MASTER ரிலீஸ்..?



ஆண்டுதோறும் சம்மர் சீஸன் என்றால் கோலிவுட்டே திருவிழாவாக காட்சி தரும். சுமாரான படங்கள் கூட கல்லா கட்டுவது இந்தக் காலத்தில்தான்!
இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களிலும் தமிழகத்தில் தியேட்டர்கள் இயங்கவில்லை. ஊரடங்கு காலம் முடிந்து திரையரங்குகள் இயங்கத் தொடங்கிய பின் ரிலீசாக 90 படங்கள் வரை காத்திருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.

ஆனால், திரையரங்க உரிமையாளர்களோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ ரிலீசுக்காகக் காத்திருக்கிறார்கள். மாஸ் நடிகரின் படம்தான் மீண்டும் மக்களைத் திரையரங்கு பக்கம் இழுக்கும் என்பது அவர்களது வாதம்.‘‘இந்தியாவுல எந்த மாநிலத்திலும் இதுவரை எந்தத் தியேட்டர்களும் ஓப்பன் ஆகல.
ஒருசில ஸ்டேட்கள்ல தியேட்டர்களைத் திறந்துட்டா தமிழகத்திலும் அனுமதிக்க அரசாங்கம் தயாரா இருக்கு...’’ என உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.‘‘கர்நாடகாலயும் ஆந்திராவுலயும் விரைவில் ஓப்பன் பண்ணிடுவாங்கனு நினைக்கறோம். அப்படி நடந்துட்டா நம்மூர்லயும் உடனடியா தியேட்டர்கள் இயங்க வாய்ப்பிருக்கு.

அரசாங்கம் அனுமதி கொடுத்த 24 மணி நேரத்துக்குள்ள நாங்களும் தியேட்டர்களைத் திறந்துடுவோம். எங்களுக்கு பராமரிப்பு வேலைகள் ஒண்ணும் இருக்காது. ஏன்னா, நாங்க எல்லாருமே தியேட்டர் களை தினமும் பராமரிச்சுட்டுதான் இருக்கோம். மெஷின்கள், ஜெனரேட் டர்கள், ஏசினு எல்லாத்தையும் தினமும் மெயின்டெயின் பண்ணினாதான் பழுதாகாம இருக்கும். அதனாலேயே லாக்டவுன்லயும் அதை முறையா சீரா பராமரிக்கறோம்.

தியேட்டர்கள் திறந்த பிறகும் ஊழியர்கள் மற்றும் படம் பார்க்க வருபவர்களின் டெம்ப் ரேச்சரை பரிசோதிச்சுட்டுதான் உள்ளயே அனுமதிப்போம். இது குறித்தெல்லாம் பேசி முடிவெடுத்திருக்கோம்.இப்ப டெம்ப்ரேச்சர் செக் பண்ண சாதாரண கருவியே போதுமானதா இருக்கு. ஆடியன்ஸ் முகக்கவசத்தோடுதான் வரணும். தனியா வர்றவங்களுக்கு ஒரு சீட் தள்ளி தான் டிக்கெட் கொடுப்போம். குடும்பத்தோடு வருபவர்கள் மட்டும் ஒரே வரிசைல அடுத்தடுத்த சீட்கள்ல அமரலாம்.

ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணினாலும் ஒரு சீட் புக் பண்ணினதுமே அடுத்த சீட் ப்ளாக் ஆகிடும். தியேட்டர் ரெஸ்ட் ரூம்ல கட்டாயம் சானிடைசர் வைக்கப் போறோம்.கேண்டீன்ல எல்லா சப்ளையர்ஸும் தலைல கேப், கையுறை, முகத்துல மாஸ்க்குனு பாதுகாப்பாதான் இருப்பாங்க.
தியேட்டர் திறந்ததும் டிக்கெட் விலை உயரும்னு ஒரு பேச்சு இருக்கு. அப்படி எந்தத் திட்டமும் இல்ல. லாக் டவுனுக்கு முன்னாடியே தியேட்டர்கள்ல 100% ஆக்குபன்சி இல்ல. ஆவரேஜா 40 - 50 சதவிகிதம்தான் இருக்கும்.

