WHO: சீனா Vs அமெரிக்கா! இந்தியா யார் பக்கம்?



கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் உலக நாடுகள் பங்கேற்றுள்ள இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பின் (WHO) பங்கு மிகப்பெரியது. அப்படிப்பட்ட பெரிய பொறுப்புக்கு இந்தியா வந்துள்ளது!

ஆம். 34 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத் தலைவர் பதவி, இப்போது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.இப்பதவியை இந்தியாவுக்கு ஒதுக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி 194 நாடுகள் ஒப்புதலுடன் இந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்தியா இப்பொறுப்புக்கு வந்ததல்ல... பொறுப்புக்கு வந்துள்ள நேரம் உலகளவில் பலத்த சர்ச்சைகளையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
“அதற்குக் காரணம் அமெரிக்காவுக்கும் WHOவுக்கும் இடையில் கடுமையான மோதல் நிகழ்ந்து வரும் நேரம் இது...’’ என்று ஆரம்பித்தார் அரசியல் சமூக விமர்சகரான பேராசிரியர் அ.மார்க்ஸ்.

‘‘அமெரிக்காவின் பங்காக WHOவுக்குத் தரவேண்டிய பங்கை இந்த ஆண்டு நிறுத்துவதாகவும், நிரந்தரமாகவே நிறுத்தும் வேலைகளைச் செய்வதாகவும் சில நாட்களுக்கு முன் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். டிரம்புக்கு இத்தனை கடுப்பு ஏன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன் முதலில் கொரோனா தாக்குதல் சீனாவில்தான் தொடங்கியது. பெரும் மக்கள் தொகை உள்ள அந்த நாடு அதை மிக வெற்றிகரமாகச் சமாளித்தது. இதனை WHO பாராட்டியது. இதெல்லாம் டிரம்புக்குக் கடும் எரிச்சல்.

இப்போது, கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம்; WHO சீனாவுக்கு சாதகமாக நடந்துகொள்கிறது; அதனால் விசாரணை நடத்த வேண்டுமென்று டிரம்ப் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் WHOவில் முக்கிய பொறுப்பேற்றுள்ள ஹர்ஷ் வர்தன் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலையையே எடுப்பார் என எதிர்பார்க்கலாம்...” என்கிறார் அ.மார்க்ஸ்.

இதற்கு மாறாக, “இல்லை... சீனாவுடன்தான் இந்தியா கை கோர்க்கும்...” என்கிறார் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான முனைவர் மு.இனியவன்.“அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது சீனா எல்லாத் துறைகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக வளர்ச்சியை எட்டியிருக்கிறது. தன் ஜிடிபியை சீனா தக்கவைத்திருப்பதோடு உயர்த்தியும் உள்ளது. அமெரிக்காவோ பூஜ்யம் அளவுக்கு சென்றுள்ளது.

தன் நாட்டில் நடக்கும் பல பிரச்னைகளுக்கு மத்தியிலும் சீனாவைச் சீண்டுகிறது அமெரிக்கா. அதற்குக் காரணம் அமெரிக்காவின் கவுரவ பிரச்சினைதான். சீனா 1950களுக்குப் பிறகுதான் உலக நாடுகளுடன் போட்டியில் இறங்கியது. அமெரிக்காவோ 1800களில் இருந்து வல்லரசாக தன்னைக் கருதி வருகிறது.

இந்தியா - அமெரிக்காவுக்கு இடையில் வணிக ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும் சீனாவிடமிருந்துதான் நம் நாடு பெனிஃபிட் அடைகிறது. இப்போது அமெரிக்கா மட்டும்தான் WHOவை எதிர்க்கிறது. இதைப் பயன்படுத்தி அமெரிக்காவால் எந்த நாட்டின் மீதும் நாட்டாமை செய்ய முடியாது. அமெரிக்காவின் நாட்டா மைத்தனம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே காலாவதி ஆகிவிட்டது. ஆப்கன் போருக்குப் பின் அமெரிக்காவின் தனிப்பட்ட விஷயத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.

இப்போதும் கூட அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளதால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. அதனை மறைக்கவும், இந்த ஆண்டு இறுதியில் அங்கு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தன்னை முன்னிலைப்படுத்தவும் டிரம்ப், இப்படி சீனா மீது குற்றம் சுமத்தி வருகிறார்.    

இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய மூன்று ஆசிய நாடுகள் இணைந்தால் போதும். உலகைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவிடும். அந்த அளவுக்கு மேன் பவர் இங்குள்ளது. அமெரிக்கா WHO மீது விசாரணை கோரினாலும் அது உடனடியாக நடக்கப் போவதில்லை. எனவே இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு ஆதரவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்...” என்கிறார் முனைவர் மு.இனியவன்.

யார் இந்த ஹர்ஷ் வர்தன்?

மருத்துவரான ஹர்ஷ் வர்தன், தில்லியைச் சேர்ந்தவர். 1993ம் ஆண்டு முதல் முறையாக தில்லி சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தில்லியின் சுகாதார மற்றும் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 1998, 2003, 2008, 2013 ஆகிய தில்லி சட்டப்பேரவை தேர்தல்களிலும் ஒரே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த எம்பி தேர்தலில் வெற்றி பெற்று இப்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.   

அன்னம் அரசு