நீட் முறைகேடுகள்...தீர்வு என்ன?



‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து கிரேஸி மோகன் எழுதுவார். இப்படியெல்லாம் நடக்குமா... என்றபடி அந்தக் காமெடி சீனை அன்று ரசித்தோம். ஆனால், இன்று நிஜத்தில் இதே பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியூட்டுகின்றன. இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் 2018ம் ஆண்டு பீகாரில் இந்தி மொழியில் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். உண்மையில், அந்த மாணவருக்கு இந்தி தெரியாது. பிறகெப்படி பீகார் சென்று இந்தி மொழியில் தேர்வெழுதி தேர்வானார்?
இதுபற்றி கல்லூரி டீன் புகார் கொடுக்க, கடந்த வாரம் அந்த மாணவரையும் அவரின் தந்தையையும் கைது செய்துள்ளது சிபிசிஐடி போலீஸ்.

அந்த மாணவனின் தந்தை, தனது மகனுக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு எழுத வைப்பதற்காக ஏஜென்ட் ஒருவருக்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக சிபிசிஐடியிடம் தெரிவித்துள்ளார். இது வெறும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் மட்டுமே. இதுபோல நிறைய நடந்திருக்கலாம் எனப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, நீட் கட்டாயத்தால் புற்றீசல் போல பயிற்சி மையங்கள் முளைத்து அதிகம் சம்பாதித்து வருவது தனிக்கதை.
கடந்த ஆண்டு பல பயிற்சி மையங்களில் வருமானவரி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்கள் எல்லாம் நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் படிக்கும் மாணவர்களை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அகில இந்திய அளவில் நடக்கும் இந்தத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களைக் கொண்டே மருத்துவக் கல்விகளுக்கான சேர்க்கை நடைபெறும். 2016ல் இந்தத் தேர்விற்கு ஒரு வருடம் விலக்கு அளிக்கப்பட்டு 2017ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்நேரம், பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தனது கனவு பறிபோனதை எண்ணி அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனால், நீட்டிற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தன.இதே காரணத்தால் அடுத்தாண்டு விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவியும் தற்கொலை செய்தார். இதனால், தமிழகத்திற்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இன்றுவரை கல்வியாளர்களால் அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் ஆள்மாறாட்டப் பிரச்னை பெரிதாக உருவெடுத்திருக்கிறது.

இதுபற்றி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்திடம் பேசினோம்.  
‘‘கடந்த மூணு வருஷங்களா நீட் தேர்வுல முறைகேடுகள் நடந்திட்டு இருக்குது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு உத்திகளைக் கடைப்பிடிச்சு பண்ணிட்டே இருக்காங்க. முதல்ல சில மையங்கள்ல கேள்வித்தாள் லீக் ஆச்சு. இதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு போயும் எந்த நடவடிக்கையும் எடுக்கல.

அதேபோல முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வுல கம்ப்யூட்டரையே ஹேக் பண்ணினாங்க. எம்.பி.பி.எஸ்ஸுக்கான நீட் தேர்வுக்கு கோடிங் சீட்தான். ஆனா, எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலைத் தேர்வுகள் ஆன்லைன் மூலமா எழுதணும்.

இதுல, ஒருத்தர் சென்டர்ல உட்கார்ந்து தேர்வு எழுதுவது போல பாவலா செய்வார். ஆனா, அந்த கம்ப்யூட்டரை ஹேக் செய்து ெவளியிலிருந்து இன்னொருவர் சரியான பதிலை இவருக்காக எழுதிட்டு இருப்பார். இந்தத் தேர்வுகளை நடத்தும் அமெரிக்காவைச் சேர்ந்த புரோ மெட்ரிக் கம்பெனியே, ‘எங்களோட கம்ப்யூட்டரை ஹேக் செய்றாங்க’னு ஒப்புக் கொண்டது. ஆனா, அதன்பிறகும் நடவடிக்கையில்ல.

