நியூஸ் நூடுல்ஸ்!



சில வருடங்களுக்கு முன்பு கரீபியன் கடலில் பயணித்த மாலுமிகள் ஓய்வெடுக்க பகாமா தீவுக்கூட்டங்களைச் சேர்ந்த ஒரு குட்டித் தீவில் தஞ்சமடைந்தனர். உணவுக்காகக் கொண்டு வந்த உயிருள்ள பன்றிகளில் சிலவற்றை அங்கேயே விட்டுவிட்டு வேறு இடத்துக்குப் போய்விட்டனர்.
போனவர்கள் திரும்பி வரவேயில்லை. அந்தத் தீவு வழியாக வந்தவர்கள் கொடுத்த உணவை உண்டு வாழ்ந்த பன்றிகள் நாளடைவில் கூட்டமாகப் பெருகிவிட்டன. அத்துடன் கடலில் நீச்சலடிக்கவும் பழகிவிட்டன. இப்போது அந்தத் தீவு பன்றித் தீவு என்றே அழைக்கப்படுகிறது.

பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் அதிகம். ஊரடங்கு குறித்து அதிபர் போல்சனாரோ தொழில் அதிபர்களுடன் வீடியோ காலில் கலந்துரையாடினார். இது ஜூம் வழியாக அரங்கேறியது. விஷயம் இதுவல்ல. அந்த வீடியோ காலில் ஒருவர் குளித்துக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. இதனைக் கவனித்தவர் போல்சனாரோ என்பது தான் இதில் ஹைலைட். குளித்துக்கொண்டிருந்த தொழில் அதிபர் மீட்டிங் முடிந்துவிட்டது என்று நினைத்து குளிக்கப்போன போது கேமராவை ஆஃப் செய்யாமல் அப்படியே வீடியோ காலில் விட்டுவிட்டார்!

உலகம் முழுவதும் சுமார் 6 கோடிப் பேர் தீவிர ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
ஏழ்மையை ஒழிப்பதற்காக கடந்த மூன்று வருடங்களாக தீட்டிய திட்டங்களை எல்லாம் கொரோனா வைரஸ் காணாமல் போகச்செய்துவிட்டதாம். வாழ்வை ஓட்டுவதற்காக தினசரி 140 ரூபாய் கூட ஈட்ட முடியாத நிலையை தீவிர ஏழ்மை என்கிறார்கள்.

அமெரிக்காவின் வர்ஜுனியா மாகாணத்தில் உள்ள கடையில் திருடர்கள் கைது செய்யப்பட்டதுதான் அங்கே ஹாட் டாக்.
தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக தர்பூசணியை மாஸ்க் போல அணிந்து கடைக்குள் நுழைந்துள்ளனர் அந்த திருடர்கள். ஏதோ வேடிக்கைக்காக இப்படி வேசம் போட்டிருக்கிறார்கள் என நினைத்து  மக்களும் அவர்களுடன் நின்று செல்ஃபி எடுத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்களோ தங்களின் கைவரிசையைக் காட்ட, காவல்துறையிடம் வசமாக மாட்டிக்கொண்டனர். தர்பூசணி புகைப்படம் வைரலாகிவிட்டது.

கொரோனா வைரஸ் ஸ்பெயினை ஒரு புரட்டு புரட்டி எடுத்துவிட்டது. இந்நிலையில் ஒரு தந்தையும் அவரது குட்டி மகளும் சேர்ந்து லட்சக்கணக்கான இதயங்களை இன்ஸ்டாவில் கொள்ளையடித்துள்ளனர். வீட்டிலுள்ள குப்பையைத் தெருவிலிருக்கும் குப்பைத்தொட்டியில் வீச வரும்போது அப்பாவும் மகளும் ஹாலிவுட் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு சுற்றியுள்ளவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். கொரோனா லாக்டவுனின் போது அப்பாவும் மகளும் எப்போது குப்பையை வீச வருவார்கள் என்று பலர் காத்திருந்துள்ளனர். அந்தளவுக்கு அவர்களின் செயல் மற்றவர்களை ஈர்த்துள்ளது.

காதலிக்காக தன் வீட்டையே திரையரங்காக மாற்றிய காதலன்தான் டுவிட்டரில் செம வைரல். வீட்டுக்குள் ஹோம் தியேட்டர் எஃபெக்ட்டை மட்டும் அந்தக் காதலன் கொண்டுவரவில்லை. டிக்கெட் கவுண்ட்டர், கேண்ட்டீன், ஸ்கிரீன் ஒன்று, ஸ்கிரீன் இரண்டு என நிஜ திரையரங்க அனுபவத்தையே லாக்டவுன் காலத்தில் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார் அந்த ரோமியோ.

