கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-52



அன்னம் பாலிப்பான் அன்ன விநோதன்!

‘‘யாரிடமும் சொல்லக் கூடாது என ஈசன் சொன்னதாக சொல்கிறீர்கள்... ஆனால், அந்த ஈஸ்வரனே தன் சரி பாதியை உமையவளுக்கு தந்தவர்தானே..? இந்தக் கோணத்தில் பார்த்தால் எல்லாப் பெண்களும் அவரவர் கணவர்களின் சரிபாதிதானே..? இந்த அடிப்படையில் உங்களின் சரி பாதியாக இருக்கும் எனக்குக் கூடவா உண்மை தெரியக் கூடாது..?’’

நேரடியாகவே கேட்டாள் வேதியரின் மனைவி. இது கூட அவளாகக் கேட்கவில்லை. ஊர் மக்கள் அப்படி கேட்கும்படி தூண்டினார்கள். பிரதேசமே பஞ்சத்தில் தவிக்கையில் வேதியருக்கு மட்டும் எப்படி அனைத்து திரவியங்களும் கிடைக்கின்றன..? வேதியரின் மனைவியை துளைத்தெடுத்தார்கள்.
வேறு வழியின்றி அவர்கள் சார்பாக தன் கணவரிடம் கேட்டு விட்டாள்.

வேதியர் யோசனையில் ஆழ்ந்தார். மனைவியின் கேள்வி சரியென்று தோன்றியது. பெருமூச்சுவிட்டவர் அறைக்கதவு தாழிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்தார். வெளியிலிருந்து யாரேனும் ஒட்டுக் கேட்க வாய்ப்பிருக்கிறதா என்று பரிசோதித்தார்.பின்னர் ஈசனை மனமார வணங்கிவிட்டு மனைவியைப் பார்த்தார்:

‘‘ஆப்பனூரில் இருந்து ஈஸ்வரனுடன் இங்கு வந்தோம் இல்லையா..?’’
‘‘ஆமாம்... வந்த இடத்தில் பஞ்சம் நிலவுகிறது...’’ வேதியரின் மனைவி பதில் சொன்னாள்.‘‘எப்போதும்போல் இம்முறையும் ஈசனிடம் தஞ்சம் புகுந்தேன்... பஞ்சத்தில் இருந்து ஊர் மக்களைக் காப்பாற்ற என்ன வழி என்று கேட்டேன்...’’‘‘ஈசன் பதில் அளித்தாரா..?’’‘‘ம்... அசரீரியாக. ‘வைகை ஆற்றின் மணலை உள்ளன்போடு என்னை வேண்டி உலையில் இடு.

அந்த மணல் நீ வேண்டிய திரவியமாக மாறும். கவலைப்படாதே! யாரிடமும் இதை சொல்லவும் சொல்லாதே! ஆசிகள்!’ என்ற குரல் ஒலித்தது...’’ சொல்லிவிட்டு, தன் மனைவியின் எண்ண ஓட்டத்தை அறிய அவளது முகத்தை நோக்கினார் வேதியர்.
அதில் ஆச்சரியம் மிதமிஞ்சி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. ‘‘நிஜமாகவா..?’’
‘‘என்றேனும் நான் பொய் பேசியிருக்கிறேனா..?’’

‘‘சரி... பிறகு என்ன நடந்தது..?’’ வேதியரின் மனைவி பரபரத்தாள்.‘‘அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறாயே... அன்றிலிருந்து இன்று வரை, பிசிறு தட்டாமல் ஈசன் சொன்னதை செய்து வருகிறேன். அவன் அருளால் வைகை ஆற்றின் மணல் பாலாகவும், தேனாகவும் பன்னீராகவும், உணவாகவும் மாறுகிறது.

உன்னை, என்னில் சரி பாதியாக நினைப்பதாலேயே, நான் உனக்கு சொன்னேன்... புரிகிறதா? இந்த விஷயம் நமக்குள் இருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன்... யாரிடமும் சொல்லாதே... ஆப்புடையாரின் கோபத்திற்கு ஆளாகாதே! பூஜைக்கு நேரமாகிறது... நான் வருகிறேன். பார்த்து பக்குவமாக நடந்துகொள்...’’ மனைவியை எச்சரித்துவிட்டு, மேல் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு, வைகை ஆற்றின் மணலை அள்ளச் சென்றார் வேதியர்.

