ரத்த மகுடம்-71



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும் மன்னா..!’’காவலாளி தகவல் சொல்லி அனுமதி பெற்று வருவதற்கு முன்பாகவே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க அறைக்குள் ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் நுழைந்துவிட்டார்.மன்னருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்துவிட்டு, ‘தங்களைக் காண போர் அமைச்சர் வந்திருக்கிறார்...’ என்று சொல்ல வாயைத் திறந்த சாளுக்கிய வீரன் தனக்குப் பின்னால் இருந்து ஒலித்த குரலைக் கேட்டு திடுக்கிட்டான்.

மன்னரின் முகத்தைக் கண்ட அந்த வீரன் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக ,அவரை மீண்டும் வணங்கிவிட்டு மூன்றடிகள் அவரைப் பார்த்தபடியே பின்னோக்கி நகர்ந்து பின்னர் மன்னருக்கு முதுகைக் காட்டாமல் அப்படியே அறையை விட்டு வெளியே வந்தான். கதவை மூடினான்.

பழையபடி அறை வாசலில் காவலுக்கு நின்றான்.‘‘காரணமில்லாமல் இப்படி அவசரமாக நுழைய மாட்டீர்கள் என்று தெரியும்... சொல்லுங்கள்... என்ன விஷயம்..?’’
‘‘மன்னா! நாம் வெற்றி பெற்றுவிட்டோம்!’’ முகமெல்லாம் மலர ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விக்கிரமாதித்தரின் முகத்தில் அந்த மலர்ச்சி எதிரொலிக்கவில்லை. மாறாக, ஆழ்ந்த சிந்தனையுடன் ‘‘அப்படியா..?’’ என்றார்.‘‘என்ன மன்னா இப்படி சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டீர்கள்! இது எப்படிப்பட்ட வெற்றி... பல்லவர்களை நாம் போரில் முறியடித்திருக்கிறோம்! அதுவும் நேருக்கு நேர் போரிட்டு...’’ வெற்றிக் களிப்புடன் போர் அமைச்சர் அறிவித்தார்.

‘‘காஞ்சியை நாம் கைப்பற்றியதுகூட பெரிய விஷயமில்லை மன்னா... ஏனெனில் போர் புரிந்து நாம் காஞ்சி மாநகரத்தைக் கைப்பற்றவில்லை. நகரத்தைத் திறந்து வைத்துவிட்டு பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் தன் படைகளுடனும் குடும்பத்துடனும் வெளியேறினார். எனவே காஞ்சி அரண்மனைக்குள் நாம் நுழைந்தது வெற்றியாகக் கருதப்பட மாட்டாது. ஆனால், இப்பொழுது...’’

கண்கள் விரிய தன் மன்னரை ஏறிட்டார் ஸ்ரீ ராமபுண்ய வல்லபர். ‘‘உண்மையிலேயே நாம் ஜெயித்திருக்கிறோம். சாளுக்கியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. இனி வரலாறு உங்களது இந்த வெற்றியை... சாளுக்கியர்களின் வீரதீர பராக்கிரமத்தை எக்காலத்திலும் போற்றிப் புகழும்...இந்த வெற்றி முழுக்க முழுக்க தங்களுக்கே சொந்தமானது மன்னா...’’ சொல்லும்போதே ஸ்ரீராமபுண்ய வல்லபரின் குரல் தழுதழுத்தது.

‘‘எவ்வளவு தீர்க்கத்துடன் யோசித்தீர்கள்... அப்பப்பா... காஞ்சியில் சாளுக்கியப் படைகளைக் குவித்து வைத்திருக்கிறோம்... வாதாபியில் போதுமான படைகள் இல்லை... எனவே, மறைந்து வாழும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் படைகளைத் திரட்டி சாளுக்கிய தேசத்தைத் தாக்கி கைப்பற்ற முயற்சிப்பார் என்ற உங்கள் கணிப்பு பொய்க்கவில்லை.

பரமேஸ்வர வர்மர் அப்படித்தான் செய்தார். இதை முன்பே ஊகித்து கங்க மன்னருக்கு தூது அனுப்பி படைகளுடன் அவரை பல்லவ மன்னரை எதிர்பாராமல் நீங்கள் தாக்கச் சொன்னது நல்லதாகப் போயிற்று! இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத பல்லவப் படைகள் சிதறிவிட்டன. வாதாபியைக் கைப்பற்ற பரமேஸ்வர வர்மர் மேற்கொண்ட முயற்சியை இப்படியாக நீங்கள் முறியடித்திருக்கிறீர்கள்!’’

