சித்தியில் டான்ஸ் ஆடின பொண்ணுனுதான் என்னை அடையாளம் காட்டுவாங்க..!



சற்றே ஃப்ளாஷ்பேக் போகலாம். 20 வருடங்களுக்கு முன் ‘சித்தி’ சன் டிவியில் ஆரம்பமாகி களைகட்டி இருந்த நேரம்.
கண்ணின் மணி
கண்ணின் மணி
நிஜம் கேளம்மா
கங்கை நதி வைகை நதி
பெண்தானம்மா…

- என பெண்ணின் பெருமையை தன் அமுதக்குரலில் நித்ய மகாதேவன் பாடிக் கொடுக்க... அழகாக புருவம் உயர்த்தி, புன்னகை சிந்தி, கண்களில் சிரித்து பரதம் ஆடிய பெண்ணை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு..?

இன்று மறுபடியும் ‘சித்தி 2’ சன் டிவியில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ‘சித்தி’க்கு பரதம் ஆடிய அந்த இளம் பெண் நிருத்யா ஜெகநாதன்…. இப்போது நம்மிடம் வந்து ஒரு ரகசியம் போல் அமர்கிறார். தியானக்கூடம் போல் இருக்கிறது வீடு. இப்போது நடுத்தர வயதின் கனிவில் கண்கள் சிரிக்கின்றன சிநேகமாக.

‘‘என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க..? ஆச்சர்யமாக இருக்கே! நான் ஆறு வயதிலிருந்தே பரதம் கத்துக்கிட்டு ஆடிட்டு இருக்கேன். என்னோட குரு கிருஷ்ணகுமாரி நரேந்திரன் பந்தநல்லூர் பாணியில் பிரமாதமான ஆசிரியர். குரு - சிஷ்யை உறவைத்தாண்டி அம்மா - குழந்தை மாதிரியான பாசம் காட்டுவாங்க. நடிகர் சிவகுமார் சாரின் பெண் பிருந்தா என்னோட நடனப் பள்ளியில் படிச்சாங்க. ராதிகா மேடத்தின் மகள் ரயான் கூட எங்களோட கொஞ்ச நாள் படிச்சாங்க.

அந்தச் சமயத்தில்தான் சிவகுமார் சார் ‘‘சித்தி’யில் ஒரு டான்ஸ் வேணும். அதற்கு சில நிமிடங்கள் வருகிறமாதிரி பரதக் காட்சிகள் வேணும்’னு சொன்னாங்க. காஞ்சிபுரத்தில்தான் அந்தக் காட்சிகளை ஷூட் செய்தாங்க. அங்கே போய்த்தான் எங்க குரு கிருஷ்ணகுமாரி அம்மா நடனம் அமைச்சாங்க. ரொம்ப நேரமெல்லாம் இல்லை. ஆனாலும் அந்த பாடலும் சரி, காட்சி களும் சரி நன்றாக அமைந்துவிட்டது.

கோயிலிலிருந்து யானை அசைந்து வெளியேறும் காட்சியில் ஆரம்பிக்கிற பாடலில் எனது நாட்டியமும் இடம் பெற்றது. அதை டைட்டிலில் வைப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை!சீரியலின் 200வது எபிசோடில் அமையும் க்ளைமேக்ஸுக்கான பாடலும், ஆடலும்தான் அது. டைட்டில் பாடலில் இடம் பெற்ற காட்சி சீரியலில் எப்போது வரும் என்று தூண்டும் விதத்தில் அந்த பரதம் அமைந்து விட்டது.

அப்பொழுதெல்லாம் எங்கு வெளியே சென்றாலும் ‘சித்தி’யில் பரதம் ஆடிய பெண் என என்னைச் சுட்டிக்காட்டி பேசுவார்கள். கிராமப்பக்கம் போனால் இன்னும் நேரில் பக்கத்தில் வந்து தங்கள் அன்பைக் காட்டுவார்கள். பெரிய ஞாபகத்தையும், நெகிழ்ச்சியையும் எப்போது நினைத்தாலும் உருவாக்கிவிடும் அந்தப்பாட்டு. எனக்கு ஒரு நல்ல பெயர் கொடுத்ததில் இந்தப் பாடலுக்கு ஓர் இடம் உண்டு...’’ நெகிழும் நிருத்யா
ஜெகநாதன், இப்போது ‘பாதுகா சென்டர்’ தொடங்கி, பரத நாட்டியம் கற்றுத் தருகிறார்:

