சிவகார்த்திகேயன் போல் நீங்களும் சிங்கம், புலிகளை வளர்க்கலாம்..!
ஆமாம். கதையல்ல. நிஜம். எப்படி சிவகார்த்திகேயன் வெள்ளைப் புலியை வளர்க்கிறாரோ அப்படி நாமும் வன விலங்குகளை வளர்க்கலாம்!ஆனால், வீட்டில் அல்ல!ஏனெனில் ஒட்டகம், மயில், கரடி போன்றவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்றும்; சிங்கம், புலி, பாம்பு போன்றவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்கள் என்றும் வரையறுத்து இவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது என திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது வனஉயிர்கள் பாதுகாப்பு சட்டம்.
 காரணம், வனவிலங்குகளும் காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தவை. இதில் ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று அழிந்துவிடும். எனவேதான் வனவிலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்களை அரசு ஏற்படுத்தி இருக்கிறது.‘‘இந்த வனவிலங்கு காப்பகங்களில் உள்ள வனவிலங்குகளை பொதுமக்கள் தத்தெடுக்கலாம். சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வரும் சிங்கம், புலி, யானைகளை இப்படி பலர் தத்தெடுத்திருக்கிறார்கள்...’’ என புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குனரான யோகேஷ் சிங்.
 ‘‘ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய வன உயிரியல் பூங்கா இதுதான். கடந்த ஆண்டு மட்டுமே 68 விலங்குகளையும்; பறவை, பாம்பு போன்ற 49 உயிரினங்களையும் பொது மக்கள் தத்தெடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற மொத்தத் தொகை, ரூ.23 லட்சம். இதை வைத்து அந்த வனவிலங்குகள் மற்றும் உயிரினங்களைப் பராமரிக்கிறோம். இறைச்சி, மீன், காய்கறிகள், பழங்கள்... என அவற்றுக்குத் தேவையான உணவுகளை வேளாவேளைக்கு வழங்கி ஊட்டச்சத்துடன் வளர்க்கிறோம்.
வன உயிரியல் காப்பகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும், விலங்குக்கும் தேவையான உணவுக்கான தொகையை அரசு கொடுக்கவே செய்கிறது. என்றாலும் விலைவாசி உயர்வு காரணமாக அவற்றுக்கு நிறைவாக உணவளிக்க முடிவதில்லை.
இந்நிலையில் மக்கள் தத்தெடுத்து பராமரிப்பதற்கான தொகையை வழங்கும்போது அவற்றின் பசியை முழுமையாக எங்களால் போக்க முடிகிறது. இதனால்தான் அரசும் வனவிலங்குகளையும், உயிரினங்களையும் பொதுமக்கள் தத்தெடுக்க ஊக்குவிக்கிறது...’’ என்ற யோகேஷ் சிங், தங்கள் காப்பகத்தில் உள்ள எந்த விலங்கையும், பறவையையும் யார் வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம்... ரூபாய் பத்து முதல் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் வழங்கலாம் என்கிறார்.
‘‘பள்ளி மாணவர்கள் பலர் இப்படி தங்களால் முடிந்த தொகையைக் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட விலங்கு அல்லது பறவையை தேர்வு செய்து அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்!அப்போது ஏற்படும் நெகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல் அந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறோம்.
உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம், புலிகளைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு ரூ.825ம்; யானையை பராமரிக்க ரூ.520ம்; நீர்யானைக்கு ரூ.373ம்; ஒட்டகச் சிவிங்கிக்கு ரூ.436ம் செலவாகும். இந்தத் தொகையை மக்களோ நிறுவனங்களோ ஏற்கலாம்.அப்படித்தான் சென்ற ஆண்டு விஜய் சேதுபதி வெள்ளைப் புலியை தத்தெடுத்தார். ஓராண்டு செலவை ஏற்றார். இந்த ஆண்டு அதே வெள்ளைப் புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்...’’ என்ற யோகேஷ் சிங், பெரிய விலங்குகள் என்றில்லை... சிறிய பறவையைக் கூட மக்கள் தத்தெடுக்கலாம் என்கிறார்.
‘‘ஆர்வம் இருப்பவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால், நாங்கள் பட்டியல் ஒன்றைத் தருவோம். அதில் எந்தெந்த விலங்குகளுக்கு - பறவைகளுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு செலவாகும்... மாதத்துக்கு எவ்வளவு... ஆண்டுக்கு எவ்வளவு என குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களால் முடிந்ததை டிக் செய்து எங்களிடம் சொல்லலாம். எந்தப் பறவை அல்லது விலங்கு என தேர்வு செய்யலாம்.இப்படி தத்தெடுக்க நீங்கள் செலுத்தும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு.
நடிகர்கள் பெரும்பாலும் வெள்ளைப் புலியையே தேர்வு செய்கிறார்கள். இதற்கான பராமரிப்புத் தொகையும் அதிகம். ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 78 ஆயிரம்...’’ என்ற யோகேஷ் சிங், இதற்காகவே வெண்கலம், வெள்ளி, தங்கம், வைரம் என திட்டங்களை அரசு ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார். ‘‘தொகைக்கு ஏற்ப இப்படி அரசு பிரித்திருக்கிறது. தனியாக ஒருவரே ஒரு திட்டத்தில் சேரலாம் அல்லது ஐந்து பேராக கூட்டு சேர்ந்தும் வைர திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
திட்டக் காலம் முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி பூங்கா முழுக்க சுற்றிக் காட்டுவோம். போலவே தத்தெடுத்தவர்கள் பூங்காவுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு திட்டக் காலம் முழுக்க இலவச அனுமதிதான்! ஊழியர்களை தொடர்பு கொண்டு தாங்கள் தத்தெடுத்த விலங்கு அல்லது பறவை என்ன சாப்பிட்டது... எப்படியிருக்கிறது... என நலம் விசாரிக்கலாம்!’’ என்கிறார் யோகேஷ் சிங் =
வழிகாட்டும் இந்தியா...
உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியாதான். 1972ல் இச்சட்டம் உருவாக்கப்பட்டது. விலங்குகள் வாழ ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மொத்த காட்டுப் பகுதி யில் 25% ஒதுக்கப்பட வேண்டும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நமது மாநிலத்தின் மொத்த வனப்பரப்பில் 29.32 சதவிகிதத்தில் 15 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 14 பறவை சரணாலயங்கள் உள்ளன.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் 106 விலங்கினங்களும், 140 பறவையினங்களும் அழிந்துள்ளன. இப்போதைய கணக்கெடுப்பின்படி சுமார் 300 இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பென்குயின், கஸ்தூரி மான், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், யானை, சிங்கம், கரடி, புலி, முதலை, பாம்பு, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றில் சில வகைகள் அடியோடு அற்றுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
திலீபன் புகழ்
|