அணையா அடுப்பு-1



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

உயிர்க்கொடை
‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்று திருமந்திரம் சொல்கிறது.அன்னதானத்துக்கான வரையறையாகவே இது குறிப்பிடப்படுகிறது.யார், எவர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் செய்யப்பட வேண்டிய தானம் என்று அன்ன தானத்தை திருமந்திரம் நமக்கு வலியுறுத்துகிறது.
‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே’ என்று ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையும் அன்னதானத்தின் பெருமையைப் போற்றுகிறது.
அன்னக் கொடை என்பது உயிர்க் கொடை என்பதில் எவருக்கும் இருவேறு கருத்து இருக்க வேண்டிய தேவை இல்லை.

முன் எப்போதையும் விட அன்னதானத்தின் தேவையை கொரோனா காலத்து உலகம் உணர்ந்திருக்கிறது.பசியோடு பல்லாயிரம் மக்கள் சாலைகளில் குடும்பம் குடும்பமாக தளர்ந்துபோய் நடக்கும் காட்சியை நாம் கற்பனையில் கூட இதுநாள்வரை நினைத்துப் பார்த்ததில்லை.பஞ்சமெல்லாம் பழங்கதை. இனி பசியால் மரணமில்லை என்று நாம் கொண்டிருந்த நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிட்டது.எத்தனையோ பஞ்சங்களை உலகம் கடந்த நூற்றாண்டுகளில் கண்டிருக்கிறது.

இயற்கைச் சீற்றங்கள், மண், பெண், பொன்னாசையால் நடந்த போர்கள் என்று அவற்றுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.ஆனால் -கண்ணுக்குத் தெரியாத - நுண்ணோக்கி வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் ஓர் நுண்ணுயிரி பல லட்சம் மக்களை பசியால் வாடவைக்கும் என்று யாரேனும் சொல்லியிருந்தால், அவரை மனநல சிகிச்சைக்கு அல்லவா அனுப்பியிருப்போம்?இயற்கை எதை விடவும் பெரியது.

அதற்கு நன்மை, தீமை தெரியாது.பசித்த வயிறு, பற்றியெரியும் எரிமலைக்கு ஒப்பானது.அது அரசுகளைக் கவிழ்க்கும்.கோட்டை கொத்தளங்களை தூள்தூளாக்கும்.மகுடங்களை சுக்குநூறாக்கும்.சிம்மாசனங்களை வீழ்த்தும்.கடந்த கால வரலாறு இதையெல்லாம் நமக்கு நிரூபித்திருக்கிறது.
மனிதன் எந்தக் காலத்திலும் வரலாற்றிலிருந்து ஒழுங்காகப் பாடம் கற்றதில்லை.
அதன் விளைவே -

இன்று பல்லாயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் குழந்தை, குட்டிகளோடு பல நூறு கிலோமீட்டர் தொலைவுகளுக்கு நடந்தே செல்லும் பரிதாபம்.கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும் இதேபோன்ற சூழல் நம் நாட்டில் நிலவியது.வேதம் படைத்த பாரதம், பண்பாட்டின் உச்சியில் பட்டொளி வீசிப் பறந்த தேசம், கலை இலக்கியத்தின் கருவூலமாகத் திகழ்ந்த பிரதேசம் இருளில் மூழ்கியது.

ஐரோப்பியர்களின் வணிகப் போட்டி நம் நாட்டை சீரழிக்கத் தொடங்கியது.வணிகம் செய்ய வந்த வந்தேறிக் கூட்டம் ஆட்சியதிகாரம் பெற்று, மண்ணின் மைந்தர்களை நாலாந்தரக் குடிமக்களாக நடத்தத் தொடங்கியிருந்தது.சூரிய உதயம் தொடங்கும் நிலத்தில் தொடங்கி, அந்தி மறையும் தேசம் வரையிலான பெரும் பரப்பை கிழக்கிந்திய நிறுவனம் என்கிற பெயரில் வளைத்துப் போட்டன வல்லூறுகள்.

