நான்... சின்னப்பிள்ளை



நம்ம நாட்டுக்கே தலைவர் திடீர்னு என் கால்ல விழுந்துட்டார். என்னைய சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலை. கை காலெல்லாம் வெலவெலத்துப் போயிடுச்சு. இப்ப வரை அது நிற்கலை.அழகர்கோவில் மாத்தூர் பக்கம் கள்ளந்திரி கிராமத்துல பிறந்தேன். சின்ன வயசுலயே ஆத்தா செத்துப்போச்சு. என் ஆத்தா எப்படி இருக்கும்னு கூட எனக்கு தெரியாது. அப்பா வகையறா யாருமே படிக்கலை. அதனாலேயே எங்களுக்கும் படிப்பு வாசம் இல்லை.

எனக்கு ரெண்டு அண்ணன்மார்கள், ஒரு அக்கா. அக்காதான் ஆத்தா மாதிரி பார்த்துக்கும். அப்பா, அண்ணங்களுக்கு எல்லாம் வயக்காட்டு வேலை. எனக்கு மாடுகளை மேய்ச்சு சாயங்காலம் வீட்டுக்குக் கூட்டியாறதுதான் வேலை. 100 மூட்டை நெல் கணக்குல குத்தகைக்கு நிலம் எடுத்து அதுல கிஸ்தி முறைப்படி வேலை. கணக்குக் கேட்டா வட்டி, அசல்னு என்னென்னவோ பிரச்னை வரும்.

எனக்கு அப்ப ஒண்ணுமே தெரியாது. ஒரு கட்டத்துல அக்காவுக்கு கல்யாணம் ஆச்சு, எனக்கு வீட்டு வேலை வந்துச்சு. காலப்போக்குல எனக்கும் ரொம்பச் சின்ன வயசுல கல்யாணம்.என் வீட்டுக்காரரும் படிப்பறி வில்லாத மனுஷன். அம்மா வழி சொந்தம். அவர் பெயர் பெருமாள். வாக்கப்பட்டு புல்லிச்சேரி கிராமத்துக்கு வந்தேன். குடும்பமே விவசாயத்துக்காக இன்னொரு நில உரிமையாளருக்கு கிஸ்தி கட்டிட்டு இருந்தாங்க, அந்த கிஸ்திக்கு அங்கயே வேலை செய்துட்டு, அவங்க கொடுத்த சின்ன கொட்டில் மாதிரி வீட்டுலயே வாழ்க்கை ஓடுச்சு.

கிஸ்தியை எல்லாரும் பகிர்ந்து கட்டணும். வருஷத்துக்கு ரூ.5000 ஒருத்தருக்குன்னு குடும்பத்துக்குள்ளேயே பிரிச்சு அதுக்காக வேலை செஞ்சோம்.
பண்ணைக்காரங்க ரொம்ப கண்டிஷன். நேரத்துக்கு வரலைன்னா சம்பளம் புடிப்பாங்க. எந்த நேரக் கணக்கும் இல்லாம வேலை வாங்குவாங்க. ஏன்னு கேட்கக் கூடாது. தீபாவளி, பொங்கல், வீட்ல விசேஷம்னா அவ்வளவுதான்.... நாங்க வேலைக்காரங்க மாதிரி வேலை செய்யணும். ஆம்பளைங்களுக்கு மட்டும் ஒரு வேட்டி, துண்டு கிடைக்கும்.

இந்த வேளையிலதான் எனக்கு கருத்தரிச்சது, 11 வயசுல கல்யாணம், 12 வயசிலே குழந்தை. பேறு காலம் காரணமா வேலைக்குப் போகலை. அதுக்கும் சம்பளப் பிடித்தம்னு சொல்லி அந்த பண்ணையார் வேலைய காண்பிச்சார்.வீட்டுக்கு விறகு வெட்டுறது, வயல் வேலை, மாட்டுத் தொழுவ  வேலைனு பச்சை உடம்புக் காரி மயக்கம் போட்டு கூட ஒண்ணு ரெண்டு முறை விழுந்தேன். அப்ப இந்தக் குடும்பக் கட்டுப்பாடெல்லாம் தெரியாது. ஆறு முறை கருத்தரிச்சேன். கடவுள் குடுத்த அருள்னு நினைச்சு இருந்தேன்.

