சங்கத் தலைவன்



நக்சல்பாரி இயக்கத்தில் முழு நேரமாக 8 ஆண்டுகள் பணியாற்றியவன் நாவல் எழுதியது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை...
அந்த நாவலும் அவன் வாழும் காலத்திலேயே தமிழில் படமாவதும் இதுவே முதல் முறை!

‘‘எட்டு வருஷ நக்சல்பாரி வாழ்க்கைய அவ்வளவு எளிதில் ரத்தமும் சதையுமாக கடந்திட முடியாது. ஆனால், அதற்கான பதிவில் முழு ஈடுபாட்டோட இருந்திருக்கேன். அநேகமாக தமிழில்... ஏன், இந்திய அளவில் என்றும் சொல்லலாம்... வாழ்ந்து பார்த்து எழுதின முதல் நக்சல்பாரி நாவல் ‘தறியுடன்’. இதை ‘பொன்னுலகம் பதிப்பகம்’ வெளியிட்டிருக்கு.

இத்தகைய ஒரு நாவலை நான் எழுதி, அது வாசகர்களிடம் பெரிய அளவில் போய்ச் சேர்வதும், அதுவே ‘சங்கத்தமிழன்’ திரைப்படமாக உருவாவதும் இன்னும் சந்தோஷம். அதற்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடிந்தது அளவிட முடியாத சந்தோஷம்!’’

எழுத்தாளர் இரா.பாரதிநாதனிடம் நிறைவும், நிம்மதியும் ததும்பி வழிகின்றன. எளிமையும், பூரணமும் கொண்டிருக்கும் எளிய ஒண்டுக்குடித்தன வீட்டில் இருக்கிறார். புகைகிற சிகரெட்டோடு பரவுகிறது பேச்சு. அதிர அதிர சிரிப்பு. சிவக்கச் சிவக்க கோபம். அனுபவங்களோடு கருணையும், காட்டமுமாகத் தொடர்ந்தது பேச்சு.‘தறியுடன்’ நாவல் மிகக் கவனம் பெற்றிருக்கிறது...

தொழிலாளர்களின் வர்க்கப்போராட்டம்... இதுதான் இந்த நாவல் சொல்ல வருகிற சங்கதி. எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள், தொழிற்சங்கத்தை எப்படி ஆரம்பிக்கிறார்கள், அதில் ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்கள் என்ன, வர்க்கப் பிணைப்பு எப்படி அமைந்தது, அவர்களிடம் இருந்த சாதியம், காதல், வரதட்சணை, விதவைகளின் மறுவாழ்வு குறித்தெல்லாம் நாவல் பேசுகிறது.

இது ஒரு நக்சல்பாரியின் சுயசரிதை. நான் 1982 - 90 வரை ‘மக்கள் யுத்தம்’ என்றழைக்கப்படுகிற மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழு நேர ஊழியனாக பணியாற்றினேன். நக்சல்பாரி என்ற வார்த்தையைக் கேட்டாலே பயந்து, நடுங்கிய ஓர் ஆளை அவர்கள் எப்படி வென்றெடுத்து தன் பக்கம் இழுத்துக் கொண்டார்கள் என்பதே ஓர் ஆச்சர்யம்.

பேரிரைச்சலாய் காதுகளில் இடையறாமல் ஒலிக்கும் இயந்திரச்சத்தம் தெரியுமா உங்களுக்கு? கைகள் வெட்டுப்படுவதும், மூக்கில் ரத்தம் வடிவதும், நெஞ்சுவலியும், காசநோயும், விசைத்தறி மனிதர்களுக்கு விதிக்கப்பட்டது. இந்த கொடிய வாழ்க்கையில் இருந்து அனுபவப்பட்டு, சுரண்டலுக்கு எதிராய் தொழிற்சங்கத்தில் இணைந்து போராடிப் பெற்ற அனுபவமும், தொடர்ந்த தலைமறைவு வாழ்க்கையும் இதில் பதிவாகியிருக்கு.

போலீஸ் அடக்குமுறை, கைது செய்யும்போது எப்படி தப்பித்தோம், மக்களை சோர்வடையாமல் எப்படி வைத்துக்கொண்டோம், போலீஸ் அடக்கு
முறையை எப்படி எதிர்கொண்டோம் என்பதையும் விவரிக்கிறது நாவல்.  இங்கே மக்களின் மேல் அக்கறைப்பட்டவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். லெனினை ஜார் மன்னர் பயங்கரவாதி என்றுதான் சொன்னார். மாவோவுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் சிவப்பு பயங்கரவாதி. நம் ஈழத்து பிரபாகரனை எப்படி அழைத்தார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதான். மக்களுக்காக பாடுபட்டவர்கள் இப்படித்தான் எல்லாவற்றையும் தாண்டி வந்திருக்கிறார்கள்.

இதுவரை நக்சல்பாரிகள் பற்றி கண்டு, கேட்டு எழுதியவர்களே அதிகம். நக்சல்பாரி வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்த நான், வாழும் காலத்திலேயே என் நாவல் வெளிவருவதையும், அதுவே அக்கறையுடைவர்களின் கையில் இருந்து படமாவதையும் அரிதான விஷயமாகவே பார்க்கிறேன். இந்த நாவல் என்னுடைய எட்டு வருட உழைப்பு. நான் ஐந்தாவது வகுப்பு வரையே படித்திருக்கிறேன்.

