தனிமை சகி... ரட்சகி... ராட்சஷி!



உலகமே கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் போராடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மற்றொரு நோயையும் கடுமையாக எதிர்கொண்டிருக்கிறது மனிதகுலம். அந்த நோய்க்கு பெயர் ‘தனிமை’. இது இளவயதினர், வயதானோர் என்ற பாரபட்சமின்றி அனைவரையும் தாக்குகிறது. ஆனால், தனிமை என்பதே நவீன உலகம் கண்டுபிடித்த ஒன்றுதான் என்கிறது வரலாறு.

குழுக்களாக வாழ வேண்டிய தேவை உள்ள உயிரினமாகவே ஆதியிலிருந்தே மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் பிறரோடு இணைந்திருக்கவே விரும்புகிறோம். இதன் அடிப்படையில் பார்க்கும்போது தனிமை என்பது மனிதகுலத்துக்கு அந்நியமானதாகவே இருக்கிறது.

1800க்கு முன்பு loneliness என்ற வார்த்தையே ஆங்கிலத்தில் இல்லை. அதிகபட்சம் தனிமையாக உணர்வதை oneliness என்ற வார்த்தையாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகளில் மரங்கள், மலைகள், மேகங்கள்... எல்லாம் தனியாக இருப்பதாகக் கூறுகிறார். வரலாறு முழுக்கவே சிலர் தனியாக வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் ஆன்மிக ரீதியிலான தேடலில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவையெல்லாம் தனிமை எனக் கூறப்பட்டதில்லை.

அப்போது குறிப்பிடப்பட்ட தனிமையும், இன்று மனிதர்கள் சந்திக்கின்ற தனிமையும் ஒன்றல்ல. முற்றிலும் வேறானவை. இதற்குக் காரணம், கால ஓட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள் பல மாற்றங்களை அடைந்திருப்பதுதான். தவிர, இப்போது உறவுகள் குறித்த நம் புரிதல் போதாமையாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. இதுவும் இன்றைய தனிமைக்குக் காரணம். இன்று நாம் விரும்பும் ஒருவரைப் பிரிய நேர்ந்தால் அதைத் தனிமையாக உணர்கிறோம்.

மதங்கள் உருவான பிறகு உலகின் எல்லா இருப்புக்கும் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கத் தொடங்கினோம். அது ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு தனித்துவத்தைக் கொடுத்தது. யாரும் இங்கே தனித்து விடப்படவில்லை... எல்லாரோடும் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது.  ஆனால், காலப்போக்கில் நவீனத்துவ உலகம் வாழ்க்கையின் மீதான நிலையற்ற தன்மையைக் கொண்டுவந்தது. மதங்கள் தொடர்ந்து இருந்தபோதிலும், சமூக வாழ்க்கை பல மாற்றங்களை அடைந்தது.

பொருளாதாரம், சமூகம், தத்துவம் போன்ற பல காரணிகளால் மனித வாழ்க்கை மாறியது. இது உலகை வேறு கோணத்தில் பார்க்கத் தூண்டியது. நகரமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவை மனித குலத்தின் பாரம்பரியமான குழு மனநிலையை மாற்றி அமைத்தது. ஒருவருக்கொருவர் தனிமைப்படுத்திக் கொள்ளும் வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது.

தான், தன்னுடையது என்ற வகைமைக்குள் இன்று மனிதர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.டார்வினின் ‘வலியது வாழும்’ என்ற கோட்பாட்டை பொருளாதாரம் தனதாக்கிக்கொண்டது. பொருளாதார சுதந்திரம் என்பதை நோக்கி ஒவ்வொருவரும் நகர ஆரம்பித்தனர். இங்கிருந்துதான் தனிமை என்பதே பெரும் பிரச்னையாக மாறுகிறது. ஆனாலும், பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருந்தால் திருப்தியாக இருக்க முடியும் என்கிற எண்ணம், தான் விரும்பிய ஒருவரைப் பிரிய நேரும்போது சுக்குநூறாக உடைந்து போகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் தீவிரமாகியிருக்கும் தனிமை என்பது ஓர் உணர்வல்ல. அது கோபம், கவலை, பொறாமை, மனக்கசப்பு, நம்பிக்கை, துக்கம்… இப்படி பல உணர்வுகளின் தொகுப்பு. இந்த நேரத்தில் ஒரு முதியவரின் தனிமையும், நான்கு பிள்ளைகளை வளர்க்கும் ஒரு சிங்கிள் மதரின் தனிமையும் முற்றிலும் வேறு வேறாக இருக்கிறது. வறுமை, இயலாமை, பலவீனம், நோய்மை இவற்றால் ஒருவர் உணரும் தனிமைக்கும், ஒருவருக்காக ஏங்கித் தவிக்கும் ஒருவரின் தனிமைக்கும் பெரும் வித்தியாசமுள்ளது.

அதேசமயம், தனிமை என்பது ஒரு மோசமான எதிர்மறையான உணர்வும் அல்ல. வரலாற்றில் மாபெரும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் தனிமையை முற்றிலும் வேறுவிதமாகக் கையாண்டு வந்திருக்கிறார்கள். தனிமை தரும் வலியிலிருந்து மீண்டு அவர்கள் பல படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள். தனிமை என்பது படைப்பாக்கத்தின் முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. எனவே தனிமை, பலருக்கும் வரப்பிரசாதமாகவும் இருக்கிறது.

உடனிருத்தல் என்பது வெறும் தொடுதல் தொடர்பானதல்ல; உணர்வு ரீதியாகவும் இணைந்திருத்தல். எனவேதான் பலர் ஊரடங்கு தனிமைப்படுத்தலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வீட்டுக் கதவின் அழைப்பு மணி ஒலிக்காத தனிமையையும் ரசிக்கிறார்கள். 

தனிமை என்பதன் சாதக பாதகங்களைப் புரிந்துகொள்ளாமல் அதை நாம் கடந்து வருவது கடினம். தனிமை, சில நொடிகள் -  சில வருடங்கள் - எப்போதாவது  நிரந்தரமாக… என இருக்கலாம். அதைத் தீர்மானிப்பது ஒவ்வொரு தனி நபரும்தான்.

ஊரடங்கு வரை இருக்கலாம் அல்லது உயிரடங்கும் வரையும் தொடரலாம். ஆனால், தனிமையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம், அதை எப்படி அனுபவிக்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் அர்த்தமே அடங்கியிருக்கிறது.உங்களுடைய தனிமை வரமா சாபமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!      

அன்னம் அரசு