லவ் ஸ்டோரி-ஆதலினால் காதல் செய்வீர்! இயக்குநர் சுசீந்திரன்



பார்த்தவங்ககிட்டேயிருந்து ஒரு பார்வை திரும்பி வரவில்லை என்றால் தவித்துப்போகிற வயதுதான் 16. பாக்கிற பொண்ணு நம்மைத் தாண்டிப் போகும் வரை மனசு படபடத்து அடங்கும்.
காய்ச்சலே வரும். மழை பெய்கிற நாளைவிட மழைக்குப் பிந்திய நாள்தானே அழகானது?அதே மாதிரி சின்னச்சின்ன காதலுக்குப்பிறகுதான் பெரிய வாழ்க்கையே இருக்கு. நம்மோட காதல் அனைத்தும் ஒரு பக்கக் காதல். நம்ம பெர்ஸனாலிடியும் அப்படி.
ஒரு கடிதம் கொடுக்கிறதுக்குள்ளே ஒரு திரைக் கதை எழுதி, க்ளைமேக்ஸ் ஓட்டிப்பார்த்திருப்பேன். கொடுத்திட்டால் என்னென்ன நடக்குமோ, வீடு வரைக்கும் பிரச்னைகள் வந்திடுமோன்னு பயம்.

மெலிந்து கருப்பாக இருந்து, கன்னத்தில் டொக்கு விழுந்திருந்த நான் காதலித்த பெண்கள் எல்லோருமே தேவதைகள். படிச்ச ஸ்கூலும் அப்படி. ரொம்பவும் கண்டிப்பு. உள்ளேயும் வெளியிலும் மாணவிகளிடம் பேசவே கூடாது. எட்டு மைல் தூரம் ஸ்கூலுக்கு சைக்கிளில் வருவேன். ‘ஜெயம்’ படத்தில் வர்ற மாதிரி 15 சைக்கிள்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் பயணம். அப்படியே முந்துறதும், உரசிட்டுப் போறதும் அதுலயும் சில விஷயங்கள் நடக்கும். அதில்கூட சில ஸ்கிரிப்ட்கள் உருவாகும்.

எத்தனை பெல் அடிக்கிறோம் என்பதில்கூட அர்த்தங்கள் உண்டு. நம்ம ஆளுங்க சரியான நேரத்திற்கு வரலைன்னா மனசு கிடந்து பதறும்.
அப்பதான் கலையரசின்னு ஒரு பொண்ணு. அவள் பெயர் சொல்லி அழைக்கும்போது ‘உள்ளேன் ஐயா’ அவள் குரலில் தனிக்கவிதையாகவே ஜொலிக்கும்.

ஒரு வார்த்தைக்கு இத்தனை சக்தி உண்டா என்றெல்லாம் வியந்திருக்கேன். வருஷம் ஓடி, அடுத்து ஒரு வயசு ஏறி ஸ்கூல் வந்தால் கலையரசி இல்லை. நமக்கு ஒரு மயக்கம் தேவைப்படுது. அடிஷனலாக வேற ஓர் உணர்வு அவசியப்படுது. அப்படித்தான் அந்தப்பொண்ணு.பார்த்தால் அடுத்தடுத்த நாள் அவள் வரவேயில்லை. நாம் இல்லாத ஒண்ணைத் தேடித்தேடி அலைவோம். அப்புறம் விசாரணையைப் போட்டால் இன்னொரு திரைக்
கதையை பசங்க சொல்றாங்க.

கலையரசி அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத் தேதி நிச்சயம் ஆகியிருக்கு. ஆனால், அவங்க திருமணத்திற்கு முதல்நாள் அவருடைய காதலரோடு தப்பிப் போயிட்டாங்க. அக்காவுக்குப் பதிலாக கூடிப்பேசி கலையரசியை மணப்பெண்ணாக ஆக்கிவிட்டார்கள்.
இதுதான் நடந்தது. ஆக, முதல் காதலே மனம் உடையும்படி ஆகிவிட்டது.

அப்புறம் மனசைத் தேத்திக்கிட்டு ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் காண்பிச்ச காதலுக்கு வர்றேன். யாருன்னே தெரியாத பெண் திருவிழா விற்கு வருகிறாள். ெவறும் பார்வையும், சின்னச் சிரிப்புமாக சுத்திக்கிட்டே இருக்கோம். தினமும் பார்க்கணும் போல் இருக்கிற முகம். அவள் ராட்டினத்தில் சுத்தும்போது நாங்களும் ஏறி தரையில் கல்லை வைச்சு சரியாக எடுக்கிறது... அந்தப்பொண்ணு ஆச்சரியமாக புருவம் உயர்த்தியது... குனிஞ்சு சிரிச்சது, அப்படியே சிலிர்ப்பு, அந்தச் சிரிப்பும், முகமும், கழுத்தைத் தாண்டி தொங்கின பூவும் இன்னமும் ஞாபகமிருக்குதே!

ஒரு மனுஷனுக்கும், மனுஷிக்கும் இடையில் சம்பவிக்க முடிவது காதல் மட்டும்தானா? எந்த பதில் புன்னகை, மறுபேச்சு, எந்த பூச்செண்டும் பரிமாறாமல் எவ்வளவு பேர் எதிரும் புதிருமாக தாண்டிப் போய்க்கிட்டு இருக்கோம். ஒரு காலமும் பேசவே போவதில்லை என்று அறிந்தும் எத்தனை பேருடன் நமக்கு ஏன் பேசத் தோன்றுகிறது?

