ரத்த மகுடம்-95



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதற்குத்தான் குருநாதரின் பேச்சை தட்டக் கூடாது என்பது... இப்போது பார்... என்னவெல்லாம் நடந்திருக்கிறது...’’
சொன்ன ஸ்ரீராமபுண்ய வல்லபர் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். இந்த உதயம் சாளுக்கியர்களுக்கு இல்லை என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகவே புரிந்தது.

மவுனமாக நின்றான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன். நேற்று இரவு நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு இதே வாசகங்களைத்தான் ஸ்ரீராமபுண்ய வல்லபர் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபமாக, ஆற்றாமையாக, சலிப்பாக, கையறு நிலையாக... என உணர்ச்சிகள்தான் மாறியதே தவிர சொற்களும் வாக்கியங்களும் மாறவே இல்லை.

விநயாதித்தனுக்கும் இதற்கு என்ன பதில் சொல்வதென்று கடந்த மூன்று நாழிகைகளாகவே தெரியவில்லை. பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரனுக்கு, தான் அளித்த இரவு விருந்து இப்படியொரு இக்கட்டில் தங்களைச் சிக்கவைக்கும் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
‘‘நீ மட்டும் என்னைப் பின்தொடர்ந்து வராமல் சிவகாமியின் அருகிலேயே நின்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது...’’ மெல்ல உச்சரித்த ராமபுண்ய வல்லபரின் குரலில் இம்முறை ஆழ்ந்த சிந்தனை வழிந்தது.

‘‘அவள் சமாளித்துக் கொள்வாள் என்று நினைத்தேன்...’’ விநயாதித்தன் மவுனத்தைக் கலைத்தான்.
‘‘நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்கிறார்கள் தமிழர்கள்...’’‘‘சாளுக்கியர்கள் அப்படிச் சொல்வதில்லையே!’’
‘‘ஆனால், வாதாபியில் இப்பொழுது நாம் இல்லையே!’’ வாள் வீச்சைப் போல் தன் சொற்களை வீசிய சாளுக்கிய போர் அமைச்சர் திரும்பி விநயாதித்தனைப் பார்த்தார்.அவர் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தான் சாளுக்கிய இளவரசன்.

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆளப் போகிறவன் இப்படி தன் முன்னால் தலைகுனிந்து நிற்பதைப் பார்க்க ராமபுண்ய வல்லபருக்கு சங்கடமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் இவன் சாளுக்கிய இளவரசன்... இந்த எண்ணம் தோன்றியதுமே தன் கோபத்தைக் கைவிட்டார்: ‘‘நானும் ஒருவகையில் குற்றவாளிதான் விநயாதித்தா... ‘திரும்பிச் சென்று சிவகாமியுடன் நில்...’ என உன்னிடம் அழுத்தமாகச்
சொல்லியிருக்க வேண்டும்...’’

தன்னை ஆற்றுப்படுத்த தன் குருநாதர் முற்படுகிறார் என்பதை உணர்ந்து கொண்டதுமே விநயாதித்தன் தன் தலையை உயர்த்தினான். மனதுள் தத்தளித்துக் கொண்டிருந்த வினாவைக் கேட்க இதுதான் சரியான சந்தர்ப்பம்: ‘‘குருநாதா...’’
‘‘என்ன விநயாதித்தா..?’’‘‘நாம் இருவருமே தவறு செய்யவில்லை...’’
‘‘அப்படியா..?’’‘‘ஆம்... இதில் சிவகாமியின் பங்கும் எதுவுமில்லை...’’
‘‘அப்படியானால் எங்கு பிழை நிகழ்ந்தது விநயாதித்தா..?’’

‘‘ஐந்து புறாக்களில்!’’ அழுத்தமாகச் சொன்னான் விநயாதித்தன்: ‘‘அந்த நள்ளிரவில், அதுவும் விருந்து நடந்த மாளிகையில் அதைப் பறக்க விட்டது யார்..? அல்லது அந்த நேரத்தில் அந்த ஐந்து புறாக்களும் அங்கு வரும்படி அவற்றின் செவியில் ஓதி அனுப்பியது யார்..?’’
‘‘அதில் ஒரு புறாவின் இறக்கைக்குள் செய்தியைத் திணித்து அனுப்பியது யார் என்றும் கேட்டுவிடு விநயாதித்தா...’’
‘‘குருநாதா...’’ மேற்கொண்டு எதுவும் பேசாமல் விநயாதித்தன் மவுனம் காத்தான்.

