புலால் உண்ணாமைக்கு எதிராக திருக்குறள் இருப்பது இஸ்லாமிய உலகில் எப்படி பார்க்கப்படும்..?



அரபு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழருடன் ஓர் உரையாடல்

உலகப் பொதுமறையான திருக்குறள், நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அதிசய நூல். இப்போது அரபு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து தமிழுக்கும் அரபுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் ஒரு தமிழர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் பாரசீக மொழித்துறையின் உதவிப் பேராசிரியரான ஜாகீர் உசேன் என்ற அந்த தமிழரிடம் பேசினோம்.

‘‘இந்த உலகில் 50 கோடிக்கும் அதிகமானோர் அரபு மொழியைப் பேசுகின்றனர். நபிகள் நாயகம் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு நாடோடி வாழ்க்கையை அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது கவிதைதான் பிரபலம். அந்தக் காலத்தில்தான் 7 தொங்கு கவிதை தொகுப்புகள் வெளியானது.
அதாவது கவிதைகளை மரச் செடிகளில் எழுதி தொங்க விடுவார்கள். இதுதான் தொங்கு கவிதை. அந்தக் கவிதைகளில் சிறந்த ஒன்றுக்குப் பரிசு கொடுப்பார்கள். தவிர, அப்போது கவிதைச் சந்தைகளும் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்திருக்கிறது!

கவிஞர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி புதுப்புது விஷயங்களைக் கவிதைகளாக எழுதி, விவாதித்து மக்களைக் குதூகலப்படுத்தும் நிகழ்வுகளும் அரங்கேறியது. தொங்கு கவிதை, கவிதைச் சந்தைகளில் எழுதப்பட்ட கவிதைகள் நம் சங்க இலக்கியங்களைப் போன்று வீரத்தையும் காதலையும் பற்றியே பேசியது. சங்கப் பாடல்களின் அகமும் புறமும்தான் இந்தக் கவிதைகளின் மையம்...’’ என்றவரிடம், ‘‘கவிதைகளைவிட ‘ஆயிரத்து ஓர் அரேபிய இரவுகள்’ போன்ற அரபு நாட்டுக் கதைகள்தானே உலகப் புகழ்பெற்றன...’’ என்றோம்.

‘‘கதைகளைக் காட்டிலும் கவிதைகளின் பயணம் சிக்கலானது. உதாரணமாக ஒரு கவிதை அரபு நாட்டில் புகழ்பெற வேண்டுமென்றால் அந்தக் கவிதை யாருடையது? அது முதன் முதலில் யாரால் கேட்கப்பட்டது? பின்பு கேட்டவரிடம் யாரெல்லாம் கேட்டார்கள்? போன்ற விவரணைகள் தெரிந்த பின்னரே அந்தக் கவிதையை அரங்கேற்ற முடியும். அத்துடன் கவிதைகளில் அரசியல், சமூகம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

ஒருவர் அந்தக் கவிதையைப் படிக்கிறார் என்றால் கவிதையில் சொல்லப்படும் கருத்துக்கும் உடன்பட்டவராகிறார். இதனால் கவிதைகளைப் படித்து பிரச்னையில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காகவும் பலர் கவிதைகளைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால், 1001 அரேபியக் கதைகளைப் பொறுத்தளவில் அதில் சமயம் போன்ற கருத்துகள் கிடையாது. அதனாலேயே அவை பிரபலமாகிவிட்டது...’’ என்கிற உசேன் அரேபிய மொழியில் திருக்குறளை மொழி
பெயர்த்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

‘‘டாக்டர் மு.வ-வின் திருக்குறள் உரையை அடிப்படையாக வைத்தே இந்த மொழிபெயர்ப்பைச் செய்தேன். உரையில்லாமல் படிக்கக்கூடிய வகையில் எளிமையாகச் செய்திருப்பதாக நம்புகிறேன். கடினமான சில பகுதிகளுக்கு, அதுவும் சமயம் தொடர்பான சில வார்த்தைகளுக்கு தமிழ் ஆய்வாளர்களிடம் கருத்துக் கேட்டு அவர்களின் ஆலோசனைப்படி செய்திருக்கிறேன்.

