Pre production Post production என்பதெல்லாம் கிடையாது...வெறும் production மட்டும்தான்!



இந்திய சினிமா டிஜிட்டல் புரட்சிக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டது. சினிமாவின் அதி நவீன நுட்பங்களை மக்கள் புரிந்து கொள்ளும், அல்லது வியந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
செலவு பிடிக்கும் மிகப்பெரிய கமர்ஷியல் சினிமாக்கள் முழுக்க நவீன முறைகளை நம்பியே இருக்கின்றன. சந்தேகம் வராமல், நம்பகத்தன்மைக்கு கொஞ்சமும் இடைஞ்சல் தராமல் இருக்கும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டாடப்படுகிறது.

டிஜிட்டல் புரட்சி முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்றைய காலகட்டத்தில், அதன் வளர்ச்சியால் திரைப்படத்துறை கண்டிருக்கும் மாற்றங்கள் அளப்பரியது. புதிய தலைமுறை இயக்குநர்களின் வரவும், அவர்களின் வெற்றியும் டிஜிட்டலின் வளர்ச்சியால் விளைந்த பயன்களில் ஒன்று. அவர்களில் பலர் இளைஞர்கள். பாரம்பரியமான திரைப்பட அனுபவமில்லாதவர்கள். ஆனால், எவ்விதக் குறையும் இல்லாத வெற்றிகளை அவர்கள் தந்தது ஒரு புதிய சிக்கலுக்கு வழி வகுக்கிறது.

இன்றைக்கு கதை கேட்கும் தயாரிப்பாளரோ அல்லது நடிகரோ தன்னிடம் வரும் படைப்பாளியின் அனுபவத்தை அதிகம் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் இளைஞர்களா, குறும்படங்கள் இயக்கியிருக்கிறார்களா, டிஜிட்டலின் சாத்தியங்களை உணர்ந்தவர்களா என்பது போன்ற புதிய தகுதிகளை மட்டுமே பார்த்து பணி புரிய சம்மதிப்பது நடக்கிறது.

ஒரு படைப்பாளிக்கு அல்லது கலைஞனுக்கு டிஜிட்டலின் வளர்ச்சி அல்லது டிஜிட்டலைப் பற்றிய அறிவு அவசியமா? படைப்பாற்றலுக்கும் தொழில்நுட்ப அறிவுக்குமான உறவு பற்றிய கேள்வி இங்கே எழுகிறது. ரசனையின் வழியோடு, கற்பனையின் வழியொட்டிய பாதையில் நடப்பவனுக்கும் தொழில் நுட்பத்தின் துணை நாட வேண்டிய தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ் சினிமா இப்போது தன்னுடைய புதிய பாதையில் கொண்டிருக்கும் மாறுதல்கள் பற்றி இப்போது பேசவேண்டிய நேரம்தான். இதுபற்றி தமிழ் சினிமாவில் நவீனத்திற்கும் புதுமைக்கும் துணை போகும் பிரபலமானவர்களிடம் பேசினாம்.எட்டு தேசிய விருதுகளைப் பெற்ற எடிட்டர் கர் பிரசாத் பேசும் போது, ‘‘தொழில்நுட்பங்கள் என்பவை ஒரு வகையான வசதி. செய்யும் செயலை இலகுவாகச் செய்ய, விரைவாகச்செய்ய, நேர்த்தியாகத் தோன்ற பயன்படும் நுட்பங்கள். அவ்வளவுதான். அதை எல்லோரும் அறியாமலிருப்பது பெரும் குற்றமில்லை.

ஆனால், இன்றைய தேதிக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் திறமையின் உச்சத்தில் இருப்பவர்களை நாம் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஓரளவு வரைக்கும் வந்துவிட்டோம். மீதியை வெளிநாடுகளுக்கு அனுப்பித்தான் சரிவர செய்ய முடிகிறது. அதுவும் ஹாலிவுட்டிற்கு அனுப்புவது சாத்தியமே இல்லை. ரஷ்யா, ஈரானுக்கு அனுப்பி நிலைமையைச் சமாளிக்கிறோம்.

வெளிநாடுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் எக்ஸ்பர்ட்கள் இருக்கிறார்கள். கட்டடங்கள், மனிதர்கள், விலங்குகள், மற்றவை என தனித்தனியாக கவனம் கொள்கிறார்கள். அவர்களிடம் இருக்கிற தத்ரூபம் நம்மிடம் இல்லை. அது ஒன்றுதான் பிரச்னை.

‘போலச்செய்வது’ என்ற ஒன்று இங்கே இருக்கிறது. அங்கே நிறைய ஆராய்ச்சிகள் செய்து தத்ரூபத்திற்கு மெனக்கெடுகிறார்கள். ‘பாகுபலி’ போன்ற படங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யப்பட்டபோது அதன் நம்பகத்தன்மை புலப்பட்டது. யாரும் அதைக் குறித்து கேள்வி கேட்கவில்லை. ஷங்கரின் ‘2.0’வும் ஒரு உண்மை நிலையை பார்வைக்கு கொண்டு வந்தது. இன்னும் கொஞ்சம் உழைத்தால் டிஜிட்டல் புரட்சியை, அதிலும் நம்பகத்தன்மையைக் கொண்டு வந்துவிடலாம்...’’ என்றார்.

