நான்...மரிய இருதயம்



கேரம் போர்டு ஆட உட்கார்ந்தா யாரும் என்னை ஜெயிக்கக் கூடாது. இப்படித்தான் யோசிப்பேன். இந்த வெறிதான் 9 முறை தேசிய சாம்பியனாகவும், ரெண்டு முறை சர்வதேச சாம்பியனாகவும் என்னை உயர்த்தி அர்ஜுனா விருது வரைக்கும் கொண்டு வந்துச்சு. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இந்த சென்னை மண்லதான். வடசென்னைவாசினு கூட சொல்லலாம். அப்பா கவர்மெண்ட் மெடிக்கல் ஸ்டோர்ல வேலை செய்தாரு. அப்பா பெயர் ஒய்.அந்தோணி சைமன். அம்மா, ஆரோக்கிய மேரி.

நான் வீட்டுக்கு ஒரே பையன். எனக்கு மூணு வயசிருக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க. அப்பா ரெண்டாவது திருமணம் செய்துக்காம நான்தான் உலகம்னு இருந்துட்டார். புனித மார்க்ஸ் ஹைஸ்கூல்லதான் பிரைமரி படிப்பெல்லாம். சின்ன புள்ளையா இருக்கறப்பவே வீட்ல போர்டு வைச்சு விளையாடுவேன். 9, 10ம் வகுப்பெல்லாம் சாந்தோம் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல.

சென்னைலயே இந்த ஸ்கூல் இருந்தாலும் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்க வேண்டிய சூழல். ஒரு வருஷம் கேரம் போர்டு ஆடக்கூடிய வாய்ப்பு கிடைக்கவே இல்ல. கேப் விழுந்துடுச்சு. லீவுல வீட்டுக்கு வந்து விளையாடினா... வரிசையா தோற்க ஆரம்பிச்சேன். அப்பறம் என்ன... மறுபடியும் போர்டு டிரெயினிங். பத்தாம் வகுப்பு ஃபெயில்.

எனக்கு போர்டு ஆட இங்க இருந்த போர்டு ரூம்கள் உதவிச்சு. இப்ப ஒண்ணு, ரெண்டு போர்டு ரூம்கள் அரசு அங்கீகாரத்தோடு இருக்கு. அப்ப அப்படியில்ல. ஏரியா முழுக்க போர்டு ரூம்கள் இருக்கும். இந்த ஏரியால இருந்து மாநில - தேசிய... ஏன், உலகளவுல அவ்வளவு சாம்பியன்ஸ் போயிருக்காங்க. லீவு விட்டா போதும் எல்லா பசங்களும் போர்டு ரூம்லதான் இருப்போம்.

நிறைய பெட்டிங் மேட்ச்கள் நடக்கும். இதனாலயே பிரச்னைகள், போட்டி, பொறாமைகள், போலீஸ் கேஸ் எல்லாம் நடந்துச்சு. அப்புறம்தான் அரசு அங்கீகாரம் இல்லாம கேரம் போர்டு ரூம்கள் இருக்கக் கூடாதுன்னு அறிவிச்சாங்க. இதுக்கு அப்புறம்தான் நிறைய ரூம்கள் மூடப்பட்டுச்சு.
ஆனா, பெட்டிங்தான் கேரம் போர்டு விளையாட சரியான பயிற்சினு சொல்லுவேன். சும்மா டிரெய்னிங் எடுத்துக்கிட்டாலும், வந்து சொல்லிக் கொடுத்தாலும் மனசுல அந்த வெறியும் சாதிக்கணும் என்கிற நம்பிக்கையும் பெட்டிங்ல ஆடறப்பதான் வரும்.  

சீனியர் ஒருத்தர் என்னை ஒரு டோர்னமெண்ட்டுக்கு கூட்டிட்டுப் போனாரு. சும்மாதான். அங்க பிளாங்க் ஓப்பனிங் அப்படின்னு ஒரு போட்டி நடந்துச்சு. அதுல நானும் சேர்ந்து ஆடினேன். இப்படிதான் எனக்கு முதல் கேரம் போர்டு டோர்னமெண்ட் வாய்ப்பு அமைஞ்சது. அந்தப் போட்டில ஃபைனல்ஸுக்கு போயி ரன்னர் ஆகிட்டேன்.

அப்ப ரெண்டு பிரிவு இருக்கும். மெடலிஸ்ட் மற்றும் நான்-மெடலிஸ்ட். ஏற்கனவே ரன்னராகி ஃபைனல் வரைக்கும் போயிட்டதால என்னை மெடலிஸ்ட் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்க. ரொம்ப சின்ன வயசுலயே சீனியர்கள் லிஸ்ட்ல வந்துட்டேன். 1974ல மெடலிஸ்ட்!

