நாகேஷின் ஏசியும் எம்.என்.நம்பியாரும்!



5ஈ பஸ்ஸில் 58 நிமிஷங்கள் ட்ராவல் செய்து, சக ஜீவர்கள் நசுக்கியதில் 70 எம்எம் சினிமாவை 16 எம்எம்மில் ஓட்டியது மாதிரியாக ஒடுங்கிய உடம்புடன், ஜல்லிக்கட்டில் அடக்கப்பட்டுச் சரிந்த காளையைப் போலப் பெருமூச்சுகளை இறைத்தபடியே வீட்டினுள் நுழைந்தான் நாகேஷ்.50 வாட்ஸ் பல்பு போலிருக்கும் முகம் அரைக்கிலோ மேக்கப்பில் 1000 வாட்ஸாகப் பளபளக்க நின்றிருந்தாள் அவன் மனைவி சித்ரா.

வடிவேலுவை உதைக்கும் கோவை சரளா போலக் கடுகடுவென்று எப்போதுமிருக்கும் அவள், நகைக்கடை விளம்பரத்து கீர்த்தி சுரேஷைப் போல் புன்னகைத்தபடி கையில் ஒரு தட்டை நீட்டுவதை நம்ப முடியாமல் பார்த்தான்.“என்னங்க, இந்தாங்க... இந்த காராபூந்தியையும் பாதுஷாவையும் சாப்டுங்க. தோ, சூடா காப்பி கொண்டுவரேன்..!” என்றபடி வேகமாக உள்ளே போனாள்.

ஆட்டுக்கு அலங்காரம் செய்வது அழகு பார்க்க அல்ல என்பதை அனுபவ அறிவு தெளிவாக உணர்த்திவிட, ‘ழே’யென்று விழித்தபடி அமர்ந்திருந்தான் நாகேஷ்.ஆனாலும்கூட ‘வெய்ட்’டான சித்ராவுக்கு நேர்மாறாக அவள் தந்த ‘லைட்’ டிபனும், காபியும் சார்ஜ் போன செல்போனாய் ஒடுங்கியிருந்த அவனை உயிர்ப்பித்து நேராய் உட்கார வைத்தது நிஜம்தான்.

“என்னங்க, நாளைக்கு ஆபீசுக்கு லீவு போட்ருங்க... காலைல நாம ஷாப்பிங் போறோம், நம்மகிட்ட இல்லாத ஒண்ணை பர்ச்சேஸ் பண்ணப் போறோம்…”“அறிவையெல்லாம் எந்தக் கடைலயும் விக்க மாட்டாங்க சித்!”“ம்க்கும்… நக்கலுக்கொண்ணும் குறைச்சலில்ல...” என்று அவன் கன்னத்தில் ஒரு இடி இடித்தாள். பாதுஷா ஆட்டம் காண வைக்காத பல்லை அவளுடைய பஞ்ச்சானது ஆட்டம் காண வைக்க, சோகேஷ் ஆனான் நாகேஷ்.
“போன மாசத்துலருந்தே நான் உங்களை ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு கேட்டுட்டேயிருக்கேன்...”
“அதான் நேத்துக்கூட உன்னை நல்லா ஏசிப் போட்டேனே…”

“சமாளிக்காதீங்க. நான் சொல்றது, வெயில் தாங்க முடியல, ஏசி மெஷின் ஒண்ணு வாங்கிப் போடுங்கன்னு. நாளைக்கு நாம ஜெயந்த் அண் கோ போறோம். வாங்கறோம்...”‘‘அடியேய்.. நாம இருக்கறதே வாடகை வீடுடி. இதுல ஏசிய வேற வாங்கினேன்னா அதையும் வீடு வீடா தூக்கிட்டு அலையணும்…”

“பீரோ, கட்டில், ஃப்ரிட்ஜ் இதையெல்லாம் தூக்கிட்டு அலையலியா என்ன..? அந்த லிஸ்ட்ல இன்னொண்ணு சேருது. அவ்ளவுதான். குறுக்க பேசாதீங்க. அந்தக் கடைல யாரோ ஆளைத் தெரியும், நல்ல டிஸ்கவுண்ட்ல வாங்கித் தரேன்னு வரது சொன்னான்!”“ஐயோ, உன் தம்பி வரதா..? அவன் வராது இருக்கறதே நல்லதாச்சே. இதுல டிஸ்கவுண்ட் வாங்கித் தந்தா வேற எதுலயாவது பெருசா செலவிழுத்துவிட ப்ளான் வெச்சிருப்பானே…” என்று உளறித் தொலைத்தான்.