எனக்கு குழந்தை பிறந்து இறந்துட்டே இருந்துச்சு. அப்பறம் தங்கினது ரெண்டு மகன்க, ஒரு மவ. மகன்கள் ரெண்டு பேருக்கும் படிப்பு ஏறலை. படிக்க வைக்க ரொம்ப பாடுபட்டேன். அப்புறம் மவளுக்கு படிப்பு மேல ஆசைனு தெரிஞ்சிக்கிட்டு அவளை நல்லா படிக்க வெச்சேன். நிறைய பணம் செலவு செய்தேன்.

இப்பவும் அவ என்ன படிச்சான்னு எனக்குத் தெரியாது. ஆனா நிறைய படிச்சா. பழைய பண்ணையார் குத்தகை காலம் முடிஞ்ச உடனே எங்களை அனுப்பிட்டார். மகள் படிப்பு, சாப்பாடு இப்படி எங்களுக்கு பணமும் அதிகம் தேவைப்பட்டுச்சு. அடுத்த நிலங்கள்லயும் வேலை செய்ய ஆரம்பிச்சேன். என் வீட்டுக்காரர் நோய்வாய்ப்பட்டு படுத்திட்டார். குடும்ப சுமை முழுசா என் மேல விழுந்துச்சு.

நேரமே இல்லாம உழைக்க ஆரம்பிச்சேன்.பெரும்பாலும் வயல் வேலைகளுக்கு ஆள் எடுக்கும் போதும், கூலி கொடுக்கும் போதும் குழுவுக்கு ஒரு தலைவர் இருந்தாதான் கூலி, வேலையெல்லாம் சரியா பிரிச்சு வரும். அந்த தலைவர் ஜோலி பார்க்கறவங்களை நாங்க கொத்தனார்னு சொல்வோம். கொத்தனார் இல்லைன்னா பண்ணைக்காரங்க கூலில ஏமாத்திடுவாங்க. சோத்துக்கு காசு இருந்தா போதும்னு நினைக்கற சனம், கொடுக்கற கூலியை வாங்கிட்டு நடையக் கட்டிடும்.

அப்படிதான் கொத்தனார் இல்லாத கூட்டத்துல நானும் ஒருத்தியா இருந்தேன். ஏமாத்தறது தெரிஞ்சு குரலை உசத்தினேன். கொஞ்ச நாள்ல நானே என் கூட்டத்துக்கு கொத்தனார் ஆனேன். நான் நியாயமா கூலி வாங்கித் தந்தேன். அதே போல நானும் அதிகம் எடுக்காம அதே அளவு கூலிதான் வாங்கறேன்னு தெரிஞ்சு சுத்துப்பட்டு எல்லா சனமும் என்கிட்ட வேலை கேட்டு வந்துச்சு.

அடுத்தடுத்த ஊருகள்ல இறங்கி நான் வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்தினேன். கூலியையும் உயர்த்திக் கொடுக்கச் சொல்லி சண்டை போட்டேன். இவ்வளவு நேரம்தான் வேலை செய்வோம்னு அடிச்சுப் பேச ஆரம்பிச்சேன். அதே சமயம் தண்ணி இல்லாம வெள்ளாம குறைஞ்சா அந்த நேரம் கிடைக்கற வேலைய பகிர்ந்து கொடுத்து எல்லாருக்கும் ஒருவேளை சோறாவது கிடைக்க வழி செஞ்சேன்.

கொத்தனார்னு சொல்லிக்கிட்டு ஒருபோதும் உட்கார்ந்து வேலை பார்த்ததே இல்லை. மத்தவங்க என்ன வேலை பார்ப்பாங்களோ அதே வேலை, அதே சம்பளம். இதனால் எனக்குக் கீழ சனம் அதிகரிச்சாங்க. மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து அவங்களுக்குமான வேலைகளை வாங்கிக் கொடுத்தேன்.
இப்படியான நேரம்தான் மக்கள் காசு எம்புட்டுக் கொடுத்தாலும் போயி செலவழிக்கிறாங்கன்னும், பொம்பளைப் புள்ளைங்க காசை அப்பனும், புருஷன்களும் குடிக்க புடுங்கிட்டு போறதாவும் தெரிஞ்சது.

