கை கொடுக்கும் செயற்கை கை!



ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை படிச்சேன். அதுல ஒவ்வொரு வருஷமும் நம்ம நாட்ல சுமாரா 40 ஆயிரம் மக்கள் சாலை விபத்துல கைகளை இழக்கறாங்கனு இருந்தது. அதுபோக பிறப்புலயே கைகள் இல்லாம பொறக்கறவங்களும் இருக்காங்க. இவங்களையும் சேர்த்தா எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். இவங்கள்ல 80% மக்களுக்கு நிரந்தரமா கைகள் இல்லாமயே போகுது...

இதுக்கு ஏதாவது செய்ய முடியுமானு யோசிச்சேன். அப்படி உருவானதுதான் இந்த இனாலி கைகள்...’’ பெருமையாகவும், சாதித்து வரும் திருப்தியுடனும் பேசுகிறார் பிரசாந்த் கேட். கைகள் இல்லாத மக்களுக்கு ரோபாட்டிக் முறையில் கைகளை எவ்வித செலவும் இல்லாமல் அறக்கட்டளை வழியே இவர் கொடுத்து வருகிறார்.

‘‘பிடிக்க ஒரு கை, ஆசீர்வதிக்க ஒரு கை, வேலை செய்ய ஒரு கை, உருவாக்க ஒரு கை, சுதந்திரமாக இருக்க ஒரு கைனு நம்ம வாழ்க்கையும் கைகளும் பிணைஞ்சிருக்கு. இதனாலயே கைகளைப் பறிகொடுத்தவங்க தங்கள் வாழ்க்கையே போயிட்டதா நினைக்கறாங்க.

குறிப்பா ஏழை எளியவர்களுக்கு அவங்க கைகள்தான் வாழ்க்கைக்கான ஆதாரமாவே இருக்கு. இப்படிப்பட்டவங்களுக்குதான் நான் உதவறேன்...’’ நிதானமாகச் சொல்லும் பிரசாந்த் கேட், தன் கனவே இன்ஜினியர் ஆகவேண்டும் என்பதுதான் என்கிறார்.

‘‘இதுக்காகவே எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்கில் சேர்ந்தேன். ஆனா, சில காரணங்களால படிப்பை முடிக்க முடியாம பாதிலயே விட வேண்டிய நிலை. வாழ்க்கைல நம்பிக்கையே போயிடுச்சு. வேலைக்கு போகலாம்னா ஏமாற்றம். ஆறுதல் சொல்லக் கூட ஆள் இல்ல.

இந்த நேரத்துலதான் புனேல FAB training course மூலமா ரொபாடிக்ஸ் படிக்கலாம்னு ஒரு விளம்பரம் பார்த்தேன். ஆறு மாச கோர்ஸ். கோர்ஸ் முடிவுல என்ன ப்ராஜெக்ட் செய்யலாம்னு யோசிச்சு தேடினப்ப, விபத்துல கைகள் இழந்த பிரான்ஸ் நாட்டு நிக்கோலஸ் ஹட்செட், பையோனிக் முறைல தனக்குத்தானே கைகள் உருவாக்கி யிருக்கிறார்னு தெரிஞ்சுது. என் மனசுலயும் ஸ்பார்க் அடிச்சுது...’’ என்று சொல்லும் பிரசாந்த் கேட், குறைந்த செலவில் செயற்கை கைகளைத் தயாரிக்க ஆரம்பித்ததற்கு பின்னாலும் ஒரு சம்பவம் இருக்கிறது.

‘ஒரு ஏழு வயது சிறுமிக்கு பிறவியிலயே கைகள் இல்ல. அவளுக்கு உதவலாம்னு சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்ல எல்லாம் செயற்கை கைகள் பத்தி விசாரிச்சேன். விலையைக் கேட்டு அதிர்ந்தேன். அதுவும் அந்தப் பொண்ணு வளர வளர சைஸை வேற மாத்தி மாத்தி பொருத்திக்கணும்.

குறைந்த செலவுல எப்படி ரோபோ கைகளை உருவாக்கலாம்னு யோசிச்சேன். ஆரம்பத்துல நண்பர்கள், உறவினர்கள்னு யாருமே கை கொடுக்கலை. கிண்டல் செய்தாங்க. ‘இன்ஜினியரிங் படிச்சுட்டு இதெல்லாம் உனக்குத் தேவையா? முதல்ல சம்பாதி. அப்புறம் பொதுச் சேவைல இறங்கலாம்’னு அப்பாவும் அம்மாவும் திட்டினாங்க. என்னைக் கேட்காம ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸுல எங்கப்பா அட்மிஷனும் போட்டுட்டார்.

அதையெல்லாம் தள்ளி வெச்சுட்டு நிதி திரட்ட இறங்கினேன். விடாம முயற்சி செஞ்சதுல முதல் கட்டமா சுமார் ஆயிரம் கைகள் செய்ய பணம் கிடைச்சது. அதற்கான நிதியை ஜெய்ப்பூர் டெக்னிக்கல் செக்கரட்டரி கொடுத்தார். இதுல 700 கைகளை ஏழைகளுக்கு இலவசமா கொடுத்தேன். மீதி 300ஐ வித்து அதுல வந்த பணத்துல திரும்பவும் ஏழைகளுக்கு கைகள் செய்து கொடுத்தேன்!

இதைப் பார்த்துட்டு பலரும் நிதி கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆன்லைனிலும் நிதி கேட்டு விளம்பரம் செய்தேன். அமெரிக்க பேராசிரியர் ஒருத்தர் என் ப்ராஜெக்ட்டை பார்த்துட்டு என்னை அழைச்சார். என் பேச்சுல இம்ப்ரஸ் ஆனவர் 10 மெஷின்களும் பணமும் கொடுத்தார்...’’ என்னும் பிரசாந்த், எதையும் நாம் நினைத்தபடி இலவசமாகக் கொடுக்க முடியாது என்பதால் அதற்கும் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார்.‘‘எந்தப் பொருளுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயம் இல்லைனா மக்கள் அதனோட தரத்தைப் பத்தி சந்தேகப்படுவாங்க. அதனால ரூ.50 ஆயிரம்... மூன்று வருட கேரண்டி... என டேக் போட்டேன்.

என்னுடைய இனாலி ஆர்ம்ஸ் ரோபாட்டிக் கைகள் மூலமா 10 கிலோ எடை வரை தூக்கலாம். என் காதலியோட பேருதான் ‘இனாலி வஹானே’. அவதான் என்னை முழுமையா நம்பி சப்போர்ட் பண்ணினா. அதனால அவ பெயரையே வைச்சுட்டேன்!

எப்படி மூளையின் உத்தரவுக்கு ஏற்ப கைகள் செயற்படுதோ அப்படி இந்த செயற்கையான கைகளும் செயல்படும். ஒருமுறை நிக்கோலஸ் ஹட்செட்டை சந்திச்சேன். அவராலதான் நான் ஊக்கம் பெற்றேன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டார்...’’ என்று சொல்லும் பிரசாந்த் கேட், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். வயது 27.

inalifoundation.com என்னும் தளத்தில் செயற்கைக் கைகள் தேவைப்படுவோர் பதியலாம். ஆர்வம் இருப்பவர்கள் இந்த சேவையில் பங்
கெடுக்க நிதி உதவியும் வழங்கலாம்.

ஷாலினி நியூட்டன்