முகம் மறுமுகம்- டாக்டர் TO டைரக்டர்



படிப்பில் சிறந்து விளங்கும் ஒரு மாணவியின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவளது எதிர்காலம் என்னவாகும் என்பதை உணர்த்திய படம் ‘மாயநதி’. கொரோனா லாக்டவுனிற்கு முன்னர் வெளியான இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் அசோக் தியாகராஜன். ‘‘எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். சிறுகதைகளும் எழுதியிருக்கேன். அது சில வார இதழ்களிலும் வெளிவந்திருக்கு. அந்த ஆர்வம்தான் என்னை சினிமாவிற்குள் இழுத்து வந்தது...’’ என மகிழும் அசோக் தியாகராஜன், ஒரு குழந்தைகள் நல மருத்துவர்.

‘‘நான் தயாரிச்சு, இயக்கின ‘மாயநதி’க்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சது. இது என் முதல் படம். அதனால மேக்கிங் சுமாராதான் இருக்கும். அதை நானே ஒப்புக்கறேன். ஆனா, கண்டிப்பா படத்தோட கதை எல்லாருக்கும் பிடிக்கும். படம் பார்த்தவங்களும் அதைத்தான் சொல்றாங்க.
கதைல வில்லன்னு யாரும் கிடையாது. எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலைதான்னு உணர்த்தியிருப்பேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு செய்தி அதில் இருக்கும். நீங்கதான் தேடிப் பிடிச்சு எடுத்துக்கணும்.

ஷூட்டிங்கை முழுக்க முழுக்க எங்க மயிலாடுதுறை ஏரியாவுலதான் நடத்தினேன். பொதுமக்கள் அத்தனை பேருமே எங்க மீது அன்பை பொழிஞ்சாங்க. ஸ்கூல், கடைகள்னு ஷூட் பண்றப்ப எல்லாம் யாருமே பணத்தை எதிர்பார்க்காம உதவினாங்க. இதே படத்தை சென்னைல ஷூட் நடத்தியிருந்தா அதிகம் செலவாகியிருக்கும்...’’ என்ற அசோக் தியாகராஜன், தான் மருத்துவரான கதையை விவரித்தார்.  

‘‘எங்க ஃபேமிலில யாரும் டாக்டர் கிடையாது. அப்பா ஆசிரியர். நான் மருத்துவம் படிக்கணும், டாக்டர் ஆகணும்னு எல்லாம் லட்சியத்தோடு வரல. கிடைச்ச துறையை லவ் பண்ணிட்டு இருக்கேன். நல்லா படிச்சேன். அதிக மார்க் வாங்கினேன். மெடிக்கல் சீட் கிடைச்சது. அப்ப டாப்ல இருந்த கோர்ஸ், சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். அதை செலக்ட் பண்ணினேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு மெடிசின் ரொம்ப பிடிச்ச கோர்ஸ் ஆகிடுச்சு. மயிலாடுதுறை பக்கம் திருக்கடையூர்லதான் வசிக்கறேன். சொந்த ஊரும் அதுவேதான். தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்லதான் எம்பிபிஎஸ் முடிச்சேன். அப்புறம், எம்டி பீடியாட்ரிக்ஸ் படிப்பை சென்னை ஸ்டான்லில முடிச்சேன். என் மனைவி ராஜேஸ்வரி டெலிவரி மருத்துவர்.

வீட்ல எங்க அம்மா நிறைய புத்தகங்கள் வாசிப்பாங்க. அதனால வார இதழ்கள்ல ஆரம்பிச்சு, அத்தனை புத்தகங்களும் எங்க வீட்ல எப்பவும் இருக்கும். நான் மூணாவது படிக்கும் போதே புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். எம்பிபிஎஸ் படிக்கும்போது இலக்கியத்துலயும் ஆர்வம் வந்திடுச்சு.
‘ரத்னபாலா’, ‘கோகுலம்’ பத்திரிகைகள்ல என்னுடைய துணுக்குகள் வந்திருக்கு. அப்புறம் சிறுகதைகள் எழுத ஆரம்பிச்சேன். ‘ஆனந்த விகடன்’ல என் கதை வந்திருக்கு. ‘கணையாழி’ல கவிதைகள் பிரசுரமாகி யிருக்கு.

அப்புறம், மெடிசின்ல முழுக்கவனமும் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். குழந்தைகள் நல மருத்துவம் படிச்சு முடிச்சதும் பனிரெண்டு வருஷங்கள் தொடர்ச்சியா பிராக்டீஸ் பண்ணினேன்...’’ என புன்னகைப்பவரின் பேச்சு, சினிமாவுக்குத் தாவியது. ‘‘முதன்முதலா படம் பண்ணினது சந்தோஷமா இருக்கு. நானே தயாரிப்பாளராகவும் இருந்தது இன்னும் ஹேப்பி. ஷூட்ல ஒவ்வொரு நாளும் கத்துக்கிட்டது அதிகம்.

