கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-21
மறையை மீட்டுத் தந்த மறையவன்
‘‘தாத்தா! பாட்டி!’’ அழைத்தபடியே எதிர்வீட்டு கண்ணன் நுழைந்தான். அவனோடு ஒரு தம்பதியும்.வந்தவர்களை நாகராஜன் புன்னகையுடன் வரவேற்றார். ஆனந்தவல்லி அவர்களை அமர வைத்தாள். ‘‘பாட்டி... இவங்கதான் என் மாமா. பேரு சோமசுந்தரம். மாமி பேரு மீனாட்சி. இவங்க குழந்தையை ஸ்கூல்ல சேர்க்கப் போறாங்க. அதுனாலதான் இங்க கூட்டிட்டு வந்தேன்...’’ மூச்சுவிடாமல் கண்ணன் சொல்லி முடித்தான். அவனது மாமாவும் மாமியும் நாகராஜனுக்கும் ஆனந்தவல்லிக்கும் வணக்கம் தெரிவித்தார்கள்.
‘‘உங்களைப் பத்திதான் எப்பவும் கண்ணன் சொல்லிட்டு இருப்பான். அதான் எங்க குழந்தையை முதன் முதல்ல ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு முன்னாடி எந்த கோயிலுக்குப் போகலாம்னு கேட்க வந்தோம்...’’ சுந்தரம் பயபக்தியுடன் சொன்னார்.‘‘குழந்தை முதன் முதல்ல படிப்பது எழுத்துகளைத்தான். அது நல்லா வரணும்னா ‘எழுத்து அறிவித்த நாதர்’கிட்டதான் போகணும்... என்னங்க... நான் சொல்றது சரிதானே..?’’ கேட்டாள் ஆனந்தவல்லி.
‘‘சரியா சொன்ன ஆனந்தி! நீங்க ரெண்டு பேரும் உங்க குழந்தைய கூட்டிகிட்டு திருவொற்றியூருக்கு போயிட்டு வாங்க. மிச்சத்தை அந்த சிவன் பாத்துப்பான்...’’ என்றார் நாகராஜன். ‘‘இப்படி சொன்னா எப்படி தாத்தா..? அதுக்கான கதையை சொல்லுங்க...’’ கண்ணன் பரபரத்தான். அவன் ஆர்வத்தை ரசித்துக் கொண்டே நாகராஜன் கதை சொல்ல ஆரம்பித்தார்...கைலாசம் என்னும் வெள்ளிப் பனிமலை. அதன் உச்சியில் மோனத்தில் அமர்ந்திருந்தது மூலப் பரம்பொருள்.
இறைவன் ஆனந்த வடிவினன் என்கிறது வேதம். தன் ஆனந்தமான வடிவத்தை மோனத்தில் இருந்தபடி, தானே அனுபவித்துக் கொண்டிருந்தார் அந்த பரமன். தானே எல்லாமாகி தன்னுள்ளே தானடங்கியிருக்கும் அந்த இறைவன் அருகில் வந்தார் நந்திதேவர். அவரது பொற்பாதக் கமலங்களுக்கு அனேக வந்தனங்கள் செய்து கை குவித்து நின்றார். ‘‘அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! இந்த உலகம் இயங்குவதற்குக் காரணம் தங்களின் திருநடனம்தான். இந்த உடலில் உயிர் தங்குவதற்குக் காரணமும் தங்கள் திருநடனம்தான். ஆம்! இதயம் அசைவதை நிறுத்தினால் உடலில் உயிர் தங்குவதில்லை. அந்த இதயம் ஓயாமல் இயங்குவதற்குக் காரணம் நீங்கள்தான்.
ஆம்! நீங்கள்தானே அதனை உள்ளிருந்து உங்களது ஆனந்த தாண்டவத்தின் மூலம் அசைய வைக்கிறீர்கள்! இதைத்தானே வேதங்கள் ‘நாப்யாம் உபரி திஷ்டதி’ என ஆணித்தரமாகச் சொல்கின்றன!அந்த ஆனந்த தாண்டவத்தை நான் காண வேண்டும் பிரபு. இந்த எழை தங்கள் திருவடிகளைத் தவிர வேறொன்றும் அறியாதவன். இந்தப் பாவியும் தங்கள் நடனத்தைக் கண்டு உய்யும்படி தாங்கள் நடனம் புரிய வேண்டும். அதற்கான வழியைக் கூறுங்கள் கங்காதரா!”’’ நந்திதேவர் தன் வேண்டுதலை பரமனிடம் விண்ணப்பித்தார்.
