ஜாக்பாட்அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரத்தை தேடியலையும் ஜோதிகா அண்ட் கோவின் வீரதீர சாகசமே ‘ஜாக்பாட்’.‘குலேபகாவலி’யின் ஃபார்முலாவை மறுபடியும் எடுத்து நம்பி களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண். அதேதான்... அப்படியே ‘குலேபகாவலி’யை அங்கே இங்கே மாற்றிப்போட்டு அதை இந்தத் தடவை ஜோதிகா முன்மொழிய வழிமொழிந்து இருக்கிறார் இயக்குநர்.

பலரின் கை மாறி வரும் அட்சய பாத்திரம் பால்காரரிடம் வந்து சேர... அவர் ஓவர் நைட்டில் பணக்காரராகி விடுகிறார். அதைப் பார்க்கிறவர்கள் அதை திருடிக்கொண்டு தப்பிக்க முயல, பாத்திரம் ஆற்றில் விழுகிறது. அது இட்லிக்கடை நடத்தும் சச்சு கையில் கிடைக்கிறது. போலீஸில் சிக்கும் சச்சு அதை ஆனந்த்ராஜ் வீட்டில் புதைத்துவிட்டு போகிறார்.

இதை சிறையில் இருக்கும் ஜோ & ரேவதியிடம் சொல்ல, அவர்கள் புறப்பட்டு வந்து அட்சயபாத்திரத்தைக் கைப்பற்ற நினைத்தது வெற்றிகரமாக முடிந்ததா என்பதே மீதிக்கதை.எக்கச்சக்கமாக சீரியஸ் முகம் காட்டி விட்டோம் என்று நினைத்துவிட்ட ஜோ, காமெடி முகம் தரித்திருக்கிறார்.

பெரும்பாலும் கலாய் காமெடி டயலாக் டெலிவரிதான் நடிப்பு. அதனால் உறுத்தாமல் பொருந்துகிறது அவரது துடிப்பு. காமெடியில் உதறல் எடுத்தாலும், நடிப்பில் சமாளித்து பாஸ் மார்க் வாங்குபவர், டான்ஸில் பின்னி பெடெலடுக்கிறார்.

துறுதுறு ஜோதிகாவை ரொம்ப நாளைக்குப் பிறகு பார்க்க முடிகிறது. அவரோடு இணைந்து ரேவதியும் துள்ளாட்டம் போடுகிறார். காமெடி செய்துகொண்டே முரட்டு வில்லன்களை எதிர்க்கிறார்கள். அப்படிச் செய்வது பல சமயங்களில் சீனிப் பட்டாசாக வெடிக்கிறது. சில சமயம் நமுத்துப் போய் விடுகிறது.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்கிற அளவிற்கு இருவரும் படம் முழுக்க வருகிறார்கள். இதில் ஜோ இருப்பதால் அடக்கி வாசிக்கிறார் ரேவதி. மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் வந்து போகிறார்கள். யோகிபாபு அவரை அவராகவே கேலி செய்து கொள்கிறார். அவரை மக்கள் சிறப்பித்து ஏற்றுக்கொண்ட பிறகு அந்தக் காமெடியெல்லாம் சுத்தமாக ஒட்டவில்லை.

சமுத்திரக்கனி வந்த உடனே காணாமல் போய்விடுகிறார்.விஷால் சந்திரசேகரின் பாடல்கள் உயிர் பெறவில்லை. ஆனால், பின்னணியில் மாஸ் காட்டுகிறது. ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார் குறையில்லாமல் எந்த ஆங்கிளிலும் பளிச் ஸ்கோப் பிடிக்கிறார்.ஜோதிகா - ரேவதியின் அனுபவம் கை கொடுக்கிறது. இன்னும் காமெடியை கட்டமைத்திருந்தால் கூடுதல் ஜாக்பாட் அடித்திருக்கும்.

குங்குமம் விமர்சனக் குழு