லவ் ஸ்டோரி -ஒரு பெண் மனதில் சந்தோஷமாக இருந்தால் அது அவளின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும்!



இயக்குநர் ரவிக்குமார் - பிரியங்கா

இயக்குநர் ரவிக்குமார் புதிய அலை இயக்குநராக ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தில் பளீரென தெரிய வந்தவர். கால எந்திரத்தின் மீதேறிச் செல்லும் பயணமாக புது கற்பனையில் சித்திரம் தீட்டினார். தரமான குறும் படங்களின் வெளிப்பாட்டில் சினிமாவுக்கு வந்த இவர், இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலக உயிரிகள் வருகை பற்றிய சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் ‘அயலான்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் கனிந்த காதல் பக்கங்கள்…

ரவிக்குமார்

சிறு வயதில் எனது உலகம் அக்காக்களோடு சம்பந்தப்பட்டிருந்தது. சத்யா அக்கா, சாவித்திரி அக்கா, கீதாஅக்கா, லட்சுமி அக்காவை எல்லாம் மறக்கவே முடியாது.அக்காக்கள் கதை சொல்லியும், பிரியமாக இருந்தும் என் வாழ்வை ஆரம்பத்தில் நிறைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு பேரன்பு காட்ட அம்மா இருந்தார். அப்புறம் வீட்டில் நான் சொல்வதை அப்படியே கேட்கும் தங்கை காயத்திரி வேறு... பிறகு ஒன்றும் வேண்டியதிருக்கவில்லை.
இளம் பருவத்தில் ஸ்கூல், காமிக்ஸ், தீக்கதிர், செம்மலர் எல்லாம் படித்துக் கொண்டு தொந்தரவு செய்யாத பையனாகத்தான் இருந்தேன். எனக்கு காதல் நிகழாவிடினும் என்னைச் சுற்றி இருந்தவர்களுக்கெல்லாம் அது நிகழ்ந்து கொண்டே இருந்தது.

நண்பர்கள் காதல் செய்யும் போது துணைக்குச் சென்றாலும் என் மனதில் காதல் நுழையவில்லை. ஒரு பெண்ணிடம் கூட தனித்து பேசியது கிடையாது. பெண் அருகாமையின் வாசனை கூட அறிந்ததில்லை.திருப்பூருக்குள்ளாகவே நூல் வியாபாரத்தை மேற்கொண்டு, குறும்படம் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு பிரியப்பட்ட பையனாக இருந்தேன். அப்படி நான் இருந்ததாலேயே எந்த பெண்ணிடமும் காதலைச் சொல்ல எனக்கு தைரியமில்லை.

பிறகு சினிமாவுக்காக சென்னை வந்தேன். முதல் படத்தை எடுத்து முடித்தேன். அந்த சமயத்தில்தான் பிரியங்காவைச் சந்தித்தேன். அதுவரை எந்தப் பெண்ணிடமும் உணராத நெருக்கத்தை பிரியாவிடம் உணர்ந்தேன். தினசரி அவளிடம் பேசுவது மட்டுமே எனக்கு உலகமாக இருந்தது.

எங்கு சென்றாலும் மொபைலில் அவளிடம் மட்டுமே இருந்தேன். அவளிடமிருந்து பதில் வர தாமதமானால் மனம் தவிக்க ஆரம்பித்தது. நள்ளிரவிலும் தூக்கம் வருது என்று சொன்னால் பேச்சு நின்றுவிடுமோ என்று இருவருமே விடியும்வரை பேசியிருக்கிறோம்.

எங்கள் காதலை வளர்த்த வாட்ஸ்அப்பிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவளுக்கு சின்னச்சின்னதாய் ஆச்சர்யப்படுத்துவது ரொம்பவும் பிடிக்கும். பிறந்த நாளில் நள்ளிரவில் பரிசளிப்பது என்று காதலாகக் கழிந்த நாட்களை என் மனம் நீட்டிக்க நினைத்தாலும் அதற்கு தடைபோட்டது பிரியாதான்.
‘உடனே என் அப்பாவிடம் பேசுங்கள்’ என்று என் மீது அக்கறை காட்டி காதலை திருமணத்திற்கு தள்ளினாள். என் அப்பாவும் பிரியங்காவின் அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இருப்பவர்கள். அதனால் எங்கள் திருமணத்திற்கு பெரிய எதிர்ப்பில்லை.

என் தங்கை ‘நாங்க எவ்ளோ பொண்ணை பார்த்தும் உனக்கு பிடிக்கலை... உன் மனசுல இருந்த பொண்ணு இவதானா’ என்று கேட்டாள். பதில் சொல்லாமல் சிரித்து நகர்ந்தேன்.பிரியாவுக்கு பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு நான் தடையாக இருந்ததில்லை. என்னிடமிருந்த பெண் பற்றிய புரிதலை இன்னும் விசாலமாக்கியவள் பிரியங்கா.

