ஹீரோ!



புனேவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அக்‌ஷய். மே 25ம் தேதி அவருக்குத் திருமணம் நடப்பதாக இருந்தது. கல்யாணச் செலவுக்காக இரண்டு லட்ச ரூபாயை சேமித்து வைத்திருந்தார். லாக்டவுன் காரணமாக திருமணத்தைத் தள்ளிவைக்க வேண்டியநிலை.

இது ஒரு பக்கம் இருக்க, புனே தெருக்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல், உணவில்லாமல், இருக்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார் அக்‌ஷய். அது அவரை நிலைகுலையச் செய்தது. கல்யாணத்துக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 400 பேர்களுக்கு உணவு வழங்கியிருக்கிறார்.

இதுபோக நகரம் முழுவதும் ஆட்டோவில் சுற்றி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பெண்கள் மற்றும் முதியவர்களை வேண்டிய இடங்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்வது என ஒரு ஹீரோ போல செயல்பட்டிருக்கிறார் அக்‌ஷய். கையிலிருந்த பணம் காலியாக, நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாக பணம் சேர்த்து, இல்லாதவர்களுக்கு இன்னமும் உதவிக்கொண்டிருக்கிறார் அக்‌ஷய்.