மாஃபியா



போதை மருந்து சப்ளை செய்யும் கும்பலின் முகமூடியைக் கிழிக்க முயலும் ‘மாஃபியா’.போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பான அதிகாரியாக இருக்கிறார் அருண் விஜய். பாழ்படும் இளைஞர் கூட்டத்தை மீட்பதே அவர் எண்ணம். அவருக்குத் துணையாக பிரியா பவானி சங்கர், பாலா ஹாசன் இருக்கிறார்கள்.

கும்பலின் தலைவனை நெருங்க முயல சகல முயற்சிகளிலும் தோல்வி. அருண் விஜய்யின் தம்பியும் போதைக்கு அடிமையாக, அடுத்தடுத்து மர்மமாக உயரதிகாரிகளும் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களையெல்லாம் கொன்றது யார்? போதைப்பொருள் கும்பல் தலைவனைக் கண்டுபிடித்து நிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடிந்ததா என்பதே கிளைமாக்ஸ்.


அருண் விஜய்யின் உழைப்பு மெச்சத்தக்கது. விறைப்பும் முறைப்புமாக உடல் மொழியிலும் வெரைட்டி வித்தியாசம். சண்டைக் காட்சிகளிலும், பிரசன்னாவை மிரட்டி தில் காட்டும்போதும் பிரமாதமான கம்பீரம். தேடுதல் வேட்டைகளிலும் சண்டைக் காட்சிகளிலும் கூடுதல் ஈர்ப்பு.

எந்தச் சூழ்நிலையிலும் பதறாமல் எதிராளியின் சைக்காலஜியை சிதைப்பதாகட்டும், புன்னகையோடு அயோக்கியத் தனங்களை செய்து முடிப்பதிலாகட்டும்… சூப்பர் வில்லனாக பிரசன்னா கச்சிதம். நல்ல உயரத்திலிருந்து காதலிப்பதோடு துப்பாக்கியில் குறிபார்த்தும் சுடுகிற பிரியா பவானி சங்கர் அழகு.

இந்த மாதிரியான போதைப் பொருள் மாஃபியா கதையில் அடுத்தடுத்தான சாகசங்கள், கண்டுபிடிக்கப்படும் கருப்பு ஆடுகள், விரிவான திட்டத்துக்கான முயற்சிகள் என இருப்பது தான் அடிப்படை அம்சமாக இருக்கும். மாறாக அருணை சரியாக சண்டை போட வைத்தால் போதுமென நினைத்துவிட்டாரா இயக்குநர் கார்த்திக் நரேன்? அருண் விஜய் பொறுப்பான அதிகாரியாக ஸ்கெட்ச் அடித்திருப்பது மட்டும் போதுமா?

அதற்கான காரணகாரியங்கள் வேண்டாமா? ஸ்கிரீன்ப்ளேயின் பவர்-ப்ளே முக்கியமில்லையா டைரக்டர் ஸார்? அவ்வளவு விலைமதிப்பான போதைப் பொருட்களுக்கு வைத்திருக்கிற பாதுகாப்பு இவ்வளவுதானா? அருண், பிரசன்னாவுக்கு கொடுத்திருக்கும் பில்ட்-அப்பில் பாதியாவது கதை அம்சத்தில் வேண்டாமா? திக் திடீர் திருப்பங்களுடன் எத்தனை இறுக்கமாக திரைக்கதை ஈர்த்திருக்க வேண்டும்?

செம பில்ட்-அப்போடு ஆரம்பிக்கும் முன்பகுதியின் தொடக்கம் காரணமாக பெரிய அசுரத்தனங்களை எதிர்பார்த்தால் ஏமாற்றம். அடுத்தடுத்த திரைக்கதை ஏன் அத்தனை தடுமாறுகிறது?கோகுல் பினோயின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் பன்ச் ஒவ்வொன்றிலும் அசர வைக்கிறது. தடதடத்து பயணித்து படத்தோடு ஒரு நெருக்க உணர்வையாவது பார்வையாளர்களுக்குக் கடத்துவது அவரே.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி திகில் டிவிஸ்ட் ஏற்றுகிறது. ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு படத்துக்கு பக்கபலம். அடுத்த பாகம் வருகிற ஐடியா கிளைமேக்ஸில் தெரிவது சுவாரசியம். திரைக்கதையின் உறுத்தல்களைத் தாண்டிப் பார்த்தால் நல்ல பரபரப்பு ஆட்டத்துக்கு வகையான படம்தான். படத்தின் பெயரில் இருக்கும் வைப்ரேஷனை அடுத்த பாகத்தில் எதிர் பார்க்கலாமா?

குங்குமம் விமர்சனக் குழு