தில்லி கலவரம் யார் பொறுப்பு..?



இந்தக் கேள்வியைத்தான் மக்கள் எழுப்புகிறார்கள். ஏனெனில் அமெரிக்க அதிபர் டிரம்ப், தில்லியில் இருந்து அகமதாபாத்துக்கு சென்றுகொண்டிருந்த நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் மக்கள் போராடி வந்த களத்துக்குள் வன்முறையாளர்கள் ஊடுருவினார்கள்.
இதனை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் ஒரு போலீசார் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது கடந்த திங்கள் இரவு வரையிலான நிலவரம்.

கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் அமைதியான வழியில் போராட்டம் நடந்து வருகிறது.
குறிப்பாக தில்லி ஷாஹின் பாக், ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே மக்கள் அமர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் கடந்த 24ம் தேதி தில்லி மஞ்ச்பூர் யமுனா விஹார் பகுதியில் வன்முறை வெடித்தது.

பாபர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு - எதிர்ப்பு ஆகிய இரு தரப்பினரும் திடீரென ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் காவல் துறையினர் அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து தில்லியின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த 10 இடங்களில் காவல்துறை 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது.
அமைதியான முறையில் இத்தனை நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தில் திடீரென எப்படி கலவரம் வெடித்தது..?
இக்கேள்விக்கான பதிலாக அனைவரும் ஒரு டுவிட்டர் செய்தியை சுட்டிக்காட்டுகிறார்கள்.

“ஜப்ராபாத், சாந்த்பாக் சாலையை சரிசெய்ய போலீசாருக்கு 3 நாட்கள் அவகாசம் இருக்கிறது. அதன் பின்னரும் அவர்கள் காலி செய்யாவிட்டால் எங்களை சமாதானம் செய்ய போலீசார் முயற்சிக்க வேண்டாம். நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டோம்... டிரம்ப் அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்லும் வரை மட்டுமே அமைதி காப்போம்...”  இதை பதிவிட்டவர், பாஜக  தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா.

இதற்கு முன் இவர் ஆம் ஆத்மியில் இருந்தார். கடந்த முறை ஆம் ஆத்மியின் அமைச்சரவையிலும் பங்கு வகித்தார். பிறகு அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார். இந்த கபில் மிஸ்ராவின் அம்மா, பாஜகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் என்றும், அப்பா சோஷலிஸ்ட் என்றும் சொல்கிறார்கள். இவரது டுவிட்தான் நடைபெற்ற கலவரங்களுக்கு பிள்ளையார் சுழி என்கிறார்கள்.

இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். துப்பாக்கியுடன் காணப்பட்ட சிவப்பு ஷர்ட் அணிந்த இளைஞன், எதிர்த் தரப்பினரை சரமாரியாக சுடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையைப் போல் துப்பாக்கியுடன் ரோந்து வந்த அந்த சிவப்பு ஷர்ட் இளைஞன், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவன் என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அந்த இளைஞன் இஸ்லாமியனா அல்லது இந்துவா என்பது இங்கு முக்கியமல்ல. சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், சர்வ சாதாரணமாக துப்பாக்கியுடன் நடமாடியதும், எதிர்த் தரப்பை சரமாரியாகச் சுட்டதும், அதை தில்லி காவல்துறை வேடிக்கை பார்த்ததும் சரியா... என்றுதான் நாட்டு மக்கள் அதிர்ச்சியுடன் கேட்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள எல்லா மாநில காவல்துறையும் அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், தில்லி காவல்துறை மட்டும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதாவது இன்றைய தில்லி காவல்துறை, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

எனில், நடைபெற்ற தில்லி கலவரங்களுக்கும், சிவப்பு  ஷர்ட் அணிந்த இளைஞன் துப்பாக்கியால் எதிர்த் தரப்பை சரமாரியாக சுட்டதற்கும் மத்திய அரசுதானே பொறுப்பேற்க வேண்டும்..? இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.l

8ல் 6

நடந்து முடிந்த தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக எட்டு இடங்களைப் பிடித்தது. அந்த எட்டில் 6 தொகுதிகள் வடகிழக்கு / கிழக்கு தில்லியில் இருக்கின்றன. அதாவது விஷ்வாஸ் நகர், லட்சுமி நகர், காந்தி நகர், ரோஹ்தஸ் நகர், கோண்டா, கரவால் நகர்.

இந்தப் பகுதிகளில்தான் (பின்தங்கிய) முஸ்லிம்கள் அதிகம். இப்பகுதிகளில் பாஜக அதிக வெற்றி பெற்றதன் காரணமே, அங்கே மதரீதியான பிளவை ஏற்படுத்தியதுதான் என்கிறார்கள். இதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியும்.

அன்னம் அரசு