அவரது கண்களில் இருந்து வழியும் கண்ணீரும், பேசும் த்வனியும், கைகுவித்து நிற்கும் விதமும் அவரது உள்ளத்து ஏக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டின. சிவ பெருமான் மெல்ல கண்களைத் திறந்து கருணை பொங்க தன் வாகனத்தை நோக்கினார். ‘‘நந்தி! பூலோகம் சென்று ஒற்றியூர் என்னும் இடத்தில் எம்மை எண்ணி தவம் புரிந்து வா! உன் எண்ணம் விரைவில் ஈடேறும்...’’ ஈசன் சொன்னதைக் கேட்டதும் நந்தி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அவரது ஆழ்மனதில் இங்கேயே இப்போதே திரு நடனம் ஆடினால் என்ன? இதற்கு ஏன் நான் திருவொற்றியூர் போகவேண்டும்... என்ற கேள்வி எழுந்தது.
‘‘என்ன நந்தி... நடனம் காண ஏன் ஒற்றியூர் போகவேண்டும் என்ற எண்ணமா?’’ நகைத்துக் கொண்டே சங்கரன் கேட்டார். ‘‘ஆம் மகாதேவா! இந்த கேள்வி என்னை வாட்டி வதைப்பதற்கு முன் விளக்கம் தந்தருளுங்கள்...’’ நந்தி ஆச்சரியம் அடைந்தது போலவே தெரியவில்லை. எல்லாம் உணர்ந்த பரமன் தனது உள்ளத்தையும் அறிவார் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.‘‘பல யுகங்களுக்கு முன் தேவர்கள் செழிப்பாக வாழ்வதற்கு காரணம், அவர்கள் வேதத்தின் படி நடப்பதே என்று அசுரர்கள் அறிந்தார்கள்.
உடனே மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள் வேதத்தை பிரம்மனிடமிருந்து தந்திரமாகக் கவர்ந்து சென்றார்கள். வேதங்கள் அடங்கிய ஓலைகளை சுக்கு நூறாகக் கிழித்து கடலில் வீசினார்கள். வேதத்தைப்பறிகொடுத்த தேவர்கள் அசுரர்களிடம் தோற்று அவர்களது அடிமையானார்கள்.
தேவர்களைக் காக்க திருமால் மச்சாவதாரம் எடுத்து அசுரர்களைக் கொன்று, வேத ஓலைகளின் துகள்களை கடலிலிருந்து மீட்டார். ஆனால், அதை முறையாக வரிசைப்படுத்த முடியாமல் அண்டங்கள் அனைத்தும் தவித்தன.
அப்போது மாதவன் ஆதிபுரி என்று அழைக்கப்படும் திருஒற்றியூருக்கு வேதத்தின் துகள்களை எடுத்துக்கொண்டு வந்தார். அங்கு ஒற்றீசன் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கும் எனது முன்னிலையில் வேதங்களை வைத்து, உளமார என்னைப் பூஜித்தார்.
அதனால் மனமிரங்கிய எனதருளால் சிதறிய வேதங்கள் ஒன்று சேர்ந்து முன் போல் மிளிர்ந்தன! வேதங்களின் சாரமான என் நடனத்தை வேதங்கள் மீண்டும் பிறந்த திருவொற்றியூரில் காண்பதுதானே முறை? அதனால்தான் உன்னை அங்கு சென்று தவமியற்றச் சொன்னேன்!’’ ‘‘இருப்பினும் சுவாமி... ஒரு சந்தேகம். அந்தத் தலத்திற்கு எப்படி ஆதிபுரி என்ற திருநாமம் வந்தது?’’
‘‘நந்தி... முன்னொரு சமயம், பிரளய காலத்தில் உலகமே நீரில் மூழ்கிப் போனது. அப்போது உலகத்தை மீண்டும் எப்படி படைப்பது என்று புரியாமல் பிரம்மன் குழப்பத்தில் ஆழ்ந்தார். பிறகு பரம்பொருளான என்னைச் சரணடைவதே ஒரே வழி என்று உணர்ந்து என்னை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அவருக்காக நான் காட்சி தந்து பிரளய ஜலத்தை வற்றச் செய்தேன்...’’‘‘ஆஹா! தங்கள் கருணைக்கு எல்லையே இல்லை சுவாமி... பிறகு நடந்தவற்றையும் விளக்கமாகக் கூறுங்கள் மகாதேவா...’’ நந்திதேவர் நெக்குருகிப் போனார்.
‘‘பிரம்மனுக்காக நான் மனமிரங்கி பிரளய நீரை வற்றச் செய்தபோது பூமியில் முதலில் தோன்றிய இடம் திருவொற்றியூர்தான்! ஆகவே அதற்கு ஆதிபுரி என்ற திருநாமம் ஏற்பட்டது. பிரம்மனுக்காக பிரளய நீரை வற்றச் செய்ததால் வற்றீசன் என்ற திருநாமத்துடன் இன்றும் அங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறேன்...’’ பல காலங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நந்திக்கு அழகாக எடுத்துரைத்தார் பரமன்.
பரமன் சொன்னதைக் கேட்ட பின்பு திருவொற்றியூரில் திருநடனம் காண்பது எத்தனை சிறந்தது என்பது நந்திக்கு புரிந்தது. தன்மீது பெரும் கருணை வைத்து, தனக்கு வேண்டியதை தக்க தருணத்திலும் தக்க இடத்திலும் அருள சம்மதித்த அந்த பரமனின் கருணையை எண்ணி வியந்தார் நந்தி.