மனுஷனுக்கு சந்தோஷம், துயரம் இரண்டுமே உறவுகள்தானா? திருவிழாவில் நிறைய பெண்கள் இருப்பாங்க. அதில் ஒரு முகம் பளிச்சென்று நெஞ்சில் விழும். திருவிழாவில் குழந்தைகள் மட்டும் தொலையாது. நாமும் சமயங்களில் தொலைவோம். இரண்டு திருவிழாவிற்கு சேர்ந்த மாதிரி வந்து வெயிட் பண்ணியும் ஏன் அந்தப்பெண் வராமலேயே போனாள்? ஏன் அந்த முகம் பிடிவாதமாக என்னைப் பார்க்க மறுக்கிறது?
அப்புறம் சென்னைக்கு வந்திட்டேன்.

எப்படியும் இயக்குநர் ஆகணும்னு தீராத கனவு. குடும்பத்தில் வறுமை. எந்த உதவியும் பெற முடியாது. கல்யாண மண்டபத்திற்குப் போய் சாப்பாடு சப்ளை பண்ணினால் 125 ரூபாய் கொடுப்பார்கள். இரண்டு வேளை பரிமாறின பணத்தை வைத்து வாடகை, கைச் செலவுக்கு வைத்திருக்க வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்கிறேன். அடுத்து ஆபீஸ் பாயாக வேலை செய்கிறேன். அப்புறம் காலங்கள் நீண்டு, ‘வெண்ணிலா கபடிக்குழு’ செயல்பாட்டுக்கு வருகிறது. குடும்பத்தை நம்பிக்கையாக சென்னைக்கு வரவழைக்கிறேன்.

மாமா பொண்ணுரேணுகாவும் லீவுக்கு வருகிறாள். நமக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திங்க. பக்கத்தில் ரேணுகா போயிக்கிட்டு இருக்கும்போதே பளிச்சின்னு எதுனா ஒரு கமெண்ட் அடிச்சு விட்டுடுவேன். கோயிலில் மொத்தமாக போய்க்கிட்டு இருக்கும்போது திடீரென்று திருநீறு இட்டுவிடுவேன். அடுத்த வினாடியே யோசிக்கிறதுக்கு முன்னாடி குங்குமமும் வச்சுருவேன்.

இதெல்லாம் யாருக்கும் தெரியாமல் நடந்த விஷயங்கள். அப்பாவிற்கு இரண்டு திருமணங்கள் நடந்தது. அம்மா முதல் மனைவி. சித்தி இரண்டாவது மனைவி. சித்தியின் தம்பிதான் என் மாமனார். அவருக்கு இந்த கல்யாணத்தை முடித்து வைப்பதில் சில சந்தேகங்கள் இருந்தன.

கல்யாணம் முடிந்தபிறகு, பழிவாங்கும் விதமாக தன் மகளை சிரமப்படுத்துவாரோ என்ற எண்ணம் அவரிடம் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால், சித்தியே இதை நிவர்த்தி செய்து நடத்தி வைத்தார். கல்யாணம் முடிந்தபிறகும் இரண்டு டிகிரி படிக்க வைத்தேன்.

சினிமா நிரந்தரம் கிடையாது, இந்தக் கார் கூட நிரந்தரம் இல்லை. வாழ்க்கை எப்படியெல்லாமோ மாறும், வேறு உருவத்தில் வந்து நிற்கும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். ‘நான் உனக்காக என்னவெல்லாம் செய்ய முடியும். நீ எனக்காக என்னவெல்லாம் செய்ய முடியும்? உன்னை என்னாலும், என்னை உன்னாலும் எவ்வளவு தூரம் பொறுத்துக்கொள்ள முடியும்?’ என்பதற்கெல்லாம் பாஸிட்டிவ்வான பதில் கிடைக்கும்போது சந்தோஷமாக இருந்தது.

காதல் என்பது பிரியாமல் குடும்பம் நடத்த, கவனமாக மிகக் கவனமாக யோசித்து, உள்ளுக்குள்ளே பிரிந்து நின்று விவாதித்து எடுக்கப்பட வேண்டிய முடிவாகவே படுகிறது.காதல் நம் எல்லோருக்கும் இயல்பான பொதுவான விஷயம்தான். பழகற விதங்கள், குணாதிசயங்கள்னு… கேரக்டரில் பிடிச்சுப்போய் காதலாகிறது. கல்யாணம் வரைக்கும் மட்டும் இல்லை. காலா காலத்துக்கும் இருக்கும்.

ரேணுகாவின் துணையிருப்பில் இப்போது கட்டுக்கோப்பு மேலிட இருக்கிறேன். ஒருவர் நினைவில் ஒருவர் நின்று நிறைவாக வாழ்கிறோம். காதலும் மலர்ந்து, அன்பும் நிறைவடைகிறது. ஒரு உறுத்தல் இல்லை, எரிச்சல் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுக்கும் புது அர்த்தம் தெரிகிறது.
ஆதலினால் காதல் செய்வீர்! அதுவே மனிதர் கடமை.

நா.கதிர்வேலன்