‘‘பிரமாதமான கொடுப்பினையோடு எனக்கு என் குரு சொல்லிக் கொடுத்ததை நானும் பகிர்ந்து அளிக்கிறேன். எங்க வீட்டிற்கு எதிரேதான் என் குரு வீடும் இருந்தது. நான் ஸ்கூல் விட்டதும், காலேஜ் விட்டதும் அங்கேதான் இருப்பேன். கிட்டத்தட்ட குருகுலவாசம்னு சொல்லலாம். ரொம்ப நல்லாயிருக்கும். அவங்க கூடவே இருந்து, பரதம் பயில்வது எல்லாம் அற்புதமாக இருக்கும். அவங்க முழிச்சிட்டு இருக்கும் போது கூடவே இருப்போம். அவங்க எப்ப கூப்பிடுறாங்களோ அப்ப ரெடியாக இருக்கணும்.

பழக்கவழக்கம், அடிப்படையான ஒரு நேர்மை, ஓதாமல் உணர்ந்ததுன்னு சொல்வாங்க. அதெல்லாம் கிடைச்சிருக்கு. நாட்டியமே தெய்வீகக் கலைதான். உள்நோக்கி நம்மை எடுத்திட்டுப்போற கருவிதான். இதில் ஈடுபாடு வந்திட்டால் கூடவே சேர்த்து ஆன்மீகத்தையும் கொண்டு வந்து கொடுக்கும். இது பகவான் கொடுக்கிறது.

இப்ப டான்ஸ் கத்துக்கிற வங்களுக்கு நிறைய ப்ரஷர் இருக்கு. சோஷியல் மீடியா, வீடியோ கேம்ஸ் என்று டீன் ஏஜ்ல நிறைய மனசு அலைபாய்கிற மாதிரி ஆகிப்போச்சு. அப்படியும் பலருக்கு பரதத்தில் ஆர்வம் இருக்கு. அவர்களுக்கு எனக்குக் கிடைத்த மாதிரி குருமார்கள் அமையணும்.
அந்த நாளில் பெண்கள் ஆடவும், பாடவும் அதிகம் வரமாட்டாங்க. இப்ப பெண்கள் கச்சேரிகளில் அதிகம் பாடுவதும், ஆடுவதும் பார்க்கிறப்போ சந்தோஷமாக இருக்கு.

டீன் ஏஜ்ல பரதம், பாட்டுனு எதையாவது பிடிச்சுக்கிட்டு இருந்தால் மனசு அப்படியே அமைதியாகிடும். பாட்டுக்காரங்களுக்கு சாரீரம் வசதியா இருக்கணும். பரதம் ஆடுறவங்க மேடையில் வந்தால் எல்லாத்தையும் மறந்திட்டு ஒரு தியான நிலைக்கு வந்திடணும். அப்படி இருந்திட்டால் நமக்கு ஓர் இடம் வந்திடும்.

நல்ல பரதம், பாட்டுன்னு வரும்போது மனதிலே ஒரு சாந்தி இருக்கும். அந்த மனச்சாந்திக்காகத்தான் நாம் எல்லோரும் எல்லாக்கஷ்டமும் படுறோம். அதனால் மனச் சாந்தி வேணும் என்றால் எதைச் செய்தாலும் அதை தெய்வ அர்ப்பணமா செய்தால் நமக்கு எந்த விதமான குறையும் இருக்க முடியாது. நிறையினால் வரக்கூடிய கர்வமும் வராது.

நாம எது செய்தாலும் அவன் தருகிற பிச்சை, அதை திருப்பி அவனுக்கே அர்ப்பணம் செய்கிறோம்னு நினைக்கணும். சங்கீதம் என்றால் பாட்டு, நாட்டியம், இசைக்கருவிகள் வாசிப்பது இது எல்லாம்தான். புரிந்து கொண்ட அப்பா, அம்மாவும், அனுசரணையான கணவரும் கிடைச்சது எல்லாம் எனக்கு ஒரு நிறைவுன்னு சொல்லணும்!’’ சாந்தத்துடன் முடிக்கிறார் நிருத்யா ஜெகநாதன்.

செய்தி:நா. கதிர்வேலன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்