பல வருஷ இடைவிடாத மருத்துவப் பணிக்குப் பிறகு சின்னதா ஒரு ரிலாக்ஸ் டைம் கிடைச்சது. என் நண்பர் மூர்த்திகண்ணன், ஒரு சில படங்கள் இயக்கியவர். ஸ்கூல்ல என்னோட படிச்சவர். அவர் தந்த ஊக்கத்துல ஒரு குறும்படம் இயக்கினேன். குழந்தைகள் வயிற்றுப்போக்கு பத்தின படம் அது. ‘ஹேப்பி பர்த்டே ஹரீஷ்’ என்ற விழிப்புணர்வு ஷார்ட் ஃபிலிம் அனுபவம்தான் ஃபீச்சர் ஃபிலிமை இயக்க வச்சது. என்னாலேயும் படம் இயக்க முடியும்னு நம்பிக்கை வந்ததும் என்னைச் சுத்தி நடக்கற விஷயத்திலிருந்து கதை ரெடி பண்ணினேன். நானே தயாரிப்பாளராகவும் இருந்ததால, சினிமாத்தனம் இல்லாம கமர்ஷியலாக பண்ணின படம்தான் ‘மாயநதி’.

இதுல ‘ஆடுகளம்’ நரேன் சார், அப்புக்குட்டி, வெண்பா, அபி சரவணன்னு கதைக்கான நடிகர்களை நடிக்க வைச்சேன். பெண்ணை மையப்படுத்தும் கதைனால, பவதாரிணியை இசையமைக்க வைச்சோம். பாடல்களை யுகபாரதி எழுதினார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே என் நண்பர்.
இப்ப எதையெல்லாம் பண்ணக்கூடாதுனு தெரிஞ்சு வைச்சிருக்கேன். இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒருத்தரா இருந்தா என்னவெல்லாம் மைனஸாகும்னு புரிஞ்சிருக்கு. உண்மைல ‘மாயநதி’ எனக்கு முக்கியமான படம்...’’ என்ற அசோக் தியாகராஜன், சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக சில விஷயங்களைப் பகிர்ந்தார்.

‘‘பெரியவங்க மாதிரி ஒரு பதட்டம், முன் அனுமானங்கள் எதுவும் குழந்தைங்ககிட்ட இருக்காது. உதாரணத்துக்கு குழந்தையின் கை நரம்புகள்ல மருந்து ஏத்தும்போது சுத்தி இருக்கறவங்க பதறுவாங்க. ஆனா, குழந்தையோ மருந்து ஏத்தின அடுத்த செகண்ட் துள்ளிக் குதிச்சு, சந்தோஷமா ஓடும்.
ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்டா சொல்லணும்னா... நிறைய பெற்றோர்கள்கிட்ட  மூடநம்பிக்கைகள் இருக்கு. படிச்சவங்க, படிக்காதவங்கன்னு வித்தியாசமில்லாம ஒரே மாதிரி செயல்படுவாங்க.

குழந்தைக்கு வயிற்றுப்போக்குனா கூட, தங்களுக்குத் தெரிஞ்ச வைத்தியம் பாக்கறதுல இறங்கிடறாங்க. குழந்தை ஆக்ட்டிவ்வா இருக்கணும். தண்ணீர்ச் சத்து குறையாம பாத்துக்கணும்னு கூட நினைக்கறதில்ல. குழந்தைங்க அழுதாலே அது பசியினாலதான்னு நினைக்கறாங்க. குழந்தை எதனால அழுதுனு விளக்கினாலும் அதை காது கொடுத்து கேட்கறதில்ல. அவங்களா ஒரு அனுமானத்துல இருக்காங்க.

அப்படி இருக்கக் கூடாது. சிம்பிளா சொல்லணும்னா... குழந்தை மருத்துவத்தில் ஒரு டாக்டருக்கு பெரிய வேலையெல்லாம் கிடையாது. சீக்கிரம் சரியாக உதவறோம். அவ்ளோதான். அதாவது ஹெல்ப்பிங் த பிராசஸ். ஆனா, பெத்தவங்க காம்ப்ளிகேட் பண்ணி, பெருசாக்கறாங்க...’’ என்றவர் அடுத்து படம் செய்யும் ஐடியாவில் இருக்கிறார்.       

‘‘ஆனா, உடனடியா ஆரம்பிக்க மாட்டேன். எல்லா விஷயத்துலயும் பர்ஃபெக்ட்டா இருக்கேன்னு எப்ப எனக்கு தோணுதோ அப்ப ஷூட் கிளம்புவேன். ஏன்னா, சினிமா என் passionதான். ஆனா, மருத்துவம் என் profession. அதனால மருத்துவத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்க விரும்பறேன்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் அசோக் தியாகராஜன்.

மை.பாரதிராஜா