ஓரிகாமி வன்முறைக்கு எதிராக குழந்தைகளை வளர்க்கும் கலை!



பேப்பரில் மடித்தும் வளைத்தும் உருவங்கள் செய்யும் ஜப்பானிய கலையே ஓரிகாமி.

சம பரப்புள்ள காகிதத்தை கருவியாகக் கொண்டு மடித்தல் மற்றும் வளைத்தல்  மூலமாக மட்டுமே உருவங்களை உருவாக்க வேண்டும். காகிதங்களை வெட்டியோ ஒட்டவோ கூடாது என்பது இக்கலையின் ஸ்பெஷல்.17ம் நூற்றாண்டில் ஜப்பானில் புகழ்பெறத் தொடங்கிய இக்கலை, 1900களில் மற்ற நாடுகளுக்கும் பரவியது. இன்று பாரம்பரிய மரபுப்படி மட்டுமல்ல... நவீன வடிவிலும் இக்கலை முத்திரை பதித்து வருகிறது.

‘‘எங்களைப் பொறுத்தவரை இந்தக் காகிதக் கொக்குகள் நிச்சயம் ஒரு தோட்டாவைத் தடுத்து நிறுத்தும். வன்முறைக்கு எதிராக குழந்தைகளை வளர்த்தெடுக்கும். இந்தக் காகிதக் கொக்குகள் குழந்தைகள் மனதில் பாசிடிவான மன நிலையை உருவாக்கி மனிதத்தன்மையுடன் அவர்களை வளர்க்கும்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் தியாகசேகர்.

12 ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பயணித்து பல்லாயிரம் மாணவ மாணவிகளுக்கு இக்கலையை கற்றுத்தந்திருக்கிறார் தியாகசேகர். ஒரு காகிதத்தை இரண்டாக மடித்து ஓர் உருவத்தை கொண்டு வருவது முதல் நூற்றுக்கும் மேலான - ஆம்... நூற்றுக்கும் மேலான - மடிப்புகளில் உருவத்தைக் கொண்டு வருவது வரை ஓரிகாமி குறித்த அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார். 500க்கும் மேற்பட்ட உருவங்களை காகித மடிப்பு
களில் படைத்திருக்கிறார்.

‘‘தஞ்சாவூர் பக்கம் நக்கம்பாடி கிராமம்தான் பூர்வீகம். பள்ளி படிக்கும் போது பேப்பர் கிராஃப்ட் கற்றுத்தர ஒருவர் வருவார். அந்தக் கலை மீதுள்ள ஈர்ப்பால் அவர் அருகிலேயே நிற்பேன். என் ஆர்வத்தைக் பார்த்து கலர் பேப்பர்களைக் கொடுத்து என்னை நறுக்கச் சொல்வார்.
கிராஃப்ட் ஒர்க்குகள் முடிந்தபிறகு எஞ்சிய காகிதத் துண்டுகளைச் சேகரித்துக்கொள்வேன். ஒருமுறை அவர் புறப்படும்போது பேப்பர் கிராஃப்ட் குறிப்புகள் அடங்கிய ஓவியப் புத்தகம் ஒன்றைத் தந்துவிட்டுச் சென்றார்.

அன்று முதல் பள்ளிக்காலம் முழுவதும் என் கையில் எந்தப் பேப்பர் சிக்கினாலும் பூக்கள், கப்பல், ராக்கெட், பறவை... என ஏதாவது செய்வேன். பள்ளி விழாக்களில் பேப்பர் டெக்கரேஷனில் என் கைவண்ணம்தான் மிகுதியாக இருக்கும்...’’ என்று சொல்லும் தியாகசேகர், இக்கலையின் பெயர் ஓரிகாமி என்றே தெரியாமல்தான் கற்றாராம்!

‘‘அறிவொளி இயக்கம் மூலமும் காகித மடிப்புக் கலை குறித்த அறிமுகம் கிடைத்தது. இப்படித்தான் ஓரிகாமி கலைப் பயணம் எனக்குள் தொடங்கியது.
கல்லூரியில் சோஷியாலஜி எடுத்தேன். பிறகு எம்.எஸ்.டபிள்யூ முடித்தேன். சமூக செயற்பாட்டாளர் ஆண்டோவின் அறிமுகம் கிடைத்தது. மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கான அவரது செயல்பாடுகள் என்னை மலைக்க வைத்தது. தமிழகம் முழுக்க உள்ள பள்ளிகளில் களிமண் பொம்மைகள் செய்வது, உலகத் திரைப்படங்கள் திரையிடுவது என பயணிக்க ஆரம்பித்தேன்.  

இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் இயங்கி வரும் ‘குக்கூ’ அமைப்பின் சிவராஜ் தொடர்பு கிடைத்தது. அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அவருடன் மூன்றாண்டுக் காலம் செயல்பட்டேன். குழந்தைகள் சார்ந்தும், சூழலியல் சார்ந்தும் இயங்கத் தொடங்கினேன்.

அணுகுண்டு பாதிப்பின் மூலம் இறந்து போன ஜப்பான் சிறுமியின் காகிதக் கொக்கு கதையை கேள்விப்பட்டேன். ‘ஓரிகாமி’ என்ற பெயரும் அப்போது தான் தெரிய வந்தது. இதனை அடுத்து ஓரிகாமியின் தந்தை என்றழைக்கப்படும் அகிரா யசுவாவின் மாடர்ன் ஓரிகாமி கலையைப் பற்றி அறிந்துகொண்டேன். இந்தக் கலை ஜப்பான் மக்களிடம் உருவாக்கியிருக்கும் மனித நேயத்தைக் கண்டு வியந்தேன்.