உதாரணமாக ‘தவம்’ என்று ஒரு சொல் வரும். தமிழில் இந்த வார்த்தைக்கு எத்தனையோ பொருள் இருப்பதுபோல அரபு மொழியிலும் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆகவே, குறளின் தன்மைக்கு ஏற்ப இந்தச் சொல்லை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதே நேரம் குறளின் கருத்து சிதைந்து விடாமலும் இருக்க வேண்டும்.

இதற்காகத்தான் ஒன்றரை வருடம் பிடித்தது. அத்துடன் தமிழ் வளர்ச்சித் துறையின் அரசுச் செயலராக இருந்த ராஜாராம் ஐ.ஏ.எஸ் அவர்கள் செய்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இதில் பயன்படுத்திக்கொண்டேன்...’’ என்கிற உசேன் மதப் பிடிப்புள்ள இஸ்லாம் நாடுகளில் குறளுக்கான வரவேற்பு எப்படியிருந்தது என்பதையும் விளக்கினார்.

‘‘2015ல் சவுதி அரேபியாவில் உலகக் கவிஞர்கள் மாநாடு நடந்தது. அப்போது நான் இந்த மொழிபெர்ப்பை பரிசீலிக்கும்படி அனுப்பிவைத்தேன். இஸ்லாம் அறிஞர்களால் சூழப்பட்ட ஓர் அமைப்பு இந்த மொழிபெயர்ப்பைப் பார்த்து உடனடியாக என்னை அந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டது. எனக்கு அங்கே கட்-அவுட் வைத்து வரவேற்றார்கள்! குறளின் தாக்கம் அப்படி. திருக்குறளை பொதுமறை எனச் சொல்வதன் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது!

அரேபிய நாடுகளில் சமயம், அரசியல் போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளுக்கு ஆதரவில்லை என்பது உண்மைதான். ஆனால், திருக்குறள் ஒரு பொதுவான அறம் பற்றிப் பேசுவதால் அரேபிய நாடும் இந்த இலக்கியத்தை இலகுவாக ஏற்றுக்கொண்டது...’’ என்றவரிடம், ‘‘திருக்குறள் புலால் உண்ணாமை, கள் குடிப்பதற்கு எதிரானதாக இருப்பது இஸ்லாமிய உலகில் எப்படி பார்க்கப்படும்..?’’ என்றோம்.

‘‘திருக்குறளின் இந்த விஷயங்களை அந்தக் காலச் சூழலில் வைத்துதான் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம்கூட பால் தரும் ஆடுகளை உணவுக்காகக் கொல்லக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார். இதுபோல திருக்குறளும் இஸ்லாத்தும் பல விஷயங்களில் ஒன்றாக இருப்பதைக் குறிப்பிடலாம்.

அறம் என்பது எல்லா சமயங்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருப்பதால் இஸ்லாமும் குறளின் பல அறங்களை இலகுவாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும் என்று நம்புகிறேன்...’’ என்றவரிடம் ‘‘பெர்ஷிய கவிஞர்களான ரூமி, உமர்கயாம், காலிப் போன்றவர்கள் உலகப் புகழ்பெற்ற மாதிரி அரேபிய இலக்கியங்கள் புகழ்பெறவில்லையே...’’ என்றோம்‘‘பாரசீக மொழி ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளை மையம் கொண்டது. அங்கே ஷியா பிரிவு இஸ்லாம்தான் செல்வாக்கானது.