‘‘கேட்டு விடு விநயாதித்தா... இந்த நேரத்தில் எதையும் கேட்காமல் அமைதியாக நிற்பது சாளுக்கியர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும்... என் மீது எந்தளவுக்கு நீ மரியாதை வைத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்... அதை இப்பொழுது நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை... நாட்டின் நலன்தான் நமக்கு முக்கியம்... என்னவெல்லாம் கேட்க நினைக்கிறாயோ அதையெல்லாம் கேட்டுவிடு...’’
‘‘கேட்டுவிட்டேன் குருநாதா... தாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்...’’

‘‘எது..? அந்த ஐந்து புறாக்களா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்: ‘‘அதில் மர்மம் இருப்பதாக நினைக்கிறாயா..?’’
‘‘இல்லையா..?’’‘‘இல்லவே இல்லை! சாளுக்கிய தேசத்தைக் கைப்பற்ற உன் பெரிய தந்தை அனந்தவர்மர் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்... இதற்காக உன் தந்தையும் நம் சாளுக்கிய தேசத்தின் முடிசூடா மன்னராக இப்போது திகழ்பவருமான விக்கிரமாதித்த மாமன்னரை எதிர்த்து அவர் போர் தொடுத்ததையும் நாம் எல்லோரும் அறிவோம். இதற்காக நமது பரம எதிரிகளான பல்லவர்களின் உதவியை அவர் நாடினார்...’’
‘‘...’’
‘‘நடைபெற்ற சகோதர யுத்தத்தில் நம் மாமன்னர் விக்கிரமாதித்தர் வெற்றி பெற்று சாளுக்கிய தேசத்தின் அரியணையில் அமர்ந்தார்... போனால் போகட்டும் என தன் சகோதரரையும் மன்னித்தார்... ‘வேண்டாம்... இப்படிச் செய்யாதீர்கள்...’ என்று தடுத்தேன்... மன்னர் கேட்கவில்லை. தண்டிக்கப்படாத அனந்தவர்மர் சுதந்திரமாக நடமாடினார்... என்றாலும் மன்னராக வேண்டுமென்று அவர் மனதுக்குள் இருந்த பேராசை மறையவில்லை... இப்போது சமயம் பார்த்து பல்லவர்களுக்கு தன் விசுவாசத்தைக் காண்பித்து நம் இருவரையும் சிக்கலில் சிக்க வைத்திருக்கிறார்...’’
‘‘நான் அப்படி நினைக்கவில்லை குருதேவா...’’ நிதானமாக சொன்னான் விநயாதித்தன்: ‘‘நேற்றிரவு ஐந்து புறாக்களைப் பறக்கவிட்டது என் பெரிய தந்தை அல்ல... கரிகாலன் என்று நினைக்கிறேன்!’’

ராமபுண்ய வல்லபரின் கண்களில் பெருமை சுடர் விட்டது. விநயாதித்தனையே இமைக்காமல் பார்த்தார்.
‘‘இந்த சந்தேகம் தங்களுக்கும் இருக்கிறது என்பதை நானறிவேன் குருதேவா... கரிகாலனுடன் வந்த சீனன்தான் அந்த ஐந்து புறாக்களையும் பறக்கவிட்டு நம்மை சங்கடத்தில் ஆழ்த்தி சிவகாமியை சிறையில் அடைத்திருக்க வேண்டும்...’’சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார்.

‘‘புறாவில் இருந்த செய்தி கூட கரிகாலனே எழுதியதாக இருக்கலாம்...’’
ராமபுண்ய வல்லபர் நெருங்கி வந்து விநயாதித்தனைக் கட்டிப் பிடித்தார்: ‘‘ஓர் இளவரசனுக்குரிய தகுதியுடன் சம்பவங்களை
அலசுகிறாய்... பெருமையாக இருக்கிறது... கவலைப்படாதே... இன்னும் இரண்டு நாட்களுக்கு சிவகாமியின் மீதான விசாரணை நடைபெறாது!’’
‘‘குருநாதா...’’‘‘அதற்குள் சாளுக்கிய மன்னருக்கு நடந்த விஷயங்களை எல்லாம் நாம் தெரிவித்தாக வேண்டும்... கூடவே அடுத்து நாம் செய்யவிருக்கும் காரியங்களுக்கும் அனுமதி பெற வேண்டும்! மனதை அலைபாயவிடாமல் நிம்மதியாக இரு... நான் இருக்கிறேன்!’’
‘‘வா இரணதீரா...’’ தன் மைந்தனை வரவேற்றார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்: ‘‘நள்ளிரவே என்னைச் சந்திக்க வந்திருந்தாய் போலிருக்கிறது... வயதாகி விட்டதல்லவா..? ஆழ்ந்து உறங்கிவிட்டேன்... சொல் இரணதீரா! என்ன விஷயம்..? நேற்றிரவு சாளுக்கிய இளவரசன் கொடுத்த விருந்து எப்படியிருந்தது..?’’

தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, நடந்ததை எல்லாம் சுருக்கமாகச் சொல்லி முடித்தான் கோச்சடையன் இரணதீரன்.
நெற்றியைச் சுருக்கியபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார் பாண்டிய மன்னர்.அவரைத் தொந்தரவு செய்யாமல் தன் கைகளைக் கட்டியபடி அமைதியாக நின்றான் இரணதீரன்.இருக்கையை விட்டு எழுந்த அரிகேசரி மாறவர்மர், தன் கரங்களைப் பின்னால் கட்டியபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவ்வப்போது நின்றார். அண்ணாந்து பார்த்தார். தலையை உலுக்கிக் கொண்டார். நடையைத் தொடர்ந்தார்.

கணங்கள் யுகங்களாகக் கடந்ததும் சட்டென நின்றார். திரும்பி கோச்சடையன் இரணதீரனைப் பார்த்துப் புன்னகைத்தார்: ‘‘கரிகாலன் இப்பொழுது எங்கிருக்கிறான்..?’’ ‘‘அன்னையுடன் பேசிக் கொண்டிருக்கிறான்...’’‘‘அதாவது தன் அத்தையுடன்! நல்லது... நல்லது... என்னைச் சந்திக்க நீ வருவது அவனுக்குத் தெரியுமா..?’’‘‘தெரியும் தந்தையே...’’‘‘தெரிந்தும் அவன் வரவில்லை...’’ அரிகேசரி மாறவர்மர் வாய்விட்டுச் சிரித்தார்: ‘‘பொடிப் பயல் என்று நினைத்தேன்... பரவாயில்லை... சதுரங்கக் காய்களை திறம்பட நகர்த்துகிறான்... சோழ ரத்தம் அல்லவா... அப்படித்தான் இருக்கும்... இரணதீரா...’’
‘‘தந்தையே...’’ என்றபடி முன்னால் வந்தான்.

அவன் தோளில் கை போட்டார் அரிகேசரி மாறவர்மர்: ‘‘மாமன் மகன்தானே என அவனிடத்தில் அலட்சியமாக இருக்காதே... எப்போதும் அவனிடம் எச்சரிக்கையாக இரு... பாண்டியர்களின் எதிரி அவன்தான்...’’‘‘மன்னா...’’ திகைப்படைந்த சூழலிலும் மரியாதையுடன் அழைத்தான் கோச்சடையன் இரணதீரன்.

‘‘என் காலத்திலோ அல்லது உன் காலத்திலோ அது நடக்காமல் போகலாம்... ஆனால், என்றேனும் ஒருநாள் பாண்டியர்களுக்கு ஆபத்து வருகிறது என்றால் அது கண்டிப்பாக சோழர்களால்தான் ஏற்படும்...’’‘‘கரிகாலனை சந்தேகிக்கிறீர்களா..?’’‘‘முழுமையாக! பல்லவர்கள் நன்றாக இருந்தால்தான் சோழர்களால் நிம்மதியாக வாழமுடியும்... எனவே, நடைபெறவிருக்கும் போரில் பல்லவர்கள் பக்கம்தான் சோழர்கள் நிற்பார்கள்... இந்தப் போரில் பாண்டியர்களான நாமும் பங்கேற்க வேண்டும் என சாளுக்கியர்கள் விரும்புகிறார்கள்... யுத்தத்தில் நாம் கலந்து கொள்ளவே கூடாது என பல்லவர்கள் கருதுகிறார்கள்... அதாவது உன் மாமன் மகன் கரிகாலன் அப்படி எண்ணுகிறான்... எனவே நமக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பரஸ்பர சந்தேகச் சுவரை எழுப்புகிறான்...’’