‘‘உலக இயக்கத்திற்குக் காரணமான திருநடனத்தை உலகில் தோன்றிய முதல் இடத்தில் காண்பதே மிகவும் பொருந்தும் பிரபு. உடன் அங்கு செல்கிறேன். பின் மாறாத பக்தியுடன் தங்களை தியானித்து வருவேன். தக்க சமயம் வரும்ேபாது தங்கள் திருநடனத்தைக் கண்டு நற்கதி பெறுவேன்..’’ என்று சொல்லி ஈசன் பாதத்தை வணங்கினார் நந்திதேவர்.
ஈசன் தனது திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.கைலாயத்தை விடுத்து திருவொற்றியூருக்கு வந்து அருந்தவம் புரிந்துகொண்டிருந்தார் நந்தியெம்பெருமான். நந்தி சிவதாண்டவத்தைக் காண பூலோகம் வந்து தவம் புரிவதை அறிந்து திருமகள் சமேதராக திருமாலும் ரோமச முனிவரும் திருவொற்றியூருக்கு வந்தார்கள். பரமனின் ஒப்பில்லா நடனத்தைக் காண தூய மனத்தோடு தவம் புரிய ஆரம்பித்தார்கள்.
இவர்கள் தவம் புரிந்தபடி இருக்க உலகம் மீண்டும் ஒரு பிரளயத்தைக் கண்டது. ஈசன் அருளால் பிரளயம் இவர்கள் தவம் புரிந்த ஒற்றியூரை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. இவர்களும் நடந்தது ஒன்றையும் அறியாமல் ஈசன் திருவடியிலேயே சிந்தையைச் செலுத்தி தவம் புரிந்த வண்ணம் இருந்தார்கள். இப்போது ஈசன் உலகைப் படைக்க தீர்மானித்தார். உடன் முன்பை விட அழகாக உலகைப் படைத்தார்.
இவ்வாறு உலகம் படைக்கப்பட்டதை அறிந்த பிரம்மனுக்கு கோபம் வந்தது. உடன் திருவொற்றியூரில் தவத்தில் இருக்கும் தன் தந்தை திருமாலிடம் வந்தார். ‘‘படைப்புக் கடவுளான நான் இருக்கையில் உலகத்தை படைத்தது யார்?’’ பிரம்மன் பொறிந்து தள்ளினார். பிரம்மனிடம் ‘நான்’ என்னும் மமதை குடிகொண்டுள்ளதை உணர்ந்தார் திருமால். மெல்ல கள்ளப் புன்னகை பூத்தபடி ‘‘எனக்கு ஒன்றும் தெரியாது மகனே! இதோ இங்கிருக்கும் ரோமச முனிவரைக் கேள்...’’ என்றார்.
பிரம்மன் ரோமச முனிவரிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். முனிவர் தவம் கலைத்து கண்களைத் திறந்து நான்முகனை நோக்கினார். ‘‘பிரம்மனே! பூமியின் ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள். தேவர்களின் கணக்குப்படி ஆயிரம் வருடங்கள் உன்னுடைய ஒரு நாள். இந்த கணக்குப்படி நூறு வருடங்கள் உன்னுடைய ஆயுள். உன் ஆயுள் முடிந்த பின் வேறொருவர் பிரம்மனாக பதவி ஏற்பார்!
இப்படி ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது என் உடலில் உள்ள ஒரு முடி உதிரும். ஜீவாத்மாவான உனக்கும் எனக்கும் அழிவுண்டு. ஆனால், திருமாலின் ரூபத்திலும் ஈசனின் ரூபத்திலும் உள்ள பரம்பொருளுக்கு அழிவென்பதே இல்லை!
இந்த படைப்பும் இதன் அழிவும் அவர்கள் ஆடும் நாடகமே. நாம் அனைவரும் அவர்களது கை பொம்மைகள்! இதை முதலில் உணர்வாய். பரம்பொருளின் உன்னதமான அசைவே உலக இயக்கத்திற்குக் காரணம். அந்த நடனத்தைக் காணவே நாங்கள் தவமிருக்கிறோம். நீயும் எங்களோடு தவமிரு...’’ என்று வேகமாக பிரம்மனுக்கு பதில் சொல்லிவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார் முனிவர். உலகை ஆளும் பரம்பொருளின் முன், தான் ஒரு துரும்பிற்குக் கூட சமம் இல்லை என்பதை அறிந்த பிரம்மன் சற்று அதிர்ந்து போனார். படைப்புக் கடவுள் என்ற ஆணவம் அவரைவிட்டு ஓடியது. தானும் தவக்கோலம் பூண்டு ஈசனைக் காண தவமியற்ற ஆரம்பித்தார்...
(கஷ்டங்கள் தீரும்)
- ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்
|