பகவான்-47



ஓஷோவின் புதிய மனிதன் யார்?

இந்த உலகுக்கு ஓஷோ விட்டுச் சென்றிருக்கும் முக்கியமான செய்தி என்பது, ‘புதிய சமுதாயம் உருவாக வேண்டும். அதில் புதிய மனிதன் வாழவேண்டும்’ என்பதுதான்.

இதற்கான அவரது ஆராய்ச்சிகள் மிகவும் நெடியது. அவரது மறைவுக்குப் பிறகு அவரது புத்தக அறையை ஆராய்ந்தவர்கள் அதிசயித்துப் போனார்கள். அவர் குறிப்புகள் எடுத்து, தன் கையொப்பமிட்டிருந்த நூல்கள் மட்டுமே சுமார் ஒரு லட்சம் எண்ணிக்கையில் இருந்தன!அவரை குருவென்று மற்றவர்கள் மதிப்பிட்டனர். அவரோ தன்னை seeker (தேடுபவர்) என்றே அழைத்துக் கொண்டார்.

தான், பெற்ற ஞானம் போதாமல் மேலும் மேலும் ஞானத்தை தேடிக்கொண்டே இருந்தார். தான், அறிந்தவற்றை முன்வைத்து மனிதனின் சிக்கல்களை உணர்ந்துகொள்ள முயற்சித்தார். அதற்காக மதவாதிகள், அரசியல்வாதிகள், தத்துவமேதைகள் என்று அனைத்துத் தரப்போடும் விவாதங்கள் நடத்தினார். ஏராளமான கூட்டங்களில் பங்கேற்றார். உலகில் இருக்கும் அத்தனை ஆன்மீக நெறிமுறைகளையும் கற்றார். அவற்றின் நன்மை, தீமைகளை எடைபோட்டார்.

ஓஷோவை சாமியார் என்றே ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தாலும் அவர் தன்னை எந்த மதத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நாத்திகர்களைக் காட்டிலும் கூர்மையான விமர்சனங்களை மதங்களின் மீது வைத்தார். இல்லையெனில் கடவுள் வழிபாட்டை ‘வியாபாரம்’ என்று ஒரு கடுமையான வார்த்தையில் அவரால் மறுதலித்திருக்க முடியுமா என்ன?வழிபாட்டுக்கு நேரெதிரான பரிமாணமாக தியானத்தை அவர் முன்வைக்கிறார்.“நீ எந்தவொரு கடவுளையும் மனசுக்குள் எண்ண வேண்டாம்.

எந்தக் கடவுளையும் நம்பக்கூட அவசியமில்லை. ஒரு சிறு வார்த்தையைக் கூட பிரார்த்தனை செய்ய வேண்டியதில்லை. நீ உனக்குள் செல்ல வேண்டும்...” என்று ஆலோசனை சொல்கிறார்.அப்படிப்பட்டவரே ஒரு கடவுளைக் கொண்டாடினார்.

எனினும் -அவர் கடவுள் என்பதால் அல்ல. தான், காண விரும்பிய புதிய மனிதன் என்பதால்.அவர் வேறு யாருமல்ல.கிருஷ்ணர்தான்!குருேக்ஷத்திரப் போர்முனையில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினாரே அதே கிருஷ்ணன்தான்.கிருஷ்ணனை முழுமையானவன், தனித்துவமானவன் என்று போற்றுகிறார் ஓஷோ.ஒவ்வொரு மனிதனும் கிருஷ்ணனாக உருமாறுவதே அம்மனிதனின் அதிகபட்ச உயர்வாக இருக்கும் என்கிறார்.
ஏன் கிருஷ்ணனை அவர் புதிய மனிதனாகப் பார்க்கிறார்?

ஓஷோவின் குரலிலேயே கேட்போம்.“கிருஷ்ணன், நம் புரிதலுக்கு அப்பால் இருக்கிறான். அவன் ஒரு புதிர். புராதன காலத்தவன் என்றாலும், அவனே எதிர்கால மனிதன். ஒருவேளை எதிர்காலத்தில் மனமுதிர்ச்சியின் காரணமாக நாம் கிருஷ்ணனைப் புரிந்துகொள்ளலாம். அவ்வாறு புரிந்துகொள்ள வேண்டியதற்கான தேவைகள் நிறைய இருக்கின்றன.