இஸ்லாமில் இந்தப் பிரிவு கொஞ்சம் நெகிழ்ச்சியுடையது. ஆனால், சன்னி இஸ்லாமைக் கடைப்பிடிக்கும் பல அரேபிய நாடுகளில் இஸ்லாம் சமயத்தின் சட்ட திட்டங்கள் கொஞ்சம் கெடுபிடியானது. இதனால்தான் அரேபிய நாடுகளில் கவிதை போன்ற இலக்கியங்கள் ஆதி காலம் தொட்டு இருந்து வந்தாலும் அது வளர்ச்சியடையாமல் குன்றிக் கிடக்கிறது.

ஆனால், கலீல் ஜிப்ரான் போன்ற அரேபியக் கவிஞர்கள் நாடுவிட்டு நாடு சென்றபோது அவர்களது புகழ் உலகம் மட்டுமல்ல; அரேபிய தேசம் முழுவதும் பிரபலமடைந்தது. ஆகவே, அரேபிய நாடுகளில் இலக்கியத்துக்கான களம் இருக்கிறது. ஆனால், அந்த இலக்கியத்தின் பயணம் இஸ்லாமிய சட்டதிட்டங்களால் அடக்கி ஒடுக்கி உள்வாங்கப்படுகின்றன.

ஜிப்ரான் மாதிரி பாலஸ்தீன கவிஞரான தர்வீஷ் நாடு கடத்தப்பட்டபோதுதான் புகழ்பெற்றார்...’’ என்றவர் தமிழ் - அரபு மொழிகளுக்கு இடையேயான சில ஒப்புமைகளையும் பட்டியலிட்டார்.‘‘தமிழுக்கும் அரபுக்குமான உறவு பல நூற்றாண்டுகளையுடையது. வணிகத்துக்காக கடல் வழியாக வந்த அரேபியர்கள் தமிழகத்தின் காயல்பட்டினம், கீழக்கரை போன்ற இடங்களில்தான் குடியிருந்தார்கள். ‘பெரிய கப்பலில் அவர்கள் வருவார்கள்’ என்ற ஒரு பதிவும் சங்க இலக்கியத்தில் உள்ளது.

அரபு மூலம் ஏமன் நாட்டிலிருந்து தோன்றுகிறது. இதனால் சங்க இலக்கியங்கள் ஏமனை ‘யவனன்’ என்று அழைக்கிறது. இது கிரேக்கர்களைக் குறிக்கும் சொல் என்று சிலர் சொல்வது எந்தளவுக்கு ஏற்புடையது என்று தெரியவில்லை. ஏமன், யவனம் என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல தமிழில் பிற மொழிகளின் கலப்பு மற்ற மொழிகளைவிட மிகக்குறைவு. ஆனாலும் அரபுச் சொற்கள் தமிழில் கணிசமாக உள்ளன.

உதாரணமாக அசல், அமல், இனாம், அத்து, தகராறு, மகசூல், முகாம் போன்றவை. அதேபோல தமிழில் அப்பா என்பதை அரபுவில் ‘அபு’ என்றும், அம்மா என்பதை ‘உம்’ என்றும், அக்கா என்பதை ‘உக்த்’ என்றும், தாத்தா என்பதை ‘ஜத்’ என்றும் அழைப்பதை தமிழுக்கும் அரபு மொழிக்கும் இடையிலான நட்பாகத்தான் பார்க்க வேண்டும்.

உண்மையில் அரபு மொழி தெரிந்த தமிழ் அறிஞர்களும், தமிழ் தெரிந்த அரேபிய அறிஞர்களும் மிக அரிதாக இருப்பதால்தான் இந்த இரு மொழிகளும் சமூகமும் இன்றைய காலங்களில் கொடுக்கல் வாங்கல்களில் பின் தங்கியுள்ளது. இது இரண்டும் நடக்கும்போது இரு சமூகங்களுமே மேலும் சிறப்படையும். அதற்கு இந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆரம்பமாக இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான்...’’ என்று முடித்துக்கொண்டார் உசேன்.l

டி.ரஞ்சித்