ஆனா, என்னதான் லிஸ்ட்ல இருந்தாலும், என் கூட இருந்தவங்க எல்லாருமே சீனியர்ஸ். குறிப்பா லாசர் அண்ணன், டெல்லி அண்ணன். இவங்க ரெண்டு மூணு முறை தேசிய விருது வாங்கினவங்க. அவங்க கூட எல்லாம் விளையாடற அளவுக்கு எனக்கு திறமை பத்தாது. தவிர அவங்களுக்கு சமமா உட்கார்ந்து விளையாடறதுலயும் விருப்பம் இல்ல. அவங்க விளையாடறதைப் பார்த்து கத்துக்கணும்னுதான் நினைச்சேன். அதனாலயே அடுத்தடுத்து நடந்த அந்த பிளாங்க் ஓப்பன் டோர்னமெண்ட்ல கலந்துக்காம விட்டுட்டேன்.

எங்க ஏரியால கபீர்தாஸ்னு ஒருத்தர் இருந்தார். அவர் சாதிக்கணும்னு நினைக்கிற எல்லா பசங்களுக்கும் நிறையவே உதவுவார். குறிப்பா கேரம் போர்டு ஆடுற பசங்கன்னா இன்னும் ஆர்வமா உதவிகள் செய்வார். அவர் பார்வை என் மேல பட்டது. எனக்கு நிறைய உதவிகள் செய்தார். போட்டிகளுக்குக் கூட்டிட்டு போயி விளையாட வெச்சார். அப்பதான் இந்த ஜூனியர் லெவல் போட்டிகள் எல்லாம் நடக்க ஆரம்பிச்சது. அதுக்காக அப்பாகிட்ட பேசி அனுமதி கேட்டார். ஆனா, அப்பா படிப்பு கெட்டுடும்னு மறுத்துட்டார்.

அந்தப் போட்டில கலந்துக்க முடியலையேனு ரொம்ப நாள் வருத்தப்பட்டேன். ஒரு நாள் வீட்ல இருந்து என்னை ஒரு ஃபங்ஷனுக்கு கூட்டிட்டு போயி யிருந்தாங்க. அங்கதான் லாசர் அண்ணன் கூட பேசக்கூடிய சான்ஸ் கிடைச்சது. ‘லாசர் நமக்கு உறவுக்காரர்தான்’னு என்னை அவராண்ட எங்க சித்தி அறிமுகப்படுத்தினாங்க. ‘கேரம் ஆடுவியா’னு கேட்டார். அடுத்த நாளே வீட்டுக்கு கூட்டிட்டு போயி, அவருடைய மெடல்கள், கோப்பைகள் எல்லாத்தையும் காண்பிச்சார். அப்பதான் எனக்கு கேரம் போட்டிங்க மாநில, தேசிய அளவுல நடக்குதுனு தெரியும். நாமும் இது மாதிரி கோப்பைகள் வாங்கணும்னு முடிவு செஞ்சேன்.

இதை விட ஆச்சர்யம், கேரம் போர்டு ஜெயிச்சதுக்காகவே அவருக்கு விளையாட்டு வாத்தியார் வேலை கிடைச்சதுனு தெரிஞ்சப்பதான் கபீர்தாஸ் அண்ணன் சொன்னது உடனே நினைவுக்கு வந்துச்சு.பிறகு அப்பாவுக்கு தெரியாம கபீர் அண்ணனோட கேரம் போர்டு ரூமுக்கு போக ஆரம்பிச்சேன். காலைல எத்தனை மணிக்கு வந்தாலும் ரூம் கதவை ஓப்பன் செய்து லைட் எல்லாம் போட்டுவிடுவார். அடுத்து ராஜாபாதர் ஐயா அறிமுகமானாரு. 1978ல டீன் ஏஜ் பையனா நான் இருந்தப்ப அவருக்கு வயசு 60. கேரம் போர்டுல இருக்கற எல்லா நுணுக்கங்களும் அவருக்கு தெரியும்.

அப்படிப்பட்ட ராஜாபாதர் ஐயாவைக் கூட்டிட்டு வந்து எனக்கு பயிற்சி அளிக்க வைச்சாரு கபீர் அண்ணன். இதுக்கு இடைல எனக்கும் வெங்கடேசன்னு ஒருத்தருக்கும் பெட்டிங் மேட்ச். அதுல நான் ஜெயிச்சேன். இதுல என்னன்னா அன்றைக்கு மாலையே தேசிய அளவுல நடந்த போட்டில இதே வெங்கடேசன் ஜெயிச்சாரு!

