ஊரடங்கு முடிந்ததும் மால்களில் வாங்கப் போகிறீர்களா..? உஷார்..!



ஊரடங்கு பயம் ஒரு பக்கம் எனில் ஊரடங்குக்குப் பிறகான அச்சம் இன்னொரு பக்கம்.50 நாட்களுக்கும் மேலாக பூட்டிக் கிடந்த மலேசிய ஷாப்பிங் மால் ஒன்றின் ஷோ ரூமில் தோல்பொருட்களும் ஆடைகளும் பூஞ்சை படிந்து கிடக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவ... மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மால்களும், மால்களில் உள்ள ஷோரூம்களும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. எப்பொழுது திறக்கும் என்று தெரியாத நிலையில் தமிழக மால்களிலுள்ள பொருட்களுக்கும் அதேபோன்றதொரு
நிலை ஏற்படலாம் என சமூகவலைத்தளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“ஊரடங்கைப் பயன்படுத்தி சிலர் உடல் எடையைக் குறைத்திருப்பார்கள்... சிலரது எடை கூடியிருக்கும். எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பலரும் ஷாப்பிங் செய்ய முற்படுவர்...’’ என்று ஆரம்பித்த சென்னை அட்வான்ஸ்ட் ஸ்கின் அண்ட் லேசர் க்ளினிக்கில் டெர்மடாலஜிஸ்ட் மற்றும் காஸ்மெடிக் பிரிவின் சீனியர் கன்சல்டன்ட்டாக இருக்கும் டாக்டர் கே.பிரியா, அப்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

‘‘முதன்மையானது கடைகளிலுள்ள டிரையல் ரூம்களைத் தவிர்ப்பது. மூடப்பட்ட அறைகளில் சூரிய ஒளி பரவியிருக்காது என்பதால் தும்மிய, இருமிய துகள்கள் அந்த அறைகளில் அழியாமல் இருக்கும். தவிர ஏசி நிறைந்த ஷோரூம்கள், கூட்டம் அதிகம் கூடும் பெரிய கடைகளில் ஷாப்பிங் செல்வதைத் தவிர்ப்பதும் அவசியம்.நமது சைஸ் என்னவோ அதை மட்டும் சரியாகச் சொல்லி உடையை உடனுக்குடன் வாங்கிக் கொண்டு வெளியில் வருவது
நல்லது. வாங்கியதைத் துவைத்து வெயிலில் காயப் போட்டு அயர்ன் செய்து அதன் பின் அணியுங்கள்.

செருப்பு, ஹேண்ட்பேக், பெல்ட் மாதிரியான தோல் பொருட்களை சில மாதங்களுக்கு வாங்காதீர்கள். ஏனெனில் பூஞ்சைகள் இவற்றையே எளிதில் தாக்கிப் படரும்...’’ என்ற டாக்டர் பிரியா, காஸ்மெடிக் பொருட்களை வாங்கும்போதும் கவனம் தேவை என்கிறார்.‘‘லிப்ஸ்டிக், மஸ்காரா... என காஸ்மெடிக் பொருட்களை டெஸ்ட்டிங் செய்யாமல் வாங்குங்கள். வீட்டுக்கு வந்தவுடன் வாங்கிய பொருட்களின் கவர்களைப் பிரித்து அப்புறப்படுத்திவிட்டு நான்கு நாட்கள் வரை அப்படியே தொடாமல் வைத்திருந்து பிறகு பயன்படுத்துங்கள்.

காஸ்மெடிக் பொருட்களின் மேலே உள்ள கவர் மூடி, டப்பாக்கள் ஆகியவற்றை சானிட்டைஸர் கொண்டு துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்...’’ என்ற பிரியா, தவறுதலாக பூஞ்சைகள் பூத்த பொருட்கள் அல்லது உடைகளை வாங்கினால் நம் உடல் தோலில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கிறார்.
‘‘ஆம். நமது தோலில் அரிப்பு, ரேஷஸ் அதனைத் தொடர்ந்து எரிச்சல் உண்டாகலாம்.

சில நாள்பட்ட பயன்படுத்தாத பொருட்களில் பூச்சிகள் இருந்து அதன் மூலமும் பிரச்னைகள் வரலாம். எனவே எச்சரிக்கை தேவை...’’ என பிரியா முடிக்க, வாங்கிய பொருட்களால் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு நுகர்வோர் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை விளக்குகிறார் நுகர்வோர் நீதிமன்ற வழக்குரைஞரான சரவணன் ராஜேந்திரன்.

“ஒரு பொருளை வாங்கி அதைப் பயன்படுத்திய பின் நமக்கு உடலளவில் அல்லது மனதளவில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பொருளை புராடெக்ட் டெஸ்ட் லேபுக்கு எடுத்துச் சென்று லேப் ரிப்போர்ட் ஃபார் புராடெக்ட் சோதனைக்கு உட்படுத்துங்கள். இதற்கு அப்பொருளை வாங்கிய பில் தேவை.

குறிப்பிட்ட பொருளில் பிரச்னை அல்லது காலாவதியான பொருள் அது என ஆய்வு முடிவு தெரிவித்தால் அடுத்து மருத்துவரைச் சந்தித்து உங்களை பரிசோதிக்கச் செய்து சர்டிஃபிகேட் வாங்குங்கள். அதில், குறிப்பிட்ட அந்தப் பொருள் காலாவதி ஆனதால் அல்லது டேமேஜ் ஆனதால்தான் இதுபோன்ற ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது என டாக்டர் குறிப்பிட வேண்டும்.இந்த ஆய்வு முடிவு மற்றும் மருத்துவச் சான்றிதழுடன் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உரிய நஷ்டஈட்டை பெறலாம்...’’ என்கிறார் சரவணன் ராஜேந்திரன்.          

ஷாலினி நியூட்டன்