ஆரம்பித்திலேயே டிஜிட்டலுக்கான சோதனைகளுக்கு வித்திட்டவரும், நவீன ஓவியருமான ட்ராட்ஸ்கி மருது பேசும்போது சில அடிப்படை உண்மைகளை முன்வைத்தார்: ‘‘காமிக் புத்தகங்கள், அனிமேஷன், ஓவியம், சினிமா என்ற நான்கு துறைகளின் கூட்டுப் பாதிப்பில் வந்தவன் நான். ஆரம்பத்தில் இதில் அதிகம் ஓவியத்தோடு தொடர்புடையவர்கள்தான் இருந்தார்கள். கம்ப்யூட்டர் சாத்தியப்பட்டபோது சினிமாவில் இதைக் கொண்டு புதுமை செய்வதற்கான யத்தனங்கள் நடந்தன. பிறகுதான் சாஃப்ட்வேர் என்ற அமைப்பிற்கு அவை மாற்றப்பட்டன.

இப்போது மெய்நிகர் உண்மை (virtual reality) என்ற விஷயம் கூட வந்துவிட்டது. படத்தில் இருக்கும் மிருகங்கள் நம்மிடையே வந்து போகிற திடுக்கிடும் காட்சிகளைக் கொண்டு வருகிற அளவுக்கு சினிமா மாறிவிட்டது. சமீபத்தில் அத்தகைய சினிமா திரையிடப்பட்டபோது பயந்து அலறி வியர்வை பெருகி தியேட்டரை விட்டு ஓடியவர்கள் இருக்கிறார்கள்.

கூர்ந்து பார்த்தால் ‘Lion King’ஐ ஒரு அனிமேஷன் படமாகவோ, Live action film என்றோ சொல்லிவிட முடியாது. அதில் அடுத்தடுத்த பத்து வருஷங்களுக்கு வரப்போகும் படங்களின் தன்மையை உணரலாம். இனிமேல் எதையும் நேரடியாகப் போய் படம்பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. Pre production, Post production என்பதும் இனிமேல் கிடையாது.

இனிமேல் production மட்டும்தான். கதையாக 500 பக்கம் எழுதுகிற ரைட்டர் கூட அவசியமில்லை. ஒரு மொழியை 40 மொழிகளுக்கு ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளும் வளர்ச்சியை எட்டியபிறகு இதெல்லாம் தேவையில்லை. இனிமேல் திரைப்படக் கலைஞனாக அறியப்படுபவர்கள், ஓவிய, புகைப்பட, எடிட்டிங் அறிவு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட கூறுகளை அறிந்தவர்களே இனிமேல் முதன்மையான கலைஞன் என அறியப்படுவார்கள்.

டிஜிட்டல் புரட்சியில் இமேஜ் மொழியாக மாறிக்கொள்கிற சாத்தியத்தைக் கொடுத்துவிட்டது. இமேஜ் மொழியாகவே மாறிவிட்டது. எல்லோர் கையிலும் கேமரா இருந்து, Live telecast செய்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு பொருள் வாங்கி, வீட்டில் மனைவிக்கு அனுப்பி, வாங்கவா என்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் நாம் அதிகம் visual-இல்தான் பேசுகிறோம். விஷுவலில் சொல்லத்தெரிந்தவன்தான் இனிமேல் க்ரியேட்டிங் ஆளாக அறியப்படுவான். டிஜிட்டல் வளர்ச்சி இனிமேல் தமிழனை விடாமல் துரத்தப் போகிறது...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ட்ராட்ஸ்கி மருது.

புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் மதி பேசும் போது, ‘‘சினிமா ரொம்பவும் மாறிவிட்டது. இதை நாம் அதிகமும் உணராமல் இருக்கிறோம் என்பது உண்மை. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை புதுக் கேமரா வந்துவிடுகிறது. முன்பு எல்லா கேமராவும் ஒன்று போல்தான். இப்போது வருபவை குவாலிட்டி, அமைப்பு, அதன் தன்மை என வித்தியாசப்பட்டு நிற்கிறது. அவைகளோடு புழங்கித்தான், அவைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

VFX இணைந்த படப்பிடிப்புத் தளங்களே இனி படம் தயாரிக்க வசதியாக இருக்கும். குறிப்பாக கேமராக்களின் வளர்ச்சியை, நவீனத்தை சொல்லி மாள முடியாமல் இருக்கிறது. ஒவ்வொரு கணமும் நம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கே தமிழ் சினிமாவில் நவீன கேமராக்களின் வருகை குறைவாகவே இருக்கிறது...’’ என்கிறார் ஒளிப்பதிவாளர் மதி.மாறி வரும் சூழலில் டிஜிட்டல் புரட்சியின் இடம் பற்றி அறிந்துகொண்டால், வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக இருக்கும். புதுமையைத் தொடர்வதுதான் இப்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு.