பெட்ரோல்,டீசல் விலை பைசாவில் உயரும்போது சிலிண்டர் விலை மட்டும் ஏன் ரூபாயில் உயர்கிறது..?



குடும்பம் ஒன்றுக்கு, ஓர் ஆண்டில் 12 எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதன் பின் வாங்கப்படும் சிலிண்டர் விலை ஒவ்வொன்றுக்கும் சந்தை விலையில் மானியம் இல்லாமல் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் மானியமில்லா சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் சென்னையில் மட்டும் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.290 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 590 ரூபாய் 50 காசுகளாக இருந்த மானியமில்லா சிலிண்டரின் விலை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 16 ரூபாய் மற்றும் 13 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டன.

நவம்பரில் 76 ரூபாயும், டிசம்பரில் 18 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில் கடைசியாக ஜனவரி ஒன்றாம் தேதி 20 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.734க்கு வந்தது. இப்போது மீண்டும் ரூ.147 உயர்த்தப்பட்டுள்ளது.அரசு புள்ளி விவரங்களின்படி, சுமார் 11 கோடிப் பேர் மானியமில்லாத சிலிண்டர்களைப் பெற்று வருகின்றனர். தனிநபர் வருமானம் உயராத போது, விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே போனால் எங்கு செல்வது என்பது கேள்வியாக மட்டுமே இருக்கிறது.

எல்லாவற்றையும் தனியாரிடம் தாரைவார்த்துவிட்டு, மானியம் மட்டுமே கொடுத்தால் மக்கள் வாயை அடைத்துவிடலாம் என அரசு நினைக்கிறது.
இந்நிலையில்தான் அந்தக் கேள்வி எழுகிறது. எல்லாவற்றையும் தனியார்மயமாக்கி விட்டால் அரசின் வேலை என்னவாக இருக்கும்?  
“முன்ன மாதிரி மண்ணெண்ணெய் சப்ளை இல்ல. கேஸ் சிலிண்டரை வச்சுதான் பிழைச்சுட்டு இருக்கோம். விலையை குறைச்சுக் கொடுத்தா சமாளிக்கலாம். ஆனா, மாசா மாசம் விலையைக் கூட்டிட்டுப் போறாங்க. சிலிண்டர் விலை உயர்வதால் டீ, காபி, சாப்பாட்டு விலையும் கூடுது. எப்படிப் பிழைக்கறதுனு தெரியலை...’’ என்கிறார்கள் அடித்தட்டு உழைக்கும் மக்கள்.

‘‘இதனால டீ விலையை உயர்த்த வேண்டியிருக்கு... வாடிக்கையாளர்களைப் பார்க்கவே பாவமா இருக்கு...’’ என்கிறார் டீக்கடை உரிமையாளர் ஒருவர்.  
நடைபாதை உணவக உரிமையாளர்களோ, “அஞ்சு ரூபாய்க்கு இட்லி விக்கற என்னால ரூ.1500க்கு எப்படி சிலிண்டர் வாங்க முடியும்..? அந்தத் தொகைக்கு சிலிண்டர் வாங்கினா டிபன் விலையை உயர்த்தணும். சாதாரண மக்கள்தான் எங்க கடைக்கு வர்றாங்க. அவங்களுக்கு கட்டுப்படி ஆகற விலைக்கு இருந்தாதானே டிபன் சாப்பிடுவாங்க...

இந்த மாசம் மட்டுமே சிலிண்டர் விலை 300 ரூபாகிட்ட ஏறியிருக்கு. காலை டிபன், மதியம் சாப்பாடு, நைட் டிபன்னு மூணு வேளையும் எங்க
கடைல அடுப்பு எரியுது. இதனால மூணு நாளைக்கு ஒரு சிலிண்டர் வாங்கறேன். மாசம் 10 சிலிண்டர். அப்படீன்னா நீங்களே கணக்கு போட்டுக்குங்க.
என்னை மாதிரி ஏழைங்க வயிறார சாப்பிடணும்னுதான் தெருல கடை போட்டிருக்கேன். இப்படியே போச்சுனா என்னால கடையும் நடத்த முடியாது... இந்த மாதிரி கடைக்கு வந்து சாப்பிடறவங்களாலயும் பசியாற முடியாது...’’ என்கிறார்கள்.

உணவு சம்பந்தப்பட்ட தொழிலை மேற்கொள்கிறவர்கள் மட்டுமல்ல... தங்கம், வெள்ளி வேலை செய்பவர்களும் இதனால் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில் பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தரக் குடும்பங்களும் இப்போது விழி பிதுங்கி நிற்கின்றனர். காரணம், சிலிண்டர் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் அவர்களது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது.   

“ரெண்டு சிலிண்டர் வைச்சிருந்தா மண்ணெண்ணெய் கிடையாது. சிலிண்டர் ரேட் கூடுனா மாச பட்ஜெட்டுல துண்டு விழும். விழுது. வருமானம் அதிகரிக்கலை... என்ன செய்யறதுனு தெரியலை... சிலிண்டர் மானியமும் உரிய நேரத்துல வங்கி கணக்குக்கு வர்றதில்ல... இப்படி இருந்தா நாங்க எப்படி வாழறது?