மூச்சு விடாமல் பேசிய ராமபுண்ய வல்லபர், சாளுக்கிய மன்னரை நோக்கி வணங்கினார். ‘‘என்னதான் சாளுக்கியப் படைகளுக்கு நான் போர் அமைச்சராக இருந்தாலும், தங்கள் தந்தை காலம் முதலே பணியில் இருந்தாலும், தங்கள் அளவுக்கு எனக்கு புத்தி சாதுர்யம் இல்லை மன்னா! தங்களைப் போன்ற ஒருவரை மன்னராகப் பெற ஒவ்வொரு சாளுக்கியனும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!’’

‘‘கற்பனையான விஷயத்துக்கு புகழ்கிறீர்கள் அமைச்சரே... அதனாலேயே இப்புகழ்ச்சியை ஏற்க மனம் மறுக்கிறது...’’ நிதானமாகச் சொன்னார் விக்கிரமாதித்தர்.‘‘மன்னா!’’ அலறினார் ராமபுண்ய வல்லபர். ‘‘பல்லவப் படைகள் சிதறி ஓடியிருப்பதும் நாம் வெற்றி பெற்றிருப்பதும்...’’‘‘உண்மையல்ல...’’ இடைவெட்டினார் சாளுக்கிய மன்னர்.

என்ன சொல்வது என்று தெரியாமல் பிரமை பிடித்து நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர். உள்ளங்கை நெல்லிக்கனியாக நாம் வெற்றி பெற்றிருப்பது தெளிவாக இருக்க மன்னர் எதற்காக அதை நிராகரிக்கிறார் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

விக்கிரமாதித்தரே அதற்கு விடை அளித்தார். ‘‘போக்குக் காட்டி நம்மை பல்லவர்கள் திசை திருப்பியிருக்கிறார்கள்... இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டிருக்கிறோம்... நானும் பெரிய யுத்த தந்திரத்தை அமைத்துவிட்டதாக எண்ணி இறுமாந்திருக்கிறேன்...’’

‘‘மன்னா...’’‘‘யோசிக்க யோசிக்கத்தான் விடைகள் கிடைக்கின்றன ராமபுண்ய வல்லபரே...’’‘‘புரியவில்லை மன்னா...’’‘‘இன்னமுமா..?’’ கேட்ட சாளுக்கிய மன்னரின் கண்கள் இடுங்கின. ‘‘தன் நாட்டை எதிரி அபகரித்திருக்கும்போது எந்த ஒரு மன்னனும் என்ன செய்வான்..? அதை மீட்க முயல்வான். மாறாக, எதிரியின் தலைநகரத்தை நோக்கி படைகளைச் செலுத்துவானா..?’’‘‘மன்னா...’’

‘‘அப்படிச் சென்ற படைகளில் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் இருந்திருக்கிறார். ஆனால்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் தன் முன்னால் பிரமை பிடித்து நின்றிருந்த ராமபுண்ய வல்லபரின் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘அப்படையில் போர்த் தளபதியான சோழ மன்னர் இல்லை! இளமைத் துடிப்புடனும், சாதிக்க வேண்டும் என்ற பரபரப்புடனும் வலம் வரும் பல்லவ இளவரசன் இல்லை! அவ்வளவு ஏன்... பல்லவர்களின் அசுவ சாஸ்திரியும் உப தலைவனுமான கரிகாலன்கூட வாதாபியைத் தாக்க முற்பட்ட பல்லவப் படையில் இல்லை!

புரிகிறதல்லவா..? நம்மை முழுக்க முழுக்க ஏமாற்றவும், திசை திருப்பவும் இந்த நாடகத்தை பல்லவ மன்னர் அரங்கேற்றி இருக்கிறார்!’’‘‘இதனால் அவருக்கு என்ன பயன் மன்னா..?’’‘‘அவகாசம் அமைச்சரே... அவகாசம்... போக்குக் காட்டி நம் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டு நிதானமாக படைகளைத் திரட்டி வருகிறார்கள். குறிப்பாக யானைப் படைகளையும் புரவிப் படைகளையும் வலுப்படுத்தி வருகிறார்கள்... இவை எல்லாம் இப்பொழுது புரிகிறது... ஆனால், ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை...’’‘‘என்ன மன்னா..?’’

‘‘எதற்காக கரிகாலன் அத்தனை நாட்கள் காஞ்சியில் இருந்தான்..? என்ன காரணத்துக்காக நம் கவனத்தை எல்லாம் தன் பக்கமே இருக்கும்படி பார்த்துக் கொண்டான்..?’’ஸ்ரீ ராமபுண்ய வல்லபரிடம் சாளுக்கிய மன்னர் கேட்ட அந்தக் கேள்விக்கான விடையை வனத்தில் இருந்த பெரு மரத்தின் மீது சாய்ந்தபடி சிவகாமி பட்டுத் துணியில் எழுதினாள்.எழுதியதை திரும்ப ஒருமுறை படித்தாள்.அவள் தோள் மீது அமர்ந்தபடி புறா ஒன்றும் அதை வாசித்தது!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்