ரத்த மகுடம்-94பிரமாண்டமான சரித்திரத் தொடர்

பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனின் முகம் மாறியது. சலனமற்று தன் பார்வையை மேலே உயர்த்தி, பறந்த ஐந்து புறாக்களையும் பார்த்தான்.‘‘பாண்டிய இளவரசே...’’ அழைத்த கரிகாலனின் குரலில் இப்போது மரியாதை வெளிப்பட்டது. நண்பன் என்ற நெருக்கத்தையும், அத்தை மகன் என்ற உரிமையையும் விட்டுவிட்டு இரணதீரனின் அந்தஸ்துக்குரிய சொல்லை உதிர்த்தான்.

இதைக் கவனித்த சிவகாமியின் நயனங்கள் விரிந்தன. எந்தத் திசையை நோக்கி கரிகாலன் நகர்கிறான் என்பதை உணர்ந்துகொண்டதுபோல் அவள் அதரங்கள் துடித்தன. எதையோ சொல்ல முற்பட்டவள் தொடர்ந்து கரிகாலன் பேசத் தொடங்கியதை அடுத்து மவுனமானாள்.

‘‘பார்த்தீர்களா பாண்டிய இளவரசே...’’ வானில் பறந்த ஐந்து புறாக்களையும் கரிகாலன் சுட்டிக் காட்டினான். ‘‘இது பாண்டிய தேசத்தின் தலைநகரமான மதுரை. அதுவும் தமிழ் வளர்த்த மாநகரின் விருந்தினர் வீதியில் அமைந்திருக்கும் மாளிகை ஒன்றின் நந்த வனத்தில் போடப்பட்ட பந்தலுக்குள் நாம் நிற்கிறோம்...’’

திரும்பி கரிகாலனைப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இதை ஏன் என்னிடம் இப்போது குறிப்பிடுகிறாய் கரிகாலா..? இவை எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைத்து விட்டாயா..? இந்த மண்ணின் இளவரசன் நான்...’’

‘‘அதனால்தான் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் இளவரசே...’’ ‘தங்களுக்கு’ என்ற சொல்லுக்கு கரிகாலன் அழுத்தம் கொடுத்தான்.
‘‘புரியவில்லை... நேரடியாகவே சொல்... என்ன விஷயம்..?’’‘‘இளவரசே... பல தேசத்தில் இருந்தும் முக்கியப் பிரமுகர்கள் மதுரைக்கு வருகை தருகிறார்கள். பாண்டிய மாமன்னரையும் இளவரசரான தங்களையும் காண பல காத தொலைவில் இருந்து வருகிறார்கள்... அப்படி வருபவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட வீதி அல்லவா இது..?’’  ‘‘ஆமாம்...’’

‘‘மன்னரும் நீங்களும் அமைச்சர் பிரதானிகளும் குடியிருக்கும் முக்கிய வீதியை ஒட்டி இந்த விருந்தினர் வீதி அமைக்கப்பட்டிருக்கிறதல்லவா..?’’
‘‘ம்...’’‘‘இங்கிருந்து வணிகர் வீதிக்குச் செல்ல வேண்டுமென்றால் நான்கு வீதிகளைக் கடக்க வேண்டும் அல்லவா..?’’
‘‘ம்...’’‘‘அப்படியிருக்க இந்த விருந்தினர் வீதிக்கு... குறிப்பாக சாளுக்கிய இளவரசர் விநயாதித்தரை நீங்கள் தங்க வைத்திருக்கும் மாளிகைக்கு... அதுவும் இந்த அந்தி சாயும் நேரத்தில் புறாக்கள் எங்கிருந்து வந்தன..? எதற்காக வந்திருக்கின்றன..? யார் அனுப்பியிருக்கிறார்கள்..?’’

