பேனர் படுகொலைகள்!தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது சுபஸ்ரீ யின் மரணம். இதனையடுத்து திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் `இனி பேனர் வைக்க வேண்டாம்’ என தங்கள் கட்சியினருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். விஜய், சூர்யா உட்பட நடிகர்களும் பேனர் வேண்டாம் என தங்கள் ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
உண்மையில் 2007ம் ஆண்டில் இருந்தே `சட்டவிரோத டிஜிட்டல் பேனர்’ குறித்த வழக்குகள் பதிவாகி வருகின்றன. 2014ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள், ‘தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் இன்னும் பேனர் வைக்கவில்லை’ என்று விமர்சிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை இருந்துள்ளது.

என்றாலும் சென்னையில் சமீபத்தில் சுபஸ்ரீ  மரணமடைந்த பிறகே இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.‘‘2007ல சென்னை அண்ணாசாலைல வழக்கறிஞர்கள் அதிகப்படியான பேனர்களை வைச்சதை எதிர்த்து வழக்குப் போட்டேன்...’’ என கோபத்துடன் பேசத் தொடங்கும் டிராஃபிக் ராமசாமி, இதுவரை சாலைகளில் பேனர்கள் ஆக்கிரமிப்பதை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

‘‘அது நடந்த சில நாட்கள்ல வியாசர்பாடில ஒரு பையன் விளம்பரப் பதாகை விழுந்து இறந்துட்டார். இந்தச் சம்பவம் என்னை உலுக்கிச்சு. உயிர்ப்பலி வாங்கும் பதாகைகளை ஒழிக்கணும்னு முடிவு செஞ்சேன். ஒரு முறை நந்தனத்துல ஆரம்பிச்சு அண்ணாசாலை வரை ஜெயலலிதாவுக்கு பேனர் வைச்சாங்க.

இதனால மக்கள் ரொம்பவும் அவதிப்பட்டாங்க. 64  போட்டோ ஆதாரங்களோட வீடியோவும் எடுத்து வழக்குத் தொடுத்தேன். ஞாயிற்றுக்கிழமையா இருந்தும் அவசர வழக்கா எடுத்து நீதியரசர் மணிக்குமார் வீட்ல வாதாடி விபத்து ஆதாரங்களைக் காட்டினேன்.  

42 பக்கத்துக்கு தீர்ப்பு கிடைச்சது. அதுல, உடனடியா பேனர்களை எடுக்கணும்... இனி வைக்கக் கூடாதுனு குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்கள்ல கோவையில அமெரிக்க விசா எடுக்கப் போன ரகு என்கிற இளைஞர் விபத்துல இறந்தார். இதுக்குக் காரணம் லாரி டிரைவர்தான்னு வழக்குப் பதிவு செஞ்சாங்க. இல்ல... பேனர்தான் காரணம்னு வாதாடினேன். விளம்பர பேனர்தான் காரணம்னு தீர்ப்பும் வந்தது.

இப்ப சுப. சிசிடிவி ஃபுட்டேஜ் தெளிவா என்ன நடந்ததுனு சொல்லியிருக்கு. பேனர் காத்துல பறந்து வந்து அந்தப் பொண்ணு மேல விழுது; முகத்தை மூடுது. கீழ விழறாங்க. பின்னாடி வந்த லாரி டிரைவரால பிரேக் பிடிக்க முடியலை; அதாவது அதற்கு அவருக்கு அவகாசம் இல்ல... சுப மேல லாரி ஏறிடுது. இனியாவது தமிழக மக்கள் விழிப்போட இருக்கணும். எந்தக் கட்சியாவது ரோட்ல பேனர் வைச்சா கேள்வி கேட்கணும்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் டிராஃபிக் ராமசாமி.

“அதீத பணவெறியின் வெளிப்பாடுதான் அதிகப்படியான விளம்பரப் பதாகை வைக்க காரணம்...’’ என்று ஆரம்பித்தார் வழக்கறிஞர் இரா.முருகவேள்.‘‘கட்சிக்கு உழைக்கற தொண்டனைத் தாண்டி அதிகார மட்டத்துல இருக்கற பணபலம் உள்ளவருக்கு சீட்டு தர்றாங்க. அதனால தங்களோட செல்வாக்கை நிரூபிக்க இப்படி பேனர் வைக்க அதிகார மட்டத்துல இருக்கறவங்க முற்படறாங்க.

