உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...



சென்ற வாரம் உலகையே கலங்கடித்த வாக்கியம் இதுதான்: ‘‘யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்...’’ ஒன்பது வயது குவாடன், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
எலும்பு வளர்ச்சிக் குறைவு (Achondroplasia) நோயால் பாதிக்கப்பட்டு, குள்ளமாகவும், தலை பெரிதாகவும் காணப்படும் குவாடன், தன்னுடன் படிக்கும் மற்ற மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார்.

ஒரு நாள் தன் தாயிடம், “கயிறோ, கத்தியோ என்னிடம் கொடுங்கள். நான் சாக விரும்பு கிறேன். யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள். கத்தியைக் கொண்டு எனது இதயத்தில் குத்திக்கொள்ளப் போகிறேன்...” எனக் கதறியிருக்கிறார்.
இதை அப்படியே வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார் குவாடனின் தாய் யாரகா பேலஸ்: ‘‘உங்கள் கேலியும் கிண்டலும் இதைத்தான் செய்கிறது. நன்றாகப் பாருங்கள்... தற்கொலை எண்ணத்தில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நொடியையும் பயத்தில் கழிக்கிறேன்.

கடந்த புதன்கிழமை குவாடனை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றபோது, ஒரு மாணவன் அவனது தலையில் தட்டி உயரத்தை கேலி செய்து கொண்டிருந்தான். என்னைப் பார்த்த குவாடன், அங்கு நடப்பதை நான் பார்க்கக் கூடாது என வேகமாக ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டான்...” என்று வருத்தத்துடன் பேசியிருந்தார்.

வைரலாகப் பரவிய இந்த வீடியோ, சாமான்யர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் பிராட் வில்லியம்ஸ், நிதி திரட்டி, குவாடனையும் அவரது தாயாரையும் டிஸ்னி லேண்டுக்கு அழைத்துச் செல்ல வழிவகை செய்துள்ளார். ‘‘இந்த உலகத்தில் மனிதம் என்று ஒன்று உள்ளது. அதைப் பெற அனைவரும் தகுதியானவர்கள் என்று உரக்கக் கூறுவோம்...” என்று பிராட் வில்லியம்ஸ் கூறியுள்ளார். இவரும் உயரம் குறைவானவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உலகம் முழுக்க குவாடனுக்கு ஆறுதலும் ஆதரவுக் கரங்களும் நீண்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் #iStandWithQuaden என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.  இந்நிலையில் National Rugby Leagueஇல் பங்கேற்கும் ஆஸ்திரேலியா வீரர்கள் குவாடனுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டதுடன், விளையாட்டு மைதானத்துக்கு குவாடனை அழைத்துச் சென்று கவுரவித்துள்ளனர். மைதானத்தில் ரக்பி அணியின் கேப்டன் குவாடனின் கையைப் பிடித்து முன்னே செல்ல வீரர்கள் அனைவரும் சிறுவனின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர்!

“எனது மகன் தன் வாழ்க்கையில் மோசமான நாளையும் சந்தித்துவிட்டான். மிகச் சிறந்த நாளையும் சந்தித்துவிட்டான்...” என்று குவாடனின் தாயார் யாரகா பேலஸ் இதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறார்.‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...’ என்பது வள்ளுவர் வாக்கு!

அன்னம் அரசு