உடனே கபீர் அண்ணன், ‘உன்கிட்ட தோற்கறவங்க எல்லாம் நேஷனல் லெவல்ல ஜெயிச்சுட்டு இருக்காங்க. நீ என்னடான்னா இங்க உட்கார்ந்து பெட்டிங் ஆடிட்டு இருக்க...’னு சொல்லி மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு எல்லாம் என்னை கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சார்.
முதல் போட்டி மயிலாப்பூர் ஜிம்கானா கேரம்போர்டு கிளப்ல நடந்துச்சு. பெயர் கொடுத்துட்டு லிஸ்ட்டுல பார்க்கிறப்ப ரெண்டாவது பெயரா டெல்லி அண்ணன் பேரு இருந்துச்சு. சரிதான்... இந்த மேட்ச்சுல நான் ஜெயிக்க மாட்டேன்னு தோணிடுச்சு.

ஆனா, பாருங்க... மூணு ரவுண்ட் போட்டில ஒரு ரவுண்டுல நான் ஜெயிக்கறேன்... அடுத்ததுல டெல்லி அண்ணன் ஜெயிக்கறாரு. ஃபைனல்ல அண்ணன் வின் பண்ணினார்.அடுத்தடுத்து தொடர்ச்சியாக போட்டிகள். ஸ்டேட் லெவல் லிஸ்ட்ல வந்துட்டேன். லாசர் அண்ணன், டெல்லி அண்ணனுக்குப் பிறகு மூணாவதா சிறந்த போட்டியாளர்கள் வரிசைல என் பேரு!

இந்த சூழல்ல தில்லில நேஷனல் லெவல் டோர்னமெண்ட் நடந்தது. ஸ்டேட்டுக்கு 6 பேர் விளையாடலாம். தமிழகம் சார்பா கலந்துகிட்டவங்கள்ல நானும் ஒருத்தன். தேர்வான ஆறு பேரையும் கூப்பிட்டு தமிழ்நாடு கேரம் போர்டு அசோசியேஷன்ல ஒரு கேம்ப் நடத்தினாங்க. ஆறு பேர்ல நான்தான் ஜூனியர். லாசர் அண்ணன், டெல்லி அண்ணன், வெங்கடேஷ், மோகன், வின்சென்ட் எல்லாம் சீனியர்ஸ்.

அப்ப ஆல் இந்தியா ஃபெடரேஷன் கிளப் மற்றும் தமிழ்நாடு கேரம் போர்டு அசோசியேஷன்... இந்த ரெண்டுக்கும் தலைவர் பங்காரு பாபு சார்தான். நான் விளையாடறதைப் பார்த்தவர் ‘ஃப்ரீயா இருந்தா என் ரூமுக்கு வா’னு சொல்லிட்டு போனார். போனேன். நான் ஆடும்போது என்னவெல்லாம் தப்பு செய்தேனோ... வாய்ப்பு கிடைச்சும் எப்படி தவற விட்டேனோ... அதையெல்லாம் சுட்டிக்காட்டி நிறைய நுணுக்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். என்னை மேம்படுத்திக்க அது உதவிச்சு.

தொடர்ந்து போட்டிகள்... வெற்றிகள்... மெல்ல மெல்ல பேப்பர்ல என் பேரு வர ஆரம்பிச்சது. இதுக்கு அப்புறம்தான் நான் கேரம் ஆடறதே எங்கப்பாவுக்கு தெரிஞ்சுது! தேசிய அளவிலான போட்டில சுபாஷ் காம்ளே கூட நேருக்கு நேர் மோதினேன். அவர் ஏற்கனவே நாலு முறை தேசிய அளவுல ஜெயிச்சவர். இந்தப் போட்டில நான் தோத்துட்டேன்.

ஆனா, விடாம பாபு சாரை சந்திக்க ஆரம்பிச்சேன். எனக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார். இந்தப் பக்கம் ராஜாபாதர் சார்... அந்தப்பக்கம் பாபு சார்... இவங்க ரெண்டு பேருமா சேர்ந்து எனக்கு கேரம் சொல்லிக் கொடுத்தாங்க. கேட்கவே ‘வடசென்னை’ படம் மாதிரி இருக்கா..? உண்மையைச் சொன்னா வெற்றிமாறன் சார் என்னை சந்திச்சு என் மொத்த கதையையும் கேட்டு, ‘உங்க வாழ்க்கையை அடிப்படையா வைச்சுதான்
‘வடசென்னை’ எடுக்கப் போறேன்’னு சொன்னார்.

அவரும் நானும் புறா வளர்ப்பு மூலம் சந்திச்சோம். ஒருநாள் திடீர்னு ‘ஃப்ரீயா இருந்தா வாங்களேன்... தனுஷுக்கு நீங்க கேரம் கோச் பண்ணணும்’னு சொன்னார். ஒரு வாரம் தனுஷுக்கு கேரம் டிரெயினிங் கொடுத்தேன். என்ன இது... என்னைப் பத்தி சொல்லிக்கிட்டே வந்து திடீர்னு ‘வட சென்னை’க்குள்ள போயிட்டேன்! திரும்ப என் வாழ்க்கைக்கே போகலாம்!