பேனர் வைக்க நகராட்சியும் காவல்துறையும்தான் அனுமதி தர்றாங்க. சட்டப்படி அஞ்சு அல்லது ஆறு பதாகைகளைத்தான் வைக்கலாம். ஆனா, ஆயிரக்கணக்கான பேனர்களை வைக்கறாங்க. அதுவும் ஒரே தெருவுல நூற்றுக்கணக்கான பதாகைகளை நடறாங்க. இப்படி இருந்தா விபத்து ஏற்படத்தான் செய்யும்.

சட்டப்படி தமிழ்நாடு உள்ளாட்சி விளம்பரக் குற்றம், திறந்த வெளி சிதைப்பு தடுப்புச்சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரலாம். இதுக்கு ஒரு வருஷம் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். ஜாமீன்ல வரக் கூடிய வழக்கா இது இருக்கறதால இந்த சட்டங்களை யாரும் மதிக்கறதில்லை.

இதுக்கு மாறா இதை கொலை முயற்சி வழக்கா மாத்தி, ஜாமீன்ல வர முடியாத வழக்கா கொண்டு போகணும். அரசு நினைச்சா இந்த சட்ட த்திருத்தத்தைச் செய்யலாம்...’’ என்கிறார் வழக்கறிஞர் இரா.முருகவேள். விளம்பர பேனர்களை வைக்கும் பணியை கடந்த ஐந்து வருடங்களாகச் செய்து வரும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கான்ட்ராக்டர், தன் தரப்பை முன்வைக்கிறார்.

“அதிகம் அரசியல் கட்சிகளுக்குத்தான் பேனர் வைக்கறோம். கட்சிக் கூட்டம், மாநாட்டை விட கட்சிக்காரங்க வீட்டு விசேஷங்களுக்கு அவங்க கட்சிப் பிரமுகர்கள் வர்றதுக்குதான் அதிகம் பேனர் வைக்கச் சொல்லுவாங்க. அதுவும் சாலை முழுக்க இரண்டு பக்கமும் பத்தடிக்கு ஒரு பேனர்னு ஆர்டர் தருவாங்க.முன்னாடி அந்தந்த பகுதி தொண்டர்கள் இப்படி பேனர் கட்டுவாங்க. இப்ப மொத்தமா பேரம் பேசி அவுட்சோர்ஸ் முறைல எங்களை மாதிரி சிலர் செய்யறோம்.

இந்தச் செலவுல சிக்கனம் பிடிக்க பலரும் முயற்சிக்கறாங்க. அதாவது பேனருக்கு ஆயிரம் ரூபா செலவு செய்துட்டு பேனரை கட்டறதுக்கான கயித்துல பத்து ரூபா மிச்சம் பிடிக்க முற்படுவாங்க. ஒண்ணு ரெண்டு நாட்கள்தானே இருக்கப் போகுது... கயிறு வாங்கி ஏன் வீணாக்கணும்... சும்மா சாய்ச்சு வையுங்கனு சொல்லுவாங்க. எங்கிட்டயே இப்படிச் சொல்லியும் இருக்காங்க.

சாலையோரத்துல வைக்கப்படும் பேனர்களை பெரும்பாலும் இறுக்கமா கட்ட விடமாட்டாங்க. லேசான காத்துக்கே அது ஆடறதை நீங்களே பார்க்கலாம். இதை விட கொடுமை மறுநாள் விழானா... முதல்நாள் நைட்டு பேனர் வைக்கச் சொல்வாங்க. நைட்டோட நைட்டா நாங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யணும்... விடியறதுக்குள்ள ஆயிரக்கணக்கான பேனர்களைக்கட்டணும்னா எப்படி..?

இப்படி கட்டப்படும் பேனர்களை விழா முடிஞ்சு கழட்டும் பழக்கமும் கட்சிக்காரங்ககிட்ட இல்ல. பெரிய பேனர்களை மட்டும் கழட்டி வீட்டுக்கு பயன்படுத்துவாங்க. சின்னதெல்லாம் அப்படியே கேட்பாரற்று காத்துல விழுந்து அதுமேல வண்டிங்க ஏறி... கட்சிக்காரங்க திருந்தினா மட்டும்தான் உயிர்ப்பலி நிகழ்வதைத் தடுக்கலாம்...’’ என்கிறார் அந்த பெயர் சொல்ல விரும்பாத கான்ட்ராக்டர்.

திலீபன் புகழ்