பொதுவாக நம் வீட்டுப் பெண்களின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்க நமக்கு மனமும், நேரமும் இல்லை. அவர்களோடு வாழ்க்கை முழுவதும் பக்கத்தில் இருந்துகொண்டு புரியாமலே இருந்து விடுகிறோம்.நம்மிடம் வந்திருக்கிற பெண்ணிடம் அவர்கள் அருகிருந்து கை தொட்டாலே போதுமானது. ஒரு கை வெறுமனே சக மனிதனை, மனுஷியைத் தொடுவதில்லை. அது அவர்களது இதயத்தில் மறைந்திருக்கக்கூடிய அன்பைத் தொடுகிறது.

திரைப்பட இயக்குநராக ஷூட்டிங்கில் மிகப்பெரிய குழுவை வழிநடத்திவிட்டு வீடு திரும்பினால், கையில் கூடையைக் கொடுத்து கடைக்கு அனுப்பிவிடுவாள். என் கால்களை எப்போதும் தரையிலிருக்கும்படி செய்வாள்.என் மீது அவளுக்கு பொசசிவ்னஸ் அதிகம். திரைப்பட இயக்குநர்களுக்கு இல்வாழ்க்கை அமைவது ரொம்பவும் முக்கியம். கற்பனைகள் கரைதாண்டிச் செல்ல கரையின் பலம் முக்கியம்.அந்த வகையில் என் பலம் என் மனைவி! ‘உன் மனதில் இருந்த பெண்’ பற்றிய தங்கையின் கேள்விக்கு என் பதில் ‘இவளன்றி வேறாருமில்லை!’

பிரியங்கா

இவர் அப்பாவுக்குத்தான் நண்பர். வீட்டிற்கு வரும்போது அவரைப் பார்த்து கடந்து போயிருக்கிறேன். ‘இந்த ரவி நல்ல பையன். அவருக்கொரு பொண்ணு கிடைக்க மாட்டேங்கிது’ என அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வார்கள்.அவருக்கு வரனாக வந்த பெண்களின் புகைப்படங்களைப் பார்த்து நானே கருத்து சொல்லியிருக்கிறேன்.

பேச ஆரம்பித்த கொஞ்ச நாளில் எங்களிடம் தனித்த அலைவரிசை தென்பட்டது. அப்பொழுது திடீரென ‘ஒரு பொண்ண எனக்கு ரொம்ப பிடிக்குது. அவங்ககிட்ட சொல்ல தயக்கமா இருக்கு. நட்பு போய்டுமோன்னு பயமா இருக்கு’ என்றார்.ஆஹா... இவர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரிந்துவிட்டது. யார் என்னவென்று விவரம் கேட்டு அடுத்து தொடர்ந்து ‘நீதான்’னு சொல்லிவிட்டால் என்ன செய்வது? ஓகே, அப்படியான்னு அடுத்த டாப்பிக் போய்விட்டேன்.

அய்யா தவிக்கிறார் என புரிந்தது. காதலை சும்மா நச் என்று சொல்ல வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பேன். அவர் வழவழ என்று வெளிப்படுத்தியதை இப்பொழுதும் சொல்லிக் காட்டுவேன்!அடுத்த நாள் வந்து ‘அந்தப் பெண் நீதான்’ என்று தெரிந்த ரகசியத்தை புதிதாகச் சொன்னார். உடனே நான் ‘உங்களுக்கு நம்பிக்கை தர முடியாது. முடிவு அப்பா அம்மாவிடம் இருக்கிறது. அவர்கள் சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம்’ என்றேன்.

என்னிடம் கேட்காமல் குடும்பத்திற்கு உள்ளேயே கூடிக்கூடிப் பேசுகிறார்கள். நானே அப்பாவிடம் பேசினேன். ‘எனக்கும் அவர பிடிச்சிருக்கு. ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல’ என குரல் கொடுத்தேன்!எல்லோரும் பேசி என் விருப்பத்திற்கு சரி சொல்லுகிறார்கள். இவர் சினிமாக்காரர் என யோசித்தார்கள். ஆனால், அவரது குணம் அனைவரையும் சம்மதிக்க வைத்தது.

வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. ஆனாலும் எக்கச்சக்கமாக சண்டை கட்டுவோம். ஒரு நாள் பிரிந்திருந்தாலும் அவரிடமிருந்து வருகிற அலைபேசி அழைப்பு உலகத்தையே கலர்ஃபுல்லாக்கிவிடும்.நான் வெளியே செல்ல வேண்டுமென்றால் எங்கள் மகள் நறுமுகையை அவர் தன் அலுவலகத்துக்கு தூக்கிக் கொண்டு போய் தொட்டில் கட்டி தூங்கவைப்பார்.

கதை விவாதம் முடிந்து குழந்தையும் அவருமாக கொஞ்சிக் கொண்டு வருவார்கள்!ஒரு பெண் மனதில் சந்தோஷமாக இருந்தால் அது அவளின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும்.நீங்கள் நேசிக்கிற ஒருவர் உங்களுக்கென்று செய்கிற ஒவ்வொரு விஷயமும் அந்த உறவை அழகாக்கும்.அப்படிப்பட்ட அழகர் என் ரவிக்குமார்!

நா.கதிர்வேலன்