ருத்ராவானாள் சித்ரா. ‘‘ஹும், அவனானா மாமா, மாமான்னு உசிரை விடறான். நீங்க என்னடான்னா அவனை மதிக்கவே மாட்டேங்கறீங்க.. இதுவே உங்க தம்பியாருந்தா...”“ஸ்டாப் சித்… ஸ்டாப். நாம நாளைக்குப் போகலாம்...” என்றபடியே தன்னறைக்குள் ஓடி ஒளிந்தான் நாகேஷ். இல்லையா பின்னே… அவளை இன்னும் கொஞ்சம் பேசவிட்டால் முப்பாட்டன் என்ன.. அறுபாட்டன், எழுபாட்டன் வரை அவன் பரம்பரையையே இழுப்பாள் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமல்லவா..?

கடை வாசலிலேயே காத்திருந்தான் வரது. “வாங்க மாமா. அக்கா வருஷக்கணக்கா சொல்லி இப்போத்தான் ஏசி வாங்க உங்களுக்கு நேரம் வந்திருக்கு. நான் கடை ஓனர்ட்ட பேசி நைஸ் பண்ணி வெச்சிருக்கேனாக்கும்...” என்று திறந்து வைத்த காரின் பானெட் போலத் தன் அகன்ற வாயைத் திறந்து சிரித்தான்.“நைஸ் பண்றதுக்கு அவன் என்ன நயன்தாராவா..? பேசாம வாடா...”

“அதுக்கில்லை மாமா. உங்களுக்கு சரியா செலக்‌ஷன் பண்ணத் தெரியாது. அடாசு மாடலை செலக்ட் பண்ணிடுவீங்க...”
“என் கல்யாணத்தன்னிலருந்து அது ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சேடா...” என்றவனை சித்ரா பார்த்த பார்வையில், ‘வீட்டுக்கு வருவேல்ல நீயி’ என்ற வரிகள் இருந்தன. பேசாமல் உடன் போனான்.“மேடம். உங்களுக்கு இந்த ரெண்டு டன் ஏசி சரியாருக்கும்...” என்றான் விற்பனையாளன்.

“அவ சைசுக்கு ரெண்டு டன்னா..? அப்ப எனக்கு ஒரு அம்பது கிலோ இருந்தாப் போதும்ல..?” என்ற நாகேஷை கரப்பான் பூச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தான். “சார், இவங்க சொன்ன ஹாலோட அளவுக்கு சொன்னேன் சார். ஆளோட அளவுக்கு இல்ல...”
“இது என்ன காஸ்ட் ஆகுது..?”“முப்பத்தி மூணாயிரம் மேடம். இதைப் பாருங்க. இது காம்பாக்ட் மாடல். அதைவிடச் சின்னதா இருக்கும். ப்ரைஸ் அதைவிட ஜஸ்ட் மூணாயிரம்தான் கூட ஆகும்...”“சின்னதா இருந்தா காத்தும் குறைவா வருமில்ல. வேணாம்ப்பா...”

“இல்ல சார், காத்து வர்ற அளவு எல்லாத்துலயும் ஒண்ணுதான். பாக்க இது அழகாருக்கும்னேன். அவ்வளவுதான்...” என்றான் எரிச்சலாக.
“அவர் கெடக்கார். இதுலயே வேற எதாச்சும் மாடல் இருக்காப்பா..?”“க்ளாசிக்ன்னு ஒண்ணு இருக்கு மேடம். இதைப் பாருங்க...” என்று ஒரு பெரிய போட்டோவைக் காட்டினான். “கொஞ்சம் தள்ளி நின்னு பாத்தா பெரிய சைஸ் ஸ்மைலி மாதிரி இருக்கும். பென்சில்சானிக் கம்பெனியோடது. இது முப்பத்தொம்பதாயிரம் ஆகுது...”