கடந்த ஆண்டு ஆள்மாறாட்டம் நடந்திருக்கு. ஒருத்தர் தேர்வு எழுதுவதற்குப் பதில் இன்னொருத்தர் தேர்வு எழுதுறார். ஒரு நபர் பெயரில் இரண்டு மூணு மையத்துல வெவ்வேறு நபர்கள் தேர்வு எழுதுவாங்க. அந்த மதிப்பெண்ணை எடுத்திட்டு கல்லூரியில சேர்ந்திடுறாங்க. இதனால, நேர்மையா கஷ்டப்பட்டு படிச்சிட்டு வர்ற மாணவர்கள் பாதிக்கப்படுறாங்க.

இந்த ஆள்மாறாட்டம் உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு இல்லாம நிச்சயம் நடக்காது. இந்த மையத்துல போனா ஆள்மாறாட்டம் செய்ய முடியும்னு செய்றாங்க. போட்டோ, ஐடி கார்டு எல்லாம் எளிதா மாத்திடுறாங்க. ஆனா, நம்ம அரசு என்ன பண்ணுது? பெண்களின் உள்ளாடை முதற்கொண்டு மூக்குத்தி, தோடு, செயின், கொலுசுனு கழற்றவைச்சு அசிங்கமா சோதனை செய்யுது. அதேமாதிரி முதுநிலை மாணவிகள் வந்தா தாலிக் கயிற்றைக் கூட கழற்றச் சொல்லுது. அவ்வளவு கெடுபிடி. ஆனா, இங்க ஆளே மாறி உட்கார்ந்திருக்குறது அவங்க கண்களுக்குத் தெரியறதில்ல.

நவீன சாஃப்ட்வேர்ல ஒரே பெயர்ல தேர்வு எழுதுவதைக் கண்டுபிடிக்க முடியும். அதையும் வைத்திருக்கல. ஆக, இந்த முறைகேட்டை திட்டமிட்டு நடத்துவதற்கான வாய்ப்புகளை அரசே ஏற்படுத்திக் கொடுக்குது...’’ என்கிறவரிடம், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மீது ஏன் இவ்வளவு மோகம் என்ற கேள்வியை எழுப்பினோம்.

‘‘இந்தியாவுல கடந்த 45 வருஷங்களா இல்லாத ஒரு வேலையில்லாத் திண்டாட்டம் இப்ப இருக்கு. அதனால, பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் வேலைவாய்ப்புள்ள படிப்பை படிக்கணும்னு நினைக்கிறாங்க. வேலைவாய்ப்பு கிடைக்கலன்னா சொந்தமா தொழில் செய்ற மாதிரி அந்தப் படிப்பு இருக்கணும்னு ஆசைப்படுறாங்க.

மற்ற படிப்புகளுடன் ஒப்பிடும்போது மருத்துவம் ஒரு நல்ல தேர்வா இருக்கு. அப்புறம், டாக்டர்னா ஒரு சமூக மரியாதை கிடைக்குது. அதனால, வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பினாலுமே மருத்துவக் கல்வி ரொம்ப விரும்பப்படுது.
டாக்டர் ஆகிட்டா குறைஞ்சபட்சம் ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். சொந்தமா கிளினிக் வச்சுக்கலாம். அப்புறம், இதுக்கு வயசு வரம்புனு கிடையாது. மரணிக்கிற வரை பணி ெசய்யலாம். அடுத்து, அரசு டாக்டர்னா அங்கேயும் பணி  செய்யலாம். அது முடிஞ்சதும் கிளினிக் நடத்தலாம். கூடுதல் வருமானம் கிடைக்கும். அதிகம் படிக்க படிக்க கூடுதலா சம்பாதிக்கலாம். இதன் காரணமாகவே மருத்துவப் படிப்புக்கு அதிகமான போட்டியிருக்கு.