‘‘நேற்றிரவு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் கரிகாலனின் திட்டம் என்கிறீர்களா தந்தையே..?’’
‘‘இல்லை... திட்டம் வேறொருவருடையது... ஆனால், அதை தனக்கு சாதகமாக கரிகாலன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்... சிவகாமியைச் சிக்க வைத்து நமக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறான்... இந்நேரம் மதுரை முழுக்க சிவகாமி கைது செய்யப்பட்டது பரவியிருக்கும்... கரிகாலனே பரப்பியிருப்பான்! எனவே விசாரணையை நாம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்...’’
‘‘என்று தந்தையே..?’’‘‘இரண்டு மூன்று நாட்கள் கழித்து!’’‘‘எதற்கு இந்த அவகாசம் மன்னா..?’’‘‘கரிகாலனுக்கு அவகாசம் தேவைப்படுகிறது... பரவாயில்லை வழங்குவோம்... என்னதான் இருந்தாலும் அவன் என் மைத்துனரின் மகனல்லவா!’’
‘‘தந்தையே..?’’

‘‘என்ன இரணதீரா...?’’
‘‘நேற்றிரவு ஐந்து புறாக்களை அனுப்பியது யார்..?’’
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்!’’‘‘ஆம்... நான்தான் ஐந்து புறாக்களை அனுப்பினேன்... ஆனால், விருந்தினர் மாளிகைப் பக்கமாக அவற்றைப் பறக்கச் சொல்லவில்லையே..?’’தனக்குள் முணுமுணுத்தபடி தன் கையில் இருந்த ஓலையை மீண்டும் ஒருமுறை படித்தார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.நடந்ததை நடந்தபடி ராமபுண்ய வல்லபர் அதில் எழுதி
யிருந்தார்.சாளுக்கிய மன்னரின் புருவங்கள் முடிச்சிட்டன.
‘‘மன்னா...’’குரல் கேட்டுத் திரும்பினார்.

காவலர் தலைவன் அவரை வணங்கினான்: ‘‘காஞ்சி கடிகையில் இருந்து தங்களுக்கு செய்தி வந்திருக்கிறது...’’
‘‘ம்...’’ தலையசைத்தார் விக்கிரமாதித்தர்.மீண்டும் மன்னரை வணங்கிவிட்டு காவலர் தலைவன் அகன்றான்.
அடுத்த சில கணங்களில் காவி நிற காஷாயம் அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்தார்: ‘‘வணங்குகிறேன் மன்னா... காஞ்சி கடிகையில் ஆசார்யனாக இருக்கிறேன்...’’‘‘வணக்கம் ஆச்சார்யரே... கடிகை தலைவர் என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்..?’’

‘‘கடிகை நூலகத்தில் இருக்கும் சுவடிகளை மூன்று திங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து அடுக்குவது எங்கள் வழக்கம்... அப்படி இம்முறை சுத்தம் செய்கையில் சில சுவடிகள் காணாமல் போயிருப்பதை அறிந்தோம்...’’

காஞ்சி மாநகரத்துக்கு கரிகாலனும் சிவகாமியும் வந்ததும்... சிவகாமி குறித்த சந்தேகத்தை கரிகாலன் மனதில், தான் விதைத்ததும்... அதன் ஒருபகுதியாக கடிகைக்கு அவனை அனுப்பி அர்த்த சாஸ்திர சுவடிகளைப் பார்க்கச் சொன்னதும் விக்கிரமாதித்தரின் மனதில் நிழலாடின: ‘‘காணாமல் போனவை அர்த்த சாஸ்திர சுவடிகளா..?’’‘‘இல்லை மன்னா...’’விக்கிரமாதித்தரின் கண்கள் விரிந்து சுருங்கின: ‘‘இல்லையா..?’’

‘‘இல்லை மன்னா... காணாமல் போயிருப்பது சிறைச்சாலை சுவடிகள்... ஒவ்வொரு தேசத்திலும் சிறைச்சாலைகள் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன... அதற்குள் இருக்கும் பொறி அமைப்புகள்... அவற்றை இயக்கும் விதம்... ஆகியவை அடங்கிய சுவடிகள் மன்னா!’’சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் நெற்றியில் வியர்வைமுத்துக்கள் பூக்கத் தொடங்கின!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்