பொதுவாக நாவல் படமாக்கப்பட்டு வெளிவந்ததும், எழுத்தாளர்கள் சற்று ஆதங்கம் கொள்கிறார்களே..?
தோழர் லெனின், ‘திரைப்படம் என்பது அற்புதமான கலை. அதை கம்யூனிஸ்ட்கள் கற்றுக்கொண்டு செயலாற்ற வேண்டும்’ என்றார். என்னுடைய கலை எட்டுப் புத்தகங்களில் வெளிவந்து விட்டது. முன்பு சீரியலில் பணி செய்திருக்கிறேன். சீரியலுக்கு இனி எழுத முடியாது. நானே எதிர்பார்க்காத விதமாக பட வாய்ப்பு வந்தது. ‘சங்கத்தலைவன்’ வெளிவந்த பிறகுதான் அடுத்த கட்டம் போவது பற்றி தெரிய வரும். நான் நினைத்ததை எடுத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. கொள்கைக்கு எதிராக இல்லாமல் இருந்தாலே போதும்.

திரைப்படங்களைப் பொறுத்தவரை இங்கே கதாசிரி யர்களுக்கு பெரிய மரியாதை இல்லை. மலையாளத்திலும், தெலுங்கிலும் நிலைமை வேறு. இங்கே வெற்றிமாறன், மணி மாறன் மாதிரியானவர்கள் சில நல்ல விஷயங்களை முன்னெடுக்கிறார்கள். வெற்றிமாறன் அடுத்து கூட ‘அஜ்னபி’ நாவலைத்தான் எடுத்து கையாளுகிறார். நூல் வடிவைக் காட்டிலும் சினிமா மீடியம் அதிகமும் கவனம் பெறுகிறது.

சீரியல்களில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் சில சீன்களை மாற்றி எழுதித்தர முடிந்தது. நாவலைவிட சினிமாவை நன்றாக எடுக்கிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ‘செம்மீன்’, ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘அசுரன்’ என மிகச் சிறந்த உதாரணங்கள் உள்ளன. உமா சந்திரனின் நாவலின் க்ளைமேக்ஸிலிருந்து முற்றிலும் மாறுபட்டது ‘முள்ளும் மலரும்’ பட க்ளைமேக்ஸ். கதாசிரியனாக ஆதங்கப்படுவதை விட பார்க்கிற ஆடியன்ஸ், நாவலை விட படம் அருமையாக வந்திருக்கிறது என்று சொல்லணும்.

மணிமாறனின் திரைமொழி மீது எனக்கு பெரும் நம்பிக்கையிருக்கிறது. இந்த நாவலை எழுதும்போது நாவல் வெளிவருமா என்று தெரியாது. ஆனால் இதை தட்டச்சு செய்து முடித்தவுடனே ஒரு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. எல்லா நண்பர்களும் என்னை தூக்கிச் சுமந்திருக்கிறார்கள் எனத்தான் சொல்ல வேண்டும்.இப்போதும் இயக்கத்தில் இருக்கிறீர்களா..?

இயக்கம் பின்னடைவுக்கு போய்விட்ட பிறகு அதிலிருந்து விலகி விட்டேன். தோழர் மணிவாசகம் போன்றவர்கள் தொடர்ந்து சென்றார்கள். இப்போதுதான் அவர் கொல்லப்பட்டார். இன்னும் தத்துவப் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறதென்று நினைக்கிறேன்.
இயக்கத்திலிருந்து வெளி வந்த நாள் முதல் மனம் சோர்வடையாமல் என்னை தற்காத்துக் கொள்ள மார்க்சியம் படிக்கிறேன். மார்க்சிய தத்துவத்திற்கு என்ன செய்தாய் என்ற கேள்வி பிறக்கும்போதுதான் நக்சல்பாரிகள் பற்றி எழுதுகிறேன். இப்படி எழுதுவது கூட பெரும் பயணமாகி விட்டது. என் சுய
சரிதையை எழுதப் போக அதுவே கட்சி வரலாறாக மாறியது.

தோழர் அருந்ததி ராய் கூட ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது சில நாட்கள் நக்சல்பாரி தலைவர்களைக் கண்டு திரும்பி எழுதிய குறிப்புகள்தான். கே.ஏ.அப்பாஸ் எழுதிய நாவல் கூட அவ்விதம்தான். ஆகவே ‘தறியுடன்’ நாவலே நக்சல்பாரிகளின் முழு வாழ்க்கையின் குறுக்கு வெட்டை முன் வைக்கும் முதல் நாவல் எனலாம். நான் சிந்திக்கிறேன்.

அது எனது உரிமை. அதைச் சொல்கிறேன். அது எனது கடமை. எனது நாவல்களோ, அது சார்ந்த படங்களோ மக்களிடம் ஆக்கபூர்வமாக எதாவது செய்யும் என   நம்புகிறேன். எதிர்பார்க்கிறேன். கருத்து சொல்கிறவன் விமர்சனங்களை மனதில் வைத்து சொல்வதில்லை. ஏனெனில் கருத்தே ஒரு விமர்சனம்தான் !

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்