‘பாரம்



பெற்றோர்களை பாரமாக நினைக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் ‘பாரம்’.நகரத்தில் தங்கை குடும்பத்தோடு வசிக்கும் முதியவர் ராஜு. தங்கை, அவரது மூன்று மகன்களின் பிரியத்தில் அவரது காலம் நகர்கிறது.
விபத்தில் சிக்கி இடுப்பெலும்பு முறிந்துபோக, செலவழிக்க மனம் வராமல் மகன் முத்துக்குமார் அவரைக் கைவிடுகிறார். ஒரு கட்டத்தில் முதியவரைக் கருணைக்கொலை(!) செய்துவிடுகிறார்கள்.

மாமனை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை தங்கையின் மகன்கள் சட்டத்தின் கையில் பிடித்துக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். வயோதிகர்கள் எதிர்கொள்ளும் வலி, வேதனைகளைப் பேச எத்தனித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி.

நகரத்தில் அன்பான சிறு குடும்பம் நல்லபடியாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. எளிமையான ட்ரீட்மென்ட்டில் வலிமையான உணர்வுகள். முதல் பாதியில் மனதின் ஆழத்தில் தைக்க முயன்றவர்கள் பிற்பகுதியில் டாக்குமெண்டரி தனத்தில் களமிறங்குவது ஏன்?

முதியவராக ராஜு, அவரது தங்கை ஜெயலட்சுமி என கதாபாத்திரத்துக்கு அத்தனை நெருக்கம். மகனாக முத்துக்குமார் முகபாவனைகளிலேயே பின்னி எடுக்கிறார். மாமா பையன்களாக சமணராஜா, பிரேம்நாத், சுகுமார் சண்முகம் என அற்புத உணர்வளிக்கிறார்கள்.மனிதத்தைப் பேசும் இந்தப் படம் எல்லோரிடமும் போய்ச்சேர வழிவகை செய்திருக்க வேண்டும். அருமையாக பதற்ற உணர்வைக் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன்.
’பாரம்’ நம்பிக்கையூட்டும் பெரிய குறும்படம்.

குங்குமம் விமர்சனக் குழு