வேலை கேட்டு கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தோம்... இப்ப அந்த ஆபீசுக்கே உணவு சப்ளை பண்றோம்!Dream kitchen cafeable - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து செயல்பட்டு வரும் ஓர் உணவகத்தின் பெயர் இது.இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? வழக்கமான உணவகம்தான். ஆனால், இதை நடத்துபவர்கள்தான் சிறப்பு வாய்ந்தவர்கள்!ஆம். உணவு தயாரிப்பில் தொடங்கி பரிமாறுவது வரை அனைத்து பணிகளையும் செய்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். முயன்றால் முடியும் என்ற வார்த்தைக்கு உதாரணமாகத் திகழ்பவர்கள். மாற்றுத் திறனாளிகள் சிலர் அரசு வேலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க, இந்த உணவக ஐடியா உருவாகி இருக்கிறது.

எல்லோருக்குமே அரசு வேலை சாத்தியமில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய ரூ.29.47 லட்சம் நிதியைக் கொண்டு இந்தக் கனவு உணவகம் கடந்த ஜூலையில் திறக்கப்பட்டது.

சுற்றிலும் மரங்கள் சூழ பூங்கா செட்அப்பில் இருக்கிறது உணவகம். அதன் பின்னால், ஒரு கன்டெய்னரில் தனியாக சமையல் அறை. வெஜ், நான் வெஜ் என இரண்டு வெரைட்டிகளிலும் மதிய உணவுகள் விறுவிறுப்பாய் தயாராகிக் கொண்டிருந்தன.‘‘இதுல மூணு பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் வேலை பார்க்கறோம்.

எல்லோருமே கை, கால் பாதிக்கப்பட்டவங்க. ஒருத்தருக்கு வாய் பேச முடியாது. எனக்கு பிறவியிலேயே போலியோ குறைபாடு...’’ என சமையல் வேலைகளை மேற்பார்வை செய்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார் உணவகப் பொறுப்பாளரான கண்ணன்.

‘‘நான், பி.காம் முடிச்சிட்டு தொலைதூரக் கல்வியில எம்பிஏ பண்ணியிருக்கேன். ஒரு தனியார் ஃபைனான்ஸ்ல அக்கவுண்ட்ஸ் வேலை பார்த்தேன். அப்படியே, அரசு வேலைக்காக தொடர்ந்து மனு கொடுத்திட்டு இருந்தேன். என்னை மாதிரியே இன்னும் சிலர் வேலைவாய்ப்பு கேட்டு மனு கொடுத்திருந்தாங்க.

எல்லோரையும் ஒருநாள் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. பிறகு, ஒரு கேட்டரிங் நிறுவனம் மூலம் 45 நாட்கள் பயிற்சி கொடுத்தாங்க. இதுல ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் தொடங்கி சப்பாத்தி, பரோட்டா, நான் வெஜ் உணவுகள், குழம்பு வகைகள் என எல்லாவற்றையும் கத்துக் கொடுத்தாங்க. நாங்களும் ஆர்வமா கத்துக்கிட்டோம்.  

அப்புறம், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இந்த உணவகத்தை அமைச்சுக் கொடுத்தாங்க...’’ என்ற கண்ணனைத் தொடர்ந்தார் லட்சுமணன். ‘‘நானும் பி.காம் முடிச்சிட்டு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்ல வேலைக்குப் போயிட்டு இருந்தேன். போதுமான வருமானம் இல்ல. அதான் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்துல மனு கொடுத்து அவங்க மூலம் இந்தப் பயிற்சி கிடைச்சது.

இங்க என்னோட வேலையே தேவையான சாமான்கள் வாங்குறதும், மார்க்கெட்டிங் பண்றதும். தவிர, கலெக்டர் ஆபீஸ்
உள்ள டீ, வடை கொண்டு போய் கொடுப்பேன். அங்க சிலர் மதிய சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுப்பாங்க. அதனால, இப்ப நல்லா பிக்அப் ஆக ஆரம்பிச்சிருக்கு...’’ என்கிறார் நம்பிக்கையாக. இந்த உணவகத்தைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவேண்டுமென அலுவலர்களையும் பொதுமக்களையும் கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனால், அலுவலகத்தினுள்ளே காலையும், மாலையும் டீ, காபி, வடை தினுசுகளை சப்ளை செய்யும் அனுமதி இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.   
‘‘என்னால நடக்கவே முடியாது. அதனால, உணவகத்தின் கேஷியரா உட்கார்ந்திருக்கேன்...’’ என்கிற சதீஷ்குமார் ஒரு பி.ஏ. பட்டதாரி. ‘‘இப்ப ஒருநாளைக்கு சராசரியா ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் வரை ஓடுது. திங்கட்கிழமை எட்டாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுல மறுநாள் பொருட்கள் வாங்கத் தேவையான பணத்தையும், எங்களுக்கான தினப்படியையும் எடுத்தது போக மீதியை வங்கியில போட்டுருவோம்...’’ என்கிறார்.

இவரைப் போல நடக்க முடியாத விஜிெலஸ் காய்கறி நறுக்குதல், சப்பாத்தி, பரோட்டாவிற்கான மாவு பிசைதல் போன்ற பணிகளைச் செய்கிறார்.
போலவே, சிங்கப்பூரில் பணியாற்றி ஒரு விபத்தில் தன் வலது காலை இழந்த ஜேசுராஜும், வனஜா, செல்வ பாரதி, மகாலட்சுமி என மூன்று பெண்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.இந்த உணவகத்தில் பணியாற்றும் சமையல் மற்றும் டீ மாஸ்டர்கள் மட்டும் நார்மல் ஆட்கள். இதில், சமையல் மாஸ்டராக இருக்கும் ராஜகோபாலின் கதை உருக்கமானது.

அவரது மகளும், மகனும் மாற்றுத் திறனாளிகள். இதில், மகன் சமீபத்தில் இறந்துவிட்டார். இதனாேலயே, இவர்களுக்கு சமையல் மாஸ்டராக வந்துள்ளார் அவர். தொடர்ந்து சமையல் பணியில் மும்முரமாக இருந்த அந்தோணிராஜிடம் பேச்சு கொடுத்தோம். ‘‘எனக்கு சொந்த ஊர் ஏரல். அங்க மளிகைக் கடையில வேலை பார்த்தேன். ஒருநாளைக்கு நானூறு ரூபாய் கிடைச்சது. ஆனா, வேலை எனக்கு கஷ்டமா இருந்துச்சு. அதனால, அரசு வேலை வேண்டி மனு கொடுத்தேன். ஆனா, இவங்க தந்த பயிற்சி தனியா தொழில் செய்ற அளவுக்கு எனக்கு நம்பிக்கை தந்திருக்கு...’’ என்கிறார் உற்சாகம் பொங்க.      

‘‘இப்ப நாங்க வருமானத்தைப் பெருக்க வெளி ஆர்டர்களும் எடுத்துப் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். முதல் ஆர்டரே வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து கிடைச்சது. இதுல செலவு, எங்க சம்பளம் எல்லாம் போக 4 ஆயிரம் ரூபாய் லாபம் வந்தது. இப்படி தினமும் வர்ற வருமானத்துல இருந்துதான் எங்களுக்கான சம்பளத்தை நாங்க நிர்ணயிக்கணும். ஜெயிப்போம்னு நிறைய நம்பிக்கை இருக்கு..!’’ என மனஉறுதியுடன் அழுத்தமாகச் சொல்கிறார்கள் இவர்கள்.

பேராச்சி கண்ணன்

ஃபெலிக்ஸ்