இந்த எதார்த்தம் எங்களுக்கும் தெரியும். அதனால டிக்கெட் விலை உயர்வு குறித்தெல்லாம் நாங்க யோசிக்கல...’’ என்ற திருப்பூர் சுப்ர
மணியம், ‘மாஸ்டரு'க்குள் வந்தார்.‘‘தியேட்டர் உரிமையாளர்கள் அத்தனை பேருமே விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைத்தான் முதல்ல திரையிட விரும்பறோம். பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ காம்பினேஷன் படங்கள்ல ரிலீஸுக்கு ரெடியாகி நிற்கிற படம் அதான். அதோட தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறோம். ‘திரையரங்கு திறந்ததும் பேசி, பண்ணிக்கலாம்’னு அவங்க தரப்புல சொல்லியிருக்காங்க...’’ என்கிறார்.

திருப்பூர் சுப்ரமணியத்தின் கருத்தை ஆதரிக்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர். ‘‘ஊரடங்கு சரியானா கூட கொரோனா பீதில தியேட்டர்களுக்கு மக்கள் வரத் தயங்குவாங்க. ஆனா, விஜய் மாதிரி டாப் ஹீரோ நடிச்ச படம்னா அவங்களோட ரசிகர்கள் உற்சாகமா, பயமில்லாம தியேட்டருக்கு வருவாங்க.

சன் பிக்சர்ஸ் தயாரிப்புல, ரஜினி நடிப்புல ‘வீரம்’ சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ பட ஷூட் போயிட்டிருக்கு. அஜித்தின் ‘வலிமை’யும் படப்பிடிப்புல இருக்கு. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸுக்கு தயாரா இருந்தாலும், இப்போதைய சூழல்ல படத்தை வெளியிட தயங்கறாங்க. ஆகஸ்ட்டுக்குப் பிறகு பார்க்கலாம்னு அவங்க முடிவெடுத்திருக்காங்க.

ஸோ, இப்போதைய சூழல்ல ரசிகர்களைச் சுண்டி இழுக்கற மாமருந்து ‘மாஸ்டர்’தான். லோகேஷ் கனகராஜ் பிரமாதமா இயக்கியிருக்கறதாகவும் விஜய் பட்டையைக் கிளப்பியிருக்கார்னும் பேச்சிருக்கு. ரசிகர்களும் பரபரப்பா ‘மாஸ்டர்’ ரிலீசுக்கு காத்திருக்காங்க. இதெல்லாமே தியேட்டர்களுக்கு அட்வான்டேஜ்தான்...’’ என்கிறார் அந்தத் தயாரிப்பாளர்.

ஆனால், ‘மாஸ்டர்’ தரப்போ வேறு ஐடியாவில் இருக்கிறது. ‘‘தியேட்டர்களுக்கு எப்பவும் எங்க சப்போர்ட் உண்டு. ஆனா, தென்னிந்திய அளவுல தியேட்டர்கள் திறந்தா கூட ‘மாஸ்டரை’ ரிலீஸ் பண்ணினா ‘எஃப்.எம்.எஸ்’ வருமானம் போயிடும். வெளிநாட்டு ரைட்ஸுக்கான பெரிய தொகை கிடைக்காது. அதனால உலகெங்கும் தியேட்டர்கள் திறந்தாதான் லாபம் பார்க்க முடியும்...’’ எனக் கணக்கிடுகிறார்கள்.

இதற்கிடையில் பல ஓடிடி ப்ளாட்ஃபார்ம்கள் ‘மாஸ்டரை’ கைப்பற்ற முயற்சித்திருக்கின்றன. ‘ரசிகர்களுக்காகத்தான் படம் பண்றேன். தியேட்டர்ல ரிலீசானாதான் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமா அமையும்...’ என விஜய் கறாராகச் சொல்லிவிட்டாராம்.
ஆக, ‘மாஸ்டர்’ ரிலீஸ், உலக நாடுகளின் கைகளிலும் அடங்கியிருக்கிறது!

மை.பாரதிராஜா