அதனால, இதை எப்படி சரி செய்யணும்னு அரசு பார்க்கணும். சமூக பொருளாதார நிலையில மாற்றம் வரணும். கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கணும். எந்த படிப்பு படிச்சாலும் வேலை கிடைக்கும்ங்கிற நிலையும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் என்ற சூழலும் உருவாகணும். மருத்துவர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்குமான ஊதிய வேறுபாட்டைக் களையணும். மற்ற படிப்புகளிலும் ஏராளமா சம்பாதிக்கலாம் என்கிற நிலையும், விழிப்புணர்வும் வளரணும். அப்படியிருந்தாதான் எல்லோரும் மருத்துவம் படிக்கணும்ங்கிற ஆசை குறைஞ்சு மற்ற துறைகள் மீது அதிக கவனம் வரும்...’’ என்ற இரவீந்திரநாத், நீட் முறைகேட்டைத் தடுக்க சில யோசனைகளை முன்வைக்கிறார்:

‘‘கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் நீட் தேர்வை நடத்துறாங்க. முறைகேடுனு சொல்லி திரும்ப நடத்தினா அவங்களுக்கு நிறைய இழப்பு வரும். அதனால, எவ்வளவு முறைகேடுகள் நடந்தாலும் அதை மறைச்சிட்டு அட்மிஷன் போடுறாங்க. தமிழக அரசின் கட்டுப்பாட்டுல உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வுல இருந்து விலக்கு வேணும்னு கேட்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

இப்ப தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள்ல இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 85 சதவீதம் மாநில அரசுக்கும், 15 சதவீதம் மத்திய அரசுக்கும் ஒதுக்கீடு இருக்கு. தனியார் கல்லூரிகள்ல 65 சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியாருக்கும் இருக்கு.நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை எல்லாமே அவங்களுக்குத்தான். இதுல மாற்றம் வரணும். இங்கேயும் 65 சதவீதத்தை மாநில அரசுக்கு கொடுக்கணும். அப்புறம், அரசுப் பள்ளிகள்ல படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகள்ல 50 சதவீத இடஒதுக்கீடு தரணும்.

அடுத்து, அகில இந்திய முதுநிலை ஒதுக்கீட்டில் மாநில அரசுக்கு 50 சதவீதமும், மத்திய அரசுக்கு 50 சதவீதமும் ஒதுக்கலாம்னு இருக்கு. இதில், மத்திய அரசுக்கு 15 சதவீதம்தான் கொடுப்போம்னு சொல்லணும். அதுக்கு ஏற்ற மாதிரி சட்டங்கள கொண்டு வரணும். நீட்டில் இருந்து விலக்கு அளிச்சு மாநில அரசு எப்படி மாணவர்கள் சேர்க்கை நடத்த விரும்புறாங்களோ அப்படி நடத்திக்கலாம்னு கொண்டு வரணும். எல்லா மாநிலங்களும் இதைப் பின்பற்றும்போது நிச்சயம் முறைகேடுகள் குறையும்...’’ என்கிறார் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்.

இதுபற்றி கல்வியாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘‘மேல்நிலைப்பள்ளிக் கல்வியை வலுப்படுத்தி பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தணும். அதுவே இந்த ஊழலைத் தடுப்பதற்கு உதவும். மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வா பிளஸ் டூ இருக்கும்போது, இன்னொரு தகுதித் தேர்வு நியாயமில்லாதது. அப்ப பிளஸ் டூ படிப்பு எதுக்குங்கிற கேள்வி எழுது.

நீட்டைப் பொறுத்தவரைக்கும் அது வெறும் பயிற்சி நிறுவனங்களை உருவாக்கியதுடன் மேல்நிலைப் பள்ளிக் கல்வியையே அர்த்தம் இல்லாததாக ஆக்கிடுச்சு. நீட் தேர்வுக்காக மட்டுமே மாணவர்களைத் தயார்படுத்துற வேலையைச் செய்றோம். இதனால, நீட்டில் தேர்வாகாத மாணவர்கள் விரக்தி அடைவதும், தற்கொலை செய்வதும் நடக்குது.

அவர்கள் பல்துறை வல்லுநர்களாக வருவதற்கு அடித்தளங்களை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட போட்டித் தேர்வுக்கு தங்கள் உழைப்பைச் செலுத்த வைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதனால, மீண்டும் சட்டமன்றத்துல மாநில அரசு பின்பற்றக்கூடிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மசோதாவை நிறைவேத்தி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறணும். நீட்டில் இருந்து விலக்கு வாங்குவதுதான் இதைத் தவிர்க்கும் ஒரே வழி...’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு!

பேராச்சி கண்ணன்