கரிகாலன் சொல்லி முடித்ததும் சிவகாமியின் வதனத்தில் அச்சத்தின் சாயைகள் படர ஆரம்பித்தன.பாண்டிய இளவரசனின் கண்களில் அனல் தெறித்தது: ‘‘என்ன சொல்ல வருகிறாய் கரிகாலா..?’’‘‘எதையும் சொல்ல வரவில்லை இளவரசே... எனது ஐயங்களை எழுப்புகிறேன்... பொதுவாக தூது செல்வதற்காக அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் புறாக்களைப் பயன்படுத்துவார்கள் அல்லது தங்கள் வியாபார விஷயங்களுக்காக வணிகர்கள் புறாக்களை உபயோகப்படுத்துவார்கள்... இது தவிர வேறு எந்த தேசமும் செய்யாத ஒரு காரியத்தை இந்த பாரத தேசத்திலேயே ஒரேயொரு அரசு மட்டும் செய்கிறது... அதற்காக புறாக்களைப் பயன்படுத்துகிறது...’’ கரிகாலன் நிறுத்தினான்.

‘‘சாளுக்கிய தேசத்தைக் குறிப்பிடுகிறாயா..?’’
‘‘தாங்கள் அப்படிக் கருதினால் அது தவறு என்று நான் சொல்ல மாட்டேன் இளவரசே...’’ கோச்சடையனை நோக்கிச் சொன்ன கரிகாலன், ஓரப் பார்வையால் சிவகாமியைப் பார்த்து நகைத்தான்: ‘‘மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் போர்த் தந்திரங்களில் ‘ஐந்து புறாக்கள்’ என்பது பிரபலமானது என்பதை தாங்கள் அறிவீர்கள்...’’
‘‘...’’

‘‘இந்த மாளிகையில் நீங்கள் தங்க வைத்திருப்பவர் சாளுக்கிய தேசத்தின் இளவரசர்... அவர் இந்த தேசத்தின் இளவரசரான உங்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார்... நீங்களும் அதற்கு இசைந்து வருகை புரிந்திருக்கிறீர்கள்...’’
‘‘...’’‘‘இந்தச் சூழலில்... அதுவும் புறாக்கள் வருவதற்கு அவசியமே இல்லாத இந்த இடத்துக்கு... அதுவும் இந்த நேரத்தில்... அதுவும் சரியாக ஐந்து புறாக்கள் மட்டும் ஏன் பறக்க வேண்டும்..?’’

அதுவும்... அதுவும்... என கரிகாலன் தொடர்ந்து வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தபோது -
மேலே பறந்த ஐந்து புறாக்களில் ஒன்று சரியாக இறங்கி சிவகாமியின் தோளில் அமர்ந்தது! அவளது கேசத்தைக் கொத்தியது!
‘பார்த்தீர்களா..?’ என இரணதீரனுக்கு ஜாடை காட்டிவிட்டு சிவகாமியை நெருங்கிய கரிகாலன், அவள் தோளில் அமர்ந்த புறாவை
லாவகமாகப் பிடித்தான்.

யாரையும் பார்க்காமல் கருமமே கண்ணாக அதன் இறக்கைகளை விரித்து ஆராய்ந்தான்.ஓரிடத்தில் விரல் இடறியது.புறாவைத் தூக்கிப் பிடித்து இடறிய இடத்தைப் பார்த்தான். அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ஆள்காட்டி விரல் நகத்தால் மெல்ல மெல்ல பட்டுச் சுருள் ஒன்றை எடுத்தான்.
அடுத்த கணம் புறா பறந்து சென்றது. வட்டமிட்டுக் கொண்டிருந்த மற்ற நான்கு புறாக்களும் அதைப் பின்பற்றி வானில் சென்றன.
வளர்ந்த நகத்தின் அளவிருந்த அந்தப் பட்டுச் சுருளை கரிகாலன் விரித்தான்.

‘எல்லாம் தயார்... வலையை விரித்து மீனைப் பிடிக்கவும்...’அரக்கினால் எழுதப்பட்ட அந்த வாசகங்களை கோச்சடையன் இரணதீரனிடம் காட்டினான் கரிகாலன்: ‘‘இதில் மீன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாண்டிய இளவரசரான தங்களை என நினைக்கிறேன்... ஒருவேளை நான் எண்ணுவது பிழை என்றால் மன்னிக்கவும்...’’எதுவும் பேசாமல் தன் முன் நீட்டப்பட்ட வெண் பட்டுத் துணியைப் பார்த்துவிட்டு நிமிர்ந்தான் இரணதீரன்.
பாண்டிய இளவரசனின் கண்கள் சிவகாமியை ஊடுருவின: ‘‘இதற்கு என்ன அர்த்தம்..?’’

