சாமிதான் எங்களைக் காப்பாத்தணும்! கதறும் கோயில் வியாபாரிகள்



கொரோனா ஊரடங்கு எத்தனையோ வியாபாரங்களையும் அதை நம்பி வாழ்ந்த வியாபாரிகளையும் முடக்கியுள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளால் சில வியாபாரங்கள் கொஞ்சம் இயல்பு நிலையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாலும் கூட இன்னும்  பல தொழில் களால் எழ முடியவில்லை.

அதில், குறிப்பாக கோயில்களை நம்பியே வாழ்க்கையை நகர்த்தும் வியாபாரிகளும், அதைச் சார்ந்த தொழிலாளர்களின் நிலைமையும் படுமோசம்.
தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ளன. இதில், 3 ஆயிரத்து 120 கோயில்கள் அதிக வருமானம் தரக் கூடியவை. அதில், பழனி முருகன் கோயில் முதலிடத்திலும், சமயபுரம் மாரியம்மன் கோயில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தக் கோயில்களைத் தவிர டாப் டென் லிஸ்ட்டில் திருச்செந்தூர், திருத்தணி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம், சுசீந்திரம், திருவேற்காடு ஆகிய கோயில்கள் உள்ளன.

இத்துடன் இன்னும் நிறைய கோயில்கள் லட்சங்களில் வருமானம் தரக்கூடியவையாக இருக்கின்றன. பக்தர்களின் வருகையே இதற்குக் காரணம்.
இந்தக் கொரோனா தொற்று ஒருபுறம் கோயில்களின் வருமானத்தை முடக்கியிருக்கிறது என்றால் மறுபுறம் கோயில்களைச் சுற்றி கடைகள் விரித்திருந்த வியாபாரிகளைக் கடனாளிகளாக ஆக்கியுள்ளது.

பூக்கடை முதல் தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் வரை பலரும் இன்று மனஅழுத்தத்தில் உள்ளனர். ‘‘எங்க வாழ்க்கையே இந்தப் பழனியாண்டவரை நம்பிதான் நகர்ந்திட்டு இருக்கு. நாங்க பரம்பரை பரம்பரையா இங்க வியாபாரம் பண்ணிட்டு இருக்கிறவங்க. ஆனா, கோயில்கள் இப்படி ரெண்டு மாசமா நடை சாத்தப்பட்டது வரலாற்றுல இதுவே முதல் தடவை...’’ என வேதனையாகப் பேசத் தொடங்கினார் பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் கவுரவத் தலைவரும் ஸ்ரீகந்தவிலாஸ் கடை உரிமையாளருமான செல்வ
குமார்.

‘‘முதல் அடைப்பு, இரண்டாவது அடைப்புன்னாங்க. இப்ப நாலாவது அடைப்பு. இதனால, அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு கிடக்கோம். எல்லோரும் கடன் வாங்குற நிலையாகிடுச்சு. முதல்ல கடன் வாங்கி குடும்பத்தை ஓட்டினாங்க. அந்தக் கடனை செலுத்துறக்குள்ளயே மறுபடியும் கடன்.

குறிப்பா பூ, சூடம், தேங்காய், பழம் விற்கிறவங்க நிலை ரொம்ப மோசம். யாராவது அரிசி பருப்பு தந்து உதவி செய்வாங்களானு எதிர்பார்த்திட்டு இருக்காங்க. ரேஷன்ல கொடுத்த ஆயிரம் ரூபாய் போதுமானதா இல்ல.

இதுதவிர, பழனி கோயிலை நம்பி நாதஸ்வரக் கலைஞர்கள் அறுபது பேர்களும்; சுவாமியைத் தூக்குற சீர்பாதப் பணியாளர்கள் அறுபது பேர்களும்; சுவாமியின் அபிஷேகத்துக்காக குடத்துல தண்ணீர் எடுத்திட்டு வந்து கொடுக்குற அயன்மிராசு பண்டாரப் பணியாளர்கள் அறுபது பேர்களும் இருக்காங்க.

இவங்க எல்லாருக்குமே கோயிலை நம்பிதான் வாழ்க்கை. இப்ப இவங்க எந்த வருமானமும் இல்லாம ரொம்ப கஷ்டப்படறாங்க. இவங்களுக்கு தேவஸ்தானத்துல இருந்து ஒரு தொகை கிடைக்கும். அவ்வளவுதான். வேறெந்த வேலையும் பார்க்கவும் மாட்டாங்க.

அப்புறம், குருக்கள். இங்க சுமார் 55 நிரந்தர குருக்கள் இருக்காங்க. இவங்களுக்கு மட்டுமே தேவஸ்தானத்துல இருந்து மாசம் தலா 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இவங்களுக்கு உதவியா நூற்றுக்கும் மேற்பட்ட உபகுருக்கள் இருக்காங்க. இவங்க பக்தர்கள் தர்ற காணிக்கையை நம்பித்தான் இருக்காங்க. இவங்க நிலையும் இப்ப மோசம். பழனியைப் பொறுத்தவரை தைப்பூசம் பெரிய திருவிழா. அப்புறம், பங்குனி உத்திரம், சித்திரை வருஷப் பிறப்பு, வைகாசி விசாகம்னு எப்பவுமே பரபரப்பா இருக்கும்.

இப்ப லாட்ஜ்கள் முடங்கி 68 நாட்களாச்சு. இங்க பெரிய ஹோட்டல்கள்னு 15 இருக்கு. சின்னதும், பெரிசுமா 150 இருக்கும். அடிவாரத்தைச் சுற்றி 250 முதல் 300 கடைகள் இருக்கு. இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்காங்க.

அதனால, கோயிலை கட்டுப்பாடுகளுடன் உடனே திறக்கணும்னு கோரிக்கை வச்சிருக்கோம். பழனியில 5 முதல் 7 ஆயிரம் பேர்கள் வரை அனுமதிக்கலாம். அவ்வளவு பெரிய இடமிருக்கு. பக்தர்களை சமூக இடைவெளியுடன் சாமி கும்பிடச் சொல்லலாம். அதனால, கஷ்டப்படுற அனைவருக்கும் ஒரு விடிவு பொறக்கும்...’’ என்கிறார் செல்வகுமார்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைக்காரர்கள் சங்கத் தலைவரான ராஜநாகுலு, இதை அப்படியே ஆமோதிக்கிறார்.
‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மொத்தம் 96 கடைகள் இருந்துச்சு. இதுல ஏற்கனவே வீரவசந்தராயர் மண்டபத்துல இருந்த 44 கடைகளை காலி பண்ணச் சொல்லிட்டாங்க. அம்மன் சன்னதியில மட்டும் 52 கடைகள் இருக்கு. இப்ப அதுவும் அடைக்கப்பட்டிருக்கு.

திடீர்னு ஊரடங்கு உத்தரவு வந்ததால எதுவும் செய்ய முடியல. உரிமையாளர்கள் கையில வச்சிருந்த பணத்தை வச்சு ஓரளவு ஓட்டிட்டாங்க. ஆனா, தொழிலாளர்கள் பாடுதான் திண்டாட்டமா இருக்கு. ஒரு கடைக்கு ரெண்டு தொழிலாளர்கள்னு வச்சா கூட இருநூறு பேர் இருப்பாங்க.

இதுதவிர, குங்குமம் கொண்டு வந்து போடுறவங்க… சுவாமி படங்கள் தயாரிச்சுத் தர்றவங்க… மாலை  தயாரிக்கிறவங்க… முடி தயாரிச்சுத் தர்றவங்கனு குறைஞ்சது 500 பேர்களாவது பாதிக்கப்பட்டிருப்பாங்க.இது எங்களுக்கு நல்ல வருமானம் தர்ற காலம். சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவாங்க. கள்ளழகர் ஆத்துல இறங்குற வைபோகம், அம்மன் திருக்கல்யாணம்னு மதுரையே களைகட்டும்.

திருக்கல்யாணத்துக்கு எங்க கடையில மட்டுமே ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை ஓடும். இது கூட்டத்தைப் பொறுத்தது. அப்புறம், சுத்தி
யிருக்குற கிராமங்கள்ல பங்குனித் திருவிழா நடக்கும். அங்கிருந்து பொருட்கள் வாங்க இங்க கோயில் வீதிக்குதான் வருவாங்க. தவிர, தென் மாவட்டங்கள்ல இருந்தும் மக்கள் பொருட்கள் வாங்க வருவாங்க.

இந்த முறை எல்லாமே போச்சு. இனி, கோயில் எப்ப திறப்பாங்கனு தெரியாது. ஒருவேளை திறந்தா கூட பக்தர்கள் கூட்டம் முன்மாதிரி இருக்குமானு தெரியல. இதுக்கிடையில நாங்க கடைக்கு வாடகையும் தரணும். சதுர அடியைப் பொறுத்து இந்த வாடகை நிர்ணயிக்கப்படுது. அப்புறம், மின் கட்டணம். எல்லாத்தையும் எப்படி சமாளிக்கப் போறோமோனு பயமா இருக்கு...’’ வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் ராஜநாகுலு.

‘‘திருச்செந்தூர் நிலையும் இதேதான்...’’ என பெருமூச்சு விடுகிறார் திருச்செந்தூர் கோயில் கடை வியாபாரிகள் சங்கப் பொருளாளரான
பொன்ராஜ். ‘‘போன வருஷம் கோயிலைச் சுத்தியிருந்த எல்லா கடைகளையும்  அறநிலையத் துறையிலிருந்து அகற்றினாங்க. பத்து மாசம் எந்த வியாபாரமும் இல்லாம எல்லா வியாபாரிகளும் ரொம்ப கஷ்டப்பட்டோம். பிறகு, அமைச்சர்கள் மூலம் கடைகளைத் திறந்து ஆறு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள கொரோனா வந்து எங்கள சாச்சிடுச்சு.

ஃபேன்ஸி ஸ்டோர், கருப்பட்டி, பூ, தேங்காய்னு மொத்தம் இங்க 87 கடைகள் இருக்கு. கோயிலைத் திறந்தாகூட இன்னும் ஆறு மாசத்துக்கு பழைய மாதிரி இருக்காது. இந்த வருஷம் கஷ்டம்தான். அதை நினைச்சுப் பார்க்கவே முடியல.  முன்னாடி கூட்ட நேரத்துல 5 முதல் 7 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.

சுமாரா கூட்டம் இருந்தா ஒரு ஆயிரம் ரூபாய் பார்க்கலாம். எங்களுக்குக் கார்த்திகை 20ம் தேதிக்கு மேல ஆரம்பிச்சு தை, மாசித் திருவிழா, வைகாசி விசாகம், சஷ்டினு வருஷத்துல ஏழு மாசம் நல்லாயிருக்கும். இது வருமானம் வர்ற காலம். ஆனா, கொரோனாவால எங்க வாழ்க்கையே தொலைஞ்சிடுச்சு.   

ஏற்கனவே கடன் வாங்கிதான் செலவு பண்ணிட்டு இருக்கோம். இதுக்கு மேலயும் கடன் வாங்க முடியாதுன்னுதான் அரசுகிட்ட லோன் தந்து உதவுங்கனு கேட்டிருக்கோம். அரசு மனசு வைக்கணும்... சாமிதான் எங்களைக் காப்பாத்தணும்...’’ என்கிறார் பொன்ராஜ்.                          l

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: கதிர், எம்.நிவேதன்