‘சென்னை வெயில் மாதிரி பில் அமவுண்ட் ஏறிட்டே போகுதே...’ என்று மனதிற்குள் சுனாமியாய் அடித்த பீதியை வெளியே காட்டாமல் சோக ஸ்மைலியான முகத்தோடு அந்த ஸ்மைலி ஏசியைப் பார்த்தான் நாகேஷ்.இன்னும் நான்கைந்து மாடல்களைப் பார்த்துவிட்டு, கடைசியில் அந்த க்ளாசிக்கைத்தான் தேர்வு செய்தாள் சித்ரா. “லன்ச் டயத்துக்கு மேல வீட்டுக்கு ஆளுங்க வந்து ஃபிக்ஸ் பண்ணிக் குடுத்துடுவாங்க மேடம்...” என்றான் கடைக்காரன்.

தான், என்ட்ரியானது தன் வீடா இல்லை விஜயமகால் கல்யாண மண்டபமா என்று குழப்பமானான் நாகேஷ். சித்ராவின் தோழிகள், அக்கம் பக்கத்து மாமிகள் என்று ரிசப்ஷன் ரூமே நிரம்பி வழிந்தது. பார்லிமென்டில்போல கசமுசவென்ற பேச்சுச் சத்தம். பெண் பார்க்க வந்தவர்களுக்குத் தருவது போல ஒவ்வொருவர் கையிலும் முந்திரி பக்கோடாவும் கேசரியும் நிரம்பிய ப்ளேட்டுகளைத் தந்து கொண்டிருந்தான் வரது. அப்படியே அவன் வாயிலும் அவை சென்று அரைபட்டன. பார்த்த நாகேஷின் பல் அரைபட்டது.

“வாங்க, வாங்க…” என்று பல்லெல்லாம் வாயாக வரவேற்றாள் சித்ரா. “உள்ள மெக்கானிக் ஏசிய மாட்டிட்டிருக்காங்க. இவங்கல்லாம் பாக்கணும்னாங்களேன்னு நான்தான் வரச் சொன்னேன்…”உள்ளே போனான். அவர்கள் ஏசியை அப்போதுதான் ஃபிட் செய்து முடித்திருந்தார்கள். “ஏம்ப்பா… எத்தனை மணி நேரம் தொடர்ந்து ஏசி ஓடலாம்..? என்ன லெவல் கூலிங் வெக்கறது நல்லது?” என்று நாகேஷ் விசாரித்துக் கொண்டிருந்த நேரம் பார்த்துத்தானா சித்ராவும் வரதுவும் உள்ளே வரவேண்டும்..?

“டேய் வரது, இவங்ககிட்ட ஏசி மெஷினைப் பத்தின எல்லா டீடெய்லையும் நல்லாக் கேட்டுக்கோடா. உங்க மாமாவுக்கு அத்தனை சமத்து பத்தாது...” என்று சித்ரா சொல்ல, அந்த மெக்கானிக்குகள் நாகேஷை ஏதோ காக்காய் தூக்கிவந்து போட்ட வஸ்துவைப் போலப் பார்த்தார்கள்.
அவ்வ்வ்வ்…. என்று வாயைப் பொத்தியபடியே இடத்தைக் காலி செய்தான்.

நலத்திட்டங்களைத் துவக்கி வைக்கும் முதலமைச்சரைப் போன்ற திமிர் பார்வையுடன் ரிமோட்டைக் கையிலேந்தி சித்ரா ஆன் செய்ய, தோழிகளும் மாமிகளும் பலமாகக் கை தட்டினார்கள். வரது விசிலடித்தான். ‘ஹாப்பி ஏசி டூ யூ...’ என்று பாட்டு மட்டும்தான் யாரும் பாடவில்லை.
அதே செகண்டில் ஏரியாவே திரும்பிப் பார்க்கும் சத்தத்தில் அலறியது வரதுவின் செல்போன். “அம்மா, அக்கா வீட்ல ஏசி வாங்கியிருக்காங்க...” என்று பேச ஆரம்பித்தபடி வெளியே போனான்.