சிவகாமி பதில் சொல்வதற்குள் சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ‘‘சித்திரான்னம் சமைத்துக் கொண்டிருந்த வீரன் மேல் தவறுதலாக வெந்நீர் கொட்டிவிட்டது... அதுதான் அந்த அலறல்... மன்னிக்கவும்...’’ இரணதீரனைப் பார்த்துச் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதற்கு மன்னிப்பு கேட்டீர்கள். சரி... இதற்கு எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்..?’’ என்றபடி அந்த பட்டுத் துணியை சாளுக்கிய போர் அமைச்சர் முன்பு காண்பித்தான் கரிகாலன்.

‘‘எ...ன்...ன... இ...து...’’ வாக்கியத்தை வாசித்தபடியே அதிர்ச்சியுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.‘‘அதைத்தான் பாண்டிய இளவரசர் கேட்கிறார்... என்ன இது..?’’ இம்முறை கரிகாலன் அழுத்திக் கேட்டான்.நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த விநயாதித்தனுக்கு எங்கோ தவறு நடந்திருப்பது புரிந்தது.சாளுக்கிய போர் அமைச்சரை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘இவள் பெயர் சிவகாமி என்றீர்கள்... ஆனால், உங்களுக்கு இவர் யார் என்று சொல்லவில்லையே..?’’

‘‘நிச்சயம் சாளுக்கியர்களுக்கு மிக மிக வேண்டப்பட்டவராக இருக்கவேண்டும்! இல்லையென்றால் சாளுக்கிய இளவரசர் தங்களுக்கு அளிக்கும் விருந்துக்கு இந்த அம்மணியையும் அழைத்திருப்பார்களா..?’’ நகைக்காமல் நகைத்தான் கரிகாலன்.பட்டுத் துணியில் இருந்த வாக்கியத்தையும், தலைகுனிந்தபடி நின்றிருந்த சிவகாமியையும், திருதிருவென விழித்துக் கொண்டிருந்த ராமபுண்ய வல்லபரையும், இறுகிய முகத்துடன் காணப்பட்ட பாண்டிய இளவரசனையும், விஷமத்துடன் பேசிக்கொண்டிருந்த கரிகாலனையும் மாறி மாறிப் பார்த்த விநயாதித்தன் சட்டென முன்னே வந்தான்:

‘‘பாண்டிய இளவரசே... இந்த பட்டுத் துணியில் எதற்காக இப்படி எழுதப்பட்டிருக்கிறது... இந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு... இதையெல்லாம் நீங்கள் அறியவும் விசாரிக்கவும் முற்படுகிறீர்கள்... அனைத்துக்கும் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்... சாளுக்கியர்கள் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டே இந்த மண்ணை விட்டு அகலுவோம்...’’

‘‘அப்படியானால் அதுவரை சந்தேகத்துக்கு இடமான இந்த அம்மணி மதுரை சிறையில் அடைக்கப்படுவதுதான் சரி என்கிறீர்கள்... நல்லது... இரணதீரா...’’ இம்முறை நண்பன் என்ற உரிமையில் ஒருமையில் அழைத்தான் கரிகாலன்: ‘‘சாளுக்கிய இளவரசரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் உனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே..?’’

பதிலை எதிர்பார்க்காமல் பாண்டிய வீரர்களை அழைத்த கரிகாலன், சிவகாமியை மதுரையின் பாதாளச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.
முக அசைவில் அதை ஆமோதித்தான் கோச்சடையன் இரணதீரன்.அடுத்த கால் நாழிகைக்குப் பின் மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டாள் சிவகாமி.

சிறையின் தரையில் கம்பீரமாக அமர்ந்தவள் சோம்பல் முறித்தாள். வாய்விட்டுச் சிரித்தாள். தன் தலைக்கேசத்தைக் கலைத்தாள். அதனுள்ளிருந்து ஒரு பட்டுச் சுருளை எடுத்தாள்.அவள் தோளில் புறா அமர்ந்தபோது தன் அலகுக்குள் மறைத்து வைத்திருந்த நக அளவு பட்டுச் சுருளை அவளது கேசத்தில் சாதுர்யமாக பதுக்கியிருந்தது!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்