அவர் கண்ணை விட்டு மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மையார். உள்ளமெல்லாம் இன்றும் சமையல் திரவியமாக மணல் மாற வேண்டுமே என்ற கவலை. இன்று மட்டும் இந்த அதிசயம் நடக்கவில்லை என்றால் நாம் பெரிய பாவம் செய்தவளாக ஆகிவிடுவோமே என்ற பயம்.

‘அறியாமல் பிள்ளைகள் பிழை செய்தால் பொறுப்பது உன் கடமை அல்லவா? உலகீன்ற ஈஸ்வரா! என்னை மன்னித்தருள்வாய்...’ என்று ஈசனின் கமல மலரடியை உளமார சரண் புகுந்தாள். உண்மையில் ஆற்றில் ஏதோ புதையலை கண்டுபிடித்துவிட்டு அதை தன்னிடம் மறைக்கிறார் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், இப்படி ஒரு மர்மம் அதற்குப் பின்னே இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

சிறிது நேரத்துக்கெல்லாம் வழக்கம் போல மூட்டை நிறைய மண்ணைக் கொண்டு வந்தார் வேதியர். சமையல் அறைக்குச் சென்றார். கதவைத் தாழிட்டுக் கொண்டார். நொடிகள் உருண்டோடின.வேதியரின் மனைவிக்கு ஒவ்வொரு நொடியும் யுகம் போலக் கழிந்தது.‘‘அப்பனே ஈஸ்வரா..! உன் கட்டளையை மீறி மனைவியிடம் மணல் உணவாகும் மர்மத்தைச் சொன்னதற்காக இப்படி என்னை சோதிக்கலாமா? காலம் காலமாக வழி வழியாக என் மூதாதையர்கள் உனக்கு செய்து வந்த பூஜை இந்த ஏழை செய்த சிறு பிழையால் நின்று போகலாமா?’’

உரக்க அழும் வேதியரின் குரல் கேட்டு, நடந்ததை நொடியில் உணர்ந்தாள் அவரது மனைவி. தவறு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி உள்ளத்தை அரிக்க, வேகமாக சமையல் அறைக்கு ஓடினாள். அங்கு உலையில் இருந்த மணல், மணலாகவே இருந்தது!நெஞ்சமே வெடித்து விட்டது போல உணர்ந்தாள் அவள். என்ன செய்வது என்று தெரியாமல் அவளும் அழ ஆரம்பித்தாள்.

‘‘சூதாடுவது குற்றமே! ஆனால், தர்ம காரியங்களுக்காக சூதாடிய மூர்க்கர், நாயனாராக போற்றப்படுகிறார். ஆணில் பாதி பெண்ணாக இருப்பதும் உண்மைதான். ஆனால், இந்த நியதியை நீ பயன்படுத்திய முறை தவறு! ஒரு செயல் நன்மையைச் செய்வதும் தீமையைச் செய்வதும் அதன் நோக்கத்தின் அடிப்படையில்தான். ரகசியத்தை அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் நீ உன் உரிமையை பயன்படுத்தியதால் வந்த விபரீதம் இது. போகட்டும்.

கலக்கம் வேண்டாம்! என் பக்தன் ‘சுகுண பாண்டியனிடம்’ சொல்லிவிட்டேன். அவன் பூஜைக்குத் தேவையான பொருட்களோடும், பஞ்சத்தைப் போக்கும், நவ நிதிகளோடும் செல்லூர் என்னும் இந்த நற்பதிக்கு வந்து கொண்டிருக்கிறான். வாழ்க நீ... வளர்க உன் தொண்டு!’’
ஆகாயத்தில் இருந்து  ஒலித்தது, என்றும் இவர்களைக் காத்து வந்த ஈசனின் குரல்.

அதைக் கேட்டு வேதியரும் அவரது மனைவியும் புளகாங்கிதம் அடைந்து, ஈசன் கருணையை எண்ணி ‘‘சம்போ மகாதேவா!’’ என்று அவனை மீண்டும் சரண் புகுந்தார்கள். அப்போது, ‘‘ராஜாதி ராஜ! ராஜ மார்த்தாண்ட! வீர பராக்ரம! மாமன்னர் சுகுண பாண்டியன் வருகிறார்... பராக்... பராக்!’’ என்ற அரண்மனைக் காவலாளியின் குரல் தேனாக இருவரின் செவிகளிலும் பாய்ந்து, ஈசன் சொன்னதை உறுதி செய்தது!‘‘இப்படி பக்தனோட பசியை மட்டுமில்ல... ஊரோட ஒட்டு மொத்த பஞ்சத்தையும் தன் அருளால நீக்கினவர் ஆப்புடையார்...’’ நீண்ட பெரிய கதையைச் சொல்லி நிறுத்தினார் நாகராஜன்.