இதனிடையே, ‘குக்கூ’ சிவராஜின் ஆலோசனைப்படி, நம்மாழ்வாரின் வானகத்தில் சேர்ந்து. அவருடன் பயணித்தபோது முழுமையான தெளிவு கிடைத்தது. எவரும் முழுமையான ஈடுபாடு கொள்ளாதிருந்த ஓரிகாமியை நம் குழந்தைகளிடம் கொண்டு செல்லவேண்டுமென்று முடிவெடுத்தேன்...’’ என்ற தியாகசேகர், இதன் பிறகு சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் முடித்த இளம் கலைஞர்களுடனும், குழந்தைகளுடன் இயங்கும் கலைஞர்களுடனும் பழகத் தொடங்கியிருக்கிறார். ஓரிகாமியையும் தீவிரமாகக் கற்க ஆரம்பித்திருக்கிறார்.

‘‘ஆண்டுதோறும் ஜப்பான் சிறுமி சடகோ சசாகி நினைவு தினமான அக்டோபர் 25 அன்று பள்ளி மாணவர்களைக் கொண்டு 1000 கொக்குகள் செய்து மக்கள் பார்வைக்கு வைக்கிறார்கள்.இதைப் பின்பற்றி சில ஆண்டு களுக்கு முன் தமிழக மாணவர்களைக் கொண்டு அதே தினத்தில் ஆயிரம் ஓரிகாமி கொக்குகளை உருவாக்கி பார்வைக்கு வைத்தேன்...’’ என்ற தியாகசேகரின் ‘கொக்குகளுக்காகவே வானம்’ என்ற நூல்தான் தமிழின் முதல் காகித மடிப்புக் கலை புத்தகம்!

‘‘இந்த 12 ஆண்டுகளில் பல்லாயிரம் மாணவர்களுக்கு இக்கலையைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இதில் பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். இப்போது சில தனியார் பள்ளிகளில் மாதம்தோறும் ஓரிகாமி வகுப்புகள் எடுக்கிறேன். ஓரிகாமி என்பது குழந்தைகளுக்குத் தேவையான அறிவு விளையாட்டு.

அதேநேரம் கல்வி சார்ந்த பலனும் தரக்கூடியது. உதாரணமாக, ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து கொக்கு மடிக்கும்போது ‘கவனித்தல்’ என்ற செயல்பாடும் படைப்பாற்றலும் மேம்படும். அடிப்படை கணிதத்தைக் கற்றுக்கொள்ள
ஓரிகாமி துணைபுரியும். மொத்த ஓரிகாமி ஸ்டெப்ஸும் கணிதம் போலவே இருக்கும்.

தனிப்பட்ட முறையில் ஓரிகாமி என்னை ஈர்த்ததற்கு காரணம், இதிலுள்ள எளிமை. ஓரிகாமிக்கான மீடியம் என்பது மிக எளிதானது. வேஸ்ட் பேப்பர் கூட போதும்...’’ என்கிறார் தியாகசேகர். =

இவர்தான் சடகோ சசாகி

‘‘நான் உங்கள் சிறகுகளில் அமைதியை எழுதுவேன்... நீங்கள் உலகம் முழுவதும் பறப்பீர்கள்...”- இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டால் கொல்லப்பட்ட சிறுமி சடகோ சசாகியின் (Sadako Sasaki) வரிகள் இவை.ஓரிகாமி கலையில் அறியப்படும் மிகப் புகழ்பெற்ற உருவம் ஜப்பானியக் கொக்கு. பொதுவாக ஒரு சதுர வடிவிலான இரண்டு பக்கங்களிலும் மாறுபட்ட வண்ணங்கள் கொண்ட காகிதம் இக்கலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

பாரம்பரியமான ஓரிகாமி 1603ம் ஆண்டு முதல் 1867 வரை (இடோ சகாப்தம் என இக்காலகட்டத்தை ஜப்பானில் அழைக்கிறார்கள்) பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது. ஓரிகாமி கலையின் சில நுட்பங்கள் இப்போது சிற்பம் மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படுகிறது.

ஜப்பானில் ஹிரோஷிமா பகுதியைச் சேர்ந்தவள் சடகோ சசாகி. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிர்வீச்சால் சசாகிக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டாள்.

ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்து இறைவனுக்கு சமர்ப்பித்தால் அவர்களுடைய வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்பது ஜப்பானிய நம்பிக்கை. அதனைக் கூறி சசாகியின் தோழன் ஒருவன் காகிதக் கொக்கு ஒன்றைச் செய்து வந்து சசாகிக்கு தந்தான்.

அதனைத் தொடர்ந்து சசாகியும், தன் நோயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன்னுடைய பிற தோழிகளும் குணமாக காகிதக் கொக்குகளைச் செய்யத் தொடங்கினாள்.

சசாகியின் உடல் நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காகிதக் கொக்குகளைச் செய்வதற்கு காகிதங்கள் கிடைக்கவில்லை. உடனே தனக்கு மருந்துகள் எழுதப்பட்ட மருந்துச் சீட்டை வைத்தே காகிதக் கொக்குகளைச் செய்யத் தொடங்கினாள் சசாகி.இப்படியாக 644 கொக்குகளை சசாகி செய்துவிட்ட நிலையில், புற்றுநோய் முற்றி ஒருநாள்...

சசாகியின் மரணம் ஜப்பானையே உலுக்கியது. உலக அமைதிக்கான குறியீடாக சசாகி மாறினாள். அவள் செய்த 644 காகிதக் கொக்குகளையும் இப்போதும் ஜப்பான் பாதுகாத்து வருகிறது.இதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 அன்று ஒவ்வொரு ஜப்பானிய பள்ளியும் குறைந்தது ஆயிரம் காகிதக் கொக்குகளையாவது ஓரிகாமியில் உருவாக்கி வருகிறது!

திலீபன் புகழ்