பாபு சார் எனக்கு பயிற்சி கொடுக்கறப்ப ஆனந்தன்னு ஒருத்தர் அறிமுகமானார். அவர் பாபு சார் கூடவே இருப்பார். அவர் எல்லா கேம்ப்களுக்கும் ரெஃப்ரி. அவரும் சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சார். ஆக, எனக்கு இப்ப மூணு கோச்! ஏற்கனவே தேசிய அளவிலும் மாநில அளவிலும் நான் விளையாடிட்டு இருந்ததால இதை அடிப்படையா வெச்சு கஸ்டம்ஸ்ல வேலை கிடைச்சது.

இந்த நேரத்துலதான் படிப்பு எவ்வளவு முக்கியம்னு என் அப்பா சொன்னது புரிஞ்சது. ஏன்னா, நல்லா படிச்சிருந்தா... கேரம் சாதனையும் சேர்த்து கஸ்டம்ஸ்ல எனக்கு பெரிய போஸ்டிங் கிடைச்சிருக்கும். படிப்பு குறைவா இருந்ததால சிப்பாய் போஸ்ட்தான் கொடுத்தாங்க.
வேலை பார்த்துட்டே சீனியர் கேட்டகிரில எந்த சுபாஷ் காம்ளேகிட்ட தோற்றேனோ அவரிடமே மறுபடியும் தோற்றேன். மனசுல வெறி வர 1982ல அதே சுபாஷ் காம்ளே கூட ஆடி ஜெயிச்சேன். என் முதல் தேசிய அளவிலான வெற்றி அதுதான்.

அடுத்து புரசைவாக்கத்துல நடந்த ஒரு டோர்னமெண்ட்ல எனக்கு சீனியரான டெல்லி அண்ணனையும் ஜெயிச்சேன். தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகள்ல கலந்துகிட்டு ஒன்பது முறை தேசிய சாம்பியனானேன்! 1997ல உலக சாம்பியன்ஷிப் ஜெயிச்சேன். தொடர்ந்து ரெண்டு முறை உலக சாம்பியன் ஆனேன்! 1997ல கேரம் ப்ளேயருக்கான முதல் அர்ஜுனா விருதை வாங்கினேன்.

1982ல எனக்குத் திருமணமாச்சு. மனைவி பெயர் ஃபிலோமினா. வீட்ல பார்த்த பெண்தான். என்னை ஊக்கப்படுத்தி தவறாம டிரெயினிங் அனுப்பறதுல தொடங்கி பசங்களை எல்லாம் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினது வரை எல்லாமே என் மனைவிதான். 2012ல ஒரு விபத்துல ஃபிலோமினா தவறிட்டாங்க.

என்னவோ... எங்க வீட்ல பெண்கள் வாழக் கொடுத்து வைக்கலை. எனக்குப் பொறந்த பொண்ணும் ஆறு வயசுல காலமானாங்க...
எனக்கு நாலு பசங்க. நாலு பேரும் போர்டு ஆடுவாங்க. கடைசி பையன்தான் முழுமூச்சா இப்ப போர்டு ஆடுறார். மத்த மூணு பேரும் வேலை, சம்பாத்தியம்னு செட்டிலாகிட்டாங்க.

என் பெரிய பையன்தான் இப்ப என் கேரம் போர்டு கிளப்பை பார்த்துக்கறார். எங்கப்பா ஆசைப்படி என் பசங்களை நல்லபடியா படிக்க வைச்சேன்.
பாருங்க, பெயர் சொல்ல மறந்துட்டேன். மூத்தவர் விண்ணொளி இதய ஆனந்த்; இரண்டாவது கேப்ரியல் கிறிஸ்டி; மூணாவது மரிய லாசர்; நாலாவது ஆண்டனி ஆஸ்டின் - இவர் சர்வதேச போட்டிகள்ல இப்ப விளையாடறார்.

எனக்குக் கிடைச்ச வாத்தியார்கள் எல்லாம் அருமையானவங்க. அதுமாதிரி நிறைய வாத்தியார்கள் இப்பவும் அங்கங்க இருக்காங்க. அவங்களை எல்லாம் அரசு ஒண்ணு சேர்த்து க்ளப்பு ஆரம்பிச்சா கண்டிப்பா நிறைய உலக சாம்பியன்களை தமிழகத்துல உருவாக்கலாம்.என்கிட்டயே நேஷனல், இன்டர்நேஷனல் போட்டிகள்ல ஆடுற வீரர்கள் இருக்காங்க. நிறைய பேர் ஜெயிச்சிட்டும் வந்திருக்காங்க. எனக்குத் தெரிஞ்சதை சொல்லிக்  கொடுக்கறேன். நிறைவா இருக்கு.

செய்தி : ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்