ஒரு சீட்டு பிடித்தம் மாதிரி ஆரம்பிச்சு சேமிக்க வழி செஞ்சேன். எனக்கு கீழ 300, 400 விவசாயத் தொழிலாளிகள். அந்த சீட்டுப் பிடித்தம் இன்னும் என் மேல நம்பிக்கைய உண்டாக்குச்சு.இதுக்கிடையில வீட்டுக்காரரும் உடல் தேறி, ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெள்ளாம போட்டார். எங்க நிலத்திலேயும் கூலிக்கு ஆட்கள் வெச்சு வேலை செய்தோம். எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு.

நடுவிலே இந்த பெண்கள் அமைப்பு சேமிப்பு ஸ்கீம்னு சொல்லி என்கிட்ட வந்தாங்க. ரோடு போடுவோம், குழந்தைகளுக்கு படிப்பு தருவோம், வீடு இல்லாதவங்களுக்கு வீடு தரோம்னு வந்து அம்புட்டையும் சுருட்டிட்டு போயிட்டாங்க.எல்லா காசும் போயிடுச்சு. என்னைய நம்பி வந்த சனத்துக்கும் என் மேல மனஸ்தாபம் ஆகிடுச்சு. போகாத ஆபீஸ் இல்லை, பார்க்காத அதிகாரிங்க இல்லை. அதுக்கும் செலவு பண்ண ஆரம்பிச்சு, அந்தப் பணமும் சேர்த்து போக ஆரம்பிச்சது. எதுவும் கிடைக்கலை. சரி, இருக்கறதையும் விட வேண்டாம்னு சண்டை போடுறதையும் நிறுத்தினோம். காச இழந்த சனம் என்னைய திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

எதுவும் வேண்டாம்னு பழைய வேலையே செய்துட்டு பொழப்பை ஓட்டிட்டு இருந்தோம். அப்போதான் ‘தானம் அறக்கட்டளை’ எங்ககிட்ட வந்தாங்க. தலைவர் வாசிமலை புல்லிச்சேரி கிராமத்துக்கு வந்தவர் என்கிட்டேயும் பேசினார். மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் பத்தி விளக்கிச் சொன்னார்.
ஆரம்பத்துல நம்பிக்கையே இல்லை. ஆனா, பழைய கும்பல் மாதிரி இவுக காசை வாங்கி சேமிக்கற குழு இல்லைன்னும், நம்ம காசை நம்மகிட்டவே வைச்சு சேமிச்சு, சுற்றல் முறையிலே லோன் கொடுக்கற திட்டம்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆறு மாசம் கிராமம் கிராமமா போயி பெண்களைத் திரட்டினேன். எல்லாருமே பழைய சம்பவத்துனால் நம்பிக்கையே இல்லாம இருந்தாங்க.

ரூ.10 வெச்சு சோதனை செய்து பாருங்கன்னு ஆரம்பிச்சோம். அப்படிதான் ‘களஞ்சியம்’ எனக்கு பரிச்சயம் ஆச்சு. நமக்குள்ளேயே காசை வாங்கி சேமிச்சு, லோன் கொடுக்கற திட்டம். இந்த சேமிப்பு மூலம் எங்களுக்கு களஞ்சியமே லோன் கொடுத்தாங்க.

கொஞ்சம் நம்பிக்கை வந்து லோனை உடனே கொடுக்காம பத்து வருஷ திட்டமா மாத்தி தேவையான நேரத்துல கொடுக்கலாம்னு திட்டமிட்டோம். கல்யாணம், புள்ளைக படிப்பு, மருத்துவச் செலவு இப்படி தேவைன்னு நாங்களே ஒரு அட்டவணை போட்டோம்.

