புகைப்படம்னாலே அது மெமரிதானே..?



தெளிவாகவும் நிதானமாகவும் வரையறுக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு

‘‘மனிதர்களோட கற்பனையெல்லாம் மீறி இந்த லாக் டவுன் உருவாகியிருக்கு. பணம், அறிவு, பெரியவன், சின்னவன்னு யாருமில்லை என்று சொல்லிக் கொடுத்துவிட்டது.ரியாலிட்டி செக்னு சொல்லுவாங்க. இந்த சமயத்தில் மனசுக்கு உண்மையா ஒரு பேட்டி வைச்சுக்கிறது கூட நல்லது தான். எப்பவும் ஒரு கலைஞனை அவனோட வயசு, அனுபவம், பக்குவம்னு எதாவது ஒண்ணு அடுத்தடுத்து எடுத்துட்டு போய்க்கிட்டேயிருக்கு.
இப்ப அப்படி ஒரு கனிவான இடத்தில் இருக்கேன்...’’ அமைதியாகப் பேசுகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் திரு. ‘ஆளவந்தான்’, ’ஹேராம்’, ‘24’ என கொண்டாடப்பட்ட படங்களின் ஒளிப்பதிவாளர். பி.சி.ஸ்ரீராமின் சீடர்.

உங்களை நினைச்சாலே ‘ஹேராம்’ ஞாபகம் வந்திடுது...எனக்கு அதில் பெரும் அனுபவம் கிடைச்சது. ‘ஹேராம்’ முடிச்சு 21 வருஷங்கள் முடிஞ்சிருச்சு. என் குரு பி.சி.ஸ்ரீராம் நேத்து காலையில் ஃபோன் பண்ணியிருந்தார். எடுத்தா ‘ஏப்பா, ‘ஹேராம்’ல இப்படி பிரமாதமா ஒர்க் பண்ணி வச்சிருக்க. 20 வருஷங்களுக்கு முன்னாடி எப்படி இப்படிச் செய்யத் தோணுச்சு... எப்படி உன்கிட்ட இருந்து இந்த அழகு வெளிப்பட்டது’னு பேசிக்கிட்டே இருந்தார்.
20 வருஷங்கள் கழிச்சுன்னாலும் பெரிய அங்கீகாரம், ஆசீர்வாதம். இந்த லாக் டவுன் வந்திட்டு எல்லா சாதனையும் ஜீரோ ஆயிடுச்சேன்னு பார்த்தால், பி.சி. சார் பேச்சு என்னை தூக்கி நிறுத்திருச்சு.

நம்ம ஊர்ல கருத்து சுதந்திரமா படம் பண்ண முடியாது. இங்கே அறிவு சார்ந்த கல்வியும் இல்லை. எதையும் நேர் பார்வையில் எடுத்துக் கொள்கிறவர்கள் குறைவு. இன்னொருத்தர் கருத்தைக் கேட்டதும், உடனே குற்றம் சொல்கிற மனநிலைக்கே வந்திடுறோம். நல்ல கல்வியை மக்களுக்கு கொடுக்காமல் விட்டதால் வந்தது இது.

இங்கே கண்டுபிடிப்பாளராக, கிரியேட்டராக இருக்கப் பார்த்தால் எதையாவது செய்து கெடுப்பார்கள். ‘ஹேராம்’ எல்லாவற்றையும் உறுதியாக, தெளிவாக, பயமில்லாமல் சொன்னது. எடுத்த படத்தில் வைக்காத சீன்களை படத்தோடு சேர்த்து இன்டர்நேஷனல் அளவில் இப்ப வெளியிட்டால், அப்படி ஒரு மரியாதை கிடைக்கும்.

கமல் சாரின் சிறப்பே அதுதானே! மத்த ஆட்களின் ஓட்டத்தோட போகாமல் முன்னாடியே போய் அங்கே ஏற்கனவே நீரோட்டம் எப்படி இருக்கிறதுன்னு கண்டுபிடிச்சு சொன்னார். அதுதானே ஒரு அறிவாளியின் வேலை. அதைத்தான் அவர் சினிமாவில் இன்னைக்கு வரைக்கும் செய்திட்டு இருக்கார். நாம் அதை மதிக்கலையே!

அவர்கிட்ட வேலை பார்க்கிறது கடினம், டிமாண்ட் ரொம்ப பண்ணுவார்னு சொல்வாங்க. அப்படி ஒரு நாளும் எனக்கு நடந்ததில்லை. அவர் யோசிக்கிற அளவுக்கு அல்லது பக்கத்திலாவது நாங்க யோசிக்க முடியும்னு அவர் நம்பினார்.
‘ஹேராமை’ ஒரு கால கட்டத்துக்கு முந்திய படம்னு சொல்லுவாங்க. இன்றைய இளைஞனுக்கு நவகாளி யாத்திரை பற்றி ஒண்ணுமே தெரியல. படிச்சதும் இல்லை. அப்படி இருக்கிற இளைஞன் கிட்ட இந்த படம் எப்படிப் போகும்? இங்கே நாம் சுயத்தை இழந்துட்டு நிக்கிறது நல்லா தெளிவுபட தெரியுதே!

ஒளிப்பதிவை எப்படி வரையறுப்பீங்க..?

