தோனிக்கு தலனு பேர் வைத்தது வடசென்னை ரசிகர்கள்தான்!



தோனி எப்போது தமிழகத்துக்கு வந்தாலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சமூகவலைத்தளங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் தோனியிசம்தான். ‘‘பின்ன... தலனா சும்மாவா..?’’ என காலரை உயர்த்துகிறார் சரவணன் ஹரி. தோனியின் அதிதீவிர ரசிகரான (வெறியரான?!) இவருக்கு இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டி நடைபெறாமல் போனதில் ஏக வருத்தம்.

சரவணன் ஹரி என்ற பெயர் தமிழகத்துக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், இவரது உருவம் சர்வதேச அளவில் ஃபேமஸ். சென்னையில் தோனி ஃபோர் / சிக்ஸர் மழை பொழியும்போது அனைத்து கேமராக்களும் தவறாமல் காட்டும் முகம் சரவணன் ஹரியுடையதுதான். தனது துள்ளலால் மைதானத்தையே திரும்பிப் பார்க்க வைப்பார்!

‘‘முதல்ல நான் தோனி ரசிகன். அப்புறம்தான் கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் ஆடறவங்களை விட வேடிக்கை பார்க்கறவங்கதான் உண்மையான ரசிகரா இருக்க முடியும்! அப்படி ரசிகனா இருந்த நான் இப்ப தோனி வெறியனா இருக்கேன்!’’ கண்கள் பளபளக்க சொல்லும் சரவணன் ஹரி, சிமெண்ட் கம்பெனி ஒன்றின் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிகிறார். வடசென்னைதான் இவரது பூர்வீகம்.

‘‘2011ல ஆக்சிடெண்ட் ஆகி பெட்ல இருந்தேன். அப்ப உலகக் கோப்பை கிரிக்கெட் ஆரம்பிச்ச நேரம். படுக்கைல படுத்தபடியே மொத்த மேட்ச்சையும் பார்த்தேன். அப்பதான் தோனியை இன்ச் பை இன்ச் ஆக கவனிச்சு ரசிக்க ஆரம்பிச்சேன். சச்சின், சேவாக் எல்லாம் அவுட் ஆனதும் ரசிகர்கள் தளர்ந்துட்டாங்க. எனக்கு தோனி மேல நம்பிக்கை இருந்தது. எதிர்பார்த்தா மாதிரியே அஞ்சாவது ஆளா இறங்கி நின்னு விளையாடினார்; வெளாசினார்! உலகக் கோப்பை இந்தியாவுக்கு கிடைச்சது. இதுக்கு முழுக்க முழுக்க தோனிதான் காரணம். அவர் இந்தியாவுக்கு கிடைச்ச பொக்கிஷம்!

ரோஹித் சர்மாவை ‘மேகி’னு கிண்டல் செய்வாங்க. ஏன்னா, ரெண்டு நிமிஷத்துல அவுட்டாகி வந்துடுவார். அப்படிப்பட்ட ரோஹித்துக்கு விடாம தோனி வாய்ப்பு கொடுத்தார். எல்லாரும் இதை விமர்சிச்சாங்க. ஆனா, தோனி கணிச்சா மாதிரியே இப்ப ரோஹித் முக்கியமான பிளேயரா இருக்கார்.
இதைத்தான் ஆளுமைத்திறன்னு சொல்வாங்க. யாருக்கு என்ன திறமை இருக்குனு கண்டுபிடிச்சு அதை வளர்த்து விடுவதுதான் தலைமைப் பண்பு. தோனி இதுல மாஸ்டர்!’’ படபடவென பேசும் சரவணன் ஹரியை 2013 முதல் உலகம் கவனிக்கத் தொடங்கியது.

‘‘அந்த வருஷம்தான் என் உடம்பு முழுக்க வாட்டர் பெயிண்ட் அடிச்சுட்டு ‘தோனி’னு அதுல எழுதி ஸ்டேடியத்துல நின்னேன்! தோனி அண்ணனும் என்னை கவனிக்க ஆரம்பிச்சாரு...’’ என நெகிழும் சரவணன் ஹரி, இப்போது தோனியின் ஆஸ்தான தோஸ்த்! இவரது பெண்ணுக்கு பெயர் வைத்ததும் தோனிதானாம். மட்டுமல்ல, தன்னுடன் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இவருக்கு தோனி வழங்கினாராம்.

‘‘அண்ணன்கூட ரெண்டு மணி நேரம் பேசற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு! அவர் தமிழ்நாட்டையும் சென்னையையும் அப்படி நேசிக்கறார். எந்த நாட்டுக்கு - ஊருக்குப் - போனாலும் சென்னைதான் அவர் நினைவுக்கு வரும். ‘என்னை ‘தல’னு பாசமா கூப்பிடறவங்க
தமிழர்கள்தான்’னு அடிக்கடி சொல்லி சந்தோஷப் படுவார்...’’ புன்னகைக்கும் சரவணன் ஹரி, கிரிக்கெட் காரணமாகவே தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கிறார்.

‘‘காவிரி பிரச்னை அப்ப சேப்பாக்க ஸ்டேடியம் வாசல்ல போராட்டம் நடந்தது. நியாயமான போராட்டம். அதனால ஸ்டேடியத்தை விட்டு நானும் வெளில வந்துட்டேன். ஆனா, என் உடம்பு முழுக்க நான் பெயிண்ட் பூசி இருந்ததால ஆர்ப்பாட்டக்காரர்கள் என்னைத் தாக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் தமிழன்தான்... காவிரி எந்தளவுக்கு நமக்குத் தேவைனு எனக்கும் தெரியுமே...’’ என வருத்தத்துடன் அந்த நிகழ்வை நினைவுகூரும் சரவணன் ஹரி, சட்டென சுதாரித்து, ‘தல’ என தோனிக்கு பெயர் வைத்தது வடசென்னை மக்கள்தான் என்கிறார்.

‘‘பல வருஷங்களா எங்க மக்கள் மத்தில புழங்கற சொல், ‘தல’. இதைத்தான் ‘தீனா’ படத்துல அஜித் கேரக்டருக்கு வைச்சாங்க. இதையேதான் தோனி அண்ணனுக்கும் வைச்சிருக்கோம்! தலைவனைத்தான் சுருக்கமா தலனு சொல்றோம். ‘தல’யா இருக்கறவன் தன் ஏரியாவை விட்டு எங்கயும் போக மாட்டான். தோனியும் அப்படித்தான் நமக்கு! தன் பிறந்த வீடாவே அவர் சென்னையையும் தமிழகத்தையும் கருதறார்.  

மைதானத்துல கண் அசைவுலயே நம்ம டீமை ஆட்டி வைப்பார். அந்தளவுக்கு கெத்தான ஆள். அவரோட வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட சினிமாவை நான் சோர்வா இருக்கறப்ப எல்லாம் பார்ப்பேன்... உடனே எனக்கு எனர்ஜி கிடைச்சுடும்!’’ கண்கள் மின்ன சொல்கிறார் சரவணன் ஹரி.

திலீபன் புகழ்