‘‘அன்னம் ந நிந்த்யாத்! தத் வ்ரதம்! பிரனோ வா அன்னம் - இது தைத்ரீய உபநிஷத்தோட வரிகள். உணவை நிந்திக்கதே! அதுதான் நல்ல விரதம்! இந்த உயிரே அன்னம்தான். அதாவது இந்த உடல் இயங்க தேவையான சக்தியைத் தருவது உணவுதானே? அந்த இயக்கம் நின்னா மனிதன் இறந்துட்டதா அர்த்தம். ஆக, மனிதனை இயங்க வைக்கும் இந்த உணவுதான் உயிர்னு சொல்லலாம்.

அது மட்டுமில்லாம, இந்த உடம்பு சாப்பாட்டாலதானே வளருது..? அதனால இதையும் உணவோட இன்னொரு வடிவம்னு சொல்லலாம்! கூட்டிக் கழிச்சுப் பார்த்தா மனிதனோட உடலும் உயிரும் உணவுதான்...’’ நாகராஜனின் மனைவி ஆனந்தவல்லி தன் பங்குக்கு உரைத்தாள்.

‘‘அதனாலதான் திருமூலர் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’னு சொன்னாரா பாட்டி..?’’ ஆர்வத்துடன் கண்ணன் கேட்டான்.
ஆனந்தவல்லி புன்னகைத்தாள்: ‘‘ஆமாம்டா கண்ணா... ‘ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்’னு மாணிக்கவாசகர் சொன்ன மாதிரி உயிராகவும் உடலாகவும் இருக்கும் உணவை, கடவுள்னு சொல்லலாம்தானே! அதனாலதான் பெரியவங்க ‘அன்னம் பிரம்மா’னு சொல்லி வணங்கறாங்க. அதாவது உணவே கடவுள்னு! ‘உண்ணும் சோறு, நீர், தின்னும் வெற்றிலை, அனைத்தும் கண்ணன்’னு ஆழ்வார்கள் சொன்னதையும் இதே கோணத்துல பார்க்கலாம்...’’

‘‘ஆனந்தி ஏன் இதையெல்லாம் சொல்றானு பார்க்கறியா ஈஸ்வரி...’’ தன் முன்னால் அமர்ந்திருந்தவளைப் பார்த்துக் கேட்டார் நாகராஜன்.
‘ஆம்’ என தலையசைத்தாள் ஈஸ்வரி.‘‘காரணம், செல்லூர்ல கோயில் கொண்ட ஆப்புடையார் அந்தளவு சக்தியானவர்... மணலையே அன்னமாக மாத்தினதால அவருக்கு ‘அன்ன விநோதன்’னு வேற ஒரு திருநாமமும் உண்டு. அந்த திருநாமத்துக்கு பின்னாடி இருக்கும் தத்துவங்களைத்தான் இப்ப ஆனந்தி சொன்னா...’’

கணவர் சொன்னதை  ஆமோதித்தபடியே ஆனந்தவல்லி தொடர்ந்தாள்: ‘‘பலருக்கு உணவு கிடைக்கறதே கஷ்டமா இருக்கு! சிலருக்கு வீட்டு சாப்பாடு சாப்பிட முடியலையேனு கவலை! இன்னும் சிலருக்கு நினைச்ச உணவை சில நோய் காரணமா சாப்பிட முடியலையேனு ஏக்கம்...

வறுமை காரணமா ஒரு வேளை உணவைக் கூட சாப்பிட முடியலையேனு பலருக்கு துக்கம்... பசில அழற குழந்தை சாப்பிடாம அடம் பிடிக்குதே... என்ன செய்யனு தாய்மார்களோட தவிப்பு... இது எல்லாத்துக்கும் தீர்வு ஆப்புடையார் ஈசனோட காலடிதான்!’’

‘‘புரியுது மாமா... ஆனா நான் வீட்ல பணக் கஷ்டம்... அதுக்கு பரிகாரம் சொல்லுங்கனுதானே உங்ககிட்ட கேட்டேன்...’’ தயக்கத்துடன் கேட்டாள் ஈஸ்வரி. ‘‘அதைத்தான் ஈஸ்வரி சொல்லிட்டு இருக்கேன்!’’ நாகராஜன் மர்மமாகப் புன்னகைத்தார்.‘‘புரியலையே மாமா..?’’‘‘சரி... விவரமாவே சொல்றேன்...’’ என்றபடி நாகராஜன் தொடர்ந்தார்.   

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்