காசு கைல கிடைச்சா எதுக்கு செலவழிக்கிறதுன்னே தெரியாம இந்த சனம் செலவழிச்சிடும். அதனாலே நிறைய திட்டம் போட்டோம். ஆரம்பத்திலே நாங்க வெறும் பத்து , பதினைஞ்சு மக்கள்தான். மாசா மாசம் கூட்டம். அடுத்த கூட்டம் எப்ப, கூட்டம் முடிஞ்ச உடனே உறுப்பினர்கள் கையெழுத்து இப்படி எல்லாம் சரியா நடத்தினோம். கணக்கு சரிபார்ப்பு, பணப்பட்டுவாடா எல்லாமே நாங்களே செய்தோம்.

ஒவ்வொரு கிராமமா இறங்கி கூட்டம்போட்டு பெண்களை ஒண்ணு சேர்த்தோம். எனக்குக் கீழ மட்டும் 13க்கும் மேலான சிறு சிறு மகளிர் குழு வந்துச்சு. கந்து வட்டிக்கு விடுற ஆட்களை அடக்கினோம். கொஞ்ச நஞ்ச காசா பிடுங்கினாங்க? நூறு ரூபாய் அசலுக்கு, ஒரு மூட்டை நெல் வட்டி.

கூட்டமா சேர்ந்து எதிர்த்து நின்னு மகளிர் சுய உதவிக் குழுக்களை வெச்சே கந்து வட்டியை இல்லாம செஞ்சேன். அடுத்து கிராமக் கண்மாயில் மீன் பிடிக்கும் குத்தகை மதுரை ஆட்சித் தலைவர்கிட்ட இருந்துச்சு. அதை வாங்கி பொதுமக்களுக்குன்னு மாத்தினேன்.

மூணு வருஷம் இருக்கும். அஞ்சாயிரம் பேர் எனக்குக் கீழ வந்தாங்க. அடுத்து நகர்ப்புற பெண்கள், படிச்ச பெண்கள் எல்லாரையும் இதுல இறக்கினோம். வட்டம், மாவட்டம், மாநிலம்னு எங்கெங்கோ இறங்கி வேலை செய்து உறுப்பினர்களைப் பெருக்கினோம்.
ஏழு மாநில மகளிர் குழுக்களுக்கு செயற்குழு உறுப்பினர் பொறுப்பு கொடுத்தாங்க. இப்ப தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒரிசா இப்படி 12 மாநிலம் சேர்த்து 240 குழுவுக்கு தலைவியா இருக்கேன். இந்தக் கூட்டங்களுக்குக் கீழே ஏழெட்டு லட்சம் உறுப்பினர்கள் இருக்காங்க.

இந்தியப் பிரதமர் சார்பா ஸ்திரீ சக்தி விருது கிடைச்சது. அதுல ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாயை வச்சு மகளிர் சுய உதவிக்குழு மருத்துவச் செலவிற்காக ஒரு அமைப்பு உண்டாக்கினேன்.அந்த நிகழ்ச்சியப்பதான் அப்போ நம்ம பிரதமரா இருந்த வாஜ்பாய் ஐயா என் காலைத் தொட்டுக் கும்பிட்டாரு. எனக்கு வெல வெலத்துப் போயிடுச்சு. அப்படி நான் என்ன செய்திருப்பேன்னு கூட யோசிக்க ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து ஔவையார் விருது, தமிழ்நாடு அரசு பொற்கிழி, இதோ போன வருஷம் பத்ம விருது எல்லாம் கிடைச்சது.

என் கணவர் அளவுக்கு என் மகன்கள் என்னைப் புரிஞ்சுக்காம கல்யாணத்துக்கு அப்பறம் தனியா போயிட்டாங்க. என் அப்பா, அண்ணனுங்க இறந்துட்டாங்க. அக்காவுடைய மூணு பசங்க இறந்துபோயி ஒரு பையன் இருக்கான். இப்ப நான், என் வீட்டுக்காரரு இருக்கோம்.

அறுவது வருஷமா இந்த மதுரை மண்ணுதான் வாழ்க்கை. நியாயமான உழைப்புக்குக் கூலி, ஏழைகளுக்கான மரியாதை இதை சரியாக் கொடுத்தா இந்தச் சனம் உசுரையும் கொடுக்கும்.தன்மானப் பிரச்னைக்கு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு ‘நான்’ இங்க நிக்கறேன்!

ஷாலினி நியூட்டன்