அடுத்த நாளிலிருந்தே ஆரம்பித்தன சித்ராவின் சித்ரவதைகள்.  “ஏங்க, ஏசி ரூம்ல இத்தனை பெரிய பீரோ இடத்தை அடைச்சுக்கிட்ருக்கு. கூலாகவே லேட்டாகுது. இதை முன் ரூமுக்கு நகத்துங்க. அங்கருக்கற சோபாவை இங்க கொண்டு வந்து போடுங்க…” என்று வீட்டையே தலைகீழாக அவள்
ரீஅரேஞ்ச் பண்ணி வேலை வாங்கியதில் நாகேஷ், மூச்சுப்பிடிப்பால் முதுகு வளைந்து அடிமைப் பெண் எம்ஜியாரானான்.

ராங் நம்பருடனேயே அரைமணி பேசக் கூடியவளான சித்ரா, இப்போதெல்லாம் செல்போன் கத்தினால் இப்படித்தான் பேச்சை ஆரம்பிப்பதே…
“ஸாரிடி. இங்க ஏசி ரூம்ல போனை வெச்சுட்டு போய்ட்டனா... ரிங்கான சத்தமே காதுல கேக்கல… சொல்லு… ஓ, அதுவா… ரெண்டு நாளாச்சுடி ஏசி வாங்கி…”

“என்னது..? மண்டபத்துல ஏசி கெடையாதா..? அடிப்போடி… இப்பல்லாம் ஏசிலயே இருந்து பழகிட்டு  நான்-ஏசின்னு நெனச்சாலே எரியறது. நான் வரலை…”“ஸாரிடி. தட்கல்ல கூட ட்ரை பண்ணி பாத்துட்டேன். ஏசி கெடைக்கலை. நான்-ஏசிதான் கெடைச்சது. டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டேன். நெக்ஸ்ட் மன்த் வரேன்டி...”நாகேஷ் வீட்டினுள் நுழைய, ஏசியானது இரண்டு ரம்பங்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவது போல் கர்ணகடூரமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. ஏசி மெஷினைக் கவலையாய்ப் பார்க்க, அதற்குக் கீழே வெள்ளையாய் ஒரு மூட்டை. “சித்ரா. ஏசியை நிப்பாட்டு.

 மிஷின் என்னமோ சத்தம் போடுது பாரு...” என்று கூம்பு ஸ்பீக்கர் போலக் கூச்சலிட்டான்.“சும்மாருங்க. அது ஏசி சத்தம் இல்ல. எங்கப்பாவோட சத்தம்...”அருகில் சென்று பார்த்தான். கையது கொண்டு மெய்யது பொத்தி, பெரிய சைஸ் சங்குசக்கர மத்தாப்பு போல உடலைச் சுருட்டி வெண்ணிற வேட்டியால் போர்த்திக் கொண்டு படுத்திருந்தது சாட்சாத் அவள் அப்பாதான். இலவச இணைப்பாக மாமியாரின் குரல் “காபி எடுத்துக்குங்க மாப்ள...” என்றது சமையலறையிலிருந்து.

கையில் டிபன் தட்டோடும் மறுகையில் காப்பியோடும் உள்ளிருந்து வாராது வந்த மாமணியாய் வந்தான் வரது. நொந்தான் நாகேஷ்.
அவளுக்கும் அவள் பெற்றோருக்கும் தம்பிக்குமாக ஹாலைத் தாரை வார்த்துவிட்டு அன்றிரவு முன்னறையில் படுத்தான் நாகேஷ். “என்னங்க… உள்ள ஏசியில அசந்து தூங்கிடறதுல யாராச்சும் கதவு தட்டினாக்கூட கேக்கறதில்ல. பால்காரன் பால் போடறதுகூடத் தெரியறதில்ல. இன்னிக்கு நீங்க எவ்வளவு பொறுப்பா எடுத்துட்டு வந்தீங்க. இனி தினம் முன்ரூம்லயே படுத்துக்குங்க. ரைட்டா...”

சித்ரா கூலாகச் சொல்ல, ஹீட்டான நாகேஷின் கண்களுக்கு ஏசியின் ஸ்மைலி முகம் எம்.என்.நம்பியாரின் முகமாக ஓவர்லாப்பாகித் தெரிய ஆரம்பித்தது. ஒரு மாதம் ஓடியிருக்க…. அந்த மாதச் செலவுக் கணக்கைப் பார்த்தபோது நாகேஷுக்கு உறுதியான விஷயம் அது ஏசியல்ல, எம்.என்.நம்பியார்தான் என்பதே!