பொதுவாக மதம் ஒருவரின் பிம்பத்தை தூக்கிப் பிடித்து நிறுத்துகிறது என்றால், அவர் சுவாரஸ்யமற்ற சிடுமூஞ்சியாக இருப்பார். கிருஷ்ணனைப் பாருங்கள். நடனமாடுகிறான், பாடுகிறான், மகிழ்ச்சியாக சிரிக்கிறான். வருத்தமோ, கண்ணீரோ மட்டுமே வாழ்க்கை அல்ல. மகிழ்ச்சிதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க முடியும். கிருஷ்ணன், நமக்கு மகிழ்ச்சியைத்தான் கடத்துகிறான்.

பொதுவாகவே மதங்கள் பலவும் வருத்தங்களையும், தியாகங்களையும் கொண்டாடுகின்றன. மனிதனுக்கு லவுகீக வாழ்க்கைக்கு நேரெதிரான இன்னொரு புனித வாழ்க்கையை வலியுறுத்துகின்றன. இயேசு சிரித்ததே இல்லை என்பார்கள். அவரை வைத்து வரையப்பட்ட படங்களில் கூட அவரது முகத்தில் சோகத்தைத்தான் காண முடிகிறது. மகாவீரரும், புத்தரும்கூட மனிதர்களின் தற்போதைய வாழ்க்கையிலிருந்து விடுதலைக்கான பாதையைத்தான் தேடியிருக்கிறார்கள்.

எல்லா மதங்களுமே வாழ்க்கையை இரண்டாகத்தான் பிரிக்கின்றன. நல்லது, கெட்டது என்று ஒரு மனிதனின் செயல்பாடுகளை தரம் பிரித்து பொருள் கொள்கின்றன. கிருஷ்ணன் ஒருவன்தான் வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்றுக்கொள்ளும் ஒரே கடவுள். இவ்வகையில் அரசனாக இருந்த ராமனைக்கூட நாம் சொல்ல முடியாது.

‘நான்’ என்கிற வார்த்தையை நாம் பயன்படுத்துவதற்கும், கீதையில் கிருஷ்ணன் பயன்படுத்துவதற்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதின் மூலமே கிருஷ்ணனை புரிந்து கொள்வது எளிதாகும்.நாம், ‘நான்’ என்று உச்சரிக்கும்போது நம் உடலுக்குள் சிறைப்பட்டிருக்கிறது ‘நான்’ என்கிற அர்த்தத்தில் வருகிறது. கிருஷ்ணனோ, ‘நான்’ எனும்போது, அந்த ‘நான்’ ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே குறிக்கிறது. அதனால்தான் ‘என்னிடம் சரணடை’என்று அர்ஜுனனிடம் சொல்லும்போது, மாவீரனான அர்ஜுனன் அவரது கால்களில் வீழ்கிறான்.

‘அஹம் பிரம்மாஸ்மி’ என்கிற மகாவார்த்தைக்கான பொருளை, கிருஷ்ணன் உச்சரிக்கும் ‘நான்’-ல் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.மகாபாரதப் போருக்கே கூட கிருஷ்ணன்தான் காரணம் என்பார்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியாகத்தான் போரை அவன் பார்த்தான். குருேக்ஷத்திரப் போரை அவன் தவிர்க்கவே நினைத்தான். ஆனால், போர் வந்துவிட்டால் ஓடி ஒளிய அவன் கோழை அல்ல. அதை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டான்.


யாரையும் எதையும் கிருஷ்ணன் துறக்கச் சொல்லவில்லை. இன்பம், துன்பம் இரண்டையுமே வாழ்க்கையின் பரிமாணங்களாக உணர்ந்து அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, எதிர்கொள்ளும் விவேகத்தை அவன் நமக்கு போதிக்கிறான்...”

ஓஷோ, ஏன் கிருஷ்ணனை தன் இலட்சிய புருஷனாக கருதினார் என்பதை பல்வேறு கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவையெல்லாம் தொகுக்கப்பட்டு ‘Krishna: The Man and His Philosophy’ என்று தொகுப்பு நூலாகவே வெளிவந்திருக்கிறது.