புகைப்படம்னாலே அது மெமரிதானே..? ஒரு கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்களை அடுக்கி வச்சு, சம்பவங்களை நினைவுகூர்ந்தாலே ஒரு கதை உருவாகிடும்.முன்பு சினிமாவில் சரியா நடிகர்களை நிக்க வச்சு கதை சொன்னாலே போதும்னு இருந்துச்சு. இப்ப அந்தக் கதையையே எஃபெக்டிவ்வா சொல்லணும். அதையும் தாண்டி அதுக்கு ஒரு டிராமாட்டிக் லுக் வேணும்.

இப்ப எல்லார் பாக்கெட்லயும் கேமரா இருக்கு. அவங்களே படம் எடுத்திட்டு நல்லாயிருக்கு, நல்லாயில்லைன்னு டிசைட் பண்ணிடுறாங்க. இந்த நிலைமையில எனக்கு உங்களைவிட அதிகமா தெரியும்னு சொல்றதும் அதை காண்பிக்கிறதும் இப்ப அதிமுக்கியமா இருக்கு.ரஜினி, கமல், அஜித், சூர்யானு படங்கள் செய்திருக்கீங்க... அவங்ககிட்ட பிடிச்ச குணம் என்ன?

கமல் எல்லாத்திலும் புதுமையைக் கொண்டு வர முடியுமான்னு பார்ப்பார். அது பழைய விஷயமா இருந்தாலும் மெனக்கெடுவார். முதலில் புதுமையைக் கொண்டு வர தயங்க மாட்டார்.ரஜினி சின்ன குழந்தை மாதிரி ஆர்வமா ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்குவார். ஒரு வரி வார்த்தையா இருந்தாலும், சம்பவமா இருந்தாலும் ‘அப்படியா, அப்படியா’னு கேட்டுக்குவார்.

அஜித் நாம் பதட்டப்படுகிற இடத்துல அசால்ட்டா நின்னு சரி பண்ண முயற்சிப்பார். அந்த சமயம் அவர் முகத்துல அமைதி இருக்கும்.சூர்யா சினிமாவுல ஒரு கேரக்டரில் மெருகு ஏற்படுத்த எவ்வளவு உழைப்பைக் கொட்டவும் தவறமாட்டார்.மலையாளத்தில் நீங்கள் ஒளிப்பதிவு செய்த ‘குஞ்சாலி மரைக்காயர்’ படத்தை அதிகம் பேசுகிறார்கள்!

பிரியதர்ஷன் கேரள சினிமாவில் இருக்கிற அதிசயம். கதையை வடிவமைத்து அதில் உணர்ச்சிகளைச் சேர்ப்பதில் அவருக்கு குழப்பமே வந்ததில்ல. வியாபாரியா இருந்து, போர்ச்சுகீசியர்களால் கடல் கொள்ளையனாக மாறிய குஞ்சாலி மரைக்காயரின் கதைதான். கொந்தளிக்கிற கடல் சேர்ந்து ரத்தமும் சதையுமான உயிர்த் துடிப்பான சித்திரம். மோகன்லால், பிரியதர்ஷன் போன்ற ஆளுமைகளோட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்துல ஒரு பங்கா இருந்தது எனக்கு பெருமிதம்.

இத்தனை வருட அனுபவமும், வாழ்க்கையும் உங்களுக்கு சொல்வதென்ன?
அதுக்கென்ன, அதுபாட்டுக்கு என்னென்னவோ சொல்லும். அலுக்காம கதை சொல்லும். இந்த வாழ்க்கை என்னை திரும்பிப் பார்க்க வைக்கலை. திரும்பிப் பார்த்தாலே இங்க பழமை பேசுறோம்னு சொல்லிடுறாங்க.இப்பவும் எனக்கு ஒரு விஷயமும் தெரியலன்னுதான் நினைச்சிக்கிறேன். அனுபவத்தை பெருசுன்னு நினைச்சா அது தேங்க வைக்கிது.

அனுபவம், ஒரு வழியை மட்டும் காண்பிச்சுக் கொடுக்குதோன்னு தோணுது.பெருசா நண்பர் என்றெல்லாம் யாரும் பக்கத்துல இல்லை... அல்லது இருக்கிறவர்களின் பக்கத்தில் நான் போகவில்லை. நான் தாவரவியல் மாணவன். இங்கே பசுமைப் புரட்சின்னு சொல்லிட்டு கெமிக்கல்ஸ் நிரப்பி நிலத்தை பாழ்படுத்திட்டாங்கன்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு. நம்ம நிலத்துல இன்னும் 70 சாகுபடிதான் செய்ய முடியும். அப்பறம் மண் புழு இருக்காது.

ஒரு முழுமையான காட்டை உருவாக்க 10 மில்லியன் ஆண்டுகள் ஆகுது. இப்ப எனக்கு இதுதான் வருத்தம். இருக்கிற டென்ஷன், வேலைகள், இந்த கவலையெல்லாம் மறக்கச் செய்து மனைவி சரோஜினிதான் என்னை நிர்வகிக்கிறாள். அவளின்றி ஓரணுவும் அசையாது என்பதே உண்மை.l

நா.கதிர்வேலன்