண்ணன் கோபக்காரர். ஆனா, நல்லவர். நீ வீட்டுக்கு வா. நான் அவர்கிட்டே பேசிக்கறேன்…”ம்ஹூம். தன்மானம் அவர்களது குடும்பச் சொத்து.அண்ணியார் கண்ணீர்விட, இராமலிங்கம் கொஞ்சம் இறங்கி வந்தார்.

“ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் வீட்டுக்கு வந்து சாப்பிடுகிறேன். அதுவும் அண்ணனுக்கு தெரியக்கூடாது...”அண்ணியார் அரைமனதோடு ஒப்புக் கொண்டார்.ஊரடங்கும் வேளையில், வீட்டின் பின்பக்கமாக இராமலிங்கம் வருவார்.ஒரு பாத்திரத்தில் அன்னம் வைக்க, அண்ணிக்காக பசியாறிச் செல்வார்.அன்று -இராமையா பிள்ளையின் நினைவு நாள். படையல் போட்டார்கள். குடும்பத்தினர் அனைவரும் சுடச்சுட உண்டார்கள்.அண்ணிக்கும் அன்னைக்கும் இராமலிங்கம் தங்களுடன் இல்லையே என்று வருத்தம்.
கண்ணீர் விட்டு அழுதார்கள்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்