இன்ப, துன்பங்களுக்கு இடையே எப்படி வாழ்வது என்கிற பாதையைக் காட்டுவதாலேயே கிருஷ்ணனை புதிய மனிதனாக ஓஷோ அடையாளம் காட்டுகிறார். மதம் சார்ந்த ஞானங்கள் பலவும் பற்றற்ற துறவுநிலையை போதிக்கும்போது, அதற்கு நேரெதிரான மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் முன்வைக்கும் ஓஷோவுக்கு கிருஷ்ணனைப் பிடிக்காமல் போயிருந்தால்தானே ஆச்சரியம்?

(தரிசனம் தருவார்)

தியானம் என்பது என்ன?

ஓஷோ விளக்குகிறார் :
இருக்கும் இடத்தில் இருப்பது
நாம் நாமாகவே இருப்பது
முழுமையாக இருப்பது.
மனம் கடந்து செல்வது
மனவோட்டங்களை கவனிப்பது
உணர்ச்சிகளை கவனிப்பது
ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது
ஒன்றைக் குறித்து கவனிப்பதோ, சிந்திப்பதோ, ஆராய்வதோ தியானம் அல்ல!

செக்ஸ் பற்றி ஓஷோ!

அது அடிப்படைத் தேவை. தப்பியோட முயற்சிக்காதே. முடியாது. இயற்கையைப் பயன்படுத்தி அதைக் கடந்து செல். பிரம்மச்சாரியாக இருக்கவேண்டுமானால் அதைப் பற்றி பேசக்கூடாது, ஈடுபடக்கூடாது என்று நினைக்கிறோம். காமத்தை விட்டு விலகி ஓடினால் பொய்யான பிரம்மச்சரியமே பிறக்கும். நீ எவ்வளவு தூரம் அதை விட்டு விலகி ஓடுகிறாயோ, அந்தளவுக்கு அதைப் பற்றியே சிந்திப்பாய்.

செக்ஸை எப்படி எதிர்கொள்வது?

ஒன்று, அதை இயல்பாக அனுபவிப்பது. பெரும்பாலானோர் இதையே கடைப்பிடிக்கிறார்கள்.இரண்டு, அந்த உணர்வை கட்டுப்படுத்தி அடக்குதல். நீங்கள் ஞானிகளாக நம்பும் அசாதாரணமான மனிதர்கள் இதைத்தான் செய்கிறார்கள். இது இயற்கைக்கு எதிரானது.மூன்று, இவ்வுணர்வு கிளம்பும்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

மதிப்புமிக்க இப்பொழுதை தியானத்துக்கு பயன்படுத்துங்கள். உங்களுக்கு கிளர்ச்சியைத் தூண்டுகிற பகுதியை உற்றுக் கவனியுங்கள். அதை உதாசீனப்படுத்தாதீர்கள். இதை முயன்றால் அங்கே ஒரு சக்தி உருவாகும். அது இதயம் நோக்கி எழும். அழகும், அன்பும், ஆசீர்வாதமும் உங்களைச் சூழும்!

ஓஷோ எங்கு இருக்கிறார்?

இந்த உலகைவிட்டு நான் செல்வேன் என்றால், எங்கு செல்வேன்?
என்னை நீங்கள் அன்புடன் நேசிக்கும் பட்சத்தில் நீங்கள் சுவாசிக்கும் காற்றிலும் இருப்பேன். காணும் கடலின் அலையிலும் இருப்பேன்.

என்னை நீங்கள் மனப்பூர்வமாக நம்பினால், என்னை உணருவதற்கு உங்களுக்கு ஆயிரம் வாசல்கள் திறக்கும்.உங்களை சூழும் அமைதியில் நீங்கள் என்னை உணரலாம்.இந்தப் பிரபஞ்சம் முழுக்க நான் வியாபித்திருப்பேன்.எனவே, என்னை யாரும் தேடவேண்டாம்.உங்கள் இதயத்தில், இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் நான் இருப்பேன்.

- பகவான் ரஜனீஷ்

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்