எவருக்கும் கருணையில்லை.எவர் செத்தாலும் தம் பை நிரம்பினால் போதுமென்ற கொலை கார சுயநலம் கோலோச்சியது.
தமிழ் மண்ணை ஆண்டு கொண்டிருந்த குறுநில மன்னர்களும், பாளையக்காரர்கள் பலரும் அந்நியர்களின் எடுபிடி ஆகி சொந்த மக்களைக் கைவிட்ட பெரும் சோக காலக்கட்டம் அது.

நால்வகை வருணங்கள் மக்களை இனரீதியாக, மொழிரீதியாக, சாதிரீதியாக பிளவுபடுத்தி நாசகார சக்திகளாக மாறிவிட்ட கோலம்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்தே தமிழ் நிலம் கண்டறியாத வறுமை, பசி, பட்டினி.மண் பிடிக்கும் பேராசையின் விளைவாக நிகழ்ந்த போர்களால், நானிலத்துக்கே உணவளித்துக் கொண்டிருந்த வேளாண்குடி மக்களுக்கு விதவிதமாக வரிகள் போடப்பட்டன.உழுதவன் கணக்குப் பார்த்தான். உழக்குதான் மிஞ்சியது.

சொந்த நிலத்தில் விதைத்து, உழுது, அறுவடை செய்ய அந்நிய நாட்டுக்கு நிலவரி கட்டிக் கொண்டிருந்தான்.யதேச்சாதிகாரமாக நமக்கு விதிக்கப்பட்ட வரிகள், வேளாண்மையை முடமாக்கியது.எவருக்கும் சேமிக்கும் வாய்ப்பில்லை.இங்கிருந்த கந்துவட்டி கனவான்கள் கொழித்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டை பஞ்ச நூற்றாண்டு என்றேகூடச் சொல்லலாம்.நூற்றாண்டு தொடங்கியதுமே அடுத்தடுத்து பஞ்சங்கள். மொத்தம் ஏழு பஞ்சங்கள்.

பதினைந்து லட்சம் பேர் பசிக்கொடுமையால் மாண்டார்கள்.நூற்றாண்டின் பிற்பகுதி இன்னும் மோசம்.

1851ல் தொடங்கி 1900 வரையிலான காலக்கட்டங்களில் மட்டுமே இருபத்தி நான்கு பஞ்சங்கள்.இதன் காரணமாக மட்டுமே இரண்டு கோடிப் பேர் இறந்தார்கள்.ஒருவேளைக் கஞ்சிக்கே வக்கில்லாமல் போனது உலகுக்கே சோறு போட்ட மாநிலம்.இந்தக் கடும் இருளில் விடிவே கிடையாதா என்று மக்கள் நெஞ்சுருகி பிரார்த்தித்தார்கள்.தேசமெங்கும் பல்வேறு சீர்திருத்த ஞானிகள் தோன்றுவதற்கு இவ்வகையான கொடிய பின்னணியும் காரணமாக இருந்தது என்பதே நாம் பெற்ற ஒரே நற்பேறு.

ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் என்று சமயம் வழி சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்த ஆங்காங்கே மகான்கள் தோன்றினர்.தமிழர்களின் இருளைப் போக்க ‘அவ்விருள் கடிய எழுந்த ஞாயிறு’ என்று தமிழறிஞர் திரு.வி.க.வால் வருணிக்கப்பட்ட ஜோதி இங்கே எழுந்தது.களையிழந்து கிடந்த மக்களின் முகங்கள் ஒளிர்ந்தன.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அந்த உள்ளம், மனிதர்களின் பசித்த வயிறுகளைக் கண்டு மட்டும் பாராமுகமாய் இருக்குமா?
பசி.நம் வயிற்றின் அணையா அடுப்பு.

அந்த அணையா அடுப்பைக் குளிர்விக்க 1867, மே 23 அன்று வடலூரில் அணையா அடுப்பை ஏற்றியது அந்த தனிப்பெருங்கருணை.பசியென்பது உணர்வல்ல, பிணி என்றார்.சமூகப்பிணி தீர்க்க அவர் ஏற்றிய அடுப்பு, நூற்றி ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது.முன்னெப்போதையும் விட வள்ளலாருடன் நாம் வாழவேண்டியது இந்தக் கொடுமையான காலக்கட்டத்தின் கட்டாயம்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்