எங்களுக்கு மானியமோ, இலவசமோ வேணாம். முதல்ல எப்படி வாங்கிட்டு இருந்தோமோ அப்படியே கொடுங்க. இல்லை, விலைவாசியைக் கட்டுப்படுத்துங்க. இதைச் செய்யாம அடிக்கடி சிலிண்டர் விலையை ஏத்தறதுதான் அரசின் வேலையா..?’’ ஆவேசத்துடன் கேட்கிறார்கள் இல்லத்தரசிகள்.

நிலைமை இப்படி இருக்க, “மக்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும்...” என்கிறார் ‘Consumer Association of India’ அமைப்பைச் சேர்ந்த சோமசுந்தரம்:
“கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இறக்கம் காணும் போது எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைகள் மட்டும் பைசாவில் உயரும்போது அடிப்படைத் தேவையான கேஸ் சிலிண்டர் விலை இவ்வளவாக உயர்வது கண்டனத்துக்குரியது.

உடனே அரசு, ‘சிலிண்டர் விலையை உயர்த்தும்போதெல்லாம் மானியத்தின் அளவையும்தானே அதிகரிக்கிறோம்...’ என்கிறார்கள். ஏற்கனவே கொடுக்கப்படும் மானியம் சரியாக மக்களைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அனைவருமே தங்கள் பாங்க் ஸ்டேட்மென்ட்டை எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆக, மானியம் என்பது ஏட்டளவில், பேச்சளவில்தான் இருக்கிறது என்பதை அரசை ஆதரிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு விஷயம், சிலிண்டரை புக் செய்யும்போது smsஇல் வரும் விலையும் பில்லில் இருக்கும் தொகையும் வேறாக இருக்கிறது. ஏனெனில் புக் செய்யும்போது இருக்கும் விலை, டெலிவரி ஆகும்போது உயர்ந்திருக்கிறது!

இதுபோன்ற சூழ்நிலைகளில் புக் செய்யும்போது இருக்கும் விலைக்குதான் வாடிக்கையாளர்கள் வாங்கவேண்டும். சட்டம் அப்படித்தான் சொல்கிறது. ஆனால், இந்த விவரம் நுகர்வோருக்குத் தெரியவில்லை. சிலிண்டரை டெலிவரி செய்பவர்களும் சொல்வதில்லை.

அதேபோல் டோர் டெலிவரிக்கு எந்த டெலிவரி சார்ஜும் கொடுக்க வேண்டியதில்லை. பில்லில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதும். ஆம். பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையில் டெலிவரி சார்ஜும் அடங்கியிருக்கிறது. சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு அவரவர் பணி புரியும் கேஸ் ஏஜென்சிகள் கொடுக்கும் சம்பளத்தில் இந்த டெலிவரி தொகையும் அடங்கியிருக்கிறது...’’ என்று கூறும் சோமசுந்தரம், கிராமப்புறங்களில் உள்ள நிலைமையை எடுத்துரைத்தார்:

“விலையில்லா சிலிண்ட ரைத்தான் அரசு கிராமங்களுக்கு கொடுத்திருக்கிறது. எனவே சிங்கிள் சிலிண்டர்கள்தான் கிராமத்து வீடுகளில் இருக்கின்றன. ஆக, ஒரு கிராமத்துக்கு குறைந்தது 15 சிலிண்டர்கள் டெலிவரி செய்ய வேண்டும் என்றால்தான் ஏஜென்சிகள் மினி வேன் வழியே அதை அனுப்புவார்கள்.

எனவே மக்கள் தங்கள் டூ வீலரில் சென்று சிலிண்டரை தாங்களே வாங்கி வருகிறார்கள். இப்படிச் செய்யும்போது - அதாவது ஒரு சிலிண்டரை நேரடியாகச் சென்று எடுக்கும்போது - ரூ.15 குறையும். தவிர இப்படி எடுத்துச் செல்லும் போது தூரத்துக்கு ஏற்ப ரூ.34 முதல் ரூ.50 வரை குறைக்கலாம் என்று ரூல் இருக்கிறது.

இந்த விவரமும் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை. கமர்ஷியல் சிலிண்டருக்கும், மானிய சிலிண்டருக்கும் ஓர் ஆண்டுக்கு முன்வரை விலை வித்தியாசம் அதிகம் இருந்தது. இப்போது இந்த விகிதம் குறைந்துள்ளது. எனவே கள்ள மார்க்கெட்டில் விற்பனை அதிகரித்திருக்கிறது.    

மத்திய அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் நாளிதழ்களிலும் டிவிக்களிலும் விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால், அந்த விளம்பரங்கள் தாய்மொழியில் இருப்பதில்லை. இந்தியில் இருக்கின்றன. எனவே மக்களுக்கு அது என்ன திட்டம் என்பதே தெரியாமல் போகிறது. சில கிராமங்களில் இப்போதும் பச்சை நிற ஹோஸைப் பயன்படுத்துகின்றனர்.

இது ஆரஞ்சு நிறத்துக்கு மாறி வருடங்களாகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் சிலிண்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட பலருக்குத் தெரியவில்லை. குறிப்பாக டோல் ஃப்ரீ எண்ணுக்கு ஏன், எதற்கு அழைக்க வேண்டும் என அறியாமலேயே இருக்கின்றனர். ‘அனைவருக்கும் கேஸ் அடுப்பு திட்டம்’ என்று கூறும் அரசு இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...’’ என்கிறார் சோமசுந்தரம்.l

அன்னம் அரசு