அவள் குடும்பமானது 20 நாள் தங்கியதில், கவனித்து அனுப்பிய செலவு (ஒருமுறை 100வது நாள் கூடக் கொண்டாடியிருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டில்), ஏசியைப் பார்க்க வந்த தோழிகளுக்கும் மாமிகளுக்குமாக இரைபட்ட டிபன், காபியினால் டபுள் மடங்கான மளிகைக் கடை பில், வந்த அழைப்புகள் பற்றாதெனச் செய்த அழைப்புகளினால் ஏசிப் பெருமையை சித்ரா டமாரம் பறைசாற்றியதில் மூன்று மடங்காக எகிறியிருந்த செல்போன் பில்… எல்லாவற்றுக்கும் மேலாக ஓய்வில்லாமல் ஏசி ஓடியதில் தாறுமாறாய் எகிறிப்போய் தொடாமலே ஷாக்கடித்த கரண்ட் பில்!

கூட்டிக் கழித்துப் பார்த்ததில் பட்ஜெட்டில் துண்டெல்லாம் விழவில்லை. பதினெட்டு முழ வேஷ்டியே விழுந்திருந்ததில் நாகேஷின் கண்கள், சோவின் கண்கள் போலப் பிதுங்கின.இடிந்துபோய் அமர்ந்திருந்தவன் அருகில் சூடான காபியுடன் வந்தாள் சித்ரா. “என்னங்க… இந்த மாசம் மினி ஏசி ஒண்ணு நம்ம பெட்ரூமூக்கும் வாங்கிப் போட்றலாங்க... செலவோட செலவாப் போய்டும்.. ஓகேவா..?”                            

எடிட்டர் ரஜினி!

‘படையப்பா’ திரைப்படம் எடிட் செய்யப்பட்டு பார்த்தபோது கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் வந்திருந்தது.இரு  இடைவேளைகள் விடலாமா என யூனிட்டார் யோசித்தபோது, தகவல் அறிந்த ரஜினி  எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு வந்தார். தானே அமர்ந்து, தான், உயிரைக் கொடுத்து  நடித்த காட்சிகளைக்கூட தயவு தாட்சண்யம் இல்லாமலும், கதை ஓட்டத்துக்கு  பாதிப்பு இல்லாமலும் நீக்கினார். இப்பொழுது நாம் பார்க்கும் ‘படையப்பா’ படம், ரஜினி இறுதியாக எடிட் செய்ததுதான்!

வெட்டியபிறகு இணைத்தார்கள்!

நீளம்  காரணமாக ‘ஊமை விழிகள்’ படத்தில் கார்த்திக், சசிகலா இடம்பெறும் டூயட்,  ‘மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா...’ ஆரம்பத்தில் நீக்கப்பட்டே  ரிலீஸ் ஆனது.ஆனால், படம் பார்த்தவர்கள் ‘ரிலாக்சேஷனே கொஞ்சம் கூட இல்லையே...’ என முணுமுணுக்க... மீண்டும் அப்பாடலைச் சேர்த்து படம் ஓட்டினார்கள்!

கட் செய்யப்பட்ட பாடல்!

‘அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன..?’ என்கிற சூப்பர் ஹிட் பாடல் ‘வசந்த மாளிகை’ படத்தில் இடம்பெற்றது. ஆனால்,  இப்பாடலால் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது என்று  கருதிய இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகர் திலகமும் எவ்வித கருணையும்  இல்லாமல் பாடலின் வரிகளை கட் செய்தார்கள். வேறு வரிகளை சேர்க்காமல் அந்தக்  காட்சியில் இசையும் நடனமும் மட்டுமே இருக்குமாறு எடிட் செய்தார்கள்!

உலகிலேயே அதிகப் படம் தயாரித்தவர்!

இந்த  கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர், தயாரிப்பாளர் ராமாநாயுடு. தெலுங்கு,  தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, வங்காளம், ஒரியா, குஜராத்தி,  போஜ்பூரி ஆகிய மொழிகளில் 130 படங்களைத் தயாரித்திருக்கிறார்!

பாலகணேஷ்