காரில் இருந்து காதலி இறங்குகிறாள். “சினிமாவுக்கு போலாமா...” என்று காதலன் கேட்க, “தியேட்டர்தான் மூடிக்கிடக்கிறதே...” என்கிறாள் காதலி.
உடனே சினிமாவுக்கான டிக்கெட்டை நீட்டி, தான் உருவாக்கிய திரையரங்குக்குள் அழைத்துச் செல்கிறான் காதலன்.
இதை வீடியோவாக்கி பதிவிட்டதில் லைக்குகள் எகிறிவிட்டன.

காதலிக்காக தன் வீட்டையே திரையரங்காக மாற்றிய காதலன்தான் டுவிட்டரில் செம வைரல். வீட்டுக்குள் ஹோம் தியேட்டர் எஃபெக்ட்டை மட்டும் அந்தக் காதலன் கொண்டுவரவில்லை. டிக்கெட் கவுண்ட்டர், கேண்ட்டீன், ஸ்கிரீன் ஒன்று, ஸ்கிரீன் இரண்டு என நிஜ திரையரங்க அனுபவத்தையே லாக்டவுன் காலத்தில் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார் அந்த ரோமியோ.

காரில் இருந்து காதலி இறங்குகிறாள். “சினிமாவுக்கு போலாமா...” என்று காதலன் கேட்க, “தியேட்டர்தான் மூடிக்கிடக்கிறதே...” என்கிறாள் காதலி.
உடனே சினிமாவுக்கான டிக்கெட்டை நீட்டி, தான் உருவாக்கிய திரையரங்குக்குள் அழைத்துச் செல்கிறான் காதலன். இதை வீடியோவாக்கி பதிவிட்டதில் லைக்குகள் எகிறிவிட்டன.

கடுமையான கட்டுப்பாடு களுடன் தாய்லாந்தில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஒரு டேபிளுக்கு ஒருவர் மட்டுமே அமர அனுமதி. இது வாடிக்கையாளர்களுக்கு தனிமை உணர்வைத் தரும் என்பதால் பாங்காக்கில் உள்ள ஒரு உணவகம் வித்தியாசமான ஒரு ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவகத்தில் உள்ள ஒவ்வொரு டேபிளுக்கும் இரண்டு நாற்காலிகள். ஒன்று வாடிக்கையாளர்களுக்காக. இன்னொன்றில் பாண்டா கரடி பொம்மை அமர்ந்திருக்கும்!இது வாடிக்கையாளர்களின் தனிமையைப் போக்குவதோடு நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த சிறுமிக்கு, தன் பாட்டி யைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை. ஆனால், சமூக இடைவெளி சிறுமியின் ஆசைக்கு பெரிய இடைவெளியை உண்டாக்கிவிட்டது.

எதற்கும் அசராத அந்தச் சிறுமி பாட்டியைக் கட்டிப்பிடிக்க பாலித்தீனில் ஒரு திரைச்சீலையை உருவாக்கிவிட்டாள்!அந்த திரைச்சீலையின் மூலம் பாட்டியும் பேத்தியும் கட்டிப்பிடிக்கும் காட்சி லட்சக்கணக்கானவர்களை நெகிழச் செய்ததோடு பலரையும் அதே மாதிரி பாலித்தீன் திரைச்சீலையை உருவாக்கச் செய்ததுதான் இதில் ஹைலைட்.

தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய பாய்ச்சல் என்று பாலீயைக் கொண்டாடுகின்றனர். இது சுழன்று செயல்படும் ஒரு எந்திரன். ‘சாம்சங்’ நிறுவனம் இதை அழகாக வடிவமைத்திருக்கிறது.

சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நவீன தயாரிப்புகளில் பாலீக்குத்தான் அதிக வரவேற்பு. ‘‘பாலீ உங்களைப் புரிந்துகொள்கிறது, உங்களுக்கு உதவியாக இருக்கிறது, உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது...’’ என்ற அடைமொழியுடன் வெளியாகியிருக்கும் இந்த எந்திரன், ஸ்மார்ட் ஹோம்களுக்கு உகந்ததாக இருக்கிறது.

வீட்டில் இருக்கும் அனைத்து வகையான ஸ்மார்ட் டிவைஸ்களையும் கட்டுப்படுத்தும் ரிமோட்டாக விளங்கும் பாலீ, யாராவது கீழே விழுந்துவிட்டால் அவரைத் தூக்க உதவியை நாடுகிறது. இதுபோக வீட்டில் யாருமில்லாத போது நாய்களுக்கு தொலைக்காட்சியைப் போட்டுக் காண்பிக்கிறது. மிகச் சிறிய அளவில் ஒரு பந்தைப் போல இதை வடிவமைத்திருக்கிறார்கள். தவிர, உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ள ஃபிட்னஸ் அசிஸ்டென்ட் போலச் செயல்படுகிறது. மொத்தத்தில் இது ஒரு ஸ்மார்ட்ஹோம் நிர்வாகி!

தொகுப்பு: த.சக்திவேல்